கவிழ்ந்த பயணமும் கலையாத நினைவுகளும்.

 அம்மா சமையல் அறையில் நெய் காய்ச்சி கொண்டு இருந்தார் . தினமும் மோர் கடைந்து சிறிது , சிறிதாக சேர்த்து வைத்த வெண்ணையை உருக்கி கொதிக்க வைத்து பொன் நிறத்தில் பொங்கி வரும் சமயம் இளம் முருங்கை இலையை உருவி போட்டதும் .பட்.. பட்.. என்ற சத்தத்துடன் முருங்கை இலை முருகியதும் அடுப்பை அணைத்து அந்த பாத்திரத்தை கொண்டு வந்து ஹாலின் நடுவில் நாற்காலியில் வைத்து மின்விசிறியை வேகமாக சூழலவிட்டு நெய்யை குளிர வைத்துவிட்டு..

 "விக்னேஷ் என்ன பண்ணிட்டு இருக்க. மணி எட்டு ஆச்சு . "  என்றார் .
உள்ளறையில் எனக்கு பிடித்த இளம் நீலநிற சட்டையை அயன்பண்ணிக்கிட்டே ,
"இதோ இப்போ குளிச்சிட்டு வந்திடறேன்....
என்று வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றை நோக்கி ஓடினேன் அந்த முன்னிரவு நேரத்தில் ..
        இதோ குளித்து முடித்து கிளம்பியாகி விட்டது . அப்பா தந்த பணத்தை பாக்கெட்டில் பத்திரபடுத்திவிட்டு  வேகவேகமாக கிளம்பிய  என்னை .
"ஏல ! சாமி கும்பிட்டியா  ? என அம்மா கேட்க .அமைதியாக  முழித்து கொண்டு நின்ற என்னை
"போ போய் சாமிகும்பிட்டு விபூதி பூசிகிட்டு போ ! 
என அம்மா அதட்ட . ஓடிச்சென்று சாமி படத்தின் முன்பு நின்று கும்பிட்டுவிட்டு கிண்ணத்தில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் சிறிதாக பூசிவிட்டு.. வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்து கொண்டு தெற்கு ஆத்தூர் வந்தேன் .சைக்கிளை எங்க கடை முன்னால் நிறுத்திவிட்டு . பேருந்து நிறுத்தத்திற்கு வரும் போது மணி  இரவு ஒன்பதரை ஆகி இருந்தது . அங்கு பேருந்து நிலையத்தில் நின்ற ஆத்தூரை சேர்ந்த நண்பர்களுடன் பேசிகொண்டு இருக்கும் போதே தூத்தூக்குடி செல்லும்  பேருந்துவர ஏறி பத்து மணி அளவில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இறங்கி
அங்கிருந்த டீக்கடையில் சூடான தேநீரை அருந்தினேன். குளிரும் , வெம்மையும் , புழுதியும் குறைந்த பின்னிரவு தொடங்கும் நேரத்தில் அந்த  தேநீர் மனதுக்கு இதமாக இருந்தது ....

             முதன் முறையாக தனியாக தூத்துக்குடி நகரத்தை தாண்டி பயணப்பட போகும் முதல் பயணம். மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்டில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைகழக கல்லூரியில் இளங்கலை விடுதி மேலாண்மை அறிவியல் படிப்பதற்கு விண்ணப்பித்திருந்த எனக்கு கல்லூரியில் இருந்து எந்த பதிலும்  வரவில்லை . இந்நிலையில் பழனியில் இருக்கும்  சித்தப்பா மதுரையில் அவருக்கு தெரிந்த அரசியல் தலைவரை சந்திப்பதற்காக நாளை மதுரைக்கு வருவதாக இருந்தது . அப்படியே தனக்கு தெரிந்த நண்பர் மூலம் கல்லூரில் எனது விண்ணப்பத்தை பற்றி அறிந்து கொள்ளலாம் என்றும் கூறி என்னை மதுரைக்கு வர சொன்னார் . ஆனால் அம்மாவோ என்னை இரவே கிளம்பி பழனிக்கு போகச்சொன்னார். எனது சித்தி அம்மாவிடம் கேட்டிருந்த நெய்யை கொண்டு போய் அவர்களிடம் கொடுத்து விட்டு அடுத்த நாள் காலையில் சித்தப்பாவுடன் சேர்ந்து பழனியில் இருந்து  மதுரை செல்லுமாறு கூறினார்...  
                   
