ஓலை குடிசை
காலனிய ஆட்சியின் தொடக்கப் பகுதியில் தமிழ்நாட்டில் 90 விழுக்காடு மக்கள் பனை, தென்னை , புல்தரைகள் வேய்ந்த கூரை வீடுகளில் தான் வாழ்ந்தனர் . இவ்வீடுகளின் சுவர்கள் குடிசையாக இருந்தால் செங்கல் இல்லாத மண்சுவர்களாகவும் ,சற்றே பெரிய இரண்டு அறை வீடுகள் சுடப்படாத செங்கல் சுவர்களோடும், அதைவிடப் பெரிய வீடுகள் சுட்ட செங்கல்லால் கட்டப்பட்டவையாகவும் அமைந்திருந்தன. நான் பிறந்து வளர்ந்தது பனை ஓலையால் ஆன கூரையும், செங்கலும், களிமண்ணை குழைத்து கட்டப்பட்ட அந்த மூன்று அறை மண்மாளிகையில் தான் . ஓன்று அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மழைக்காலம் வருவதற்கு முன்பு பழைய கூரையை மாற்றி புதிய கூரை வேய்வதே அவ்வளவு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருக்கும் . வடக்கு மரந்தலை மாடசாமி கோவிலுக்கு அருகில் எங்களுக்கு ஒரு பனங்காடு இருந்தது . அதில் பூமியின் கற்பகதரு என அழைக்கப்படும் பனைமரங்கள் பல இருந்தன . அந்த பனைமரத்திலிருந்து ஓலைகளை வெட்டி இரண்டு நாட்கள் வாடவிட்டு. பின்பு அவற்றை நீண்ட மயில் தோகை போல நீட்டுவாக்கில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து பெரியகல்லை அதன் மீது வைத்து விட்டால் . இரண்டு நாட்களில் கைஇழுவை வண்டியில் பாரங்களை வைத்து இழுத்து , இழுத்து ஓய்ந்து போன வரியனின் ஒட்டி போன வயிறு போல அமுங்கிபோய்விடும் பனை ஓலை . அவற்றை எடுத்து வந்து வட்டமாக அடுக்கி ஓலை நொறுங்காமல் இருப்பதற்காக அவற்றின் மேல் தண்ணிரை ஊற்றி நனைய வைப்போம் . நன்றாக செதுக்கிய வைரம் பாய்ந்த பனை மரத்தை கொண்டு உத்திரம் அமைத்து , எங்கள் பகுதி வெற்றிலை கொடிக்காலில் நன்கு வளர்ந்த அவுத்தி மரங்களை பல நாட்கள் தண்ணீரில் உறவைத்து , அவற்றின் தோலை உரித்து , வெயிலில் நன்கு காயவைத்த உறுதியான அவுத்தி மரக்கம்புகளை ஊடுகம்பாக வைத்து பனை நாரால் இறுக்கமாக கட்டி அதன்மேல் நனைந்து இலகுவான பனை ஓலைகளை அழகாக அடுக்கி ஓலையை தைக்கும் பெரிய கோணி ஊசி போன்ற ஊசியின் கண்பகுதியில் பனைநாரை நுழைத்து அவற்றை வைத்து தைத்து ஓலையை கம்புடன் கட்டி விடுவார்கள். குடிசையின் மோடு பகுதியில் மட்டும் மட்டையுடன் கூடிய ஓலைகளை அடுக்கி வைத்து அதன் மேல் தாம்பு கயிற்றால் எந்த காற்றிலும் ஓலை பறக்காதவாறு குறுக்கு நெடுக்காக இறுககட்டி தேவையில்லாத ஓலைகளின் நீட்சிகளை பண்ணைஅரிவாள் கொண்டு அறுத்து விட்டால் . புதிய கூரையுடன் வீடு ரெடியாகிவிடும் அந்த சிறிய வயதில் எங்களுக்கு பனை ஓலையையும் , பனை நாரையும் தண்ணீரில் நனைத்து எடுத்து கொடுப்பதுதான் வேலை .சிறு பொம்மை வீடு கட்டினாலே மகிழும் வயது அது . நாங்கள் வசிக்கும் வீட்டை நாங்களே கட்டும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நாங்க கட்டி வசித்து வந்த அந்த மண்மாளிகை. அதன் அருகே உள்ள இடத்தில் அப்பா கல் வைத்து காரை வீடு கட்டி அங்கு நாங்கள் குடிபெயர்ந்த பிறகு . மன்னன் இல்லாத மாளிகை போல களையிழந்து போய் நாங்கள் வளர்த்த ஆடுகளுக்கும் , கோழிகளுக்கும் கொட்டகையாய். எங்கள் விளையாட்டு கூடமாய், கிரைண்டர், மிக்சி போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது கொண்ட மேட்டுத்தன்மை மோகத்தின் காரணமாக ,ஒதுக்கப்பட்ட , நாகரிகம் அற்றவைகளாக கருதப்பட்ட கருங்கற்களால் ஆன மிகப்பெரிய ஆட்டுகலும் குழவியும், அம்மியும் அரைகல்லும் ,உரலும் உலக்கைகளும் அந்த பனை ஓலை குடிசைக்குள் தீண்டத்தகாத பொருட்களாக மூலைக்கு தள்ளப்பட்டன.
