எங்க ஊர் பெரிய வாய்க்கால்

தமிழ்நாடு வெப்ப மண்டலத்தின் பகுதியாகும் . அதன் காரணமாக தமிழர்கள் நீராடும் வேட்கையுடையவர்கள் . சுனையிலும் அருவியிலும் ஆற்றிலும் கடலிலும் கண்மாய்களிலும் குளங்களிலும் கால்வாய்களிலும் குளித்தலில் ஆர்வம் காட்டுகின்றனர். சைவ , வைணவ பெருஞ்சமய நெறிகள் கிளர்ந்தெழுந்தபோது அவை நாட்டார் மரபின் வலிமையான அடிக்கூறுகளை தன்வயமாக்கிக் கொண்டன. அவற்றில் ஓன்று நீராடல் ஆகும் , வெப்பமண்டல மனிதர்களை போலவே அவர்கள் வழிபடும் சிவன் , திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும் குளி(ர்)க்கின்றன. 
         
          'குளித்தல்' என்ற சொல்லையே நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாகும் . குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள் ; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் 'குளிர வைத்தல் ' என்பதே அதன் பொருளாகும் . 'குளிர்த்தல் ' என்ற சொல்லையே நாம் குளித்தல் எனத் தவறாகப் பயன்படுத்துகிறோம். 

   தமிழகத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மாலை அல்லது முன்னிரவு நேரத்தில் குளிக்கும் வழக்கமுடையவர்கள். எங்கள் ஊரிலும் விடியற்காலையிலே வயக்காட்டுக்கு சென்று உழைக்கும் மக்கள் மாலையில் குளித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். காலை முதல் மாலை கஷ்டப்பட்டு உழைக்கும் அவர்களின் உடல் அசதி தீர்க்கும் அருமந்தாகவும், உடலுக்கும் உள்ளத்திற்கும் குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் அளிக்கும் , எங்கள் ஊர் மக்களால் பெரிய வாய்கால் எனவும் ஆத்தூரன் கால்வாய் எனவும் அழைக்கப்படுகிறது அந்த குட்டி தாமிரபணி. எங்கள் பகுதி மக்கள் இப்போது அதை வாய்க்கால் என்றே அழைக்கின்றனர் , ஆனால் அது தவறானது அது கால்வாய் , ஆற்றிலிருந்து கால்கள் பிரித்து வெட்டி அவற்றின் வாயிலாக நீர் பாய்ந்தால் கால்வாய் . கால்வாயிலிருந்து வயலுக்கு கால்கள் பிரித்து வெட்டினால் வாய்க்கால்.

   நீந்தி பழகுவதில் இருந்து நீத்தார்க்கு நீர்மாலை எடுப்பது வரை என எங்கள் மக்களின் வாழ்வியலில் ஒன்றன கலந்திருக்கிறது பெரிய வாய்க்கால். வாய்க்காலில் வரும் தண்ணீரின் அளவை பொருத்து தான் ஊரில் இருக்கும் கிணறுகளின் ஊறும் தண்ணீர் அளவு இருக்கும் . வாய்காலில் ஆங்காங்கே அமைந்திருக்கும் மடைகளின் வழியாக சிற்றோடைகளில் பாயும் நீரைச்சார்ந்தே பல ஏக்கர் பரப்பளவில் நடக்கும் விவசாயமும் நடக்கும். இன்னும் எங்கள் கிராமங்களில் தொடர்ந்து வரும் தமிழர்களின் பண்பாடுகள் தொடர்புடைய விழாக்களில் அம்மனுக்கு முளைப்பாரி எடுப்பதும் பின்பு அவற்றை நீர்நிலைகளில் அலசுவதும் , புனிதநீர் அருந்தி சிவராத்திரி விரதம் முடிப்பதும் இந்த பெரிய வாய்க்காலில் தான் ..

