ஆழ்கிணறும் ஆழ் மனமும்
குழாயை திறந்தால் தண்ணீர் பொல பொலன்னு கொட்டுறதெல்லாம் இந்த காலம் .. பங்காளிங்க எல்லாம் ஒன்னா ஒரே தெருவுல குடியிருந்தாலும்.. வீட்டுல புழங்க தண்ணி எடுக்க ஒரு கிணறு வெட்டாமத்தான் இருந்தாங்க நூற்றாண்டு காலமா.. வீட்டுல ஆடு மாடு கோழின்னு வளர்த்தாலும் அதுகளுக்கு தாகத்துக்கு தண்ணீர் ஊத்த , அடுத்தவுக வீட்டுக்கும் அடுத்த தெருவுக்கும் போக வேண்டியதாக இருந்தது ..
கிணறு வெட்டுறது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லலா .. பாறை இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா, சிமெண்டு உறை இறக்க தேவையில்ல, ஆனா பொத பொதன்னு மண்ணு மட்டும் இருக்கிற இடத்துல கிணறு வெட்டுனா சிமெண்டு உறை இறக்கனும் , இல்லன்னா ஊத்து மண்ணு உள்ள வந்து கிணத்த மூடிறும். கிணறு தோண்டுவது உடல் உழைப்போடு சேத்து அதிக செலவும் வைக்கிற பெருத்த கரைச்சபுடிச்ச வேல..
1978- ல் அம்மா இந்த குடும்பத்துக்குள்ள வாக்கப்பட்டு வர்ற காலம் வரைக்கும் , கிணறு தோண்ட ஒரு காலம் பொறக்கல...
1979 - ல் தை மாசம் ஒருநாள் பங்காளிங்க எல்லாம் கூடி , வீடுகளின் கொல்லை பக்கம் பங்காளிங்க எல்லாரும் புழங்குவதற்கு என விட்டிருந்த குடும்ப பொது இடத்தில் , வீட்ல உடைஞ்ச பழைய மண்பானை, சட்டிகளை எல்லாம் குப்பையாக கொட்டி போட்டிருந்த ஒத்த பனைமரத்து பக்கதுல கிணறு வெட்ட முடிவு செஞ்சாங்க , வீட்டுக்கு 150 ரூபாய் வரிபணம் வசூலிக்கப்பட்டது , அதன்படி ராமலிங்க நாடார் , சிவலிங்க நாடார், ஆதிலிங்க நாடார் , மகராஜா நாடார் , பால்சாமி நாடார் , ஜெயசிங் நாடார் , இராஜேந்திரன் நாடார் என்று அளித்த பங்கு பணத்தை சேர்த்து , அம்மாவின் அப்பா பிரபல மேஸ்திரி ஓடக்கரை திரவியம் நாடாரிடம் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் கிணறு வெட்டும் பணிக்காக ஒப்படைக்கப்பட்டது.
கிணத்துக்கு தேவையான உறைகள் செய்வதற்கு தோதுவான சமதள நில அமைப்பு கிணறு தோண்டும் பகுதிக்கு அருகில் இல்லாததால் , பார்வதி அம்மன் கோயிலின் பின்புறம் பூவரசு மரங்கள் சூழ்ந்திருந்த ஆனைப்பட்டர் அவர்களுக்கு சொந்தமான காலி இடத்தில் வைத்து ஒன்பது உறைகள் செய்து தூக்கிவரப்பட்டு, ஏழு கெசம் ஆழமும் ஏழு அடி விட்டமும் , வெளிப்பகுதியில் பாதுகாப்புக்காக அரை அடி அகலமும் மூன்று அடி உயரமும் கொண்ட உறுதியான சுற்றுச்சுவறுடன் கிணறு உருவாக்கப்பட்டது. அதன் வயது அரை நூற்றாண்டை நெருங்கும் இன்று வரைக்கும் , பத்தாண்டுக்குள் பழுதடைந்து போன ஆத்தூர் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டிய புதிய பாலத்தை விட , அரை நூற்றாண்டை கடந்து உறுதியாக நிற்க்கும் , பெரும்தலைவர் ஐயா , காமராஜர் ஆட்சியில் கட்டிய பழைய பாலத்தை போலவும் , என் அம்மா தன்னுடைய அப்பா கட்டி தந்தது என்று தன் பிறந்த வீட்டின் பெருமை பேச சாட்சியாகவும் உறுதியாகவும் இருக்கிறது கிணறு .