இதோ ஒரு அரசு பேருந்து மதுரைக்கு புறப்படுகின்றது . ஓடிச்சென்று முன்பக்க படிக்கட்டில் ஏறி  ஆண்கள் வரிசையில் இரண்டாவது இருக்கையில் அமர்ந்தேன் . இரவு நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது . குளிர்ந்த காற்று சிலுசிலு என வீச தனது முகப்பு விளக்கின் ஒளியில் இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு மிதமான வேகத்தில் மதுரையை நோக்கி சென்றது பேருந்து. பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் அயர்ந்து தூங்கி போனேன் . வழியில் பந்தல்குடி, எட்டையபுரம் , அருப்புக்கோட்டை என எங்கேயும் ஆட்கள் ஏறவில்லை பேருந்தில் மிக குறைவான ஆட்கள் தான் இருந்தனர் . மணி பனிரெண்டை தாண்டியது நானும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தேன் . பஸ் காரியாபட்டியை வந்தடைந்தது . அங்கு  பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஏறினார்கள் . கண்டக்டர் அவர்களிடம் பேசுவது காதில் விழுந்தது . ஒரு சிறுவனுக்கு அரை டிக்கெட் எடுக்குமாறு வாக்குவாதம் செய்து கொண்டு இருந்தார். அவர்கள் பேசியது காதில் விழுந்தாலும் முழித்துபார்க்க கூட மனம் விரும்பவில்லை . அவ்வளவு சுகமாக தூங்கி கொண்டிருந்தேன்.  மணி இரவு ஒன்றை தாண்டியது .. பின்னால் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தவர்களும் தூங்கிவிட்டார்கள் . பேருந்து மதுரை விமான நிலையம் அருகில் சென்று கொண்டு இருந்த போது . தடதடவென ஏதோ மரத்தின் கிளைகளின் மீது வேகமா உரசுவது போல சத்தம் கேட்டது என் தூக்கம் முழுவதுமாக கலைவதற்குள் டமார் என்று பெரும் சத்தம் . அதை தொடர்ந்து சகலமும் சில நொடி அமைதியாக பேருந்தின் ரேடியேட்டரில் இருந்து  சிந்திய தண்ணீர் சூடான எஞ்சினில் பட்டு ஸ்ஸ்ஸ்ஸ்... என்ற சத்தத்துடன் மெல்லிய புகை பேருந்துக்குள் பர என்ன நடந்தது என்பதை  உணர்வதற்குள் அய்யோ.. அம்மா என பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கத்தும் சத்தம் என்னை சுற்றிலும் பரவி இருந்த அடர்ந்த இருட்டுக்குள் ஒலித்தது .  பேருந்திற்கு எதோ நடந்திருக்கின்றது என உணர்ந்த உடனே பேருந்தைவிட்டு  வெளியேற நினைத்து . அரை தூக்கத்திலேயே இருட்டுக்குள் வாசலை தேடி முன்னோக்கி ஓடுகின்றேன். ஓடிவந்து நான் நின்ற இடம் பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி .அந்த கண்ணாடி வழியாக உள்ளே வந்த மெல்லிய வெளிச்சத்தில் நான் நின்ற இடம் மங்கலாக புலப்பட்டது . என் கை அருகில் பேருந்தின் ஸ்டியரிங்.  அப்போது தான் தூக்கம் முழுமையாக கலைந்து பேருந்து கவிழ்ந்து கிடப்பதை உணரமுடிந்தது .பேருந்தைவிட்டு  எப்படி  வெளியேறுவது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்க்கின்றேன் . எனக்கு பின்புறம் தலை மேல் ஓருவர் கம்பியை பிடித்து வெளியேறிக்கொண்டு இருந்தார் . அது ஓரு ஜன்னலாக இருக்க கூடும் என்று நினைத்து நானும் அவர் சென்ற பாதையில் செல்லலாம் என்று அதை நெருங்கியதும்  தான் தெரிந்தது என் தலைக்கு மேல் இருப்பது  பஸ்ஸின்  படிக்கட்டு என்று . மேலே ஏறி வந்து பார்த்தால் சிறிய குன்றின் மேல் நிற்பது போல இருந்து . தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மேலிருந்து  குதித்ததும் அதிர்ந்து போனேன் . என்  காலுக்கு அருகில் உடலின் மேல் பாகம் மட்டும் தெரிய உடல் முழுவதும் மண்ணுக்குள் முழுவதும் புதைந்த நிலையில் இருந்தது பஸ் டிரைவரின் உடல் .. மனம் மரத்து போய் பேருந்தின் அருகே நிற்க பிடிக்காமல் சற்று தள்ளி நெடுஞ்சாலையின் ஓரத்தில் சென்று அமர்ந்தேன்.ஏனோ என்னையும் மீறி கண்களில் நீர் பெருகி வந்தது . எனக்கு எந்த காயமும் இல்லை.  ஆனால் என்னுடன் பயணம் செய்த பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்டியது . அதில் பலர் மதுரை அருகே உள்ள காரியாபட்டியில் ஏறியவர்கள் .
