" நினைவுகளின் நிழல்கள் "

தியாகி பகத்சிங் பேருந்து நிலையம் இந்த பெயர் பலருக்கு பரிச்சயம் இல்லாமல் இருக்கலாம் ,  ஆனால் திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்ட் என்றால் அனைவருக்கும் தெரியும் . தமிழ்நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மிகமுக்கியமான பேருந்து நிலையம் இது . என் கல்லூரி காலங்களில் அந்த பேருந்து நிலையம் எனக்கு மிகவும் பரீட்சியமானதாக இருந்தது. எத்தனையோ விதமான மனிதர்கள் , அவர்கள் வாழ்கையின் சந்தோசம் ,அன்பு , துக்கம் , துயரம் , வறுமை , வெறுமை , வெறுப்பு என அவர்களின் மனங்களை பிரதிபலிக்கும் விதவிதமான முகபாவங்களுடன் பேருந்திற்க்காக காத்திருப்பார்கள் , அவர்களில் இதோ ஒரு குடும்பம் செந்தூர்ஆண்டவரை வணங்கிவிட்டு , தலைமுடி பாரத்தோடு தன் மனபாரத்தையும் முப்பாட்டன் காலடியில் கொட்டிவிட்டதால் இனி வாழ்க்கையில் நிம்மதி மலரும் என்ற நம்பிக்கையுடன் , மனது குளிர வாசனை சந்தனம் பூசிய தலையுடன்  பேருந்துக்காக காத்திருக்கின்றனர் . அவர்களிடம் இருந்து சற்று தள்ளி திருச்செந்தூர் கோர்டில் ஆஜராகிவிட்டு கையில் பூட்டிய விலங்குகளுடன் பாளையங்கோட்டை சிறைக்கு செல்வதற்கு துப்பாக்கி ஏந்திய காவலருடன் வந்து காத்திருக்கும் கைதி ஒருவர் .
" சார் ஒரு பீடி கொடு சார் " என தன்னை கோர்ட்டுக்கு அழைந்து வந்த காவலரிடம் பீடி கேட்டு வாங்கி  புகைத்துக்கொண்டு இருந்தார் . குடும்பங்கள் கைவிட்ட நிலையில் வயிற்றுப் பசியை போக்க  கையேந்தி கொண்டு இருந்தார் ஒரு முதியவர் .  பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் காலி இடங்களில் கூடாரம் போட்டு தங்கியிருந்து பேருந்து நிலையம் வரும் பயணிகளிடம் பாசிமணிகள் விற்று பிழைப்பு நடத்தி கொண்டு இருந்தனர் நறிக்குறவர்கள்  , வெளியூரில் இருந்து வரும் பயணிகளை அழைத்து செல்ல  குதிரை பூட்டிய வண்டியுடன் காத்திருந்தனர் இரண்டு, மூன்று குதிரை வண்டிகார்கள்..    இப்படிபட்ட மனிதர்களுக்கு இடையே இவர்கள்  யாரையும் கண்டும் காணாதவர்களாய் இந்த சமூகத்தை பற்றி துளியும் பயம் இல்லாமல்  கல்லூரி வகுப்பு முடிந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து கூத்தும், கும்மாளமுமாய் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து அவரவர் ஊருக்கு செல்லும் பேருந்திற்க்காக  காத்திருந்தது அந்த கல்லூரி மாணவர் கூட்டம் . அன்று மாத இறுதி வெள்ளிக்கிழமை அந்த ஊரில் உள்ள பிரபலமான மகளிர் கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகள் பலர் விடுமுறைக்கு வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையம்  வந்திருந்தனர். அதனால் அன்று மாணவிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது . அதனால் அந்த மாணவர்களின் அலப்பறையில் உற்சாகம் பெருகி வழிந்தது. அதற்கு அந்த விடலை பருவத்தில் அவர்கள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் உந்துதல் தான் காரணம் . அந்த கல்லூரி மாணவர்கள்  நின்றிருந்த இடத்திற்கு நேர் எதிரே அடர்மஞ்சள் நிற வண்ணம் பூசிய S k டிரான்ஸ்போர்ட் என்ற அந்த பேருந்து திசையன்விளை என்ற அறிவிப்பு பலகையுடன்  நின்று கொண்டு இருந்தது . பஸ்ஸில் அதிகமான கல்லூரி மாணவிகள் ஏறி இருந்தனர் . பேருந்து புறப்பட இன்னும் நேரம் இருந்தது . அங்கு நின்றிருந்த மாணவர் கூட்டத்தில் பலர் அந்த பேருந்தில் பயணிப்பவர்கள் தான்.  அவர்களில் ஒருவன் கையில் இருந்த பாட புத்தகத்தை தோற்பட்டையின் மேல் வைத்துக்கொண்டு. "சார் டீ.. காபி.. டீ...டீ , காபி.. காபி'  என்று சத்தமாக கூறிக்கொண்டே பஸ்ஸின் பின்பக்கம் ஏறி வந்து முன்பக்கம் இறங்க , அவனை பின் தொடர்ந்து இன்னொரு மாணவன்,
