எங்க ஊர் பெரிய வாய்க்கால்
தமிழ்நாடு வெப்ப மண்டலத்தின் பகுதியாகும் . அதன் காரணமாக தமிழர்கள் நீராடும் வேட்கையுடையவர்கள் . சுனையிலும் அருவியிலும் ஆற்றிலும் கடலிலும் கண்மாய்களிலும் குளங்களிலும் கால்வாய்களிலும் குளித்தலில் ஆர்வம் காட்டுகின்றனர். சைவ , வைணவ பெருஞ்சமய நெறிகள் கிளர்ந்தெழுந்தபோது அவை நாட்டார் மரபின் வலிமையான அடிக்கூறுகளை தன்வயமாக்கிக் கொண்டன. அவற்றில் ஓன்று நீராடல் ஆகும் , வெப்பமண்டல மனிதர்களை போலவே அவர்கள் வழிபடும் சிவன் , திருமால் ஆகிய தெய்வங்களும் நாள்தோறும் குளி(ர்)க்கின்றன. 'குளித்தல்' என்ற சொல்லையே நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாகும் . குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள் ; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் 'குளிர வைத்தல் ' என்பதே அதன் பொருளாகும் . 'குளிர்த்தல் ' என்ற சொல்லையே நாம் குளித்தல் எனத் தவறாகப் பயன்படுத்துகிறோம். தமிழகத்தில் பெரும்பான்மையான உழைக்கும்...