நடையில் பயின்றது..

உடல் எடை குறைக்க நடைப்பயிற்சி செய்யுங்கள் , இல்லையென்றால் உடல்நிலையில் தேவையற்ற தொந்தரவுகளை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும் என்ற மருத்துவரின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக கைப்பேசியில் அலாரம் வைத்து அதிகாலை 7 மணிக்கெல்லாம் பாதி தூக்கத்தில் விழித்து , வாக்கிங் போவதற்க்கென வாங்கி வைத்திருந்த ஷூவை எடுத்தேன், அது பதிமூன்றாம் நம்பர் வீடு என்ற பேய் படத்தில் வரும் பாதாள அறையை அப்போது தான் திறப்பது போன்று ஓட்டடையும் தூசுமாக இருந்தது .. அதை எடுத்து வேண்டா வெறுப்பாக கஷ்டப்பட்டு துடைப்பதற்குள் நன்கு வியர்த்து விட , ஆகா இதுவே பத்தாயிரம் காலடிகள் நடந்துபோல இருக்கே, இதுக்கு மேல் எதற்கு நடக்க வேண்டும் , தினமும் ஷூவை எடுத்து நன்றாக துடைத்தாலே போதும் போலவே , இதுவே பெரிய உடற்பயிற்சியாக இருக்கு இதற்கு மேல் எதுக்கு நடைபயிற்சி என்று மனது அலைபாயந்த போது...
சோம்பேறி ... சோம்பேறி என்றது உள்மனது, என்னை விட அதுக்கு தான் என் உடல்நலனை காப்பதில் அக்கறை அதிகம்.. 
சரி.. சரி .. திட்டாதே என்று உள்மனதை சமாதனபடுத்திக்கொண்டு .. 
வேண்டா வெறுப்பாக ஷூவை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தால் சில்லென்ற காற்றுடன் சிறு சிறு மழைத்துளிகள் விழுந்தன.. இன்னும் கொஞ்சம் வேகமாக தூறினால் வீட்டுக்கு திரும்பிவிடலாமே என மனம் துடித்தது. ஆனால் இந்த பிரபஞ்சத்துக்கு என் மேல் சிறு துளியும் கருணை இல்லை .. அதுவரை விழுந்து கொண்டிருந்த அந்த சிறு துளியும் நின்று விட்டது.. 

வேறு வழியே இல்லாமல் மெதுவாக நடந்து ரோச்சர் கேணல் என்னும் மழைநீர் வடிகால் கால்வாயை வந்து சேர்ந்தேன் . அங்கு நடைபயிற்சி செய்வதற்கு என்று பிரத்யேமாக அமைக்கப்பட்டிருந்த நடைமேடையில் காதில் ஏர்பட்ஸ்-ஐ மாட்டிக்கொண்டு சிறிது நாட்களாக நான் கேட்டுக்கொண்டிருந்த இந்திய மற்றும் உலக தத்துவ அறிஞர்களை பற்றியும் அவர்களின் தத்துவங்களை எடுத்துரைக்கும் பேராசிரியர். இரா . முரளி அவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டே நடைபயிற்சியை தொடங்கினேன். இன்று அவரது பேச்சு அஷ்டவக்ர கீதையை பற்றி இருந்தது . 28 வகையான கீதைகளில் ஒன்று அஷ்டவக்ர கீதை என்றும் . அதை சீதையின் தந்தை ஜனகருக்கு அஷ்டவக்கிரர் என்பவர் உபதேசித்தாக பேராசிரியர் அவர்கள் கூறியதை கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது . ஏனென்றால் இதுவரை பல கீதைகள் இருப்பதை அறிந்திருக்கவில்லை. பின்பு அதை பற்றி ஆராய்ந்ததில் 
அறுபதுக்கும் மேற்பட்ட கீதைகள் இருப்பதாக அறிந்தேன் .இதில் ஒன்றான ரிபுகீதையானது சிவரகசியம் என்னும் நூலில் உள்ளதாககும். ரிபு கீதையை சிவபெருமான் ரிபு முனிவருக்கு நேரிடையாக கூறியதாக கதைகள் இருக்கின்றன. இவ்வளவு கீதைகள்இருக்கும் போது மகாபாரத கதையில் வரும் கீதை மட்டும் ஏன் புனித நூலாக்கப்பட்டிருக்கும் . அதற்கு சமுக சமய அரசியல் இன்றி வேறு காரணங்கள் இருக்கமுடியாது . கீதைகள் அனைத்தும் உபதேசங்களாகவே அமைந்திருக்கின்றன.. உங்கள் மனதில் தோன்றும் அனைத்து உணர்ச்சிகளையும் துறப்பது தான் பரம்பிரம்மத்ததை அடையும் வழி என்று போதிக்கினறன. அதாவது நீ சந்நியாசியாக போனால் தான் இறைவனை காணமுடியும் என்கிறது . 

   எங்கெங்கோ சென்ற எண்ண அலைகள் கடைசியில் இந்த உலகத்தின் அனைத்துமாக நானே இருக்கின்றேன் என்று இறைவன் கூறியதாகப்படும் வாக்கியத்தில் வந்து நின்றது. அனைத்தும் அவனே என்றால் .. ஏன் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள், வெறுப்பு , கோபம் , அநீதி , மோசம் அயோக்கியத்தனம் எல்லாம் வருகிறது.
போதை ஏறியவன், கல் தடுக்கியோ , காற்று அடிப்பதாலோ கீழே வீழ்வான் அதே போல இயற்கையை இன்பத்தை நுகர்ந்து , வீரத்தை வணங்கி , அறத்தோடு வாழ்ந்த தமிழர்கள் புராண புளுகு மூட்டைகள் என்னும் போதை ஏறி புத்தி கெட்டு கிடப்பதாக தோன்றுகிறது. ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் பேராற்றலுக்கும் உயிர்களுக்கும் நேரே தொடர்பு இருந்தது . என்று இவர்களுக்கு இடையில் புகுந்த இடைத்தரகர்கள் அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டைகளை நம்பினோமோ அன்றே பேராற்றலும் மக்களும் ஒருவருக்கு ஒருவர் அந்நியப்பட்டு போனாரகள்.   

விக்கி இராஜேந்திரன். ✍️

Comments

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்