செம்மறி ஆடு 🐏
கோடை காலத்தில் நீர்வற்றி இருக்கும் ஆத்தூர் குளம் , ஆத்தூரை சுற்றி இருக்கும் குளங்கள் மற்றும் அறுவடை முடிந்த வயல்வெளிகளுக்கு செம்மறி ஆடுகளை தூத்துக்குடி நகரத்தை தாண்டி இருக்கும் வானம் பார்த்த கரிசல் பூமியில் இருந்து மேய்ச்சலுக்காக பத்திக்கிட்டு வருவாங்க. நூற்றுக்கணக்கான ஆடுகள் ஒன்றன்பின் ஒன்று இடித்துக்கொண்டு ரோட்டின் ஓரத்தில் இருக்கும் புழுதியை கிளப்பியவாரு கீதாரி கையில் வைத்து இருக்கும் தொரட்டி கம்புக்கு அடிபணிந்து மந்தை மந்தையாக அணிவகுத்து செல்வதே அழகாக இருக்கும் . செம்மறி ஆடுகளை எங்கள் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலும் யாரும் வளர்ப்பதில்லை . செம்மறி ஆட்டுகிடாக்களை வைத்து நடக்கும் "கிடா முட்டு" போன்ற விளையாட்டு பந்தயங்கள் எங்கள் பகுதியில் பிரபலம் இல்லை . அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். எங்கள் பகுதியில் இறைச்சிக்காக மட்டுமே ஆடுகள் வளர்க்கப்படுகின்றன . வெள்ளாட்டின் இறைச்சியோடு ஒப்பிடும் போது செம்மறி ஆட்டின் இறைச்சி சற்று கடினமாகவும் , வாடையுடனும் இருப்பதால், வெள்ளாடுகள் மட்டுமே எங்கள் பகுதிகளில் பெருமளவு வளர்க்கப்படுகின்றன.
எங்க ஊரில் கொழிஞ்சி ( அவுரி ) வியாபாரி ஒருவர் இருந்தார் . வெற்றிலை கொடிகளுக்கு ஊட்டத்தையும், குளிச்சியையும் அளிக்கும் கொழிஞ்சி செடிகளை அவை அதிகமாக வளரும் கரிசல்மண் பகுதியில் இருந்து தருவித்து விற்பனை செய்துவந்தார் . அவர் வீடு எங்கள் வீடு இருக்கும் தெருவின் முடிவில் இருந்தது . வீட்டில் அவரின் வியாபார நண்பர்கள் மூலமாக கிடைத்த இரண்டு செம்மறி கிடாக்களை வளர்த்து வந்தார். அவை ஓவ்வொன்றும் அடர்பழுப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் அகன்ற புஜங்கள், அடர்த்தியான ரோமங்கள், கால் முதல் தலை வரை நான்கு அடி உயரம், விரிந்த நெற்றிப்பட்டை, சுருள்வாள் போல் நீளமான வளைந்த கொம்புகள், கருமஞ்சள் நிற கண்கள், கூர்மையான முரட்டுப்பார்வை, தலையை கீழே சாய்த்து... வலது கால் நகங்களை தரையில் தேய்க்கும் தோரணை . என கம்பீரமான நடையுடன் வலம் வந்தன. அந்த மாதிரி ஒரு செம்மறி கிடாவை நான் அதற்கு முன்பு பார்த்தது இல்லை . அவைகள் சில நேரங்களில் நன்கு உருண்டு திரண்ட கொம்புகளால் முட்டி பயங்கரமாக சண்டையிட்டு கொள்ளும். அந்த செம்மறி ஆடுகள் தெருவில் நிற்கும் போது அவற்றை தாண்டி வீட்டுக்கு போவதற்கே அச்சமாக இருக்கும் . ஆனால் அவையோ கீ கொடுத்துவிட்ட பொம்மை மாதிரி வீட்டில் உள்ளவர்களின் பின்னால் அழைவது ஆச்சர்யமாக இருக்கும். அதை பார்க்கும் போது எனக்கும் செம்மறி ஆடு வளர்க்கும் ஆசை வந்தது.
அந்த ஆசையும் சில வருடங்களில் நிறைவேறியது அப்பா யாரிடமோ இருந்து சிறிய செம்மறி ஆட்டு குட்டியை வாங்கி வந்தார் . முதுகில் இளம் சிவப்பும் வயிற்று பகுதியில் வெள்ளை நிறமும் , தலையில் சிறிதாக முளைத்த கொம்புகளுடனும் அழகாக இருந்தது . தினமும் பள்ளி முடிந்து வரும்போது சாலை ஓரங்களில் இருக்கும் சீமை உடைமரங்களில் மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக பழுத்து தொங்கும் உடைமர நெத்தை பறித்து பைக்குள் நிரப்பி கொண்டு வந்து உணவாக கொடுத்தும், விடுமுறை நாட்களில் வீட்டின் அருகில் இருந்த காட்டிற்கு அழைத்து சென்று அங்கிருந்த மரங்களின் இழை தழைகளை பறித்து கொடுத்தும் அந்த செம்மறி ஆட்டை என் பின்னால் வருமாறு பழக்கபடுத்திருந்தேன். அது என் பின்னால் ஓடிவரும் போது ரோபாட்டை கண்டுபிடித்த விஞ்ஞானி போன்று எதையோ சாதித்தது போன்று பெருமையாக இருந்தது. ஓரிரு மாதங்கள் கடந்த நிலையில் ஓரு நாள் அப்பா செம்மறி ஆட்டை எனக்கு தெரியாமல் வியாபாரியிடம் விற்றுவிட்டார் . வியாபாரியும் வீட்டில் இருந்து பிடித்து வந்து தெற்கு ஆத்தூர் பஸ் ஸ்டாப் அருகில் இருந்த கட்சிகொடி கம்பங்களிலேயே மிக உயரமாகவும் கம்பீரமாகவும் அதே நேரம் அந்த கட்சியை போலவே மங்கி போன நிறத்துடன் காணப்பட்ட காங்கிரஸ் கட்சியின் கொடிகம்பத்தில் செம்மறி ஆட்டை கட்டி போட்டு இருந்தார் . கடையில் இருந்து தற்செயலாக அதை கவனித்த நான் மிகவும் திடுக்கிட்டு நேராக அப்பாவிடம் சென்று ..
