"சமூகவிரோதிகள்"

  
              கடலும் கடல் சார்ந்த நிலமும்  பாண்டிய மன்னர்களின் முக்கிய துறைமுகப் பட்டிணமான காயல்பட்டிணத்தின் அருகாமையில் , மழைநீர் வடிகால் சிற்றோடையின் கரையில் அமைந்திருந்த ஓடக்கரையில் உள்ள தாத்தாவின் வீட்டில் என் பள்ளி கால விடுமுறை நாட்கள் கழிந்தன.. நெல் வயல்கள் , வெற்றிலை கொடிக்கால் , வாழை என செழிப்பான ஈரநிலத் தாவரங்களும் , நன்னீரும் , வளமான வண்டல் மண்ணலால் நிறைந்த வயலும் வயல் சார்ந்த வாழ்வியலில் வளர்ந்த எனக்கு . கணுக்கால் புதைய வெண்பட்டு போன்ற பரந்த மணல் பரப்பில் ஒடை காடும் ,பனங்காடும், கற்றாழை செடிகளும், வேலிக்கு காவலாய் பசுமையான இலைகளும் வாய் விரிந்த மஞ்சள் பூவும் பம்பரக் காயுமாக நிற்க்கும் பூவரசு மரங்களும், பதியும் மணல் தரையில் செல்வதற்கு ஏதுவாக கார் டயர்கள் பொருத்திய மாடு வண்டியும், சுற்றிலும் உப்பு நீருமாக தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையின் மீது அமைந்திருந்த அந்த ஊரின் மாறுபட்ட அந்த சூழல் மிகவும் பிடித்தமானதாக இருந்தது .

