செங்கதிரோன் சேயோன்
இரவெல்லாம் கண்ணயர்ந்த கதிரவன் விடியலில் தன் சிவந்த கண் திறந்து வானில் மிதக்கும் வெண்பஞ்சு மேகங்களின் மீது விளைவிக்கும் வண்ணக் கோலங்களை காணுகையில் , பிரம்மிக்க வைக்கும் இநத பிரமாண்ட பிரபஞ்சத்தின் முன் நான் என்னும் மமதை மரணித்து , சிறு துரும்பாக நாம் நிற்க்க , இந்த நீலக்கோள் அண்டம் நம்மை நோக்கி நெருங்குவதாக தோன்றும்
அந்த வானத்தரசன் வங்கக் கடலில் குளித்து , முகத்தில் தீக்களி பூசி , செங்காந்தழாய் மலர்ந்து, ..கதவின் மறைவில் நின்று கண்ணசைக்கும் காதலியை போல மெல்ல மெல்ல இவ்வுலகை எட்டி பார்க்கும் அழகான இளம் காலையில்.. செம்மண்ணுக்குள் இருந்து பூவெளி வந்த இளமஞ்சளை அரைத்து பூசியது போல மெனியெல்லாம் அவனின் மஞ்சள் கதிர்கள் படர .. ஆதவன் எனும் ஆண்பாலுக்குள் மறைந்திருக்கும் பெண்பால் வெளிப்படும்...
அவ்வேளையில் கதிர் அவனை கட்டியனைக்க தோன்றும், கண் சிறைக்குள் கட்டிப் போடவும் தோன்றும். முத்தமிட தோன்றும் , நினைவுக்குள் அவனை மூழ்கிவைக்க தோன்றும் .. ஆனால் அவனோ நம்மை மெஸ்மரிசம் செய்து , மெல்ல கண்ணயர வைத்து , கணநேரத்தில் கையெட்டா உயரம் தாவிச் சென்றிடுவான். அதிசயமா இது ? இல்லை இதை அதிசயத்துக்குள் அடக்க முடியாது . ஏனென்றால் அதிசயங்கள் என்று நாம் அடுக்குவது எல்லாம் , மனிதனால் உருவாக்கப்பட்ட அழியும் பொருட்களே, அவற்றை ரசிக்க மட்டுமே முடியும் .. ஆனால் இயற்கை உருவாக்கும் அற்புதங்களை ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் அனுபவிக்கவும், உணரவும் முடியும்...
அந்த அற்புதத்தை என் வாழ்வில் முதன் முதல் மரந்தலையில் இருக்கும் அய்யா நிழல்தாங்கலில் நடந்த ஆண்டு பணிவிடை நிகழ்ச்சிக்கு புனித நீர் எடுக்க பழையகாயல் வழியாக மூனாத்து முக்குக்கு ( தாமிரபரணி மூன்றாக பிரிந்து பின் சங்கமித்து கடலில் கலக்கும் இடம் ) சென்ற போதும்.. இரண்டாவதாக சீரலைவாயில் வெண்முத்து போல திரண்டு கால்களில் புரளும் அலைகளில் நின்றவாறு காண களித்தேன். அந்த இயற்கையின் அனுபவத்தை மீண்டும் மீண்டும் அனுபவிக்க பலமுறை காலை நேரங்களில் கடற்கரைகளில் காத்து கிடந்திருக்கின்றேன். பல மணித்துளிகள் கால் நனைத்து நின்றிருக்கின்றேன். குமரிக்கு சென்றிருக்கின்றேன், குளிர் பனியில் நனைந்து இருக்கின்றேன். ஆனால் ஒவ்வொரு முறையும் சேது நாட்டு மரகத கூத்தனை மூடியிருக்கும் சந்தனகாப்பைப் போல,
செங்கதிரோனை மேகம் ஒளித்து அவனுருவை காண விட்டதில்லை . இருந்தாலும் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் அதிகாலையில் அலைவாய் கடற்கரையில் காத்துகிடப்பது வழக்கம் . ..