நான் பிறந்து என் உதட்டில் கருப்பட்டியை கரைத்து வைத்த இனிப்பான நீரை சப்பு கொட்டி விழுங்கியதில் இருந்து தொடங்குகிறது, வறட்சிகள் பல கடந்தும் முற்றிலும் தண்ணீர் வற்றிடாத அட்சயபாத்திரமான அந்த கிணத்துக்கும் எனக்குமான தொடர்பு. விளையாட்டு வயதில் தேங்காய் சிரட்டையில் நூல் கட்டி தண்ணீர் மொந்து விளையாடியும் , தூக்கயியலாத வாளிநீரை வாளியின் கயிறு கிணற்றின் கரையில் உரச தர தரவேன இழுத்து இரைத்தும் , அப்படி கயிறு தேய இழுக்கும் போது தேய்ந்த கயிறு அத்து கிணற்றில் விழுந்த வாளி எடுக்க பாதாள கரண்டியை வாங்க மரந்தலை பள்ளிக்கு ஓடியதும் , இல்லையென்றால் வேலி முள்ளை ஒடித்து உயர்ந்த அகத்தி கம்பில் பனை நாரால் இருகக்கட்டி சுருட்டி தூக்கியதுமாக பல்வேறு அழகான தருணங்கள் மனதை நிறைக்கின்றன.
அப்பா பெரியப்பா சித்தப்பாக்களோ மட்டுமின்றி அண்ணன்களும் கிணற்றுக்குள் குதித்து அடிஆழத்தில் கிடக்கும் வாளியை தூக்கி வரும்போது . புதையலை கண்டு பிடித்து வந்தது போல அவ்வளவு மகிழ்ந்து குதுகலித்திருக்கின்றேன். எனக்கும் முழுவதும் பழக்கமான கிணறுதான் , நீச்சலும் அறிந்தவன் தான் இருந்தாலும் என்னால் கிணற்றுக்குள் இறங்கி அடிஆழம் தொட முடியவில்லை. காரணம் மனதுக்குள் ரணமாக பள்ளி தோழன் காளிமுத்துவின் மரணம். அவன் நன்கு நீச்சல் அறிந்தவன் , தினமும் அவர்கள் ஊரில் இருக்கும் பம்பு செட் பொருத்திய பெரிய கிணற்றில் நண்பர்களுடன் சென்று குதித்து குளிப்பது வழக்கம்...அன்றும் பள்ளிக்கு கிளம்ப குளிப்பதற்காக கிணற்றுக்குள் குதித்தவன் மேலே வரவில்லை . கிணற்றுக்குள் புதைத்திருந்த போர்வேல் பைப்புக்குள் கால் ஏடாகூடமாக சிக்கி கொள்ள, புன்னகைத்த நிலையிலே மரணித்து போனான்..
அந்த நிகழ்வின் தாக்கம் ஆழ்மனதில் பதிந்து போனது . அதன் பிறகு பல முறை கிணற்றில் குதித்து அடி ஆழம் தொட முயன்ற போதெல்லாம் . அவன் முகம் என் நினைவில் வர நடுவழியிலேயே திரும்பி வருகின்றேன்...
- விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️✍️
ReplyDelete“Wow, that brings back such great memories! Those were some of the best times. Thanks for reminding me!”
Thanks Vicky
Sundar Paulsamy