" மயக்கமென்ன "
சிமெண்ட் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின்னால் ஆன அந்த டீக்கடை தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தத்திற்கு எதிர்ப்புறம் இப்போது சிவந்தி ஆதித்தனார் கல்யாண மண்டபம் அமைந்து இருக்கும் இடத்தில் இருந்தது. தாத்தா காலத்தில் ஆரம்பித்த கடை அது . சுமார் 5000 சதுரடி பெரிதான கடையில் முன் பகுதியில் சிறிய பெட்டி கடையோடு இணைந்த டீ கடை இருந்த பகுதி தவிர்த்து பின்புறம் இருந்த காலி இடத்தில் , விவசாய வேலை பார்க்கும் தொழிலார்களின் மண்வெட்டி , கடப்பாரை , ஏர் கலப்பைகளும் . பொழுது சாயும் நேரத்தில் பஜாரில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளின் பொருட்களும் , ஆத்தூர் வெற்றிலையை நாடெங்கும் ஏற்றுமதி செய்யும் வெற்றிலை வியாபாரிகள் வெற்றிலையை பதமாக பார்சல் செய்வதற்கு தேவையான ஓலைபாய் , தாம்பு கயிறு போன்ற மூலப்பொருட்களும்
போட்டு வைத்து இருந்தனர் . அதன் பின் பகுதியில் மிகப்பெரிய முருங்கை மரமும் , அதில் சிவப்பும் பச்சையும் கலந்த நிறத்தில் பழுத்து தொங்கிய கோவை பழ கொடியும் படர்ந்து இருந்தது . முதலில் என் அக்கா பெயரில் இருந்த கடை சிறிய தீ விபத்தில் சேதம் அடைந்த பிறகு விக்னேஷ்வரா டீ ஸ்டால் என்று எனது பெயரில் மாற்றம் கண்டது ... விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அப்பா கூட கடைக்கு போயிடுவேன். ..அப்போதெல்லாம் இப்போது இருப்பது போல அந்த தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் வாகன நெரிசல் கிடையாது. ஆதலால் அப்பாவின் சைக்கிளில் அரை பெடல் போட்டு ஆத்தூர் வெற்றிலை சங்கம் இருக்கும் மேடான பகுதியில் இருந்து தாழ்வான பேருந்து நிறுத்தம் வரைக்கும் சைக்கிளில் அங்கும், இங்கும் ஓட்டிகிட்டு இருப்பது தான் என் பொழுது போக்கு..
எங்கள் கடைக்கு பின்னால் நாடார் சங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய காலி இடத்தில் இளைஞர்கள் பயன்படும் வகையில் ஒரு சிறிய உடற்பயிற்சி கூடமும் அதில் சிங்கிள் பார் , டபுள் பார் , ரிங்க் பார் மற்றும் சிறிதும் , பெரியதுமாக சிமெண்டில் கட்டப்பட்ட பெஞ்ச் பிரஸ் திண்டும் , ஐந்து , பத்து , ஐம்பது , நூறு கிலோ என வெயிட் லிப்ட்களும் , புல்லப்ஸ் கம்பிகள் மேலும் இரண்டு கர்லாகட்டைகளும் இருந்தன . சாயங்காலம் ஆகிவிட்டால் சுற்றுவட்டார இளைஞர்கள் பெரும்பான்மையானவர்கள் அங்கு உடற்பயிற்சி செய்ய வருவார்கள்.எங்க ஊர்ல இருந்தும் சில அண்ணன்கள் வருவார்கள் . உடற்பயிற்சியின் ஊடே நாட்டு நடப்பு, அரசியல் , சமுதாயம் , கல்வி , காதல் , திரைப்படங்கள் என அவர்களுக்குள் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள் . அவர்களை பார்த்து நானும் உடற்பயிற்சி செய்ய ஆசை பட்டு இருக்கின்றேன். ஆனால் அந்த சிறிய வயதில் அது எனக்கு உடற்பயிற்சிகளமாக இல்லாமல் விளையாட்டுகளமாக தான் இருந்தது . எந்த உடற்பயிற்சி கருவியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் என் இஷ்டத்துக்கு எதாவது பண்ணிகிட்டு இருப்பேன் . பெஞ்ச் பிரஸ் எடுக்கிற எடத்துல சறுக்குவதும் , டபுள் பாரில் காலை மாட்டிக்கொண்டு தலைகீழாக தொங்குவது .அங்கு இருந்த வேப்பமரத்தில் ஏறுவதும் இறங்குவதுமாக என் இஷ்டத்துக்கு விளையாடிக்கொண்டு இருந்தேன் .