எங்கள் ஊரின் வடக்கே முந்நூறு மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளளது பெரிய கால்வாய் . ஊரின் முதல் தெய்வமான முத்தாரம்மன் கோவிலின் வடகிழக்கு மூலையில் இருந்து நீளும் அந்த சாலையின் இரு ஓரமும் வாழை , வெற்றிலை தோட்டங்களும் அவற்றை கால்நடைகளிடம் இருந்து பாதுகாக்க ஆதாலங்குச்சி , பூவரசமரம் , மஞ்சனத்திமரம் மற்றும் முள்செடிகளை கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் உயிர்வேலிகளின் மேலே வேலி படத்தி , சங்கு புஷ்பம் , பூனை புடுக்கு பழம் , குன்னிமுத்து, தூதுவளை போன்ற கொடிகள் படர்ந்திருக்க , வேலின் கீழே சுடக்கு தக்காளி , ஊமத்தம் , எருக்கஞ்செடி , செவ்வரளி, சீப்பு செடி , கீழாநெல்லி, கண்டங்கத்திரி, கொழிஞ்சி, ஆமணக்கு , செந்தட்டி, நெருஞ்சி முள், குப்பைமேனி, வெட்டுகாயபூண்டு , டிசம்பர் பூ , கோழியாப்பூ , நாயுருவி, ஓட்டுமுள் செடி , பொங்கப்பூ , அருகம்புல் , பனிப்புல், நாணல் என புற்களும் புதர்செடிகளுமாய் இருபக்கமும் பச்சை பசேல் என படந்த மரகத கம்பளங்களுக்கு நடுவே சிவப்பு கம்பளம் விரித்தார் போல சிவப்பு சரல்கற்கல் பதியபட்டிருந்த அந்த ஐந்தடி பாதைதான் எங்கள் ஊரில் இருந்து பெரியவாய்க்காலுக்கு செல்லும் அழகான பாதை .. அங்கு பூத்திருக்கும் பூக்களில் தேன் எடுக்க தேனிக்களும், வண்ணத்துப்பூச்சிகளும், தட்டான்களும் பறந்து கொண்டிருக்கும் அந்த பாதையில் நுழைவதே ஒரு சோலைக்குள் நுழைவதை போன்று இருக்கும் . இரண்டு நிமிட நடையில் வாய்காலை நெருங்க நெருங்க வாய்க்காலின் இருபக்க கரையிலும் இருக்கும் அரசமரம் ஆலமரம் பனைமரம் புளியமரம் வேம்பு பூவரசு என எண்ணற்ற மரங்களின் அசைவிலிருந்த வீசும் குளிர்ந்த தென்றல் சாமரம் வீசுவது போல வீசி நம்மை வரவேற்கும். அதன் கரையில் இருக்கும் அரசமரத்திலிருந்து உதிர்ந்த அரசம்பழங்களை பொறுக்கி தின்றுகொண்டே அந்த வசந்தத்தை அனுபவிப்பது மனதுக்கு அவ்வளவு இதமானது. இப்போதும் கூட மனது கனத்திருக்கும் நேரங்களில் அந்த அரசமரத்தின் அடியில் அமரந்திருந்தால் மனது இலகுவாகும். புத்தருக்கு ஞானம் கிடைக்க காரணமாய் அமைந்த போதிமரம் போன்று . எங்கள் மனது நிதானிக்க கிடைத்த போதிமரம் அது.. 

 நீராட்டலும், நீர் விளையாட்டும் இரண்டும் வெவ்வேறு என தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.... ஆனால் எங்களை பொருத்தவரை இரண்டும் ஒன்றன கலந்தது தான் ..ஆண்கள் , பெண்கள் குளிப்பதற்கு என தனித்தனி படித்துறைகள் உண்டு , ஆண்கள் படித்துறையை விட பெண்கள் படித்துறை இரண்டு மடங்கு பெரியதும் சற்று ஆழமானதுமாகும். சிறுவதில் அம்மாவுடன் சென்று அங்கு தான் குளிப்போம் . நான் நீச்சல் பழகியதும் அங்கே தான் .. கரையிலிருந்து வாய்க்காலின் மையம் வரை நீண்டிருந்த அரசமரத்தின் கிளைகளில் ஏறி கால்வாய்க்குள் குதிப்பது, அப்பாவின் லுங்கியில் காற்றை நிரப்பி நீரில் மிதப்பது, அம்மாவின் சேலை கொண்டு மீன்களை அரித்து பிடிப்பது, மிதந்துவரும் ஆகாயத்தாமரை கூட்டங்களுக்குள் சென்று ஒளிந்து கண்கள் சிவந்து உடல் வெடவெடக்கும் வரை விளையாடுவது, கோடையில் குறைவாக ஓடும் நீரில், ஏறும் மீனை உத்தான் கொண்டு குத்தி பிடித்தது , படித்துறையின் நடுமையாக அமைந்திருக்கும் சறிவான திண்டில் சறுக்கி விளையாண்டு தேய்ந்து ஓட்டையான கால்சட்டைகள் பல . அந்த திண்டின் ஒரங்களில் இருக்கும் சொரசொரப்பான பகுதிகள் தான் பெண்கள் முகத்தில் பூச மஞ்சளை உரசும் இடங்கள்.. அப்போதெல்லாம் மஞ்சள் பூசாத பெண்களை பார்ப்பது அரிது இப்போது பூசுபவர்களை பார்ப்பது போல , அதே போல் மையாக அரைத்த வெந்தயமும் , யானைமார்க், புலிமார்க் சீயக்காய்துளும் தான் தலைமுடிக்கு.. . (சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஷாம்புகள் தான் நீர்நிலைகளின் மாசுக்கு முதற்காரணம்.. ) 

