காலம் ஒர் அற்புத ஆற்றல் மிக்க கருவி!
அதிகாலையில் எழுந்து , வீட்டின் முற்றத்தில் அமைந்திருந்த மாட்டு தொழுவத்திற்கு சென்ற முத்துநாடார் , தொழுவத்தின் பரண் மேலிருந்த வைக்கோல் கட்டின் பிரியை சற்று தளர்த்தி இரு கைகள் நிறைய வைக்கோலை அள்ளி வந்து , மாட்டின் முன்னாலிருந்த சிறிய மூங்கில் தட்டியாலான அடைப்புக்குள் போட்டுவிட்டு , அருகில் இருந்த கழநீர் தொட்டிக்குள் , வீட்டில் இருந்த கழநீரோடு கொஞ்சம் தவிடையும் கலந்து வைத்து , முளைக்கம்பில் கட்டியிருந்த மாடுகளை அவிழ்த்து அவற்றுக்கு தண்ணீர் காட்டிவிட்டு , தொழுவத்தை விட்டு வெளியே வந்து கை , கால்களை அழம்பி விட்டு , வீட்டின் முன் தாழ்வாரத்தில் இருந்த பெரிய திண்ணையில் தான் படுத்திருந்த பனைநார் கட்டிலில் வந்து அமர்ந்தார் .
தாழ்வாரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்த அடுக்களையில் இருந்து , ஒரு செம்பு குவளையில் நீராகாரத்தை எடுத்து அதில் சிறிது உப்பை போட்டு , கலக்கி கொண்டு வந்து குடுத்தார் அவரின் மனையாள் காசியம்மா....
செம்பு குவளையை கையில் வாங்கியவர் . குவளை வாயில் படாமல் அன்னாந்தவாறு இரண்டு மடக்கு நீராகாரத்தை வாயில் உற்றி , கையிலிருந்த கருப்பட்டியையும் ஒரு கடி கடித்துக்கொண்டார் .அதை முழுவதுமாக குடித்து முடித்தவர் , கட்டிலில் இருந்து மெதுவாக எழுந்து ... தான் உடுத்திருந்த நாலு முழம் கதர் வேஷ்டியை அர்ணாக்கயிறோடு சேர்த்து இறுக கட்டிவிட்டு , கட்டிலில் தலையணைக்கு கீழே தோலுரைக்குள் சொருகி வைத்திருந்த கூரான சூர் கத்தியை எடுத்து இடுப்பில சொருகிக்கொண்டு , மடியில் முடித்து வைத்திருந்த சொக்கலால் பீடியில் ஒன்றை எடுத்து உதட்டில் வைத்து பத்தவைத்து , இழுத்து புகையை விட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தவர் , கனமான தன் தோல் செருப்பை அணிந்து கொண்டு , தெருவில் இறங்கி நடந்து வெற்றிலை கொடிக்காலை நோக்கி சென்றார் , பிற்பகல் வரை கொடிகாலில் ஒவ்வொரு கண்ணியாக இறங்கி , ஏறி வெற்றிலை கொடிகளுக்கு தண்ணீர் இறைப்பது , வெற்றிலை கொடிகளை அவுத்தி மரத்தோடு இணைத்து ஆக்கை கட்டுவது , என வேலை பார்த்தவர் . பசுமையான வெற்றிலை கண்ணியின் நிழல் கிழக்கு பக்கமா சாய்வதை கவனித்தவர் மணி பிற்பகல் இரண்டை தொட்டிருக்கும் என கணித்து வீட்டுக்கு கிளம்பினார் .
வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக குளிப்பதற்காக பெரிய வாய்க்காலுக்கு சென்றார். வாய்க்காலில் நீர் நிறைந்து நல்ல இளுப்பாக ஒடிக்கொண்டிருந்தது . அதில் இறங்கியவர் உடலின் அழுப்பு தீர மட்டும் நன்றாக நீந்தி குளித்துவிட்டு ,கருங்கல்லினால் அமைக்கபட்டிருந்த படித்தரையில் அமர்ந்து தன் ஆடைகளை களைந்து , தான் கையோடு கொண்டு வந்திருந்த கதர் சோப்பை போட்டு வேஷ்டியை அடித்து துவைத்து தண்ணீரில் அலசி பிழிந்து , அந்த ஈரமான வேஷ்டியையே மீண்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு கரைக்கு வந்தவர் . அங்கிருந்த மிகப்பெரிய அரசமரத்தில் இருந்து தரையில் உதிர்ந்து கிடந்த ஒரு அரச இலையில் மீதம் இருந்த சோப்பை வைத்து மடித்து எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.
