ஊர்க்கிணறு

    
    
இயற்கையின் எளிமையுடன் தொடர்பு கொண்ட அமைதியான கிராமத்து வாழ்வு அழகானது. அங்கு வசிக்கும் மனிதர்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறை வழக்கங்களில் ஒவ்வொன்றிலும் அழகியல் இருந்தது . கோவிலும் கோவில் சார்ந்த திருவிழாக்களும் என ஒர் அழகு , விவசாய நிலங்களும் அது சார்ந்த வேலைகளும் ஒர் அழகு . அவ்வாறே ஊர்க்கிணறும் அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் பேரழகு .. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நூறு அடி , ஐந்நூறு அடி தோண்டினாலும் கிடைக்காத தண்ணீர் பத்து அடி தோண்டினாலே பொங்கி ஊறும் குளிர்ச்சியான நிலப்பரப்பு எங்க ஊர். இந்த தண்ணீருக்காகவே  வாக்கப்பட்டு வந்தவர்கள் பலர். 
அதை பற்றி ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்று இவ்வாறு கூறும் .  

"ஊரைச் சுற்றிலும் உப்புத்தண்ணீர்.  
எங்க ஊர்க்கிணறு நல்லத் தண்ணீர்
தேங்காய்த்தண்ணீர் புன்னைச்சாத்தான்குறிச்சி , 
தேடி வாங்க வாக்கப்பட .. " 

எங்க ஊரில் வாக்கப்பட்டு வந்த புதுப்பெண்னை ஊர் பொது கிணற்றுக்கு அழைத்துச்சென்று . வெற்றிலையை கிணற்றில் போட சொல்வார்கள் . அந்த புதுப்பெண் அவ்வாறு கிணற்றுக்குள் போடும் வெற்றிலை மல்லாந்து விழுந்தால் ஆண்குழந்தை பிறக்கும் என்றும் , கவிழ்ந்து விழுந்தால் பெண்குழந்தை பிறக்கும் என்று கணக்கிட்டு , அவருக்கு எத்தனை ஆண் , பெண் குழந்தை பிறக்கும் என கூறுவார்கள் . பின்பு அவர் கொண்டு வந்த செப்புக் குடத்தில் அந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வீீீட்டிற்கு வந்த பிறகு தான் . அவருக்கும் எங்கள் ஊருக்குமான தொடர்பு தொடங்குகிறது.  
நிலத்துக்கு அடியில் நீர் உருவாவதில்லை. நீர் கசிகிறது. தன் மட்டத்தை ஒரே மட்டமாக வைத்திருக்கும் பண்புள்ளது நீர். கீழ் மட்டத்திலுள்ள நீரை நோக்கி மேல் மட்டத்திலுள்ள நீர் ஊடுருவி சமநிலையை எட்ட மண் மற்றும் பாறைகளின் இடைவெளிக்குள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மழை நீர் கசிந்து கசிந்து பயணிக்கும். அந்த பயணப்பாதையில் ஆழ்குழாயோ, கிணறோ இருந்தால் அந்த நீர் கசிந்து தேங்கும் அவ்வளவுதான்.  

முற்காலத்தில் தண்ணீர் புனிதமாக கருதப்பட்டது, குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர மற்ற சமூகத்தினர் தொட்டால் தீட்டு என்ற தீண்டாமை கொடுமை இருந்தது . அரசரின் அனுமதி இன்றி கிணறு அமைப்பது குற்றமாக கருதப்பட்டது. நீரின் புனிதத்தைக் காக்க வேண்டி பார்ப்பனர்களின் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனிக் கிணறுகள் அமைக்கப்பட்டன. இன்றளவும் கூட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இதனைக் காணலாம். தற்போதைய அரசாங்கம் தெருக்கள் தோறும் குழாய் அமைத்து குடிநீர் வழங்கும் வரை இந்த தீண்டாமை கொடுமை இங்கு பல இடங்களில் இருந்தது . 

பூமத்தியரேகை போல எங்கள் கிராமத்தின் நடுரேகையாச் செல்லும் சாலை ஊரை வடக்கு தெற்காக பிரிக்கிறது. இந்த சாலை இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் செயற்கையாக அமைக்கப் பட்டிருந்தாலும். இயற்கையாகவே சாலையின் வடக்கு பக்கம் நல்ல சுவையான நீரும் . தெற்கு பக்கம் சற்று சுவை குறைந்த சவர் நீருமாக இரு வகையாக நீரோட்டங்கள் அமைந்திருக்கின்றன. 