வீட்டில் வளர்க்கும் மாடுகளையும் ஆடுகளையும் எங்களுடனே அழைத்து சென்று குளிப்பாட்டுவதும் , நீரில் அவற்றோடு சேர்ந்து நீந்தி விளையாடுவதும் உண்டு , அருகில் கரையிலிருக்கும் ஆலமரத்தின் விழுதுகளில் அவைகள் கன்றுகள் ஈன்று கழிக்கும் நஞ்சுக்கொடிகளை பனை ஓலைபெட்டியில் வைத்து கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் நாய்கள் தீண்டிவிடாமல் இருக்க. பெருங்காற்றில் வாய்க்காலின் குறுக்கே சாய்ந்து கிடக்கும் பனைமரங்கள் ஒரிருமுறைகள் வந்து போகும் வாய்க்காங்கரை பஸ்ஸை பிடிக்க நாங்கள் நீரில் நனைந்து விடாமல் கடந்து அக்கரை போக பாலங்களாக உதவும்..

நல்லத்தண்ணிர் மதகு , பெண்கள் படித்துறையிலிருந்து கரையோரமாக மேற்கு பக்கம் இரண்டு பக்கமும் அடர்ந்திருக்கும் விஷஜந்துக்கள் நிறைந்த புதர்செடிகள் மத்தியில் செல்லும் நூறு மீட்டர் ஓற்றையடி பாதையில் நடந்து ஆண்கள் படித்துறையை தாண்டி சென்றால் நல்லத்தண்ணீர் மதகுவை அடையலாம் . மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி அது . வாய்காலின் ஆழமான இடம் அது . கோடையில் மொத்த வாய்க்கால் நீரின்றி வற்றினாலும் அந்த பகுதியில் மட்டும் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் .. எங்களுக்கு மிகவும் பிடித்தமான இடம் அது . 
         நல்லத்தண்ணீர  மதகிற்கு சற்று தள்ளி எதிர்பக்கம் நின்ற உயர்ந்து படர்ந்து பூத்து காய்த்து குலுங்கும் புளிமரத்தின் அருகில் பெரியப்பாவின் வாழைத்தோட்டம் இருந்தது . அன்று காற்றும் மழையும் பெய்திருந்ததால் அண்ணன்களுடனும் நண்பனுடனும் சேர்ந்து சென்று வாழை எதுவும் சாய்ந்திருக்கிறதா என்று பார்க்க சென்றறோம். அங்கு பழுத்துநின்ற வாழைமரம் ஒன்றில் ஏறி பழங்களை பறித்து சாப்பிட்டு கொண்டே தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு ,தோட்டத்தில் விழுந்து கிடந்த இரண்டு வாழைதார்களை வெட்டி எடுத்துக்கொண்டு , கால்வாயில் குளித்து விட்டு வீட்டுக்கு போகலாம் என்று கால்வாய்க்கு திரும்பினோம்.. கால்வாயில் தண்ணீர் அதிகமாகவும் இழுப்பாகவும் ஓடிக்கொண்டிருந்தது. நானும் அண்ணன்களும் அதை அருகில் இருந்த மடையில் நின்று பார்த்து அவதானித்துக் கொண்டிருந்தோம் . ஆனால் உடனிருந்த நண்பன் அவசர அவசரமாக சட்டையை கழட்டிவிட்டு, ஜெய்ஹிந்த் படத்தில் தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று குதிக்கும் கவுண்டமணி போன்று வேகமாக கால்வாயின் தண்ணீருக்குள் பாய்ந்தான்.. பாய்ந்த வேகத்தில் தண்ணீரின் மேல வந்தது நின்றவனின் இடுப்பளவு தான் தண்ணிர் இருந்து, அதோடு அவன் தலையில் இருந்து வந்த இரத்தம் முகத்தில் வழிந்து தண்ணீரக்குள் சொட்ட அழத்தொடஙகினான். அதை பார்த்த பிறகுதான் எங்களுக்கு தெரிந்தது நீர்சூழலினால் அந்த குறிபிட்ட இடம் மணல் மேடிட்டிருந்ததும் அந்த இடத்தில் குளிப்பதற்காக பெரிய கருங்கல் போடப்பட்டிருந்ததும். அந்த இடத்தில் ஆழம் குறைவாகவும் கருங்கல் கிடந்ததையும் அறியாத நண்பர் தலைகீழாக தண்ணீருக்குள் நேராக அந்த கல்லின் மேலே பாயந்திருக்கின்றான் . முதலில் அவனை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது , பிறகு அவனின் நிலையை உணர்ந்து வேகவேகமாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.. 

 எங்க ஊர் வழியாக பாயும் அந்த பெரிய வாய்க்காலின் நினைவுகள் எப்பொழுதும் எனக்குள் ஓடுடிக்கொண்டு தான் இருக்கிறது. உடலில் ஓடுவது அந்த தண்ணீர் குடித்து ஊறிய இரத்தம் அல்லவா அது சுண்டும் வரை எனக்குள் சுழன்று கொண்டுதான் இருக்கும்.. 

விக்கி இராஜேந்திரன் ✍️✍️










Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்