அகத்தின் அழகு..
சுத்தத்திற்கு பெயர் வாங்கிய சிங்கப்பூரில், அப்பொழுது தான் மெதுவாக விழித்துக்கொண்டிருந்த காரைகட்டிங்களுக்கு நடுவே அமைந்திருந்த, காலாங் நதிக்கரை நடைபாதையில் வேகமாக நடந்து கொண்டிருந்தேன் . சிலமாதங்களாக கிட்டத்தட்ட தினமும் பெய்த மழையினால் பாதையின் இருபக்கமும் வளர்ந்திருந்த பசுமை புற்கள் தாடியை டிரிம் செய்தது போல ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. மரங்கள் சிலவற்றுக்கு காற்றினால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்க அவைகளின் தலைக்கணத்தை குறைக்க சம்மர் கட்டிங் செய்ப்பட்டிருந்தது. அடர்ந்த கருத்த தலைமுடிகள் நடுவே தோன்றும் வெள்ளை நரைகளை போல பசுமையான இலைகளுக்கு நடுவே ஆங்காங்கே பழுத்த இலைகள் பளிச்சிட்டன..
என் காதில் மாட்டிய இயர்போனில் சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி ஒலிப்புத்தகம் மூன்றாவது முறையாக ஒலித்துக்கொண்டிருந்தது.. அதில் அழிந்து போன பல குடிகளின் அடைக்களமாக இருந்த பாரியின் பறம்பு மலையில் நடந்து கொண்டிருந்த, கொற்றவை கூத்தில் மதங்கனின் பெரும் பறையிசை நடுவே அகுதை குலத்தின் கடைசி வாரிசான நீலன் தீடீரென குதித்து வெறியேறி ஆடத்தொடங்கினான் ..என்பதை கேட்டு சிலிர்த்து கொண்டிருந்த என் அருகில் தொப்பென விழுந்து உருண்டு என் காலடியில் வந்து கிடந்தது, உயர்ந்து வளர்ந்திருந்த செவப்பு தேங்காய் நிறைந்திருந்த தென்னை மரத்தின் குரும்பல்.
அதை கையில் எடுத்து அண்ணாந்து தென்னை மரத்தின் உச்சியை பார்த்தேன்.. இராமரின் கைரேகை பதியாத இரண்டு மர அணில்கள் விளையாடிக் கொண்டிருந்தது. மீண்டும் கைக்குள் இருந்த தென்னம் குரும்பலை பார்த்தேன் , மனம் அந்த இளங்குருத்தின் இளமைக்கு திரும்பியது. நூற்றுக்கணக்கான தென்னை மரங்களுக்கு நடுவில் தான் எங்களின் ஆடுகளம். விளையாடும் நேரங்களில் அவ்வப்போது விழும் சிறு தென்னை குரும்பல்கள் தான் எங்களின் சிற்றுண்டி . அவற்றின் மேல் பகுதியை கடித்து மென்று விட்டு . அடிபைப்பில் தண்ணிர் குடித்தால் . இனிப்பான இளநீர் குடித்தாற் போல வயிறு குளிர்ந்து விடும்.
அப்போது பெரியவர் ஒருவர் சொன்னார் .
"டேய் சின்ன வயசுல நான் எவ்வளவு குரும்பல் சாப்பிட்டு இருக்கேன் தெரியுமா . அதனால் தான் எனக்கு சுகர் வரல" என்றார் .
ஆனால் கடைசி காலத்தில் அவர் சுகரால் அவதிபட்டார். ஆனால் வெற்றிலை பாக்கு போடுபவர்களுக்கு சுகர் வருவதில்லை அதற்க்கு பாக்கின் துவர்ப்பு சுவை அவர் உடலில் அதிமாக சேர்வது ஒரு காரணம் என ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது . எந்த ஆய்வு என்ன அறிக்கை என என்னிடம் கேட்காதீர்கள் ..அப்படி கேட்டால் என்னிடம் பதில் இல்லை , இது என் சொந்த ஆய்வு .. " போடா சங்கி " என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது ... அதற்க்கா இவ்வளவு பெரிய கெட்டவார்த்தை தேவையில்லை ..
சிறுவயதில் தென்னை குரும்பல் சாப்பிடும் போது அம்மா
" டேய் பல்லு கறையாகும் சாப்பிடாத " என்று திட்டியது நினைவில் ஓடுகின்றது .. இருந்தாலும் இப்போது என் கையில் இருக்கும் இந்த செவப்பு தென்னை குரும்பலை சுவைக்க மனம் துடிக்கிறது.
என் கைவிரல்களால் குரும்பலின் தலையில் மூடியிருந்த தொப்பியை ஒவ்வொன்றாக உறித்துவிட்டு .அதன் மென்மையான இளம் மஞ்சள் நிற குருத்தை என் அணில் பற்களால் கடித்தேன். "க்ராக்" மெதுவாக மென்ற ஆரம்பித்தேன். கொடி நாவல் பழத்தையும் மாவடுவையும் ஒன்றாக சுவைத்தது போல ஒரு கலவையான சுவை வாயில் சுழல , துவர்ப்பின் காரணமாக உலர்ந்த நாக்கில் உமிழ்நீர் சுரந்து கலந்து தேனின் சுவையாக மாறி தொண்டைக்குள் சிறிது சிறிதாக இறங்க ..மெதுவாக கண்ணை மூடினேன்.. மனம் இறக்கை கட்டி பறக்க காலம் பின்னோக்கி நகர்ந்தது . அடுத்த நிமிடம் நான் எனது ஊரின் தென்னை மரக்கூட்டங்களுக்கு நடுவே பத்து வயது சிறுவனாக நின்றிருந்தேன்..
அடிமரத்தில் இருக்கும் மரத்தின் இளமை போல , அடி மனதில் இருக்கிறது மனிதனின் இளமை . மணம் மறையும் வரை மாளாத மலரை போல . அகம் அழகாக இளமையாய் இருக்க , முகம் அழகாய் இளமையாய் இருக்கும்..
விக்கி இராஜேந்திரன்.✍️✍️✍️
Comments
Post a Comment