 காலையில் காடறிய காட்டுக்குள் நுழைந்தால் ஒடை புதர்களில் தேன்கூடு எடுப்பது , ஓடைக்குள் இறங்கி மீன் பிடிப்பது, பாண்டி விளையாட நத்தை கூடுகளை பொறுக்குவது , அடர்த்தியான சவுக்கு தோப்புக்குள் ஒழிந்து விளையாடுவது, கொழிஞ்சி புதர்களில் மறைந்திருக்கும் ஓணானை காலில் குத்தும் நெஞ்சிமுள் , உடை முள் பற்றி கவலைப்படாமல் ஓடி ஓடி வேட்டையாடுவதுமாக , காலம் கரைவது அறியாமல் நண்பர்களுடன் காட்டுக்குள் அழைந்து திரிவோம். நெடுஞ்சாலையின் இரண்டு பக்கமும் பச்சையாய் படர்ந்திருக்கும் குமட்டிக்காய் காய்களை பறித்து 
ரோடுகளில் செல்லும் பேருந்துக்களின் டயர்களுக்குள் உருட்டிவிட்டு அதில் யாருடையது டயர் நசுங்கி 'டப்' என வெடிக்கிறது என்று போட்டி என எங்களின் விளையாட்டுகள் மற்றவர்களுக்கு தொந்தரவு தரும் சேட்டையாகிக் கொண்டே சென்றது . அதன் உச்சமாக நடந்த அந்த நிகழ்வு எங்களை சமூகவிரோதியாக கருத வழி வகைக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை.   
அன்று ஓடக்கரை இலட்சுமி அம்மன் கோவில் கொடை திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது.. ரோட்டின் குறுக்காக நடப்பட்ட பெரிய அலங்கார வளைவில் மின்விளக்கில் அம்மனின் உருவம் ஜோலிக்க , ஒளி ஒலியால் ஊரே உற்ச்சாகத்தில் உலன்று கொண்டிருக்க. தாத்தா கைச்செலவிற்க்காக கொடுத்த ஐந்து ரூபாவை கொண்டு , திருவிழாவிற்காக திறக்கப்பட்ட திடீர் கடையில் வாங்கிய குச்சி ஐஸ்சை உறிஞ்சியவாறு பால்வெளியில் ஒளிர்ந்த பால்நிலாவின் வெளிச்சத்தில் திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் காலாற நடக்க தொடங்கினோம் நானும் நண்பனும்.. அப்போது எங்கள் கவனத்தை ஈர்த்தது எப்போதும் நிற்க்காமல் வேகமாக செல்லும் பேருந்துகள். திருவிழாவிற்க்காக ஏற்படுத்தப்பட்ட தற்க்காலிக வேகத்தடுப்புகளால் நின்று நிதானமாக செல்வது . அதை பார்த்த எங்களுக்கும் அதை போன்று ஒரு வேகத்தடை உண்டாக்கும் எண்ணம் உருவானது .
 அதை நிறைவேற்ற நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் திருவிழா வெளிச்சம் படாத , ஊரிலிருந்து சில நூறு மீட்டர்கள் தள்ளி இருந்த சற்றும் ஆளரவம் அற்ற ரோட்டின் இருபக்கமும் ஒடை புதர்கள் நிறைந்த காட்டுப்பகுதி ... அந்த இடத்தில் ரோட்டின் ஓரமாகவும் காட்டுக்குள்ளும் கிடந்த உடைந்த செங்கல் கற்களை ரோட்டின் குறுக்காக அடுக்கி ஒரு சிறிய தடையை உருவாக்கினோம் , பின்னர் ரோட்டின் ஓரமாக அடர்த்தியாக இருந்த உடை மரத்தின் பின்னால் மறைந்து நின்று . பேருந்து எதுவும் வருகின்றதா என்று நோட்டமிட தூரத்தில் இரண்டு வெள்ளிச்சப் புள்ளிகள் தெரிய , ஏதோ ஒரு வாகனம் வருவது புரிந்தது . அது அங்கு இருந்த தடையின் அருகில் நின்று நிதானமாக செல்லும் என்ற எண்ணத்தில் மனது மகிழ்ச்சியில் மிதக்க , வருது என்ன வாகனமாக இருக்கும் ஏதாவது காராக இருக்குமோ என்று உன்னிப்பாக கவனிக்க அது ஒரு ஜீப் . அதன் முகப்பில் வெள்ளை நிற கொட்டை எழுத்தில் எழுதி இருந்த காவல் என்ற வார்த்தை எங்கள் கண்ணில் பட .. அவ்வளவு தான் மகிழ்ச்சி மாயமாக இதயத் துடிப்பு தாறுமாக எகிற , காட்டின் உட்பகுதிக்குள் ஓடி சென்று உடை மரமூட்டுக்குள் பதுங்கினோம் ஓடி ஓடி வேட்டையாடிய ஓணானை போல.. எங்கும் நிசப்தம் என்ன நடக்குமோ என்று மனது படபடக்க பார்வை மட்டும் ரோட்டில் இருந்தது. வேகமாக வந்த ஜீப் நாங்கள் அமைத்திருந்த வேகத்தடையின் அருகில் வந்து நின்றது . நின்ற ஜீப்பின் உள்பக்க விளக்கு சட்டென ஒளிர முன்பக்க சீட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்தார் முகத்தில் அடர்ந்த பெரிய மீசையுடன் ஆறுமுகநேரி காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம்.. 
 முன்பு ஆத்தூரும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் ஆறுமுகநேரி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இன்ஸ்பெக்டர் சங்கரலிங்கம் எங்கள் பகுதியில் நடந்த ஜாதி மோதல்களை தடுக்கவும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவும் அவர் செய்த சாகச செயல்களை பற்றி பல கதைகள் பள்ளி மாணவர்கள் இடையே உலவின. கருப்பு கண்ணாடி அணிந்து புல்லட்டில் வரும் அவரின் முரட்டுத்தனமான தோற்றம் பார்த்தாலே மனதுக்குள் கிலியை உண்டாக்கும் . 
         நின்ற ஜீப்பில் இருந்தபடி அவரின் பார்வை அங்கும் இங்கும் சுழன்றது. எனக்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது . சட்டென ஜீப்பின் கதவு திறக்க டிரைவர் கீழே இறங்கி வந்தார் . வந்தவர் ஜீப்பின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் ரோட்டில் குறுக்காக நாங்கள் போட்டிருந்த கற்களை அப்புறப்படுத்தினார். அப்போது ஜீப்பிலிருந்து இன்ஸ்பெக்டர் சங்கரலிங்த்தின் கணீர் குரல் சொன்னது .. "இது எதோ சமூகவிரோதிகளின் செயல் போல தெரியுது" என்று . கற்களை அப்புறபடுத்திய டிரைவர் ஜீப்பில் ஏறி பட்டென்று கதவை சாத்தி ஜீப்பை கிளப்ப . இப்போது தான் எங்களுக்கு சுவாசம் சீரானது. ஜீப் எங்கள் கண்பார்வையில் இருந்து மறையும் வரை பதுங்கியிருந்த நாங்கள் ஜீப் மறைந்ததும் . பின்னங்கால் பிடறில் அடிக்க எடுத்தோம் பாரு ஓட்டம் வீட்டை நோக்கி சமூகவிரோதிகள் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு.. 

விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️



Comments

Popular posts from this blog

அகத்தின் அழகு..

பேரண்டத்தின் பேராற்றல்

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )