" சில்லறை வரம் "

 அரசிடம் இருந்து தனியாருக்கு விற்க்கப்பட்ட அந்த விமானம்  எப்போதும் போல இரண்டு மணிநேரம் தாமதமாக நண்பகல் ஒரு மணியலவில் சென்னை மீனம்பாக்கம் விwமானநிலையத்தில் தரையிறங்கியது . பயணிகள் அனைவரும் அவசரம் , அவசரமாக தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு , ஓருவரை ஒருவர் முண்டியடித்துக் விமானத்தில் இருந்து வெளியேறுவதற்கு முயன்று கொண்டிருந்தனர் . அவர்களை வேடிக்கை பார்த்தவாரே , எந்த ஒரு அவசரமும் இன்றி அமைதியாக விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்திருந்தேன் .  

பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட இரண்டு வார விடுமுறையில் சொந்த ஊருக்கு போய் கொண்டிருக்கின்றேன். என்னுடைய ஊர் சென்னையில் இருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூத்தூக்குடி மாவட்டத்தின் எல்லைக்கு உட்பட்ட சிறிய கிராமம் . இந்த பயணத்திற்கான திட்டங்கள் அனைத்தும் மூன்று மாதத்திற்கு முன்பாகவே முடிவு செய்யப்பட்டிருந்தது. 

சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் , தாம்பரம் இரயில் நிலையத்தில் சாயங்காலம் 4.30 மணிக்கு ஏறி , மறுநாள் காலை 7.30 க்கு , குரும்பூர் இரயில் நிலையத்தில் இறங்கினால் . அடுத்த 15 நிமிடங்களில் ஊருக்கு போய்விடலாம் ,  என்று முன்னேற்பாடாக முன்பதிவு செய்து வைத்திருந்த எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் . பராமரிப்பு காரணங்களுக்காக நான் பயணம்  செய்வதாக இருந்த இரயிலின் இயக்கம் நிறுத்தப்படுவதாக குறுஞ்செய்தி வந்தது .

 அது சம்மந்தமாக சில விளக்கங்களை தெளிவுபடுத்திக்கொள்ள ரயில்வே சேவை எண்139 - ஐ தொடர்பு கொண்ட போது கம்ப்யூட்டர் குரல் இந்திக்கு ஒன்றையும் , இங்கிலீஷ்க்கு இரண்டை அழுத்தவும் என்றது. நான் இங்கிலீஷ்ல உரையாட எண்ணி இரண்டை அழுத்தினேன். போனில் பேசியவர் இந்தியில் எதோ பேசியது மாதிரி தெரிந்தது . நான் புரியவில்லை என்க . அந்த குரல் வேகமாக எதையோ கூறியது . 
-".ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றேன்" . 
க்யா என்றார்... 
நான் சற்று கடுப்புடன் 
 " க்யாரே செட்டிங்கா! என்றேன்.. அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை போனை வைச்சிட்டேன்..  

 மொழியை தேர்வு செய்ய ஒன்று , இரண்டு என்று எண்களை தேர்வு செய்ய தெரிந்த எனக்கு.. எதை நாம் தேர்வு செய்தாலும் மோடியின் #மேக்ன் வடக்கன்# மட்டும் தான் பேசுவார் என்று தெரியாமல் போனது...

இதுக்கு மேல இந்தியன் ரயில்வேயை நம்பினால் நடுரோட்டில் தான் நிற்க வேண்டும் என்று புரிந்தது . இவை அனைத்தும் ஊருக்கு புறப்படும் நாளில் நடந்ததால் கடைசி நேரத்தில் உறவினர்கள் , நண்பர்களை தொந்தரவு செய்ய விரும்பாமல் ஊரில் டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் தம்பியின் மூலமாக சென்னையில் இருந்து ஊருக்கு செல்லும் பேருந்தில் படுக்கை ஒன்றை முன்பதிவு செய்து , பெருங்களத்தூரில் இருந்து பேருந்தில் ஏறுவதற்கு முடிவு செய்திருந்தேன்... 

