பேரண்டத்தின் பேராற்றல்
https://youtube.com/shorts/90hmo0CFm6Q?si=Y0yQq6Hl11Ej7Mh4 .
விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் , எனக்கு என்று சில வேலைகளை ஒதுக்கிவிடுவாள் என்னவள். அதில் மிகவும் முக்கியமானது. வாஷிங்மெஷினில் துவைத்த துணிகளை மொட்டை மாடியில் கட்டியிருக்கும் மெல்லிய கம்பியில் விரித்து உலரவைத்து எடுத்து வருவது. அதுவும் மதிய நேர உச்சிவெயிலில் காயப்போட கூடாது என்றும், அவ்வாறு காயவிட்டால் வெயில் கடுமை காரணமாக துணியின் மெல்லிய நூலிலைகள் பாதிக்கப்பட்டு துணிமணிகள் எளிதில் டர்ர்ர்ர்.. என்று கிழிந்து விடும் அபாயம் இருப்பதால் அந்நேரம் துணிகளை உலரவைக்க அனுமதியில்லை..
அதனால் நான் எங்கள் ஊர் அருகில் இருக்கும் வங்கக்கடலின் ஆழமான பகுதியில், மீனவர்களால் பிடிக்கப்பட்ட வஞ்சரம் மீன்களை , அன்றே காயல்பட்டிணத்தின் மீன் மார்கெட்டில் இரத்தம் சொட்டச் சொட்ட வாங்கி வந்து செய்த மீன்குழம்பை வட்டிலில் கொட்டி .. சப்பு கொட்ட வயிற்றில் கொட்டிய மயக்கத்தில் இருக்கும் அந்த மூன்று மணியளவில் தான் மாடியில் அவற்றை காயப்போட கட்டளையிடுவாள். அந்த நீல நிற பிளாஸ்டிக் பக்கெட்டில் அவற்றை அள்ளிக்கொண்டு வீட்டின் மூலையில் இருக்கும் அந்த பதினான்கு படிகளை ஏறிச் சென்று துணிகளை காயப்போடுவதென்பது, ஏழு கடல்களையும், ஏழு மலைகளையும் தாண்டி சென்று தங்க கூண்டில் அடைபட்டிருக்கும் லைலாவை காப்பாற்றச் செல்லும் தினதந்தி சிந்துபாத்தின் வாழ்க்கை போன்று அவ்வளவு துயரமானது..
பிற்பகல் உலரவிட்டு வந்த துணிகளை வானம் சிவப்பு ஏறிய அந்த மாலை பொழுது மாடிக்கு சென்று எடுக்கச் சென்ற போது தான் பேரண்டத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஏதோ ஒரு காரணமும் தொடர்பும் இருப்பதை அனுபவப்பூரவமாக உணர்ந்தேன். எந்தவொரு இயந்திரத்தின் இரைச்சலன்றி ..அமைதியாக இருந்த பொன் மாலை பொழுதில், வானத்தில் ஆங்காங்கே கூட்டமாக பறவைகள் தங்கள் இரைதேடுதலை முடித்து கூடு திரும்பிக் கொண்டிருந்தன .ஒரு வீட்டின் மாடியில் பத்திற்க்கும் மேற்ப்பட்ட காகங்கள் அமர்ந்து அவர்களின் அன்றைய நடப்பை ஜாலியாக பேசி கரைந்து கொண்டிருந்தன. இன்னும் வெளிச்சம் முழுமையாக மறையாத போதும், சரியாக ஆறு மணிக்கெல்லாம் வரவிருக்கும் இருட்டை விரட்ட தெரு விளக்குகள் பளிச்பளிச் என கண்விழித்து காத்துக் கொண்டிருந்த பொழுது தான் , அந்த நிகழ்வு என் கண்ணில் பட்டது . ஒரு நூற்றுக்கும் குறைவான குடியிருப்புகளை கொண்ட எங்கள் சிற்றூரிலிருந்து சில காலடி தூரத்தில் அமைந்திருந்த வாய்கால் கரையோரத்திலிருந்த அரசமரம் , ஆலமரம், புளியமரம் மற்றும் பனை , தென்னை , வேம்பு என சூழ்ந்திருந்த மரக்கூட்டங்கள் நடுவே பறக்கத் தொடங்கின அந்த மரங்களின் நீண்ட கிளைகளில் தலைகீழாக தொங்கியபடி ஆடிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பறக்கும் நரி எனப்படும் மலை வெளவால்கள்.