அன்று ஆயுதபூஜை ஊரில் அம்மன் கோவிலில் நடக்கும் பூஜையில் வீட்டில் அனைவரும் கலந்து கொண்டு இருந்தோம் . பூஜை முடிந்த பிறகு தான் அதை அனைவரும் கவனித்தார்கள். தூரத்தில் பெரும் வெளிச்சம் தெரிவதை . தீடீரென தீ ... தீ என கத்தி கொண்டு கூட்டம் முழுவதும் ஓட.. நானும் எங்கு என்று தெரியாமல் கூட்டத்துடன் சேர்ந்து ஓட . அங்கே கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது எங்கள் ஓலை குடிசை . தாத்தா ஓடிச்சென்று குடிசையின் பின்புறம் புளியமரத்தில் கட்டப்பட்டு பனைமர உயரத்திற்கு எழுந்த தீயின் அனல் கக்கும் சூவாலைகளை பார்த்து மிரண்டு கத்தி கொண்டு இருந்த பசுமாட்டை அவிழ்த்து விடுவதற்குள். குடிசை முழுவதும் தீ பற்றி எரிய ஆரம்பித்ததால் அருகில் யாராலும் நெருங்க முடியவிலை . ஆதலால் குடிசைக்குள் இருந்த ஆடு, கோழிகளை காப்பாற்ற முடியவில்லை. குடிசையின் வாசலில் இருந்த பெரிய மரக்கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் அவைகளாலும் வெளிவர முடியவில்லை அந்த தீயை அணைக்க எனது ஊர் மக்களையும் தாண்டி பக்கதில் உள்ள வடக்கு மரந்தலை , தெற்கு மரந்தலை ஊரில் இருந்தும் அப்பாவின் நண்பர்கள் பலரும் உதவிக்கு ஓடி வந்தனர். குடிசை வீட்டின் மிக அருகிலேயே இருந்த நீர் வற்றாத கிணற்றில் இருந்த நீீீரை பலர் ஒரு சேர வற்றும் வரை இறைத்து ஊத்திய பிறகு தான் தீ கட்டுக்குள் வந்தது . அதற்குள் வீட்டின் 90 % முழுவதுமாக எரிந்து முடிந்தது. அன்று இரவு முழுவதும் கறுகிய புகை வாடையும், வெப்பமும் அந்த வீடு முழுவதும் இருந்ததால் . விடியும் வரை யாரும் உள்ளே நுழையவில்லை .
மறுநாள் காலையில் சென்று பார்த்த போது வீட்டுக்குள்ளே புகையை சுவாசித்தால் வயிறு வீங்கிய ஆடுகளும் , கோழிகளும் பாதி எரிந்தநிலையில் கிடந்தன. ஒரு பழைய பாதி மணல் பாத்திரத்தில் மூக்கில் இறகை சொறுகியவைத்த படி முட்டைகளை அடைகாத்து கொண்டு இருந்த கோழி அந்த இடத்தை விட்டு நகராமல் முட்டைகளுடன் அப்படியே எரிந்து போய் இருந்தது . மற்றொரு பக்கத்தில் இரண்டு பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாத ஆட்டுக்கல் இரண்டாக பிளந்து கிடந்தது .
மக்கள் ஓவ்வொருவரும் மின்சார கசிவின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்றும் நெருப்பில் சூடான கல்லில் தண்ணீர் பட்டதால் ஆட்டுக்கல் வெடித்து இருக்கலாம் என்றும் உண்மை காரணம் தெரியாமல் பேசிக்கொண்டார்கள். சமுகத்தில் ஒருவரை ஒதுக்கிவைப்பது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா. அதிலும் உயிராக மதித்து வந்த ஒன்றை உயிரற்ற ஜடமாக நினைத்து ஓதுக்கினால் அதன் மனம் என்ன பாடுபடும் . அந்த மனநிலையில் தான் பற்றி எரிந்திருக்கின்றது அந்த ஓலை குடிசை. அதே காரணத்தில் தான் இதயம் வெடித்து இரண்டாக பிளவு பட்டு இறந்து போனது அந்த ஆட்டுகல் என யாரும் புரிந்து கொள்ளவில்லை...
விக்கி இராஜேந்திரன் ✍✍✍
👌
ReplyDelete