விமானநிலையத்தில் குடியுரிமை மற்றும் சுங்கச்சோதனைகளை கடந்து வெளியே வந்ததும் .
" சார் டாக்ஸி வேணுமா ! என்றபடி வந்து நின்றார் ஒரு டாக்ஸி ஓட்டுனர்.. ஆமாண்ணா பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம் போகனும் எவ்வளவு ஆகும் என்றேன் ... 
650 ரூபாய் ஆகும் என்க .. சரி என்று கூறிவிட்டு .. 
டாக்ஸியில் ஏறி அமர்ந்தேன் .. விமான நிலையத்தை விட்டு வெளியேறி அந்த நண்பகல் வேளையிலும் நெரிசல் நிறைந்த அந்த பிராதன சாலையில் பெருங்களத்தூரை நோக்கி விரைந்தது டாக்ஸி.  . இப்போது மணி மூன்று . ஊருக்கு போகும் பேருந்து இரவு ஏழரை மணிக்கு தான் பெருங்களத்தூர் வரும் . அது வரைக்கும் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் எதாவது ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி கொள்ளலாம் , இன்னும் மதிய உணவு சாப்பிடவில்லை , பசி வேறு வயிற்றை கிள்ள ஆரம்பித்திருந்தது . விடுதி அறைக்கு சென்றதும் சுமைகளை விடுதியில் வைத்துவிட்டு வெளியே சென்று நல்லா சாப்பிட வேண்டும் , இவ்வாறு பல வகையான சிந்தனைகளுடன் , நன்கு வளர்ந்துவிட்ட உறவுக்கார பையனை பல நாட்கள் கழித்து பார்த்து ஆச்சரியப்பட்டு மகிழ்வது போல.. வளர்ந்துகொண்டே இருக்கும் சென்னை நகரத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டே சென்றேன்.. 

அடுத்த சில நிமிடங்களில் டாக்ஸி பெருங்களத்தூரில் பஸ் நிறுத்தத்தை அடைந்தது . சுற்றும் முற்றும் பார்த்தேன் எந்த ஒரு விடுதியையும் காணவில்லை . செய்திகளில் பெருங்களத்தூரை பற்றி கேள்வி பட்டு அதை பற்றி நான் நினைத்திருந்த அனைத்தும் பொய் என்று புரிந்தது . ரோட்டின் ஒரத்தில் இருந்த நான்கு ஐந்து பிரியாணி கடைகளை தவிர அங்கு சொல்லும் படியாக எதுவும் இல்லை .. அப்போது தான் தெரிந்தது,பெருங்களத்தூர் நகர வேடம் தணித்த ஒரு பட்டிக்காடு என்றும் , சென்னை என்னும் சுறா மீனை சார்ந்து வாழும் உறிஞ்சிமீன் என்றும் . இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது . 