வீட்டிற்கு வந்து அசையில் உலர்ந்து கிடந்த வேஷ்டியை எடுத்து அணிந்து கொண்டு , ஈரமான வேஷ்டியை அசையில் காயபோட்டு விட்டு , கூரையில் சொருகி வைத்திருந்த கோழியின் இறகு நுனியை வைத்து சுகமா காதை குடைந்தவர் , அதை மீண்டும் அதே இடத்தில் சொருகி வைத்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தார் . சுவற்றில் கொழுக்கி போட்டிருந்த பனை ஓலையில் பின்னிய தடுக்கை எடுத்து தரையில் போட்டு அதன் மீது அமர்ந்தவருக்கு அவரின் மனையாள் காசியம்மை தங்கள் வயலில் விளைந்த சம்பா அரிசி சோற்றையும் தண்ணிபருப்பு குழம்பையும் , தன் கணவர் வெற்றிலை கொடிக்காலில் இருந்து பறித்து கொடுத்த முருங்கை கீரையையும் சேர்த்து பரிமாற, அவற்றை பொறுமையாக சாப்பிட்டு முடித்ததும் , அந்த தட்டிலேயே கையை கழுவி விட்டு. நிமிர்ந்து தன் மனையாள் காசியம்மாவை பார்த்து கேட்டார்.
" இராசேந்திரன் இன்னைக்கு பள்ளிகூடத்துக்கு போனானா " என்று
அவர் அப்படி கேட்பதற்கு காரணம் இருந்தது . ஆரம்ப பள்ளிப்படிப்பை மரந்தலை வேதகோயில் பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு , உயர் பள்ளி படிப்பை உமரிக்காடு அரசினர் பள்ளியில் தொடர்ந்து படித்து கொண்டிருந்த அவரின் மகன் ராஜன் சில நாட்களாக சைக்கிள் வேண்டும் என்றும் இல்லையேன்றால் பள்ளிக்கு போகமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தார் .. ஒழுங்காக ஒன்பதாவது வகுப்பு படித்து கொண்டிருந்த தன் மகன் , ஏன் தற்போது பள்ளி போக மாட்டேன் என்கிறான் என்பது அவருக்கு புரியவில்லை ..
அதை பற்றி தான் தன் மனையாளிடம் கேட்டுகொண்டிருந்தார் முத்து நாடார்.
" அவேன் தான் மதியம் சாப்பாட்டுக்கு உமரிகாட்டுல இருந்து வீட்டுக்கு வந்திட்டு போறது கஷ்டமா இருக்கு , எனக்கு சைக்கிள் வாங்கிதாங்க, சைக்கிள் இல்லாம பள்ளிக்கு போமாட்டேன்னு சொல்லுதான்லா .. நீங்க தான் ஒரு சைக்கிள் வாங்கி குடுக்கலாம்லா " என்றார் காசியம்மை .
" இங்க என்ன பணம் கொட்டியாகிடக்கு.. ஒரு வருஷம் பொருத்தா .. அடுத்த அறுவடை முடிஞ்சதும் வாங்கி தாரேன்னு சொல்ரன்ல.. சரி அது கிடக்கட்டும். அவன் யேன் மதியம் அங்கயிருந்து இங்க சாப்பிட வரணும் , அவனோட ரெண்டு அத்தையும் அங்க தானே இருக்காவே.. அங்க சாப்பிட வேண்டியது தானே .. அவன மாதிரி தான மத்த மூனு பொம்பள பிள்ளையும் அதுகெல்லாம் ஒழுங்கா படிக்கும் போது இவனுக்கு என்ன என்றார் முத்துநாடார்.. . .
