கரும்பலகையில் வந்த காதலும் காயமும் ...

 மதியம் இரண்டு மணிக்கு ,மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த  ,திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் முன்பக்க படிகட்டுக்கு அருகில் , இருவர் மட்டும் உட்காரும் சீட்டில் ஏறி அமர்ந்தான் முகிலன் . 

ஒரு அம்மா பஸ்ஸில் கூடை நிறைய மல்லிகை கொண்டு வந்து , முழம் இரண்டு ரூபாய் என்று விற்று கொண்டிருந்தார் . சிலர் அதை நல்ல வாசனையாக இருக்கு என்று வாங்கி கொண்டிருந்தனர். முகிலனுக்கோ மயக்கும் வாசனை கொண்ட அந்த மதுரை மல்லியின் வாசனை சிறிதும் தெரியவில்லை . 

அந்த மல்லிகை அவனுக்கு வாசனை அற்ற காகிதப் பூக்களாகத்தான் தெரிந்தது. சில வருடங்கள் முன்பு வரை அவன் இவ்விதம் எந்த விதமான உணர்வுகளிலும் , உணர்ச்சிகளிலும் பற்றற்று இருந்ததில்லை , ஆனால் இப்போது இவ்வுலகமே  அவனுக்கு சாதாரண காகித பூவாகத்தான் தெரிகிறது. 

இதோ டிரைவர் ஏறி அமர்ந்து கியரை மாற்றி ஆக்சிலேட்ரை மெதுவாக காலால் அழுத்த  கரும்புகையை வெளியேற்றியவாறு மாட்டுத்தாவணி பேருந்துநிலையத்தை விட்டு வெளியேறி மதுரை சுற்றுச்சாலையை அடைந்து வேகம் பிடித்தது அந்த அரசுப்பேருந்து.  

அக்கினி வெயிலின் உக்கிரத்தில் உருகிகொண்டிருந்த தார்சாலையில் ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் சாளரம் வழியாக  வெயிலின் வெக்கை  கலந்து  வீசிய காற்றினால் அவன் உடல் நீராவி குளியல் எடுத்தது போல் வியர்த்து கொட்டியது. 

இது போதாது என்று காரியாபட்டி முதல் எட்டையாபுரம் வரை விவசாயிகள் ரோட்டில் காயபோட்டிருந்த தங்கள் விளைநிலங்களில்  விளைவித்த கம்பு , கேழ்வரகு போன்ற தானியங்கள் மீதேறி பஸ் கடக்கும் போது தானியங்களில் இருந்து உதிர்ந்த கசடுகள் காற்றில் பறந்து வந்து கண்களிலும் , நாசிகளிலும் புகுந்து எரிச்சலூட்டின... 

முகிலன் அடிக்கடி  மதுரைக்கும், ஊருக்கும் பயணிப்பதால், பேருந்து பயணம் அவனுக்கு அலுத்து போயிருந்தது . அதுவும் இந்த மொட்டை வெயிலில் பயணம் செய்வது , வாழைதாரை ஊத்தம் போடும் அறைக்குள் இருப்பது போல நீரிழப்பு ஏற்பட்டு உடலும் மனமும் சோர்ந்து போனது . எப்போது வீட்டிற்கு போய்  சேருவோம் என்றிருந்தது அவனுக்கு . 

 ஒரு வழியாக மாலை ஐந்து மணியலவில் முகிலன் பயணம் செய்த பேருந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது . இன்னும் அரைமணி நேர பயணம்தான் ,  வீட்டுக்கு போய் சேர்ந்துவிடலாம் என்று அவன் நினைத்த போது ,  பஸ் அங்கிருந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தான் புறப்படும் என்றார் கண்டக்டர். முகிலனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது .

 அப்போது பின்பக்கம் இருந்து ஒரு கை அவன் தோளை தொட்டது அது யார் என்று திரும்பி பார்த்தான் .  அவனின் பக்கத்து ஊரை சேர்ந்த மேகநாதன் அண்ணன் தன் குழந்தையுடன் அமர்ந்து இருந்தார் . அப்பாவுக்கு மிகவும் பழக்கப்பட்டவர் அவனுக்கும் பழக்கம் தான் . அவர் அவனை பற்றி  நலம் விசாரித்தார் .இவன் ஏதோ பதில் சொன்னான்.  ஆனால் முகிலனின் கண்கள் மேகநாதன் அண்ணனுக்கு மூன்று சீட்டுகள் பின்னால் தள்ளி அமர்ந்திருந்த பெண்ணை பார்த்ததும்... சட்டென்று திரும்பி கொண்டான்.. 
அது.. அது .. அவள் தானா இரண்டு மூன்று பெண்களுடன் சேலை அணிந்து அமர்ந்து இருப்பது அவள் தானா . மீண்டும் உறுதி செய்ய தலையை மெதுவாக திரும்பினான். அந்த பெண்ணும் இவனை பார்ப்பது தெரிந்ததும் மீண்டும் திரும்பி அமர்ந்து கொண்டான் . 
அவளே தான் ... அவளே தான் ... முகிலனின் இதயம் படபட என வேகமாக துடிக்க . மூச்சு சீரற்றாதாக வர  கண்கள் இருட்ட , அப்படியே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். அவன் மனம் பின்னோக்கி பயணமானது...  

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்த  பிரபலமான அரசு மேல்நிலைப்பள்ளி அது . மதிய உணவு இடவேளையின் போது வகுப்பறையில் தனியாக அமர்ந்து நோட்டில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான் முகிலன் . சாப்பிடுவதற்கு சென்ற நண்பர்கள் யாரும் இன்னும் வரவில்லை . அந்த வகுப்பறையில் அவனுடன் படிக்கும் இரண்டொரு தோழிகள் மட்டுமே இருந்தனர்.

அவர்களில் அமுதாவும் , கிருபாவும் கரும்பலகையில் எதையோ எழுதுவதும் அழிப்பதுமாக விளையாடிக்கொண்டு இருந்தனர் . அவர்களின் பார்வை முகிலனின் மேல் விழுந்தது . அவர்களுக்கு முகிலனை சீண்டி பார்க்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவர்களுக்குள் மெதுவாக ஏதோ பேசி சிரித்தவர்கள் முகிலனை பார்த்து ..
"முகிலா முகிலா இங்க பாரு"  என்று அழைக்க . முகிலன் வரைவதை நிறுத்தி விட்டு  , என்ன என்பது போல் அவர்களை பார்த்தான் . 

அமுதா சாக்பீஸால் கரும்பலகையில் முகிலனின் பெயரையும் அவன் பெயருடன் இணைத்து வாஹினி என்ற பெயரையும்  வகுப்பின் கரும்பலகையில் சாக்பீஸால் கொட்ட எழுத்துக்களில் எழுதி இதயமும்  வரைந்து அதில் அம்பும்விட்ட போது அவனக்கு பகீர் என்றது . விருட்டென்று சென்றவன் மேஜை மீது சிறிய தலையனை போன்று இருந்த கரும்பலகையை அழிப்பதற்கு பயன்படுத்தும் டஸ்டரை எடுத்து அவர்கள் எழுதியதை வேக வேகமாக அழித்தான் .

அதை பார்த்து  வகுப்பறையில் இருந்த மற்ற தோழிகள் சிரித்த போது . முகிலனுக்கு கோபம் கோபமாக வந்தது.  அவர்களை முறைத்து விட்டு மீண்டும் அவன் இடத்தில் வந்து அமர்ந்தான் .  அவன் மனதில் அது போன்ற ஒரு எண்ணம் இருந்ததில்லை. எந்த பெண்ணையும் அந்த எண்ணத்தில் பார்த்ததோ பழகியதோ இல்லை . இயல்பாகவே பெண்களிடம் பேசவே கூச்சப்படும் சுபாவம் கொண்ட அவனுக்கு , தன் பெயருடன் இணைத்து ஒரு பெண்ணின் பெயரை கண்டபோது  அது ஒழுங்கீனமாகவே பட்டது.  

