"பிரியாணி"
பிரியாணி எனக்கு அறிமுகமானது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் தெற்கு ஆத்தூர் வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தான் . அன்று பஜார் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் . பஜார் வியாபாரிகள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவும் , சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்க்கவும் கடைகாரர்கள் அனைவரும் கூடும் கூட்டத்தில் ஆர்வமாக கலந்து கொள்ளாத கடைக்காரர்கள் கூட கடைசியாக கூட்டம் முடிந்தவுடன் ஆத்தூர் தாஜ்மஹால் ஓட்டலில் ஆர்டர் செய்து இலவசமாக வழங்கப்படும் பிரியாணியை வாங்க ஆவலாக வந்து இருப்பார்கள் . "தாஜ்மகால்" என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அன்பு , லவ் , பியார் , காதல்னா , ஆத்தூர்காரங்களுக்கு "தாஜ்மகால்" என்றாலே நினைவுக்கு வருவது பிரியாணியாகத்தான் இருக்கும் .சீரக சம்பா அரிசியோடு ஏலக்காய் , பட்டை , கிராம்பு போன்ற வாசனை பொருட்களையும், சிக்கனையும் , நெய்யையும் ஊத்தி ஊரே மணக்கும் வாசனையுடன் செய்த தாஜ்மகால் ஓட்டல் பிரியாணி அவ்வளவு ருசியாக இருக்கும் . அந்த பிரியாணியை நியூஸ் பேப்பரை விரிச்சி வைச்சி அது மேல இளம் தலை வாழையிலையை போட்டு சிக்கனையும் முட்டையையும் பிரியாணியோடு சேர்த்து வைச்சி அழகா மடக்கி கட்டி , கூடவே தொட்டு கொள்ள தயிர் வெங்காயமும் கொடுப்பாங்க.. அவ்வளவு தான் பிரியாணி பார்சல் கைக்கு வந்ததும் வேகவேகமாக வீட்டுக்கு வந்து பார்சலை பிரிக்கும் போது இறுக்கி கட்டிய அச்சி பிரியாம ஒன்றாக சேர்ந்து இருக்கும் பிரியாணி மேல லேசா கை விரல் பட்டதும் . சீட்டு கட்டுல கட்டிய கோபுரத்த தொட்ட மாதிரி பொள பொள வென கலைஞ்ச்சி போயிரும். மணமணக்கும் நெய்யோடு பிரியாணியோட வாசம் அப்படியே மூக்குல ஏறும் போது வாய்ல எச்சில் ஊறிரும். அப்படி பட்ட பிரியாணியை அய்யனாருக்கு வைச்ச படையல் சோற சாப்பிடுற சாமியாடி மாதிரி வலது கால நீட்டியும் இடது கால மடக்கியும் உக்காந்து வீட்டில யாருக்கும் தெரியமா சாப்பிட நினைச்சா.. பிரியாணியின் வாசம் புடிச்சி அக்கா , தங்கை , தம்பி என எல்லாரும் பங்குக்கு வந்திருவாங்க. கடைசில தூவிவிட்ட அரிசியை கொத்தி திங்கற கோழி மாதிரி பிரியாணி பருக்கைகளை பொறுக்கி திங்கறாப்பல ஆகிரும் என் நிலமை . நம்ம வீட்டில முழு ஆட்டையும் அடிச்சி குழம்பு வைச்சிருந்தாலும் , பக்கத்துல பாய் வீட்டுல எதாவது பங்சன் நடந்தா நம்வீட்டுக்கு ஏதும் பத்திரிக்கை வந்திருக்கா என்று தேடச்சொல்லும்.. ஏன்னா அங்க கிண்டுற பிரியாணியின் வாசனை அப்படி. அது என்னவோ தெரியல என்ன மாயம் பண்ணுறாங்கன்னும் தெரியல , பிரியாணில அவங்க கைபக்குவமே வேறலேவல் தான். அது யாருக்கும் வராது ..
அன்னைக்கு பக்ரீத் பண்டிகை பள்ளி விடுமுறை . அப்பா வெளியே போயிருந்ததால நான் தனியா கடையில இருந்தேன்.. ஒரு 10 வயது சிறுமி புதிய பாவாடை சட்டையுடன் தலையில் ஹிஜாப்பும் அணிந்து கையில் பெரிய எவர்சில்வர் தூக்குவாளியை தூக்கி கொண்டு வந்து என்னிடம் -"முத்துநாடார் கடை இது தானே.. " என்றாள் . நான்
-"ஆமாம் என்றதும்"
- "வீட்டுல குடுத்துட்டு வரசொன்னாங்க...
என்று தூக்குவாளியை வைத்து விட்டு ஓடி போனாள் சிறுமி...
சிறுமி வைத்து விட்டு போன அந்த வாளியில் இருந்து பிரியாணி வாசம் கமகம என வந்தது . அது என்னை அந்த பிரியாணி சாப்பிடு , சாப்பிடு என்று அழைப்பது போல் இருந்தது . இருந்தாலும் யார் கொடுத்தது என்று எனக்கு தெரியவில்லை . அப்பாவுக்கு தெரிந்தவர்களாக இருக்கலாம் அப்பா வந்ததும் . சாப்பிடலாம் என்று என்னை நானே கட்டுப்படுத்தி கொண்டேன்.
இருந்தாலும் எண்ணமெல்லாம் அந்த பாத்திரத்தையே ஆராய்ச்சி செய்து கொண்டுடிருந்தது. என்ன பிரியாணியா இருக்கும். சிக்கன்னா இருக்குமா மட்டனா இருக்குமா.. பீஸ் நிறையா இருக்குமா. நெய் கொஞ்சம் அதிகமா இருக்கும் போல .. ஆமா அப்படித்தான் இருக்கும் ,பாத்திரம் நிறைய பிரியாணி வைச்சி இறுக்கமா மூடியதால ஓரமாக இளம் சிவப்பு நிறத்தில் பள பள என்று நெய் வடிந்து இருக்கிறது என்றெல்லாம் எண்ணி கொண்டு இருந்த போதே. அந்த சிறுமி வியர்க்க விருவிருக்க ஓடிவந்தாள். ஸ்ஸ்ஸ் என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது வந்து பாத்திரத்தை பார்த்தவளுக்கு பாத்திரம் திறக்கப்படவில்லை என்பதை அறிந்ததும் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது..
-"நான் என்னாச்சு" என்றபடி அவளை பார்க்க...
"அண்ணா இது உங்களுக்கு இல்லையாம் வேற ஒரு முத்து நாடாருக்காம். " என்று வேகமாக தூக்குவாளியை தூக்கி கொண்டு ஓட ஆரம்பித்தாள் சிறுமி..
கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் போகும் பிரியாணி வாளியையே பார்த்து கொண்டு நின்றேன் நான்..
விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍
Now you are big chef make biriyani I can eat
ReplyDelete