டிராகுலா குட்டிகளும், தூக்கம் தொலைத்த இரவுகளும் .

வேலை நிமித்தமாக சிங்கப்பூர் வந்து இருபது தளங்கள் கொண்ட அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் , பனிரெண்டாவது தளத்தில் இருந்த வீட்டில் ஒரு அறையை மட்டும் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தேன் .சென்னை வெயிலில் சுழன்ற எனக்கு முழுவதுமாக குளிரூட்டப்பட்ட அந்த அறை புதிய அனுபவமாக இருந்தாலும் புதிய இடம், புதிய மொழி , புதிய கலாச்சாரம் , புதிய மக்கள் இவர்களிடம் இருந்து நான் தனிமைப்பட்டது போல ஒர் உணர்வு என்னை வாட்டி எடுக்க . சில இரவுகளாக தூக்கம் வராமல் அவதிபட்டேன் ஏதேதோ எண்ணங்கள் வந்து மனதை அலைக்கழித்துக்கொண்டு இருந்தது. அன்றைய தினம் விளக்கை அனைத்துவிட்டு தூங்க முயற்ச்சித்து புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன் . அப்போது என் மேல் பல கைகள் ஊர்வதுபோல ஒர் உணர்வு ! என்னவாக இருக்கும்... ! என்னவாக இருக்கும்... மனதுக்குள் திகில் படர்ந்தது . மண்டைக்குள் நான் சிறுவதில் பார்த்த 13ம் நம்பர் வீடு , மைடியர் குட்டிச்சாத்தான் போன்ற பேய் படங்களில் வரும் காட்சிகள் மின்னல் கீற்றாய் வந்து போனது ஒரு வேளை இந்த அறையில் யாராவது தூக்கு போட்டு இறந்திருப்பார்களோ . அப்படி இறந்த அந்த நபரின் ஆத்மா நம்மை தொந்தரவு செய்கிறதோ. இந்த வீட்டின் உரிமையாளர் அதை நம்மிடம் மறைத்திருப்பாரோ. என பலவாறு எண்ணங்கள் சூழல . மெதுவாக கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தேன் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை . அதனால் மனதை தைரியபடுத்திக்கொண்டு எழுந்து சென்று மின்விளக்கை ஒளிரவிடேன் , மங்கிய விளக்கின் ஒளி அறை முழுவதும் பரவியது. ஆனால் அறையில் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தலையனை, போர்வையை நன்றாக உதறி பார்த்தேன் ஒன்றும் இல்லை . ஏதோ மன பிரம்மையாக இருக்கும் என நினைத்து விளக்கை அணைத்து விட்டு . மெத்தையில் சாய்ந்து கண்களை மூடிய சில நிமிடங்களில் மீண்டும் என் மேல் ஏதோ ஊர்கிறது அதை  இப்போது என்னால் நன்றாக உணர முடிகின்றது . இவ்வளவு நேரம் நான் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த என் தைரியம் எல்லாம் என்னை விட்டு மெல்ல விலகுகின்றது . மனதுக்குள் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வணங்கிவிட்டு எது நடந்தாலும் நடக்கட்டும் என்று என்னை நானே சமாதன படுத்திக்கொண்டு போர்வையை தலை முதல் கால் வரை இழுத்து போர்த்திக்கொண்டு கண்ணை முடிக்கொண்டேன் . அதற்கு பிறகு எப்படியோ கண்ணயர்ந்திருக்கிறேன். காலையில் மணி ஏழு ஆனது வெளியே படர ஆரம்பித்த வெளிச்சம் அறைக்குள்ளும் பரவியது கண்விழித்து பார்த்தால் இரவு அணிந்திருந்த எனது உடையின் சில இடங்களில் சிறிய அளவிலான இரத்த கறை தெரிந்தது அதிர்ச்சியானேன் . எப்படி வந்தது ,எப்படி வந்திருக்கும் . நமக்கு தெரியாம எதாவது