" துன்பம் தரும் அழகான நினைவுகள் "

நான் விமானநிலையம் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த அந்த டாக்சி நான்  குறிப்பிட்ட நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக நாங்கள் இருந்த அந்த திருமண மண்டபத்தின் வாசலில்  வந்து நிற்கும் என நான் எதிர்பாக்கவில்லை. அவ்வாறு வந்தது சற்று ஏமாற்றமாகவும்,  வருத்தமாகவும் இருந்தது . இன்னும் ஒரு மணி நேரம் தாமதமாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என தோன்றியது . அது வரை உறவுகளுடன் மகிழ்ச்சியாக இருந்த எனக்குள் ஏதோ ஒரு வகையான இறுக்கம் படர்ந்து என் சீரான சுவாசத்தை தடுக்க கண்களில் நீர் முட்டியது . உறவினர்களின் முன் என் பலவீனத்தை வெளிகாட்ட மனம் இல்லாமல் . கண்ணில் படர்ந்த நீர் வெளியே வரும் முன்பாக இமைகளால் அணை போட்டு மூச்சை ஒரு முறை ஆழ்ந்து இழுத்து விட்டு  என்னை ஆசுவாசப்படுத்தி கொண்டேன். அந்த பெரிய மண்டபத்தின் குளிரூட்டிகள் அணைக்கப்பட்டதால்,  வெளியில் வாட்டி வதைத்த சென்னை வெயிலின் தாக்கம் மண்டபத்திற்குள் பரவ , வெக்கை தாங்க முடியாமல்,  கோழியின் இறக்கைக்குள் பாதுகாப்பை நாடும் கோழி குஞ்சுகளை போல ஆங்காங்கே சுழன்று கொண்டு இருந்த மின்விசிறியின் இறக்கையின் கீழ் குழுமியிருந்தனர் அம்மா, பெரியம்மா , பெரியப்பா , சித்தி , சித்தப்பா , அத்தை ,மாமா , அக்கா , அண்ணி , அண்ணன் , தங்கை,தம்பிகள் , நண்பர்கள் என  உறவினர் கூட்டத்தினர் . அனைவரிடமும் சென்று விடை பெற்றுக்கொண்டு  என் மகளை தேட , அங்கே  மண்டபத்தின் ஓரமாக வெக்கையை பொருட்படுத்தாமல்   காலியான சேர்களை கொண்டு டென்னிஸ் கோர்ட் போல வடிவமைத்து தன் நண்பர்களை இரண்டு குழுக்களாக பிரித்து , பாட்டியின் கைக்குட்டையை பந்து போல உருட்டி அங்கும் இங்குமாக எறிந்து , பிடித்து  விளையாடிக்கொண்டு இருந்தாள் அவள். நான் விடுமுறையில் ஊருக்கு வந்த நாள் முதல் அவர்களுடன் ஒன்றாக கழித்த  நிமிடங்கள் எல்லாம் எண்ணத்தில் சுழன்றது. 
 விடுமுறை நாட்களில் பத்து மணி வரை தூங்குபவர்களை சூரியோதயம் பார்க்க போகலாம் என்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுப்பி காக்கைகள் கூட கரையாத அந்த நேரத்தில் மணப்பாடு மணல் மேட்டில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் சென்று அமர்ந்து அலை கடலை ரசித்துக்கொண்டே காத்திருந்து சூரியோதயம் பார்த்து விட்டு ஆழமற்ற அலைகள் குறைவான அந்த அழகிய கடலில் குளித்தது .
- பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தது.. 
- மறைந்து போன அத்தை , மாமாவின் நினைவுகளுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செய்தது. 
 - தினமும் காலையில் முழித்தவுடன் பைக்கில் சென்று பசுமையான பனை ஓலையில் பட்டை பிடித்து சுத்தமான பதனீரை வயிறுமுட்ட குடித்தது ...  
- தூத்தூக்குடியின் சிறந்த உணவு வகைகளை தேடி தேடி சென்று சுவைத்தது..... 
- டிவி ரிமோட்டிற்காக என் மகளுடன் தலையணை சண்டை போட்டது ..    
- குலதெய்வம் கோவிலுக்கு தம்பியுடன் சென்று பொங்கல் வைத்தது ... 
- அக்கா மகளின் புனித நீராட்டு விழாவில் முறைமாமன் சடங்கு செய்தது ... 
- மோட்டார் சைக்கிளில் என் மகளுடன் ஊர்கோளம் போனது . 
- ஊரில் அண்ணன் மகள் புனித நீராட்டு விழாவிற்கு ஊர் முழுவதும் வீடு வீடாக சென்று நண்பர்களை சந்தித்து பத்திரிக்கை வைத்தது... 
- பனங்கள்ளை சுவைத்து பார்க்க ஊரில் இருந்த பனங்காடுகளை எல்லாம் சுற்றி திரிந்தது. 
- சென்னையில் அண்ணன் மகன் திருமணத்தில் கலந்து கொண்டு எண்ணெய் காசு கேட்டு முரண்டு பிடித்தது . 
என அழகான கனவு போல கலையாத சுகமான நினைவுகளில் சுழன்றபடி என் மகளை அழைத்தேன். உடன் விளையாடும் தன் நண்பர்களை விட்டுவிட்டு என்னிடம் ஓடி வந்தவளின் முகம் நன்கு வியர்த்து சிவந்து இருந்தது . வந்தவள் நேராக வந்து என்னை அணைத்து கொண்டு அவள் முகத்தில் வழிந்த வியர்வையை என் சட்டையில் துடைத்தவள் ஏன் என்னை அழைத்திர்கள் என்பது போல் என்னை பார்க்க. 
- அப்பா ஊருக்கு போயிட்டு வரேன்.  என்றவுடன் உதடுகளில் இறுக்கம் காட்டி சினுங்கி கொண்டே என்னை அவள் இறுக்கி அணைக்க ... அந்த ஒரு கணம் நான் இந்த உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக்கொண்டேன். அவள் அழுது நான் போலியாக வெளிக்காட்டும்  தைரியத்தை உடைத்து விடக்கூடாது என்று .. அவ்வாறே நான் வேண்டியது பலித்தது ... 
பின்பு என் கண்களை உற்று நோக்கியவள் . இரு கைகளையும் நீட்டி என்னை தூக்குப்பா என்க ... அவளை தூக்கி கொண்டே காரை நோக்கி நடந்தேன்.. என்னவள் பின் தொடர காரின் அருகே வந்ததும் , அவளை இறக்கி விட்டு விட்டு அவர்களின் கண்களை பார்க்கும் தைரியம் இல்லாமல் தலையை குனிந்தவாறே அவர்களை நோக்கி கையை அசைத்து விட்டு . காரில் ஏறி அமர்ந்ததும்  டிரைவரின் கட்டுப்பாட்டில் கார் நகர்ந்து செல்ல . நானோ  கட்டுப்பாட்டை இழந்து கண்களில் நீர் வழிய விமானநிலையம் நோக்கி தனியாக அழகான நினைவுகள் தந்த வலியை சுமந்து சென்று கொண்டிருந்தேன்....
அழகான நினைவுகள் கூட துன்பம் தரும் அவற்றை விட்டு நாம் பிரிய நேரும் போது.. .
 சொந்த ஊரையும் , குடும்பத்தையும் விட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களின் நிலமை இது தான் . 
- விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍

Comments

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்