" அப்பா நம்ம ஆட்டை பிடிச்சிட்டு வந்திருக்காங்க " என்றேன் அதிர்ச்சி குறையாமல் .
" ஆமாடா அதை வித்தாச்சி " என்றார்.
" எதுக்கு அதை வித்திங்க எனக்கு அது வேணும் வேணும் " என்று அப்பாவிடம் அடம்பிடித்தேன். ஒரு வழியாக அதற்கு சம்மதித்த அப்பா.
" சரிடா நீ ஆட்டை அவுத்துகிட்டு போ. வியாபாரிகிட்ட நான் பேசிக்கிறேன் " என்று அப்பா சொன்னதும். சந்தோசமாக ஓடிச்சென்று ஆட்டை அவிழ்த்து கொண்டு ஊரை நோக்கி ஓடிப்போனேன். ஒரு சில நாட்கள் கழிந்தன. ஊரில் என் நண்பன் வீட்டிலும் ஓரு செம்மறி ஆடு வாங்கி இருந்தார்கள். அடர்பழுப்பும் கருமையும் கலந்து அழகாக இருந்தது அந்த செம்மறி குட்டி. அதன் பிறகு விடுமுறை நாட்களில் நானும் அவனும் ஒன்றாக செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு போக ஆரம்பித்தோம் . ஊரில் இருந்த காடுகள் , வாய்க்கால் என ஆட்டை அழைத்து கொண்டு நானும் அவனும் ஊர் முழுவதும் சுற்றி திரிந்தோம். என் நண்பன் செம்மறி ஆட்டின் குணநலன்களை நன்றாக அறிந்து வைத்து இருந்தான் . அன்று நானும் அவனும் வழக்கம்போல் ஆட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றோம் . அப்போது அவனிடம் நான் " இந்த ஆடு எவ்வளவு அழகா என் பின்னால் வருது எப்படி பழக்கி இருக்கேன் பாத்தியா " என்று பெருமிதத்துடன் கூறினேன் .
அவன் சிரித்து கொண்டே
- " என்னால உன்னோட ஆட்டை உன் பின்னாலே வராமல் பண்ண முடியும் என்றான் .
- " அதுக்கு வாய்பே இல்லை " என்று நம்பிக்கையுடனும் சற்று கர்வத்துடனும் சொன்னேன் .
- " சரி இப்போ பாரு " என்று கூறிக்கொண்டே மேய்ந்து கொண்டு இருந்த ஆட்டை பிடித்து அதன் விரைபையை ஒரு அழுத்து அழுத்தி விட்டுவிட்டான் . அவ்வளவு தான் ! அது வரை என் பின்னால் வந்த ஆடு என்னை விட்டு விட்டு முன்னோக்கி ஓடிச்சென்று அங்கே சென்று கொண்டிருந்த அதுவரை பழக்கம் இல்லாத யாரோ ஒருவரின் பின்னால் மோப்பம் பிடித்தபடி தலையை தொங்க போட்டு கொண்டு அவரை பின் தொடர்ந்து போக ஆரம்பித்தது . அதை பார்த்து நண்பன் சிரிக்க. எனக்கோ அதுவரை நான் கொண்டிருந்த பெருமை , கர்வம் ,நம்பிக்கை எல்லாம் உடைந்து போனது. நான் சென்று எவ்வளவு முயன்றும் என் பின்னால் அது வரவில்லை . கடைசியில் ஆட்டின் கழுத்தில் கயிறு கட்டி வீட்டுக்கு இழுத்து கொண்டு போகும்படி ஆகிபோனது. அந்த நிகழ்வுக்கு பிறகு எனக்கு அந்த செம்மறி ஆட்டின் மீது இருந்த பற்று குறைந்து கொண்டே போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அதை வெளியே மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் ஆர்வமும் , செம்மறி ஆடு வளர்க்க வேண்டும் என்ற ஆசையும் சுத்தமாக இல்லாமல் போனது .
மீண்டும் ஒருமுறை அப்பா என்னிடம்
-" ஒத்த குட்டியா கிடக்கிறதால இது நல்லா வளர்வது கஷ்டம் அதனால இந்த செம்மறி குட்டி நமக்கு வேண்டாம் உனக்கு வேணும்னா இதை வித்துட்டு இரண்டு வெள்ளாட்டு குட்டி வாங்கி தாரேன் என்றார்
- "சரி வித்திடலாம்" என்றேன் . மறுப்பு கூறுவேன் என்று எதிர்பார்த்த என்னிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வராதது கண்டு அப்பாவுக்கு கூட கொஞ்சம் ஆச்சர்யம் தான் .ஆனால் நிறைய எதிர்பார்த்து ஏமாந்து இருந்த என் மனநிலையை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை ...
-விக்கி இராஜேந்திரன் ✍✍
Super
ReplyDelete