எங்கள் கிராமத்தின் நிலவியல் அமைப்பில் தென்மேற்கு பகுதி வடகிழக்கை விட சற்று மேடான பகுதி , அதனால் மழைபொழியும் நாட்களில் மழைநீர் பள்ளமான வடகிழக்கு பகுதியை நோக்கி ஓடி வந்து தேங்கி நின்று மெதுவாக பூமிக்குள் இறங்கும் .. அதனால் தானோ என்னவோ தென்மேற்கு பகுதியில் உள்ள கிணறுகளில் இருக்கும் நீரை விட வடகிழக்கு பகுதியில் உள்ள கிணற்று நீர் நல்ல சுவையாக இருக்கும் . அதிலயும் தென்னை மரக் கூட்டங்கள் சூழ்ந்திருந்த அம்மன் கோவில் வளாகத்தில் இருந்த ஊர்கிணற்றின் நீர் இயற்கைநீர் போன்று சுத்தமானது சுவையானது .. 

ஊர்க்கிணறு வெறும் கிணறல்ல. அது, தண்ணீர் சுரங்கம் ,இரவில் சூடாய், பகலில் குளிர்ச்சியாய் தண்ணீர் தரும் தாய், கதை பேசும் பெண்களின் அரட்டை அரங்கம், கோபப் பெண்களின் போக்கிடம் , ஊர்ப் பெரியவர்களின் சபைக் கூடம், சிறுவர்களின் வேடிக்கை நிகழ்விடம், பெண் பார்க்கும் படலமும் , பெண்களை பார்க்கும் படலங்களும் நடக்கும் இடம், இப்படி எவ்வளவோ ஞாபகங்களின் ஊற்று. 



அந்த கிணற்றுக்கு பெண்கள் தனியாக தண்ணீர் எடுக்க வருவதில்லை , தோழிகள் நான்கு ஐந்து பேர் ஒன்றாக சேர்ந்து தான் வருவார்கள் சாதாரணமாக அல்ல , நிலைக் கண்ணாடியில் முன் நின்று தன் நிஜத்தின் நிழலை கண்மலரால் கண்டு , வதனம் வடிவுற, ஆடை திருத்தி புதியதொரு கவிதை என புறப்பட்டு வருபவர்கள் , தென்னந்தோப்புக்கு நடுவில் செல்லும் ஒத்தையடி பாதையில் நடந்து இடுப்பு உயரத்திற்கு சிமென்டாலும் ,அதை சுற்றி முற்றம் போன்ற அமைப்பும் கொண்ட அந்த கிணற்றுக்குள் , பளிங்கு கண்ணாடி போன்று இருக்கும் நீரை , கயிற்றுடன் கூடிய கை வாளியில் அள்ளி ஊற்றி கொண்டு வந்த குடங்களை நிரப்பி , 
இடுப்பில் சறுக்கும் குடத்தினை ஒரு கையால் அனைத்து , சறுசறுக்கும் தாவணி காலில் இடராமல் மறு கைவிரல் நுனியால் மென்மையாக பிடித்தபடி . குடம் நிறைந்த தண்ணீர் ததும்பாமல் , சிதறாமல் , மல்லிப்பூ வாசனையும் மண்ணின் வாசனையுமாய் , வெட்கத்துடன் சுமந்தபடி செல்லும் பெண்கள். கிராமத்தின் அழகியலுக்கு அழகு சேர்க்கும் வண்ணங்கள்.. 

ஆனால் கிராமங்கள் நகரமாக வேடமிடம் முனைப்பில் அவை அவற்றின் அடையாளங்களையும் தனித்தன்மையும் இழந்து விட்டன. நகரம் பெருக காணமல் போன ஏரி குளங்களை போல, நகரமாகும் முனைப்பில் தூர்ந்து , சிதிலமடைந்து மண்மேடாகி மறைந்து போனது கிராமத்தின் கிணறுகள் . சமீபத்திய பத்திரிக்கை செய்தி இவ்வாறு வந்தது , பெரு நகரங்களில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் பொருட்டு மழைநீரை சேமிக்க , ஆங்காங்கே பெருங் கிணறுகள் தோண்டப்படுகிறது என்று .. அப்போது  நன்றாக புரிந்தது .. ஓரு பொருள் இருக்கும் போது அதன் அருமைன்னு தெரியாதுன்னு சும்மா ஒன்னும் சொல்லல என.. 

" கான்கீரிட் சூழ் உலகில் 
தார் பூசி விரிக்கப்பட்ட 
சாலையில் சொகுசு ஊர்தியில் பயணிக்கும் போதும் . 
மகரந்தம் சூழ் உலகில் ,
மகரத பசுமையினிடை 
ஒற்றையடி பாதையில் 
நடந்த நினைவுகள் தான் 
நிம்மதி தருகின்றது... " 


- விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️✍️








Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்