பொய்க்காத பாசம் !

அந்த வருடம் வான் பொய்த்ததால் , நீர்நிலைகள் வறண்டு , நிலம் வெடித்து போனது. எங்கள் தோட்டத்தில் வாழைகள் எல்லாம் வாடி வதங்கும் நிலை . ஆழ்துளை கிணற்றில் இருந்து பம்பு செட் மூலமாக வாழை தோட்டத்தின் பட்டங்களில் , எவ்வளவு நீரை இறைத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போலானது. வளர்ந்து விட்ட வாழைகளை வாட விட மனம் இல்லாமல் .. டீசல் வாங்கி, வாங்கி பம்பு செட்டுக்கு ஊற்றி, ஊற்றுநீரை இறைத்து கொட்டி கை காசு கரைந்தது தான் மிச்சம் , நொய்ந்து போன வாழையில் ஊட்டம் இல்லை.  வாழைதோட்ட காண்களில்  நீர் தேங்காமல் வாழை செழிப்பாக வளரப்போவது சாத்தியமில்லை என்றானது.. ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் மற்றும் வாழை விவசாயிகள் சங்கங்கள் மூலமாக அரசாங்கத்தை வேண்ட பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளில் இருந்து சிறிது தண்ணிரை திறந்து விட்டது அரசு . திருவைகுண்டம் அணையில் இருந்து தென்கால்வாய் வழியாக பாய்ந்து வந்த தண்ணீர். அதுவரை வறண்டு காய்ந்து இருந்த வாய்காலில் விழுந்துகிடந்த மரத்தின் இலை , கிளைகளை எல்லாம் சேர்த்து இழுந்து வந்து கொண்டுடிருந்தது.  
        கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருந்த அப்பா வாய்க்காலில் தண்ணீர் வரும் விவரம் அறிந்து . என்னிடமும் , எங்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் குன்னிமலையான் அண்ணனிடமும் , மேலாத்தூர் கிராமத்திற்கும் , புன்னைசாத்தான்குறிச்சி ஊருக்கும் குறுக்கே இருக்கும் ஓடைவழியாக ,  மேக்க வேதகோவில் பள்ளிகூடத்துக்கிட்ட இருக்கிற நம்ம வாழைக்கு தண்ணிய கொணடு வந்து பாய்ச்சனும், அந்த மடையின் பாசன பகுதியில் கடைசியாக நம்ம தோட்டம் இருப்பதால் இடையில் இருக்கும் கொடிக்கால் விவசாயிகளின் வயல்களில் தண்ணீ பாய்ந்த பிறகு தான் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் . அதுக்குள்ள வாய்க்காலில் வரும் தண்ணி நிற்பதற்கு வாய்ப்பு இருக்கு . ஆனா முதலில் வாய்காலில் ஓடிவரும் தண்ணி தூசும், தூம்பும் , இலை , தழைகளும் கலந்து வருவதால் கொடிக்கால் விவசாயிகள் யாரும் பயன்படுத்த மாட்டார்கள் அதனால அந்த தண்ணீரை நம் தோட்டத்திற்குள் வருமாறு பண்ணிருங்க. 
"விக்னேஷ் நீயும் குன்னிமலையான் கூட போயி தண்ணி பாயுரபடி எல்லாம் சரி பண்ணி வெச்சிட்டு நீ காலேஜுக்கு கிளம்பு .
குன்னிமலையானை பார்த்து ...
 "மலையான் நீ வாழையின் ஓரத்தில் இருக்கிற கன்னுகளை மிதிச்சி மடக்கிவிட்டு கொண்டே தண்ணி பாய்ரத பாத்துக்க" என்று கூறியவாற எங்களை பார்க்க... 
சரின்னு சொல்லிட்டு டீயை குடித்துக்கொண்டு இருந்த குன்னிமலையான் அண்ணை கூப்பிட்டு ஆளுக்கு ஒரு சைக்கிளை எடுத்துகிட்டு கிளம்பி போனோம். 
அங்க போய் பார்த்தா தண்ணி வர்ற பாதையில வாழை சருகும் வேலிமுள்ளும் விழுந்து அடைச்சி கிடந்தது. வேற வழி இல்லை எல்லாத்தையும் எடுத்து ஒதுக்கலனா தண்ணிர் வேகமாக ஓடி வர்றதை இது தடுத்துரும் என்பதால் நானும் மலையானும் சேர்ந்து ஓடையை சுத்தப்படுத்தி தண்ணிர் எங்க வாழைக்கு வேகமாக ஓடிவராப்பல சரிபண்னோம் . ஓடையில தண்ணி வரப்பு தட்ராப்பல நிறைந்து வந்ததால வாழைதோட்டத்தின் காண்களில் நீர் வேகமாக நிறைய ஆரம்பித்தது. 
நான் குன்னிமலையான் அண்ணனிடம் . - " மலையான் நான் கிளம்பறேன் நீங்க பாத்துக்குங்க " என்றேன். அவரும்
- "சரி நீங்க கிளம்புங்க தம்பி நான் பாத்துக்கிறேன்" என்றார் . 
நான் தோட்டத்தை விட்டு வெளியே வந்து அங்கு நிறுத்தி விட்டு சென்றிருந்த சைக்கிளின் பூட்டை திறக்க சட்டை பையினுள் கையை நுழைத்து சாவியை தேட ,சட்டை பாக்கெட்டில் வைத்து இருந்த சாவியை காணவில்லை. என்னடா இது சோதனை என்று நொந்து போனேன் .. கல்லூரிக்கு போக நேரம் ஆகிட்டு இருக்கு . இந்த சாவி எங்க விழுந்திருக்கும். மீண்டும் தோட்டத்திற்குள் வந்து தேட ஆரம்பித்தேன். நான் வந்து போன பாதை முழுவதும் தேடிக்கொண்டே போனேன். 
- " தம்பி என்னாச்சி திரும்பி வந்திட்டிய , எதையோ தேடுராப்பல இருக்கு " என்று வந்த மலையானும் சாவி தொலைந்ததை அறிந்து என்னுடன் சேர்ந்து தேட ஒரு மணி நேர தேடலுக்கு பிறகு தண்ணீர் வரும் ஓடைக்குள் விழுந்து கிடந்த சாவியை போராடி கண்டுபிடித்தேன். அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து புறப்பட்டு கல்லூரிக்கு செல்ல அப்பாவின் கடைக்கு வந்தேன். நான் காலதாமதமாக வந்ததை அறிந்த அப்பா, நான் வேண்டும் என்றே காலதாமதம் செய்ததாக நினைத்து கோபத்துடன் .. 
" ஏல ! என்ன பண்ணிட்டு இருந்த இவ்வளவு நேரமா, கல்லூரிக்கு இவ்வளவு லேட்டா கிளம்புற" என்று என் பதிலை கூட எதிர்பார்க்காமல் நைச் என்று நடு மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து சீக்கிரம் போல " என்று விரட்டினார் . நான் வேகமாக சென்று கல்லாவில் இருந்து பஸ் காசை எடுத்துகிட்டு பஸ் ஸ்டாப்புக்கு ஓடினேன்.. 
, அப்பாவிடம் அடி வாங்குவது ஒன்றும் புதிதல்ல சேட்டைகள் பல செய்து அடிக்கடி வாங்கி இருக்கின்றேன் . அதனால் இந்த அடியும் அந்த நேரத்திற்கு வலித்தாலும் அதை நான் மறந்து போனேன் அப்பா தானே என்று.. 
     ஆனால் வாழை தோட்டத்தில் வேலை முடிந்து வந்த குன்னிமலையான் அண்ணன் . நான் சைக்கிள் சாவியை தொலைத்துவிட்டு தேடி அலைந்து பட்டபாட்டை அப்பாவிடம் கூறி இருக்கிறார் , அதை கேட்ட அப்பா அவசரப்பட்டு என்னை அடித்ததற்காக வருத்தப்பட்டிருக்கிறார்.        
         