கூர்மையான பொருள் மீது பட்டு இரத்தம் வந்திருக்குமோ . என பலவாறு யோசித்து பார்த்த போது தான் புரிந்தது , அது அளவில் மிகச்சிறிய பகலில் வெளிச்சத்தில் ஒளிந்து கொண்டு இருட்டில் வெளியே வந்து மனிதனை கடித்து இரத்தத்தை குடித்து உயிர் வாழும் டிராகுலா குட்டிகளான மூட்டைபூச்சியின் இரத்தம் என்று . இரவெல்லாம் என்னை தூங்கவிடாமல் என்னை பாடாய்படுத்தியது இந்த காட்டேரியின் குட்டிகள் தானா. மெத்தையின் ஓரங்களை நன்றாக கூர்ந்த கவனித்த போது நிறைய மூட்டைபூச்சிகள் மெத்தையின் விளிம்புகளில் ஓட்டிக் கொண்டிருந்தது. இதை எப்படி கொல்வது என்று தெரியவில்லை . நமது ஊராக இருந்திருந்தால் மெத்தையை தூக்கி வெயிலில் போட்டிருந்தால் அனைத்தும் இறந்திருக்கும். அல்லது பனைநார் கட்டிலில் ஓழிந்திருக்கும் மூட்டைபூச்சிகளை கொல்வதற்கு கட்டில் சட்டங்கள் மற்றும் கால்கள் மீது கொதிக்கும் நீரை உற்றினால் எல்லா மூட்டைபூச்சிகளும் இறந்து விடும் . ஆனால் சிங்கப்பூர் போன்ற நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் அதுவும் ஒர் அறை வாடகை வீட்டில் இருந்து கொண்டு இதனையெல்லாம் செய்வது முடியாத காரியம் . என்ன செய்யலாம் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த மெத்தையை மொத்தமாக சுருட்டி எடுத்து சென்று குப்பை தொட்டியில் வீசி விட்டு அறைக்கு வந்து. தரையை டெட்டால் போட்டு சுத்தமாக துடைத்து விட்டு சந்தோசமாக வேலைக்கு சென்றேன் இன்று நன்றாக தூங்கலாம் என்று . அன்று இரவு வேலை முடித்து வந்ததும் வெள்ளை பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட தரையில் போர்வையை விரித்து நிம்மதியாக படுத்தேன் . ஆனால் இரவில் மீண்டும் என் மேல் எதோ ஊர்வது போல இருக்க . என்னடா இது இந்த சீங்கப்பூருக்கு வந்த சோதனை என்று என்னை நானே நொந்தபடி . எழுந்து சென்று விளக்கை ஒளிரவிட ,  அங்கே அவரகள் !  யாருடா இவனுங்க! எங்கிந்துடா வந்தானுங்க! என்று மிரண்டு போய் நின்றேன் . நான் படுத்திருந்த இடத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்காண டிராகுலா குட்டிகள் . விளக்கின் வெளிச்சத்தை பார்த்தும் வேகமாக ஒழிந்துகொள்ள இடம் பார்த்து ஓடிக்கொண்டிருந்தன. டேய் ! எங்கடா போரிங்க .. நீங்க எங்கடா இருக்கிங்க என்று பார்த்தால் கதவு இடுக்குகள், ஜன்னல் ஓரங்கள் , மின்சாதன பொருட்கள் என அந்த அறையில் இருந்த அனைத்து பொருட்களிலும் சென்று பதுங்கின . அதோ அந்த மர அலமாரியின் கதவில் சிறிதாக இருந்த பிளவுக்குள் பத்திற்கும் மேற்பட்ட மூட்டைபூச்சிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏறி அமர்ந்து என் கண்ணில் இருந்து மறைய முற்ப்படுகின்றது. இதோ சில என் இரத்தத்தை நன்றாக குடித்துவிட்டு உண்ட மயக்கத்தில் தள்ளாடி , தள்ளாடி சென்றன .