நல்லவேளை வாஹினி  வகுப்பறையில் இல்லை . அவள் அங்கு இருந்திருந்தால் என்னை பற்றி என்ன நினைத்திருப்பாள். இப்படி சிந்தித்துக் கொண்டிருந்த முகிலனின் மனது  நிதானமடைந்து , சற்று முன் நடந்த நிகழ்வுகளை மீண்டும் அசை போட்டது . . தோழி அமுதா என் பெயரையும் வாஹிணியின் பெயரையும் ஏன் சேர்த்து எழுதவேண்டும் . ஒருவேளை தோழிகள் மத்தியில் இப்படி தான் நினைக்கிறார்களா.. இல்லை வாஹிணி அவள் தோழிகளிடம் அவ்வாறு கூறியிருப்பாளா ..  பலவாறாக எண்ணங்கள் அலைகழிக்க ஆரம்பித்தது ..

 அதுவரை அமைதியாக இருந்த உள்ளம் அளவில்லாத தண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் படகு போல ஆட ஆரம்பித்தது .
உணவு இடைவேளை முடியும் நேரம், சாப்பிட சென்ற அனைவரும்  ஒவ்வொருவராக வகுப்பறைக் திரும்பி கொண்டிருந்தார்கள்.   வகுப்பறையின் வாசலில் நின்றிருந்த    வேப்பமரத்து கிளைகளின் அசைவில் வாசல் வழியாக உள்ளே நுழைந்த குளிர்ந்த காற்றின் தழுவலில் முகிலனின் புறமும் , அகமும் சில்லிட , அவன் கண்கள் தன்னிச்சையாக வகுப்பறையின் வாசல் பக்கம் திரும்பியது .

 அங்கே பள்ளியின் சீருடையான நீலநிற பாவாடை தாவனி அணிந்திருந்த தோழிகளுக்கு நடுவில் வெள்ளைநிற சட்டையும் நீலநிற பாவாடையும் அணிந்து படியேறி வந்து கொண்டிருந்தால் வாஹிணி. வீசும் காற்றில் அவள் நடந்து வருகிறாளா இல்லை மிதந்து வருகிறாளா என்பது போல் அவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிந்தான் முகிலன் . அவன் மனதில் எங்கேயோ படித்த கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது .  வண்ணபட்டாம் பூச்சிகள் பறந்து தானே வரும் , இங்கு நடந்து வருகின்றதே ! 

 முகிலன் அவளை பார்ப்பதை கவனித்தவள் அவனை நோக்கி இயல்பான சிரிப்பு ஒன்றை உதிர்த்தபடி செல்ல . இவனோ இவனின் இயல்பை இழந்து  இதயத்தால் அவளை நேசிக்க தொடங்கியிருந்தான். நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்கு இடையில் நேசம் அதிகமாகி கொண்டிருந்தாலும் , ஒரு முறை கூட  அவர்கள் நேரில்  பேசிக்கொண்டதே இல்லை .  மாதங்கள் கடந்தன ,  பங்குனி பிறந்துவிட்டது.  பள்ளி இறுதியாண்டு தேர்வும் நெருங்கிக் விட்டது.

அன்று வெள்ளிக்கிழமை எப்போதையும் விட பள்ளி பரபரப்பாக காணப்பட்டது . அதற்கு காரணம் அந்த பகுதியின் மன்னன் ஜாதியின் தலைவராக அறியப்பட்ட பொன்ராஜ் என்பவரின் மகளை பற்றி தரக்குறைவான வார்த்தைகள் , பள்ளியின் பாழடைந்து கிடந்த  வகுப்பின் கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது . அதை எழுதியதாக முகிலனின் மேல் பழிசுமத்தப்பட்டது.

அதற்கு ஒரே காரணம் முகிலன் ஏனாதி ஜாதியை  சேர்ந்தவன் என்பது தான் . இரண்டு நாட்களுக்கு முன்பு மன்னன் ஜாதியை சேர்ந்த சேரன் என்ற மாணவன் . ஏனாதி ஜாதியை  சேர்ந்த மாணவியை கேலி செய்ய . அதை கேள்விபட்ட அந்த மாணவியின் அண்ணன் மாணவன் சேரனை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்தார்  . 