  டாக்ஸி டிரைவரிடம் இரண்டு ஐந்நூறு ரூபாய் தாள்களை கொடுத்து மீதி சில்லரை கேட்ட போது அவர் தன்னிடம் சில்லரை இல்லை என்றும் அருகில் உள்ள கடையில் சில்லரை மாத்தி தருமாறு கேட்டார். நான் என் சுமைகளை கீழே இறக்கி வைத்து விட்டு சில்லரை கேட்க எனது சக்கரம் பொருத்திய பெட்டியை இழுத்துக்கொண்டு சென்றேன் . அதற்குள் என்னிடம் குழந்தையுடன் நெருங்கினார் அந்த பெண்மணி , நாற்பதுக்கும் குறைவான வயது . வெயிலில் அலைந்து தலைமயிர் வறண்டு கலைந்து இருந்தது . அவர் அணிந்து இருந்த அந்த மஞ்சளும்,சிவப்பும் கலந்த நூலாடை அழுக்குபடிந்து நிறம் மங்கிய நிலையில் அவரின் ஏழ்மையை எடுத்து கூறுவதாய் இருந்தது .. அவரின் தோலில் தொங்கிய தூளியில் படுத்திருந்த குழந்தைக்கு இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும் .அவள் என்னிடம் கையேந்திய போது , தூளியில் தொங்கிய அந்த குழந்தையும் பாவமான முகத்துடன் என்னை நோக்கி கைகளை ஏந்தியது . அவளின் கையில் தொங்கிய உரச்சாக்கு கொண்டு தைத்த பையில் பழைய துணிகள் சில இருந்தன ... 
" ஐயா எதாவது தர்மம் பண்ணுங்கையா " என்றாள் .. 
நான் அவளை தவிர்த்து விட்டு அருகில் இருந்த பிரியாணி கடையில் நுழைந்து. அங்கு கல்லாவில் இருந்தவரிடம்
 " அண்ணா ஒரு ஐந்நூறு ரூபாய்க்கு சேஞ் கிடைக்குமா என்றேன் .. 
அவர் என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் ...  
இல்லை என்பது போல தலையை ஆட்டினார்... 
பக்கத்தில் இருந்த மற்றொரு பிரியாணி கடைக்கு சென்று
 "அண்ணா சில்லறை கிடைக்குமா என்று கேட்டேன் " 
" சில்லறையேல்லாம் இல்ல போ போ " என்று பிச்சை கேட்டதை போல விரட்டினார் .. எனக்கு என்னவோ போல் இருந்தது . 
 மொட்டை வெயிலில் உடல் எல்லாம் வியர்த்து கொட்டியது...  
முழுவதும் முடிவடையாத நிலையில் இருந்த அந்த தார்சாலையில் , வேகமாக செல்லும் வாகனங்கள் கிளம்பும் தூசுகள் , என் உடலின் வியர்வையோடு அப்பிக்கொண்டு , வைக்கோல் போரில் உருண்டு புரண்டது போல் நமைக்க ஆரம்பித்தது ... 
சில்லறை வேறு கிடைக்கவில்லை ... டாக்ஸி டிரைவரை பார்தேன் . அவர் சில்லரை கிடைக்க உதவுவாரா என்று . 
அவர் கையை கட்டியபடி காரில் சாய்ந்து நின்று கொண்டு நான் சில்லறைக்கு அலைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்... அது எனக்கு இன்னும் எரிச்சலலை தந்தது . 
அதற்குள் முதலில் பிச்சை கேட்ட அந்த பெண்மணியை போன்று இன்னும் இருவர் என்னை நெருங்கி . 
" சார் ! எதாவது கொடுங்க சார் பசிக்குது . என்றனர் . 
ஏற்க்கனவே எரிச்சலில் இருந்த நான் , 
" நானே சில்லரை இல்லாமல் கடை , கடையாக பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கேன் . இதுல நீங்க வேற .. என்று கோபமாக கூறிவிட்டு . 
அங்கிருந்த மற்றுமொரு கடையை நோக்கி நகர்ந்தேன் சில்லரை கேட்க .. 
அங்கும் சில்லரை கிடைக்கவில்லை . 
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போது . .. 
 என்னிடம் பிச்சை கேட்ட பெண்களில் ஒருவர் 
" சார் அந்த பெட்டிகடையில் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கு சார் சில்லரை கிடைக்கும் என்றார் .. 
ஆகா நல்ல யோசனையா இருக்கே .. 
இது நமக்கு தோன்றவில்லையே... 
நமக்கு இன்னும் பயிற்ச்சி வேண்டும் , நேரத்திற்கு தகுந்தார் போல் வேளை செய்ய நம் மூளைக்கு இன்னும் பயிற்ச்சி போதாது போல என்று எண்ணிக்கொண்டே ,  அங்கிருந்த பெட்டி கடை ஒன்றில் தண்ணீர பாட்டில் வாங்கி விட்டு ஐந்நூறு ரூபாயை நீட்டினேன் . கடைக்காரர் தந்த பாட்டிலை எடுத்துக் வைத்துக் கொண்டு
 "சில்லரை இருந்தா கொடுங்கள்" என்றார் .. 
 நான் தண்ணிர் பாட்டில் வாங்கியதே சில்லரைக்காக தான் என்று அவருக்கு எப்படி தெரியும் .. 
 என்னுடைய அந்த முயற்ச்சியும் தோல்வியடைந்து சோகமாக திரும்பினேன்.. 
இனிமேல் சில்லரைக்கு எங்கே போவது என்று தவித்துக்கொண்டிருந்த போது .. 
என்னிடம் பிச்சை கேட்ட அந்த மூன்று பெண்களில் ஒருத்தி நான் சில்லரைக்காக தவித்து நிற்ப்பதை பார்த்து பரிதாபப்பட்டவர்.. என்ன நினைத்தாரோ தெரியவில்லை .  
" சார் இங்க வா சார் " நான் சில்லரை தாரேன் . எவ்வளவுக்கு சார் சில்லரை வேண்டும் என்றார் .. 
எனக்கு ஒரு தேவதையே நேரில் தோன்றி பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்பதாய் தோன்றியது .. 
" ஐந்நூறு ரூபாய்க்கு என்றேன் . 
கையில் தொங்கிய சாக்கு பைக்குள் கைவிட்டு நான்காக மடிக்கப்பட்டு கிடந்த ரூபாய் நோட்டுகளை கையில் அள்ளி எடுத்தாள் அந்த தர்மம் எடுக்கும் தர்ம தேவதை.. 
நானோ ! 
" பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க.. 
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே.. 
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே ...  
என்று குணா கமல் போல என் இரு கைகளையும் சில்லரை பிச்சை கேட்டு அவளை நோக்கி நீட்ட , ரூபாய் தாள்களை கொத்தாக அள்ளி என் கைகளில் போட்டால் அந்த தர்ம தேவதை .. 
 " எவ்வளவு சார் இருக்கு " 
ரூபாய் நோட்டுகளை எண்ணி பார்த்தேன் . 
" இதுல ஒரு நூற்றி என்பது இருக்கு " 
அந்த தேவதை மீண்டும் கையை சாக்கு பைக்குள் விட்டு நோட்டுகளை அள்ளியது . 
இப்போது மொத்தம் நானூறு ருபாய் சேர்ந்தது . 
மீண்டும் பைக்குள் அவர் கையை நுழைப்பதற்குள் . அம்மா இதுவே எனக்கு போதும் , மீதம் உள்ளவற்றை காணிக்கையா நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டு.. 
கடவுளிடம் வரம் கிடைத்த ஒரு பக்தனின் பக்தியுடன் , கைநிறைய சில்லறையுடன் டாக்ஸி டிரைவரை நோக்கி திரும்பி நகர்ந்தேன்..  அவர் இப்போது என்னையும் , என் கையில் இருநத சில்லறையையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தார் .. 

- விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்