" அதெல்லாம் என்னவோ எனக்கு தெரியாது , அவன் அவிய அத்த வீட்டுக்கெல்லாம் போவ மாட்டானான். அவனுக்கு சைக்கிள் தான் வேணுமாம்... என்று தன் ஒரே பையனின் கருத்தை தன் கணவரிடம் எடுத்து சொல்லி கொண்டிருந்தார் காசியம்மை...
" கல்வி இல்லா நிலம் களர்நிலம்" , நான் சொல்லுரத சொல்லிபுட்டேன்.. இராசேந்திரன் சேர்க்க சரியில்லை.. ஊருல இருக்குற சண்டிப்பயவ கூட சேர்ந்து சுத்திட்டுயிருக்கான் இது எனக்கு சரியாபடல " என்று விட்டு தன் காவித்துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டு எழுந்து வீட்டுக்குள் நுழைந்தவர், வீட்டின் பரண் மேல் இருந்த டிரங்கு பெட்டியை கீழே இறக்கி , அதிலிருந்து " ராமாயணத்திற்கு ராஜ கோபாலாச்சாரியார் ( ராஜாஜி) எழுதிய உரை " என்ற புத்தகத்தை எடுத்து படிக்கலானார்.
வீட்டில் அனைவரும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பள்ளி படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தார் இராஜேந்திரன் . பின்னர் காமராஜர் மீது கொண்ட பற்று காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து கட்சியின் தீவிரமான தொண்டரானார். கட்சியின் உறுப்பினர் சான்றிதழை கண்ணாடி சட்டம் போட்டு எல்லோர் பார்வையிலும் படும்படி வீட்டில் மாட்டி வைத்திருந்தார்.
அப்போது திராவிட கழகம் ஆட்சியில் இருந்தது. ஆதலால் திராவிட கழகங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பாக நடைபெற்ற எல்லா போராட்டங்களில் பங்கு கொண்டார் .
விவசாயிகள் ஒன்றினைந்து உருவாக்கி இருந்த வெற்றிலை , வாழை விவசாய சங்கங்கள் அமைந்திருந்த மெயின் பஜாரில் , மாலை நேரங்களில் பல ஊர் மக்கள் கூடுவது வழக்கம் . என்னதான் அனைத்து மக்களும் ஒன்றுகூடி சங்கங்கள் வைத்திருந்தாலும் , அங்கிருந்த மக்களின் மனதில் ஜாதி பாகுபாடு அதிகம் இருந்தது . இந்திய அரசியலமைப்பு சட்டம் தராத தனிமனித பாதுகாப்பை , தன்னை சார்ந்த ஜாதிய கூட்டமைப்பு தரும் என்ற எண்ணம் அங்கிருந்த மக்களிடம் வேறுன்றி இருந்த காலம் அது . .
ஒரு நாள் மாலை இருவேறு ஜாதியை சேர்ந்த தனிபட்ட இருவருக்கு இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது , சிறிதாக ஏற்பட்ட பிரச்சினை , பின்னர் அது ஊர் தகராறா மாறி , பிறகு நாடார் , பரதவர் சமூகத்தினரிடையான கலவரமாக உருவெடுத்தது. இரண்டு சமூகத்தை சேர்ந்த மக்களும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர் .. காவல்துறை வந்து கலவரத்தை அடக்கியது . கலவரம் அடங்கினாலும் , மக்களின் மனதில் அது நீர்த்து போகாமல் எரிந்து கொண்டிருந்தது ...
கலவரம் நடந்த மறுநாள் வீட்டில் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்த இராஜேந்திரனுக்கு , தெருவில் மக்கள் உரக்க பேசும் சத்தம் கேட்டது . என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ள வீட்டிலிருந்து வேகமாக தெருவுக்கு வந்த இராஜேந்திரனுக்கு அவரின் நண்பர்கள் சிலர் எதிரே ஓடி வருவது தெரிந்தது . அவர்களிடம் என்ன என்று கேட்ட போது. அவர்கள் கூறினார்கள் . அவரின் ஊருக்கு அருகிலிருந்த பரதவர் மக்கள் வாழ்ந்த பகுதி தீ பிடித்து எரிவது பற்றி...
பட்டப்பகலில் காவல் துறையின் பாதுகாப்பையும் மீறி எப்படி யார் தீவைத்தனர் என்று யாருக்கும் தெரியவில்லை ...
