போதை "ஆ" சாமி

மாலை ஆறு மணிக்கு எல்லாம் தாமிரபரணி ஆற்றை நோக்கி வானத்தில் வெடி போட்டு , நையான்டி மேளம் முழங்க அம்மனுக்கு அபிஷேகம் பண்ண புனித நீர் எடுத்து வரகிளம்பினாங்க ஊர்ல இருக்கிற ஆண்களில் பெரும்பாலோனோர் . அப்போது எனக்கு ஒரு பதினைந்து வயசு இருக்கும் . அதற்கு முன்பு வரை ஊர்ல எல்லாரும் ஆத்துக்கு போகும் போது வீட்ல என்னை அங்கு போக அனுமதிப்பது இல்லை . இரவில் வெளிச்சம் இல்லாத ஆற்றங்கரையில் நான் தவறுதலாக ஆற்றுக்குள் இறங்கிவிட்டால் . நீச்சல் தெரிந்து இருந்தாலும் ஆழம் தெரியாத நீர் நிலைகளில் காலை விடுவது ஆபத்தானது . இதற்கு முன்பு இப்படி எத்தனையோ உயிர்கள் பலியாகி இருக்கின்றன . எனக்கு தண்ணீரில் கண்டம் இருப்பதாக கூறி என்னை பயமுறுத்தி இருந்தார் அம்மா . நான் அடிக்கடி வீட்டுக்கு தெரியாமல் வாய்காலுக்கு குளிக்க போவதால் என்னை  தடுப்பதற்காக கூட அம்மா அப்படி சொல்லி இருக்கலாம் என்று நினைக்கின்றேன். 
                              ஆனால் இந்த முறை என்னை ஆற்றுக்கு போக அனுமதித்தனர்.  முதல் முறை சாமி ஆடுவதை பார்ப்பதற்காக ஆசையுடன் சென்றேன் . நாங்கள் ஆற்றுக்கு போய் சேரும் போது வெளிச்சம் சுத்தமாக இல்லாமல் இருள் படர்ந்து விட்டது . இரண்டு பெட்ரோமாக்ஸ் லைட் உதவியுடன் தான் ஆற்றங்கரையை நாங்கள் அடைய முடிந்தது . அங்கு போனதும் கோவில் பூசாரி கும்பங்களை தயார் செய்ய, புனித நீர் எடுத்து செல்ல விரதம் இருந்தவர்கள் ஆற்றில் குளித்து புதிய வெண்மையான வேஷ்டியை அணிந்து விபூதி, சந்தனம் பூசி பக்தியுடன் வணங்க பூஜை நடந்தது . விரதம் இருந்தவர்களின் மேல் கடவுளின் அருள் வரவைப்பதற்காக நையாண்டி மேளங்களும் , நாதஸ்வரங்களும் , உருமி மேளங்களும் அம்மனையும் , பரிவார தெய்வங்களையும் அழைத்து ஒங்கி ஒலிக்க ஆரம்பித்தன . அந்த இசையின் அதிர்வில் நாம் ஆடாமல் இருக்கவேண்டும் என்று நினைத்து கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மை ஆடவைக்கும் அந்த இசையின் அதிர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து இருப்பதால் நம்மையும் மீறி நம் உடலின் தசைகள் தன்னிச்சையாக ஆடுவதை தவிர்க்க இயலாது ... மேளம் அடிக்க,அடிக்க  விரதம் இருந்தவர்களின் உடலில் இந்த ஆழி சூழ் உலகின் மூத்த குடியான தமிழ்குடியின் முதன்மை தெய்வமான நீலியின் உருவமான கொற்றவையின் அம்சமான அம்மனின் துள்ளளும் , ஆக்ரோஷமும் வெளிபட்டதை அப்போது தான் நான் முதன் முதலாக பார்தேன்..அந்த இருட்டுக்குள் என் உடலிலும் அந்த இசையின் அதிர்வலைகள் பரவ அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவர்களை விட்டு விலகி . அங்கே ஆற்றுப்பாலத்தில் நின்று கொண்டு இருந்த நண்பர்களை நோக்கி சென்றேன் . 
             அது காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் , பல வெள்ளத்தையும்,புயலையும் , இன்னும் எத்தனையோ இயற்கை இடர்பாடுகளையும் தாண்டி அரை நூற்றாண்டுகளை கடந்தும் அசராமல் நின்ற அந்த ஆற்றுப்பாலத்தில் பேருந்துகளும் , வாகனங்களும் வேகமாக செல்ல அதன் ஒரமாக இருந்த சிறிய தடுப்பில் நண்பர்களும் , சில அண்ணன்மார்களும் அமர்ந்து இருந்தனர் . நான் அவர்களை நோக்கி செல்ல , அங்கு இருந்த அண்ணன்களில் ஒருவர் கைகளை உயர்த்தியும் கால்களை நீட்டியும் , உடலை முறுக்கியும் நாக்கை பல்லால் கடித்து ஆஆஆஆ.... உஉஉ.. என்று கத்த ஆரம்பித்தார். பக்கத்தில் இருந்த நண்பர்கள் அவரை இருக்கி பிடிக்க நான் என்ன நடக்கிறது என தெரியாமல் விழித்துக்கொண்டு இருந்தேன். அப்போது அவர் நண்பர்களின் பிடியில் இருந்து விடுவித்து சாலையில் காலை  நீட்ட அவர் காலின் அருகில் ஒரு பேருந்தின் டயர் மிக நெருக்கமாக வந்தது . நண்பர்களில் ஒருவர் சட்டென்று காலை மடக்கி பிடித்து கொண்டார் இல்லை என்றால் அவரின் காலில் அந்த பேருந்தின் சக்கரம் ஏறி இருக்கும். இதை பார்த்ததும் என் மனம் பதபதைப்புக்கு உள்ளானது.  