குட்டியிட்டு பாலூட்டும் மீனினமான திமிங்கலம் போல குட்டியிட்டு பாலூட்டும் ஓரே பறவையினம் வெளவால்கள் தான். வீட்டில் இருக்கும் சிறிய வெளவால்களை விட மிகப்பெரியதாக இருப்பவை மலை வெளவால்கள் . இவை பயிர்களில் இருக்கும் பூச்சிகளையும் , பழங்களையும், பூக்களில் இருக்கும் தேனையும் உண்டு வாழ்வதால் இவற்றின் மூலமாக மகரந்த சேர்க்கையும் , அவற்றின் கழிவுகள் உரமாகவும் , பயிர்கொல்லி பூச்சிகள் உணவாக உண்டு அவற்றை அழிப்பதால் இவை விவசாயிகளின் தோழனாக இருந்தாலும் , வெறிநாய்க்கடி எனும் ராப்பீஸ் மற்றும் விலங்குகள் மூலமாக பரவும் பல நோய்கள் இவற்றின் வழியாக பரவுவதால் இவை மனிதர்களுக்கு ஆபத்தானவை தான். மேலும் இந்த மலை வெளவால் எங்கள் பகுதிக்கு வந்த இந்த இருபத்தைந்து வருடங்களில் , எங்கள் பகுதியில் இருந்த தட்டான்கள் , தேனீக்கள் ,பட்டாம்பூச்சிகள் போன்ற நன்மை பயக்கும் பல பூச்சினங்கள் காணமல் போய்விட்டன. இந்த வெளவால்கள் எஙகளுக்கு வரமா சாபமா என தெரியவில்லை.
இந்த பிரம்மாண்ட பிரபஞ்சம் தான் நமக்கு தேவையானவை நம்மிடம் வந்து சேர அனைத்து வழிகளையும் ஏற்படுத்தி, அவை நம்மை வந்து சேருமாறு , அவற்றை நோக்கி நம்மை வழிநடத்தும்.
நாம் விரும்பும் தேடும் அனைத்தும் அள்ள அள்ள குறையாத பேரண்டத்தின் பேராற்றலிடம் இருந்து படைக்கப்படுவதாகும். இந்த பேரண்ட சக்தியின் ஓட்டத்தோடு ஒத்திசைந்து ஓட முடிந்தாலோ , இணைந்து விட்டாலோ நம் கனவுகள் நிச்சயம் நனவாகும்..
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தூர் குளத்தின் கரையில் திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையின் ஓரமாக வரிசையாக இருந்த நாவல் மரத்தில் தான் இவை முதலில் சிறு கூட்டமாக காணப்பட்டன. சிலர் விளையாட்டாகவும் நரி குறவர்கள் உணவுக்காகவும் அவற்றை வேட்டையாட தொடங்க , தமிழ்நாடு வனத்துறை அவற்றை பாதுகாக்கும் பொருட்டு அந்த வெளவால்கள் பாதுகாக்கப்பட்டவை என்று , வனதுறை சார்பாக வரைபலகை வைத்த பின்பே வெளவால்கள் தப்பித்தன . சில நாட்களில் அந்த நாவல் மரங்களில் ஒன்று தீ விபத்தில் எரிந்து போக , வெளவால்கள் அங்கே சற்று தள்ளி இருந்த பெரிய ஆலமரத்திற்கு இடம்மாறின . ரோடு விரிவாக்கத்திற்காக அந்த ஆலமரமும் வெட்டப்பட அங்கிருந்த தங்கள் ஜாகையை எங்கள் ஊர் வாய்கால் அருகில் இருந்த மரக்கூட்டங்களுக்கு மாறிவிட்டன.
இதோ அங்கே அந்த வெளவால்கள் தான் பல்கிப் பெருகி மழை காலத்தில் புற்றிலிருந்து வெளிவரும் ஈசல் போல , மாலை மறைந்து இரவு பிறக்கும் இந்நேரத்தில் வங்கக் கடலில் இருந்து வீசும் மென் காற்றின் அசைவுகளில் தன் நீண்ட இறக்கையை விரித்து சிறிதாக அசைத்து மிதப்பது போல வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வானத்தில் பறக்கும் வெளவால்களை காண செஞ்சூரியன் மறையும் முன்னே இரவை வெண்ணிறவாக்க வந்து நின்ற நிலவவனை பார்த்தபொழுது
எத்தனை அழகானது இந்த பேரண்டத்தின் படைப்புகள் அவற்றை கண்டு ரசிக்க நம் வாழ்நாள் முழுவதும் போதாது நினைத்து இந்த பேரண்டத்தையும் அதில் சிறு புள்ளியான என ஊரின் அழகை அந்த மாலை பொழுதில் கண்டுமயங்கி போனேன்..
நிலவு எப்பொழுதும் அழகுதான் .. ஆனால் என் ஊரில்,
என் வீட்டு மொட்டை மாடியில் , என்னவளுடன் சேர்ந்து பார்க்கும் போது மட்டுமே மிகவும் அழகாக தெரிகிறது "
மனைவியின் டார்ச்சரில் இருந்து தான் கணவர்களுக்கு ஞானமும் , ஞானத்தின் வழி தத்துவமும் பிறக்கிறது..
விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️
துணீயும் காய்ந்தது..மாலையும் மயங்கியது.கற்பனை விரிந்தது. கட்டுரை மலர்ந்தது அழகாக. சிறப்பு.
ReplyDeleteநன்றி 🙏🏻
DeleteSuper machan
ReplyDeleteநன்றி ..
DeleteNice bro 👌
ReplyDeleteThanks Anna
Deleteஉங்கள் மலரும் இளமை ஊர் நினைவுகளை சிறு கதையாha எழுதினால் மிக அருமையான thakum
ReplyDeleteமுயற்ச்சி செய்வோம். நன்றி
Delete