" சார் வடை.. வடை... வடை  "என்று கூவியவாறே ஏறி இறங்கினான். எல்லாம் மாணவிகளின் கவனத்தை ஈர்க்கத்தான்.  ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் சட்டசபையில் எதிர் கட்சியினர் கொண்டுவரும் . கவனயீர்ப்பு தீர்மானம் போன்று தோல்வியிலேயே முடிந்தது .
மூன்றாம் பிறை க்ளைமாக்ஸில் தலையில் பானையை வைத்து தன்னை அடையாளம் காட்ட முனையும் கமலஹாசனை பார்க்கும் ஸ்ரீதேவிகள் போல ஏளனபார்வை வீசிவிட்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்கள். மாணவர்கள் அலப்பறைவாதிகள் என்றால் மாணவிகள் அலட்டல்வாதிகள் . இவைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த மற்றொரு மாணவன் அந்த பேருந்தின் முன்பகுதியில் மாணவிகள் குழுமியிருந்த இடத்தின் அருகில் சென்றான் . அங்கு பேருந்தின் முன் பகுதியில் இருந்த இரண்டாவது சீட்டின் ஜன்னல் ஓரத்தில் எழுபது  வயது மிக்க  அந்த மூதாட்டி ஜன்னல் கம்பியில் தலைசாய்த்து கண்ணயர்ந்து அமர்ந்திருந்தார்.  பஸ்ஸின் வெளிபக்கம் பாட்டியின் அருகில் சென்றவன். 
" பாட்டி... பாட்டி " என்று அழைக்க .
யாரோ அழைப்பதை உணர்ந்த பாட்டி கண் விழித்து யார் என்று சுற்றும் முற்றும் பார்க்க. 
அவன் கீழே நின்று கொண்டு மீண்டும்
" பாட்டி.. பாட்டி.. " என்றழைத்தான். 
அவனை கவனித்த பாட்டி வெளியே எட்டிப்பார்த்து கனிவு நிறைந்த குரலில்.
" என்னராசா..... " என்று அன்பொழுக கேட்க. 
அந்த மாணவன் கைகளை விசிறி போன்று விரித்து காதில் வைத்தபடி நாக்கை நீட்டி . 
" ஓஓஓஓவாவாவா.. என்று அலவம் காட்டினான் .. 
இதை சற்றும் எதிர்பார்க்காமல்
அதிர்ச்சிக்குள்ளான அந்த பழந்தமிழ் மூதாட்டி சட்டென்று சுதாரித்தவர். கோபத்துடன் தன் பொக்கை வாயை திறந்து அவனை பார்த்து  "பேதிலபோனவன, நாசமாபோனவன என்றும் அவனே..  இவனே..  என்றும் மானே , தேனே , பொன்மானே என ஒன்று ,இரண்டு ,மூன்று என்று வரிசைப்படுத்தி செந்தமிழ் சொல்லெடுத்து வசைபாட ஆரம்பித்ததும் தான் தாமதம் . பஸ்ஸில் இருந்த கல்லூரி மாணவிகளும் , பஸ்ஸூக்காக காத்திருந்த பொதுமக்களும் என அனைவரும் வெடித்து சிரித்ததில் . அந்த பேருந்து நின்ற இடமே அல்லோகலப்பட்டது அலவம் காட்டிய அந்த மாணவன் அந்த பாட்டியின் வசை மொழியை காதால் கேட்ட முடியாமல் கையால் காதை இருகமூடிக்கொண்டு !  அவனுடைய நண்பர்களின் கூட்டத்தின் பின்னால் சென்று மறைய சிரிப்பு சத்தம் நிற்க சில நிமிடங்கள் ஆனது ... 
அனைவரும் சிரிப்பதை பார்த்த அந்த பாட்டியும் சினம் மறந்து தன் பொக்கை வாய் தெரிய சிரித்தது ... 
மனது விட்டு சிரித்த இது போன்ற சில நிகழ்வுகள் தான் நெஞ்சில் ஆழமாக பதிந்து  விடுகின்றன. பதிந்து போன அந்த நிகழ்வுகள் தான் பல சமங்களில் மனதை இளமையாகவும் , உள்ளத்தின் காயங்களுக்கு மருந்தாகவும், உணர்வுகளை உயிர்ப்போடும் ,  வைத்திருக்கின்றன ...

விக்கி இராஜேந்திரன் ✍️✍️✍️✍️

Comments

  1. பாட்டியின் பொக்கை வாய் சிரிப்பு அழகு!

    ReplyDelete
    Replies
    1. இந்த படத்தை எடுத்தவருக்கு உங்களின் வாழ்த்துகள் உரித்தாகுக. நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்