          கல்லூரியில் என்றும் இல்லாத திருநாளாக எங்கள் வகுப்பு ஆசிரியர் அன்றைக்கு பார்த்து கல்லூரி முடியும் நேரத்தை தாண்டி ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த நான்கரை மணிக்கு கல்லூரி முடிந்தது ஐந்து மணிக்கெல்லாம் வீட்டிற்கு வரும் நான் அன்று ஆறு மணி ஆகியும் வராததால் . காலையில் அடித்ததற்காக வருத்தப்பட்டு பையன் எங்கேயும் போயிருப்பானோ என்று பயந்து . எங்கள் கடைக்கு பால் கொண்டுவரும் பால்வியாபாரியான முக்கானியை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கு பைசா கொடுத்து என்னை தேடி கல்லூரிக்கு அனுப்பி வைக்க . அவர்  ஆதித்தனார் கல்லூரிக்கு போவதற்காக திருச்செந்தூர் பஸ் ஏறி சென்ற அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நான் கடைக்கு வந்து சேர்ந்தேன். 
- "ஏன்டா இவ்வளவு லேட்டு " என்று அப்பா கேட்க. 
 -"எங்க சார் சிறப்பு வகுப்பு வைத்ததால் நேரம் ஆகிபோச்சி" என்று கூறினேன் . பிறகு கடையில் இருந்த அப்பாவின் நண்பர்களில் சிலர் என்னிடம் விசாரித்து விட்டு . அப்பா என்னை தேடி ஆள் அனுப்பிய விசயத்தை சொல்ல.. எனக்கு ஆச்சரியமாகவும் , அதை விட அப்பா என் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து பல மடங்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது . 
  அந்த சம்பவத்துக்கு பிறகு அப்பா என்ன நினைத்தாரோ, ஏது நினைத்தாரோ தெரியவில்லை அதன் பிறகு நான் அடிவாங்கும் அளவுக்கு தவறுகள் செய்த போதும் அவர் ஓரு முறை கூட என்னை அவர் அடித்ததில்லை.. 
என்றும் நினைவோடு கலந்திருக்கும் அப்பாவிற்கு என் தந்தையர் தின வாழ்த்துகள். 




Comments

  1. Super vicky அப்பாவின் நினைவுகளை மனதில் உறையவைத்து கண்களில் ஈரத்தைகசிய வைத்துவிட்டாய்விக்கி

    ReplyDelete
  2. அதுவரை காய்ந்து கிடக்கும் குளத்தில் நீர் வந்ததும் தாமரை செடியாகி துளிர்க்கும், மலராகும்! அதுபோல... சில நினைவுகள் அவ்வப்பொழுது வெளிப்படுகிறதோ?

    ReplyDelete
  3. மாமாவின் நினைவுகளை நினைவுபடுத்தியதொடு தனது இளமைப் பருவத்தை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்