எனக்கு அவருக்குள் சாமியின் அருள் வந்துவிட்டதோ என்ற எண்ணம் தோன்றியது. அப்போது ஒரு அண்ணன் என்னிடம் தம்பி சீக்கிரமா கடைக்கு போய் ஒரு எலுமிச்சை பழம் வாங்கிட்டுவா என்றார் . நானும் எதுக்கு எலுமிச்சை என்று கேட்காமல் . வடக்கு ஆத்தூர் பஜாரை நோக்கி ஓடுறேன்..பஜாரில் நல்ல கூட்டம் யார் மேலேயும் இடிச்சிராம கவனமாக பார்த்து ஓடுரேன் . எண்ணங்களில் ஆற்றுபாலத்தில் சாமி ஆடிகிட்டு இருக்கிற அண்ணணை பற்றிய நினைவுகளுடனே..  அங்கு இருந்த ஒரு பழக்கடையை அடைந்து நல்ல பழுத்த , மஞ்சையும் சிறிது பச்சையும் கலந்த நிறத்தில், அடிபடாமல் , பச்சை காம்புடனும் வாடாமல் இருந்த நல்ல எழுமிச்சை பழமாக பார்த்து பார்த்து வாங்கிக்கொண்டேன்.  சீக்கிரம் இந்த பழத்தை  கொண்டு போகனும் என்ற எண்ணம் என்னை உந்தித்தள்ள மீண்டும் ஆற்றுப்பாலத்தை நோக்கி மேல் முச்சு, கீழ் முச்சு வாங்க இன்னும் வேகமாக ஓடினேன். அங்கு அந்த அண்ணன் இன்னும் திமிரி கொண்டு இருந்தார் . நான் எலுமிச்சை பழத்தை அருகில் இருந்த நண்பரிடம் கொடுக்க அவர் அதை தன் கைவிரல் நகத்தால் இரண்டாக கிழித்து திமிரி கொண்டு இருந்த அண்ணனின் வாயில் எலுமிச்சை சாற்றை பிழிந்து மீதம் இருந்ததை அவர் வாயில் வைத்து திணித்தார்.. நான் அப்படியே வைத்த கண் எடுக்காமல் என்ன நடக்கிறது என்று பார்த்து கொண்டு இருந்தேன் . திமிரிக்கொண்டு இருந்த அண்ணனின் உடல் எலுமிச்சை சாறு உள்ளே இறங்கியதும் மெதுவாக அடங்க ஆரம்பித்தது . என் மனதுக்குள் ஓகோ! தீடீர் என்று சாமி ஆடுபவர்களை இப்படித்தான் கண்ரோல் பண்ணனும் போல என்று நினைத்துக்கொண்டேன் . 
  சிறிது நேரத்தில் திமிரல் அடங்கி போன அண்ணனை அங்குஇருந்து கை தாங்கலாக அழைத்து வந்துஆற்றங்கரையில் ஓரத்தில் அமர வைத்தவிட்டு . நண்பர்களும் நானும் சில அண்ணன்களும் எங்களை விட்டு வெகு தூரம் சென்று விட்ட எங்கள் ஊர் மக்களை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தோம். நடந்து கொண்டே அருகில் வந்து கொண்டு இருந்த அண்ணனிடம் மெதுவாக கேட்டேன். 
 "அந்த அண்ணன் என்ன சாமியண்ணா ஆடினார்"  
என்று . அதற்கு அவர் 
" சாமியாடினானா ! யாரு அவனா ! அந்த நாயி கண்ரோல் இல்லாம குடிச்சுட்டு கண்டபடி கத்திட்டு இருந்தான் என்றார்"  .. 
எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது . " "அண்ணா அப்படின்னா நான் மூச்சிரைக்க ஓடிப்போய் வாங்கிட்டு வந்த அந்த எலுமிச்சை பழம் ?"  .
" அதுவா எலுமிச்சை பழம் மது போதையை தெளிய வைக்கும்டா" என்றாறே பார்க்கலாம். 
 ஆசை ஆசையாக சாமி ஆட்டத்தை பார்க்க வந்த என்னை ஒரு போதை ஆசாமியின் போதை ஆட்டத்துக்காக சாலையில் மூச்சிரைக்க ஒட வைச்சிட்டிங்கலேடா !  
என்று நினைத்த போது தலை சுற்றல் அதிகமாக, சற்றென்று அருகில் இருந்த பழக்கடைக்கு சென்று ஒரு எலுமிச்சை பழச்சாறு வாங்கி குடித்தேன். நான் தலைசுற்றி மயங்கி கீழே விழாமல் இருப்பதற்காக.... 

- விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍

Comments

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்