பொய்க்காத பாசம் !
அந்த வருடம் வான் பொய்த்ததால் , நீர்நிலைகள் வறண்டு , நிலம் வெடித்து போனது. எங்கள் தோட்டத்தில் வாழைகள் எல்லாம் வாடி வதங்கும் நிலை . ஆழ்துளை கிணற்றில் இருந்து பம்பு செட் மூலமாக வாழை தோட்டத்தின் பட்டங்களில் , எவ்வளவு நீரை இறைத்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போலானது. வளர்ந்து விட்ட வாழைகளை வாட விட மனம் இல்லாமல் .. டீசல் வாங்கி, வாங்கி பம்பு செட்டுக்கு ஊற்றி, ஊற்றுநீரை இறைத்து கொட்டி கை காசு கரைந்தது தான் மிச்சம் , நொய்ந்து போன வாழையில் ஊட்டம் இல்லை. வாழைதோட்ட காண்களில் நீர் தேங்காமல் வாழை செழிப்பாக வளரப்போவது சாத்தியமில்லை என்றானது.. ஆத்தூர் வெற்றிலை விவசாயிகள் மற்றும் வாழை விவசாயிகள் சங்கங்கள் மூலமாக அரசாங்கத்தை வேண்ட பாபநாசம் , மணிமுத்தாறு அணைகளில் இருந்து சிறிது தண்ணிரை திறந்து விட்டது அரசு . திருவைகுண்டம் அணையில் இருந்து தென்கால்வாய் வழியாக பாய்ந்து வந்த தண்ணீர். அதுவரை வறண்டு காய்ந்து இருந்த வாய்காலில் விழுந்துகிடந்த மரத்தின் இலை , கிளைகளை எல்லாம் சேர்த்து இழுந்து வந்து கொண்டுடிருந்தது. கடையில் வியாபாரம்...