     விபத்து நடந்த சில நிமிடங்களில் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு போலிஸ் வாகனம் வந்துவிட்டது ஆச்சர்யமாக இருந்தது . பிறகு தான் தெரிந்தது . அன்று மதுரை விமானநிலையத்திற்கு பிரதமர் வாஜ்பாய் வருவதால் அதற்கு பாதுகாப்புக்கு நின்றவர்கள்  சத்தம்கேட்டு வந்திருக்கின்றார்கள்  . பலத்த காயம்பட்டவர்களை ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் . பின்பு நானும் சிலரும்  பஸ்ஸின் முன்பக்க கண்ணாகளை உடைத்து உள்ளே நுழைந்து. பயணம் செய்தவர்களின் உடமைகளை வெளியே எடுத்து வந்தோம்.  என்னுடைய பையையும் தேடி கண்டுபிடித்தேன்.  ஆனால் அருகில் வைத்து இருந்த நெய் பாட்டில் எங்கே போனது என்று தெரியவில்லை .
         போலிஸ்காரர் ஒருவர் என்னையும் மற்றொருவரையும் ஒரு லாரியில் மதுரைக்கு ஏற்றிவிட்டார். லாரி ஓட்டுனர் எங்களை மதுரை தெற்குவாசலில் இறக்கிவிட அங்கிருந்து பஸ் பிடித்து ஆரப்பாளையம் வந்து சேர்வதற்குள் மணி நான்கை தொட்டது. ஆரப்பாளையத்தில் இருந்து பழனி சித்தப்பாவிற்கு போன் செய்து நடந்ததை கூறி இனி நான் பழனிக்கு வந்து திரும்புவது கடினம் என்று கூறி அவர்களை நான் மதுரை ஆரப்பாளையத்தில் சந்திப்பதாக கூறி காத்திருக்களானேன். பழக்கம் இல்லாத ஊர் , பழக்கம் இல்லாத மக்கள், யாரையும் தெரியாது , என்ன செய்வது என்று தெரியவில்லை. விடுதியில் தங்கும் அளவு கையில் பணமும் இல்லை . அந்த  இரவு நேரத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை  எவ்வளவு நேரம் தான் சுற்றி வருவது, எதையும் வேடிக்கை பார்க்கும் மனநிலையில் நானும் இல்லை . மனம் வெறுத்து கிடந்தது .உட்காருவதற்க்கு கூட சரியான இருக்கைகள் இல்லை. மன அயர்ச்சியும் , உடல் அலுப்பும் ஒன்று சேர தூக்கம் வேறு கண்ணை கட்டுகிறது .எத்தனை தேநீர் வாங்கி அருந்தினாலும் தூக்கம் என்னை விடுவதாக இல்லை . என்ன செய்வது என யோசித்து ஒரு முடிவெடுத்து அங்கு வந்த நகரப்பேருந்து ஒன்றில் ஏறி அந்த பேருந்து போகும் இடத்திற்கு ஒரு பயணச்சீட்டை எடுத்து பஸ்ஸில் ஏறி தூங்க ஆரம்பித்தேன் . பின்பு பேருந்து திரும்பி வரும்போது அதே பேருந்தில் திரும்பி ஆரப்பாளையம் வந்தேன் . இவ்வாறே அன்றைய பொழுது நன்கு புலரும் வரை பஸ்ஸிலேயே சுற்றி கொண்டு இருந்தேன் .. சித்தப்பா வந்து வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது பஸ் கவிழ்ந்த இடத்தை எட்டிப்பாத்தேன். அங்கே சிலரின் கனவுகள் உடைந்ததின் அடையாளமாக சில கண்ணாடி துண்டுகள் மட்டும் சிதறி கிடந்தன..
          வீட்டுக்கு வந்ததும் அம்மா என்னிடம் ஏன்டா இப்படி நெய் பாட்டிலை தொலைத்து விட்டு வந்திறிக்க அது எங்க போயிருக்கும் பஸ்ஸுக்குள்ள தான விழுந்திருக்கும் . நீ நல்லா தேடி பாத்தியா என்றார் . விபத்தின் கோரத்தன்மை தெரியாமல் . 

விக்கி இராஜேந்திரன் ✍✍✍






Comments

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்