இதை மனதில் கொண்ட மன்னன் ஜாதியை சேர்ந்த மாணவர்கள் சிலர்  ஏனாதி ஜாதியை சேர்ந்தவர்களை பழிவாங்கும் நோக்கத்தில்.  மன்னன்  ஜாதி தலைவர் பொன்ராஜின் மகளை பற்றி அவர்களே தவறாக எழுதி , அதை எழுதியதாக ஏனாதி ஜாதியை சேர்ந்த முகிலன் மீது பழியையும் சுமத்தினார்கள்... 

அன்று மாலை பள்ளி முடிந்து வெளியே வந்த முகிலனை  மன்னன் ஜாதி தலைவர் பொன்ராஜின் அடிபொடிகள் சிலர் சேர்ந்து முகிலனை அரைநிர்வாணமாக்கி தாக்க . அதை பள்ளி முடிந்து வீட்டு சென்ற பல நூற்றுக்கணக்காண மாணவ , மாணவிகளின் கண்கள் பார்த்தன  . அதில் ஒரு ஜோடி கண்களில் மட்டும் கண்ணீர் கசிந்தது ,  அந்த கண்ணீர் கசியும் கண்களை கண்ட முகிலன் மனமுடைந்து போனான் ..  

அதன் பிறகு அவன் பள்ளிக்கு வரவேயில்லை . ஆசிரியர் ஒருவரின் முயற்ச்சியால் பள்ளி இறுதியாண்டு தேர்வை எழுதி முடித்தான் . தேர்வு எழுதவரும் போதும் கூட நண்பர்களையும் , வாஹினியையும் சந்திப்பதை தவிர்த்தான்.  அதன் பிறகு மதுரையில் இருக்கும் பெரிய அண்ணன் வீட்டுக்கு சென்றவன் அதன் பிறகு ஊருக்கு வருவதை குறைத்திருந்தான். 

அங்கேயே ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினான் . அவ்வப்போது ஊருக்கு வந்து தன் பெற்றோரை மட்டும் சந்தித்து செல்வது வழக்கம் . இன்று அப்படி வரும் போது தான் வாஹினியை பார்த்திருக்கின்றான் யாரை மீண்டும் பார்க்க கூடாது என்று நினைத்தானோ அவளை மீண்டும் ....

பின்பக்கம் பேச்சுகுரல் கேட்டது . 
அது வாஹினியின் குரல் தான் . மேகநாதன் அண்ணனிடம் பேசிக்கொண்டு இருக்கிறாள் . அவர்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் தான் .  அவள் அவரிடம் தான் தூத்துக்குடியில் உள்ள ஒரு பிரபலமான மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டு இருப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றாள் . அக்கினி வெயிலை விட முகிலனின் மனம் அதிக வெப்பத்துடன் எரிந்து கொண்டிருந்தது.  

அவள் தன்னருகில் வந்து விடக்கூடாது . தன்னால் அவளை எதிர் கொள்ள முடியாது . அந்த கண்ணீர் கசிந்த கண்களை மீண்டும் பார்க்க முடியாது. அவளின் கண்கள் ஆறிக்கொண்டிருக்கும் அவன் மனதின் காயங்களை கீறி ரணமாக்கிவிடுமோ என்று பயந்தான் . சில காதல்களும், காயங்களும் மறக்கவோ இல்லை மறைக்கவோபட வேண்டும் அது அவர்களே விரும்பவில்லை என்றாலும் அது தான் விதி ... அவன் பதட்டத்தில் கைவிரல் நகங்களை வேகமாக கடித்துக்கொண்டிருக்கும் போதே ,கண்டக்டரின் விசில் சத்தம் பலமாக கேட்க பஸ் கிளம்பியது  . வாஹிணி பின்னால் அமர்ந்து இருந்த தன் தோழிகள் நோக்கி செல்ல . இவன் கடித்த இழுத்த நகம் ஒன்று தசை வேரோடு பிய்ந்து வந்த இடத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்து . விரலில் மட்டும் அல்ல.. 


- விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️✍️

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்