மத அரசியலும் , பாசிசமும் - 2
ஒரே நாடு , ஒரே மொழி என்று நமக்கு தேசபக்தி பாடம் எடுப்பதெல்லாம் , மக்கள் தொகையில் ஒற்றை இலக்கத்தில் இருக்கும் ஒரு சிறு இனகூட்டத்தின் மொழி , பண்பாடு , முக்கியமாக அவர்கள் அதிகாரத்தை அடைவதற்கு உருவாகிய கடவுள் வழிபாடு போன்றவற்றை அவற்றை பின்பற்றாத மற்ற மொழி , பண்பாடு , வழிபாட்டு முறைகள் மீது திணித்து , அடையாளமற்ற அவர்களின் அடையாளங்களை அனைத்து இடங்களிலும் நிரப்பி , இது அவர்களின் தேசம் என்று அடையாளம் காட்டவே அன்றி வேறில்லை .
பிற மதங்கள் இந்து மதத்தை அழிப்பதாக குற்றம் கூறும் யாவரும் , , இப்போது இந்துகளாக கருதப்படும் இவர்களுக்குள் முற்காலத்தில் நடந்த சைவ , வைணவ சண்டைகளால் ஏற்பட்ட உயிர்பலிகள் , சமணர்களை அழிக்க அவர்களை கழுவேற்றிய வரலாறுகள் , இந்த மண்ணில் தோன்றிய ஆசிவகத்தையும், பெளதத்தையும் அழித்த வரலாறுகளையும் இந்து என்ற பெயரே இந்தியாவில் உள்ள சமயங்களை இணைத்து ஆங்கிலேயன் வைத்த பெயர் அது என்பதையும் வசமாக மறந்து விடுகிறார்கள். சமஸ்கிருதம் மற்றும் வேத மொழியை எதிர்த்து தமிழ் மொழியை நிறுத்திய நாயன்மார்களும், ஆழ்வார்களும் வாழ்ந்த மண்ணில் இப்போது கோவில்களில் இப்போது தமிழ் மட்டும் ஒலிப்பதில்லை..
இந்து மதத்தின் அடிப்படையான ரிக், யஜூர், சாம, அதர்வண எனப்படும் இந்த நான்கு வேதங்களுடன் சற்று தொடர்பில்லாத நம் மண்ணின் வழிபாடுகளான வீட்டுத்தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு, இனதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு மற்றும் வெகுசனத் தெய்வ வழிபாட்டு போன்ற நாட்டார் மரபியல் வழிபாடுகளில் , மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும், அவர்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த முறைப்படியும் வழிபாடு நடந்தது. ஆனால் இப்போது நாட்டார் வழிபாடுகளிலும் இப்போது வேத மந்திரங்கள் ஒலிக்க ஆரம்பித்து விட்டன.
மதத் திணிப்பு , மதத் திணிப்பு என்று கதறுபவர்கள், தங்கள் வழிபாடுகளில் வேற கடவுளை வணங்குவதற்கு சொல்லப்படும் மந்திரங்களை . நமது தெய்வ வழிபாடுகளில் நுழைப்பதும் , பயன்படுத்துவதும் ,ஒருவகையான மதத் திணிப்பு தான் , என்பதை ஏனோ அறிந்து கொள்ள விரும்பவில்லை , அதற்கு அவர்களின் தாழ்வுமனப்பான்மை தான் காரணமாக இருக்கும் என நம்புகின்றேன் ...
இந்துக்களோ , கிருத்துவர்களோ , முஸ்லிம்களோ அனைவரும் இறை நம்பிக்கை உடைய சாதாரண மனிதர்கள் தான் , அனைவரின் பயணமும் இறைவனை நோக்கி தான் , இந்துகளின் அவதார புருஷர்கள் போலவே தான் அல்லாவும் , இயேசுவும் . மக்களை நல்வழிபடுத்தி இறைவனை அடையும் வழிமுறைகளை உருவாக்கியவர்கள். மக்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப்ப இறைவனை அடைய ஒரு வழிமுறையை பின்பற்றலாம். அது அவரவர் விருப்பம் மட்டுமல்ல தனிமனித சுதந்திரம்.
இங்கு இறைவனை பின்பற்றும் சாதாரண மக்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை . பிரச்சினையெல்லாம் இந்த மக்கள் கூட்டங்களை வைத்து ஓட்டு அரசியல் செய்பவர்களால் பிரச்சினை உருவாக்கப்படுகின்றன . இவர்களால் இப்போது வரலாறுகளும் மதப்பார்வையுடன் திருத்தப்படுகின்றது. நாம் இதுவரை மொகலாயர்களாக அறிந்தவர்கள் முஸ்லிம்களாவும், ஆங்கிலேயர்களாக நாம் படித்து அறிந்தவர்கள் கிருத்துவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு எல்லாரும் எல்லாவற்றையும் மத கண்ணோட்டத்துடன் தான் பார்க்க வேண்டும் . அதன் மூலம் மக்களிடம் மத துவேசத்தை ஏற்படுத்தி அதிலிருந்த ஆதாயம் தேடவே முற்படுகின்றனர்.
- விக்கி இராஜேந்திரன்
Comments
Post a Comment