"தில்லையில் அம்பலம்"

பாண்டிச்சேரியில் மூன்று மாதகாலம் தொழிற்பயிற்சிக்காக எங்கள் கல்லூரியில் இருந்து நண்பர்கள் பனிரெண்டு பேர் சென்றிருந்தோம். முதன் முறையாக குடும்பத்தை விட்டு தொலைதூர பயணம் . முதல் சில நாட்கள் மனதிற்குள் ஒரு இனம் புரியாத தனிமை என்னை வாட்டி வதைத்தது. நாட்கள் போகப்போக நண்பர்களின் ஆதரவின் காரணமாக சகஜமானேன் . பிறகு விடுமுறை தினங்களில் நானும் நண்பர்களும் பாணடிச்சேரியையும் அதை சுற்றி இருக்கும் இடங்களையும் சுற்றி பார்த்தோம் . ஒவ்வொரு வாரமும் விடுமுறை கழிந்தபின் அடுத்த வார விடுமுறைக்காக காத்திருக்கலானோம்.. இதோ அடுத்த வாரம் வேலைக்கான கால அட்டவணை வெளியாகி விட்டது . வரும் வாரம் புதன்கிழமை எனக்கும் என் நண்பன் ராம்குமாருக்கும் விடுமுறை . இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து அறுபத்திஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த புகழ் பெற்ற தில்லை நடராஜர் கோவிலுக்கு சென்று நடராஜரை தரிசித்து வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு இன்னும் நான்கு தினங்கள் இருந்தன . ஆனாலும் தினம் தினம் நண்பர்களிடம் அங்கு போவதை பற்றி சிலாகித்து பேசிவந்தேன் . எப்போதும் "தில்லையம்பல நடராஜா" என்ற பாடலை முனு முனுத்தபடியே இருந்தேன் . 
புதன் கிழமையன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து நானும் ராம்குமாரும் பேருந்தில் கிளம்பினோம். ஏறக்குறைய இரண்டு மணிநேரம் பயணம் செய்து நண்பகலுக்கு சற்று முன்னதாக சிதம்பரம் கோவிலை அடைந்தோம் . நண்பகல் நெருங்கி விட்டதால் கோவில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருந்தது . அதனால் எளிதாகச் சென்று  மூலவரை தரிசித்துவிட்டு . விபூதியை கையில் வாங்கி கொண்டு அந்த பெரிய கோவிலை சுற்றி வந்தோம். அங்கு இருந்த சிற்பங்கள் என்னை பிரமிக்க வைத்தன. கோவில் தெப்பகுளத்தில் தண்ணிர் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் அழுக்காக இருந்தது . அனைத்தையும் ரசித்துக்கொண்டே வெளியே வந்து கொண்டு இருந்த போது வாசலுக்கு சற்று முன்னால் இருந்த மண்டபத்தில் நடைபாதையின் ஓரமாக தலையில் குடுமியும், பெருத்த தொப்பையுடனும் வெறும் உடம்பில் ஒரு துண்டை சுற்றிக்கொண்டும் , இடுப்பில் பஞ்சகத்தை கட்டிக்கொண்டும், வலது கையில் இருந்த பனை ஒலை விசிறியால் விசிறிக்கொண்டே இடது கையால் உடம்பை சுற்றி இருந்த துணியால் பூணுல் அணிந்து இருந்த தன் பெருத்த உடம்பை துடைத்துக் கொண்டு இருந்தார் அவர். அவரின் முன் இருந்த பலகையில் சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்ட லட்டுகளையும் , அதிரசங்களையும் பிரசாதம் என்ற பெயரில் விற்பனை செய்து கொண்டு இருந்தார் . அதை பார்த்த நாங்கள் இருவரும் அருகே சென்று அதை வாங்கலாம் என்று முடிவு செய்தோம் .  என் வலது கையில் விபூதி பிரசாதம் வைத்திருந்ததால் , இடது கையால் ஒரு லட்டு பாக்கெட்டை கையில் எடுத்து இது எவ்வளவு விலை என்று கேட்க நினைத்த போது சட்டென்று அவர் என் கையை அவர் கையில் வைத்து இருந்த விசிறியால்  தட்டிவிட்டு மிகவும் சத்தமாக
" பீச்சாங்கையால் தொடாதே தூரப்போ" என்று  சகமனிதன் என்று பாராமல் ஏதோ ஏதோ ஐந்தறிவு ஜந்துவை விரட்டுவது போல கத்திவிட்டு என்னை முறைத்தார்.. 
எனக்கு ஒன்றும் புரியவில்லை ஒரு நிமிடம் அதிர்ந்து போய் நின்றேன்.. நான் செய்த தவறு என்ன ஒன்றும் புரியவில்லை . உடம்பில் உள்ள பாகத்தில் வலது என்ன இடது என்ன ஒரு வேளை நான் தொட்டதால் அதன் புனிதம் கெட்டுவிட்டது என்று கத்துகின்றாறோ என்று பலவாறு யோசிக்க யோசிக்க எனக்கு ஆத்திரம் வந்தது . கோவிலுக்குள் நுழைந்ததற்காக நந்தனாரை எரித்த மனிதர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் . வாய் வரை வந்த வார்த்தைகளை அவரின் வயது கருதி பேசாமல் . அதற்கு மேல் அவனின் அருவருப்பு நிறைந்த மனதாலும் கையாலும் செய்த லட்டை வாங்கவோ, அங்கு நிற்கவோ பிடிக்காமல் நண்பனுடன் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். 
   இப்போது என் வலதுகையில் இருந்த விபூதி பிரசாதம் , இடது கைக்கு மாறியது அது எரிந்த நந்தனாரின் உடலின் சாம்பலாகவும் , நான் வியந்து பார்த்த சிற்பங்கள் நிறைந்த அந்த கோவில் உயிரற்ற தொல்லுயிர் படிமங்களின் அருங்காட்சியகமாகவும் தெரிந்தது . கடந்த சில நாட்களாக என் மனதில் ஆனந்த நடனம் ஆடிக்கொண்டு இருந்த நடராசர் . இப்போது உக்கிரதாண்டவம் ஆடிக்கொண்டு இருந்தார். 
நெஞ்சகமே கோயில்! 
நினைவே சுகந்தம்! 
அன்பே மஞ்சன நீர்! 
பூசை கொள்ளவாராய்!
பராபரமே! 
என்ற தாயுமானவரின் சொல்லுக்கு ஏற்றாற் போல் , மனம் உருகி கண்ணை மூடினால் . நம் மனகண் முன் தோன்றும் இறைவனை . மனிதம் அற்ற மடையர்கள் இருக்கும் இடத்தில் தேடிச்சென்றது என் தவறு தான் என்று அந்த நிகழ்வை மறக்க முயன்றும் முடியவில்லை .  
      மதியாதார் தலைவாசல் மிதியாதே! ... என்ற தமிழ் மூதாட்டியின் தமிழ் அனைத்தையும் தாண்டி எனக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍




Comments

  1. பத்து பேர் இல்லை பன்னிரண்டு பேர் சென்றோம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்