தொட்டாலே அவற்றின் வயிறு வெடித்துவிடும் அளவுக்கு ஊதி பெருத்திருந்தது , எல்லாம் என் ரத்தம் . ஊட்டச்சத்திற்காக ஹார்லிக்ஸும் , மைலோவுமாக குடித்து உறிய இரத்தத்தை இந்த காட்டேரிகுட்டிகள் சுவைத்து குடித்திருந்தன . சற்று நேரத்தில் எதுவும் நடக்காத போன்று பயங்கர அமைதியாக இருந்தது அந்த அறை . அனைத்து காட்டேரி குட்டிகளும் ஆங்காங்கே  பதுங்கிக்கொண்டன. யாராவது மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்துவார்களா என்று கேட்பவர்களுக்கு அப்பொழுது என் மனநிலமை அப்படி தான் இருந்தது .மொத்தமாக எல்லாவற்றையும் கொழுத்தவேண்டும் என்பது போல ஆனால் அது எனது வீடோ ஊரோ இல்லையே.. .ய்ப்பா சாமி இனிமேல் இங்க தங்க முடியாதுடா என்று உறுதியான முடிவுக்கு வந்து , வாடகைக்கு வேறு இடம் தேட ஆரம்பித்தேன் . ஆனால் உடனடியாக வேறு இடம் கிடைக்கவில்லை . அந்த அறையிலேயே இரண்டு மாதங்கள் தங்கவேண்டியதாயிற்று . அந்த இரண்டு மாதங்களும் தினமும் இரவு தூங்கும் முன் சுத்தமாக இருக்கும் அந்த அறையின் தரை .இரவில் எனக்கும் டிராகுலா குட்டிகளுக்கும் இடையே நடக்கும் NINJA ⚔️ ரத்தகளரியின் முடிவில் காலையில் பார்க்கும் போது போர்களத்தில் இறந்து கிடக்கும் டிராகுலா குட்டிகளும் , அவை என் உடலில் இருந்து குடித்த இரத்தமும் வழிந்தோடுவதை பார்க்கும் போது . கலிங்கபோரில் வென்ற பேரரசர் அசோகர் சக்கரவர்த்தி இனிமேல் போர் செய்யமாட்டேன் என்று முடிவு எடுத்தது போல இனிமேல் அவற்றை கொல்லவேண்டாம் என்று மனதில் தோன்றும் . ஆனால் மூட்டைபூச்சிகள் என் உடையில் மறைந்திருந்து . பேருந்தில் பயணிக்கும் போதோ, வேலையிடத்திலேயோ மற்ற பொதுஇடங்களுக்கு செல்லும் போதோ வெளியே வந்து சட்டையில் அலைந்து திரியும் .அதை பார்க்கும் சிலர் என்னை அருவருப்பாக பார்த்து ஒதுங்கி போகும் போது மானம் போகும் . அதை நினைத்து பார்க்கும் போது ஒவ்வொரு இரவும் ரத்தகளரி தான் . அந்த இரண்டு மாதங்களும் சரிவர தூக்கம் இல்லாமல் உடல் அயர்ச்சியும் , மன சோர்வும் சேர்ந்து மன அழுத்தத்தை உண்டாக்கியது. சின்ன வயசுல யாரையாவது பார்த்து ஒருமுறையேனும் சொல்லியிருப்போம் உன்னையேல்லாம் மூட்டை பூச்சியை நசுக்குவது மாதிரி நசுக்கி போட்டிருவேண்டா . இப்படி எகத்தாளமாக பேசிய , பார்த்த , உருவத்தில் சிறிதாக இருக்கும் மூட்டை பூச்சி எனக்குள் மரண பயம் உண்டாக்கியது என்றால் நம்புவது கடினம் தான் . 
சிந்தனையோடு இணைந்து உடலின் இயக்கமும் சீராக செயல்பட , பகல் முழுவதும் உழைக்கும் உடலும் , மூளையும் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள எந்த தொந்திரவும் இல்லாத ஆழ்ந்த உறக்கம் மிகவும் அவசியம் . உறக்கத்தை கெடுத்துக் கொண்டு நாம் செய்யும் செயல்களால் மனதும் உடலும் குழப்பம் அடையும் . அது தொடரும் போது மன அழுத்தம் உண்டாகும் . அவை சில நேரம் ஆபத்தில் முடிய வாய்ப்புகள் உள்ளது . 

விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️







 . 

Comments

  1. அண்ணன் இப்போது கொசுக்கள் தொல்லை தாங்க முடியால

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்