அங்கு வந்த காவல்துறை அந்த பகுதியில் பிரபலமாக இருந்த திராவிட கட்சியின் தலைவர் இல.மானாவிடம் கலவரத்திற்கு காரணமானவர்களை பற்றி விசாரிக்க , அவர் அந்த பகுதியில் இருந்த இளைஞர்கள் சிலரின் பெயரை எழுதி கொடுக்கும் போது அவர்களுடன் சேர்ந்து சுற்றும் , திராவிட கட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தும் இராஜேந்திரனின் பெயரையும் சேர்த்து கொடுத்து விட்டார் ....
காவலர்கள் அவரை தேடி வீட்டுக்கு வந்தனர். அவர்கள் வந்த நேரம் இராஜேந்திரன் வீட்டில் இல்லை . தன்னை தேடி காவலர் வந்ததையும் தன் பெயரும் கலவரக்காரர்களின் பட்டியலில் இருப்பதை அறிந்த இராஜேந்திரன் அதிர்ந்து போனார் ... அவரை பற்றிய கவலை வீட்டில் அனைவரையும் தொற்றி கொண்டது ..
வீட்டில் தங்காமல் ஒரு வாரமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்த சவுக்கு , தேக்கு மரக்காடுகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்த இராஜேந்திரனுக்கு அப்போது தான் தந்தை கூறிய அறிவுரைகள் நினைவுக்கு வந்தது ..
"காலம் ஓர் அற்புதமான ஆற்றல் மிக்க கருவி ! வாழ்வியலுக்குக் காலமே முதற்பொருள், காலத்தால் ஆகியதே வாழ்க்கை ! காலம் கருதி உரிய காலத்தில் உரியன செய்யாது போனால் எதுவும் நடக்காது. வாழ்க்கையே பயனற்றுப் போகும். "
அதை நான் என் வாழ்க்கையில் மெல்ல மெல்ல உணர்ந்த போது காலம் கடந்திருந்தது ... பின்னர் அந்த கலவர வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன் . என்று என் அப்பா இராஜேந்திரன் அவர்கள் அவரின் அனுபவத்தையும், என் தாத்தா முத்துநாடார் கூறிய அறிவுரையையும் , ஒழுங்காக படிக்காமல் ஊரை சுற்றி கொண்டு திரிந்த எனக்கு. ஒரு இரவு பொழுதில் வீட்டில் அனைவரும் ஒன்றாக உக்காந்து மகிழ்ச்சியாக சாப்பிட்டுக்கொண்டிருந்த போது கூறினார் . நான் அப்போது அந்த கதையை அனுபவித்தேனே தவிர , அதன் உட்கருத்துகள் எதுவும் என் தலையில் ஏறவில்லை . கருத்துகள் புரிந்த போது காலம் கடந்திருந்தது ..
விக்கி இராஜேந்திரன்.. ✍️✍️✍️
தாத்தா பாட்டி மற்றும் மாமாவை கண் முன் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி.
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteஎன் அப்பாவுக்கு மிகவும் பிடித்தவர் முத்து தாத்தா பல நேரங்களில் என் அப்பாவுக்கு உறுதுணையாக இருந்தவர் நம்ம முத்து தாத்தாதாத்தா முத்து
ReplyDeleteபெரியவங்க வாழ்க்கையில நடந்த விஷயங்களை நமக்கு சொல்லும் போது ஆவலா இருக்கும் ஆனால் அதை எல்லாம் உட்கார்ந்து கேட்க நமக்கும் சில நேரம் சொல்ல அவங்களுக்கும் நேரம் இருக்காது அப்படியே இருந்தாலும் அவர்கள் சொல்லும் விதம் நமக்கு அறிவுரை சொல்வதாக இருக்கும் அதனால் நமக்கு கேட்கவும் பிடிக்காது.
ReplyDelete😀😀
ReplyDeleteஎன் சிறிய வயது நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தாயடா என் செல்லமே! அது ஒரு அன்பான குடும்பம். அங்கு பாசம் கொட்டிக்கிடந்ததடா தங்கமே! பழைய நினைவுகளில் மனம் புல்லரித்து. ♥
ReplyDelete