அன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அப்பாவுடன் கடைக்கு வந்த நான் உடற்பயிற்சி திடலுக்கு போய் என் இஷ்டத்துக்கு விளையாடிக்கிட்டுடே ரிங்க் பார் பக்கம் போனேன். உயரமான கம்பிகளில் நான்கு ரிங்குகள் தடித்த இரும்பு சங்கிலியில் நான் எவ்வளவு குதித்து பார்த்தும் எட்டாத உயரத்தில் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருந்தன. நான் ரிங்க் தொங்கி கொண்டு இருந்த கம்பியின் பக்கவாட்டில் வழுக்கு மரம் ஏறுவது போல ஏறி எட்டி இழுத்து ஓரு ரிங்கை கைபற்றி அதில் ஆலமரத்தின் விழுதுகளை பிடித்து ஊஞசல் ஆடுவது போல் ஆட ஆரம்பித்தேன் . அருகில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்த ஒரு அண்ணன் என்னிடம் இப்படி விளையாடகூடாது. என்று கூறி என்னை தூக்கி அருகில் இருந்த மற்றொரு ரிங்கையும் பிடிக்க சொன்னார் . நான் பிடித்ததும் அவர் மெதுவாகத்தான் தள்ளிவிட்டார் . ஆனால் எனக்கோ அந்தரத்தில் பறப்பதுபோல் ஒர் உணர்வு . மூளைக்குள் கலைடோஸ்கோப்பில் உடைந்த கண்ணாடி தூண்டுகளை பார்ப்பதுபோல் விதவிதமான தோற்றங்கள் கிறுகிறு என சுழலுகின்றன . இரத்தம் தாறுமாறாக ஓட, பயத்தில் உடல் வேர்க்க , மேலே அந்தரத்தில் ஆடிக்கொண்டு இருந்த ரிங்கில் இருந்து என் கைவிரல்கள் என் கட்டுபாட்டை இழந்து ஒவ்வொன்றாக பிடியில் இருந்து விலகுகின்றன ஒன்று ... இரண்டு ... மூன்று இதோ இதோ என் கடைசிவிரலும் அதன் பிடியில் இருந்து விலகுகிறது.
யாரோ என் முகத்தில் தண்ணிரை தெளிப்பதை உணருகிறேன் .. மெதுவாக என் கண்ணை திறந்து பார்க்கிறேன். என்னை சுற்றிலும் நின்றவர்களின் முகத்தில் பதட்டம் நீங்கி மகிழ்ச்சி படர்கின்றது , தூரத்தில் அப்பா கையில் சோடா பாட்டிலுடன் டீ கடையில் இருந்து ஓடி வருவது தெரிகின்றது . அருகில் வந்து ஒன்னும் இல்லடா , ஒன்னும் இல்லடா என்று கூறியவாறு சோடாவை குடிக்க தருகின்றார். நான் சுற்றும் முற்றும் பார்த்து திரு திரு என முழிக்கிறேன்..
"என்னாச்சு ."
ரிங்கில் இருந்து சுயநினைவை இழந்து கீழே விழுந்து இருக்கின்றேன். விழுந்ததும் அங்கு இருந்த அண்ணகள் ஓடி வந்து பக்கதில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து என் மயக்கத்தை தெளியவைத்து இருக்கின்றனர். அனைத்தும் சில வினாடிகளில் நடந்து இருக்கின்றது .. நல்ல வேளையாக நான் விழுந்த இடத்தில் மண் அதிக இருந்ததால் அடி எதுவும் படவில்லை... இப்போதும் உயரத்தை கண்டால் சற்று பயம் தான் . இப்போது வரை என் மனைவி,மகளுக்கு தெரியாது . பொருட்காட்சியில் ஜெயணட் வீலில் ஏறச்சொல்லி அவர்கள் எவ்வளவு
கட்டாயப்படுத்தினாலும்
நான் ஏறாமல் டிமிக்கி கொடுத்ததிற்கான காரணம் ..
இப்போதும் டிவியில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை டிவியில் பார்க்கும் போதெல்லாம் சோடா பாட்டிலுடன் என்னை நோக்கி ஓடிவரும் அப்பா என்னுள் வந்து போகிறார்..
விக்கி இராஜேந்திரன் ✍✍
என்றென்னும் மறக்க முடியாதவை... அங்கு இருந்த தராசும் மிகப்பெரிய எடைக்கல்லும்....
ReplyDeleteமோர் விற்பனை... 30 காசுக்கு ஒரு பெரிய டம்ளர் நிறைய... தாத்தாவின் தயாரிப்பு...
அந்த உடற்பயிற்சிக்கூடத்தில் +2 முடித்தவுடன் இரண்டு மாதம் பயிர்ச்சி.. முக்கியமாக ஆட்டுக்கால் சூப் ....
ஆதித்தனாரில் படிக்க செல்லும் போது மாமா கொடுக்கும் பூரி....
உண்மை அண்ணா . அந்த தராசுல எறி எத்தனை முறை எடை பார்த்து இருப்போம் . சில நேரம் தோனும் அப்பாவும் , தாத்தாவும் இப்போது நம்ம கூட உயிருடன் இருந்தால் நல்லா இருக்கும் என்று .
Deleteநான் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பொழுது அப்போது உங்கள் கடையை பார்க்க நேரும் அப்போது எனக்கு பழைய நினைவுகள் பசுமையான நினைவுகள் தோன்றும் இப்போது நீங்கள் கூறியவுடன் மறுபடியும் அந்த நினைவுகள் என்னிடம் நிழலாடுகிறது
ReplyDelete