செங்கதிரோனை மேகம் ஒளித்து அவனுருவை காண விட்டதில்லை . இருந்தாலும் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் அதிகாலையில் அலைவாய் கடற்கரையில் காத்துகிடப்பது வழக்கம் . ..
ஒருமுறையேனும் என்னவளுக்கும் என்மகளுக்கும் அந்த அனுபவத்தை அளிக்க ஆசைப்பட்டேன் , ஆசை என்பதைவிட பேராசையெனலாம் , ஆசைக்கும் பேராசைக்கும் சிறிய வித்தியாசம் நேர்வழியில் முயன்றால் அது ஆசை . குறுக்குவழியில் முயல்வது பேராசை. நான் குறுக்குவழியை தேர்ந்தெடுக்க விடியர்காலையில் விழிக்கமாட்டேன் என்று போர்வைக்குள் புதைந்து கொண்டு போர் செய்யும் பெண் போராளிகள் தான் காரணம் . சில பல குட்டி களேபரங்களுக்கு பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஞாயிறு அன்று போகலாம் என்று உடன்பாடு ஏற்ப்பட்டது, அதுவும் கடலில் குளிக்கவேண்டும் என்ற மகளின் விருப்பத்திற்க்காகவும். ஐந்து மணிக்கு முன்பாக எழுந்திருக்கமாட்டோம் என்ற கட்டுப்பாடுடனும். ..
அவர்கள் ஐந்து மணிக்கு கண்விழித்து கடற்கரையை அடைவதெல்லாம், குயில் கூடுகட்டி குஞ்சு பொரித்த கதைதான். ஆதலால் புறப்படும் அன்று விரைவாக விழித்த நான் , கடிகாரத்தில் காலத்தை நான்கில் இருந்து இரண்டரை நாழிகை முன்னோக்கி நகர்த்தி ஐந்தாக மாற்றியும் பல தகடுதினங்கள் செய்தும் . அவர்களை அழைத்து கொண்டு சீர்மிகு சீரலைவாய் கடற்க்கரைக்கு ஆசையாய் வந்து சேர்ந்தேன்...
சீர்மிகு கடற்கரை மனித தவறுகளால் சீர்குலைந்து கொண்டிருந்தது.. ஆங்காங்கே கடலுக்குள் கட்டப்பட்ட உறுதியான கான்கீரிட் தடுப்பினால்
கடல் நீரோட்டங்களில் ஏற்ப்பட்ட மாற்றங்களால் உண்டான மணல் அரிப்புகளால் அழகான கடற்க்கரை தன் சுயம் இழந்து சோகத்தில் சுழன்றவாறு, தோகையை பிடுங்கிய மயிலின் ஆட்டம் போல் அலையாடிக் கொண்டிருந்ததை கண்டு மனம் கனத்தது . இருந்தாலும் மகளுடன் குளிப்பதற்க்காக கடலில் இறங்க , மணல் இல்லாமல் பாறைகள் வெளிப்பட்டு பாதங்களை பதம்பார்த்தன. மேலும் மனிதர்கள் கடலில் வீசிவிட்டுச் சென்ற மேலாடைகளும் , உள்ளாடைகளும் கால்களை சுற்ற, குளிக்க மனம் இன்றி , உள்ளம் வெதும்பி வெளியேறினேன்..
முப்பாட்டன் முருகனை அண்டிபிழைக்க வந்து . அவன் வீட்டையே அசிங்கப்படுத்தி செல்பவர்களை காண சகிக்காமல்... தன் அன்பு முகத்தை காட்டாமல், உச்சியில் கோப கதிர்களால் சுட்டெரிக்க தொடங்கினான் சூரியன்..
- விக்கி இராஜேந்திரன்.. ✍️✍️✍️
திருச்செந்தூர் முருகன் ஐ முப்பாட்டன் என்று எழுதியதற்கு நன்றி , திருச்செந்தூர் சீரழிவுக்கு உங்கள் மனம் கொத்தித்தது மண்ணின் மைந்தன் நீங்கள் என்பதை நிரூபித்ததற்கும் நன்றி 👏👏👏
ReplyDelete