மறக்கமுடியாத பாடல்களும் ! அதை தொடர்புடைய நினைவுகளும் !

இசையில் மயங்காதவர் யாரும் இல்லை , திரையிசை பாடல்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவத்தை கொடுக்கிறது. சிலருக்கு தனிமையை கடப்பதற்கு , சிலருக்கு தனிமையை ரசிப்பதற்கு , சிலருக்கு மனதை உற்சாகமூட்டுவதற்கு , சிலருக்கு மனதை ஆற்றுவதற்கு, 
சிலருக்கு உடல் களைப்பு நீங்க , 
சிலருக்கு மனக்கவலைகளை மறக்க, 
சிலருக்கு மன அமைதியை கொடுக்க .
என உலகில் ஒவ்வொருவருக்கும் எதோ ஒரு வகையில் இசை பிடித்திருக்கும் . அதற்கு நானும் விதிவிலக்கில்லை. காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இந்த உலகின் ஒவ்வொரு தருணங்களையும் மெல்லிய இசையுடனே ரசிக்க பிடிக்கும் .அப்படி சில பாடல்கள் சிலரையும் அவர்கள் தொடர்புடைய நிகழ்வுகளையும் மறக்கமுடியாத நினைவுகளாக மாற்றி இருக்கிறது மனதில்  ... 
      அப்பா தீவிர சிவாஜி ரசிகர் . சிவாஜி நடித்த திரைப்பட பாடல்கள் அவருக்கு பிடித்தமானது. ஒரு முறை நான் செய்த சேட்டைக்கு அப்பாவிடம் அடிவாங்கி தேம்பி , தேம்பி அழுது கொண்டே இருந்தேன் . ஒரு சில நிமிடங்களில் அப்பா நான் அழுவதை தாங்காமல் மனம் இறங்கி என்னை சமாதான படுத்த முயன்று..   

" ஏன் பிறந்தாய் மகனே ! ஏன் பிறந்தாயோ! இல்லையோரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க , இங்கு வந்து ஏன் பிறந்தாயோ! ... 

என்று ராகத்தோடு பாடிக்கொண்டே தூக்கி கொஞ்சி சமாதானப்படுத்த முயன்றது . இன்றும் மனதில் பதிந்து  கிடைக்கின்றது. அப்பா மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருக்கும் நேரத்தில் எல்லாம் எதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டே இருப்பார் . 
               கோவில் கொடைவிழாவில்  எப்போதும் இளைஞர் சங்கம் சார்பாக நாடகம் இருக்கும் . அப்பாவும் அவரது நண்பர்களுடன் அதில் நடிப்பார்கள் . ஆனால் அப்பா நாடகத்தில் நடிப்பது அம்மாவுக்கு சற்றும் பிடிக்காது . ஏனென்றால் அதுக்கு இரண்டு காரணம்  இருக்கின்றது .  முதல் காரணம்  நாடகத்தில் நடிக்க மேக்கப் போட மீசையை எடுக்கனும் , மீசை இல்லாத அப்பாவை அம்மாவுக்கு பிடிக்காது . ஆனால் அப்பாவின் கல்யாண போட்டோவில் மேல் நோக்கி முறுக்கி விட்டு இருந்த அப்பாவின் முறுக்கு மீசை கல்யாணம் ஆன சில நாட்களில் காணாமல் போனது வேறு விஷயம் . இரண்டாவது காரணம் நாடகமாக இருந்தாலும் வேறு பெண்ணை தொட்டு நடிப்பது சுத்தமாக பிடிக்காது .  இருந்தாலும் அப்பா எப்படியோ அம்மாவை சமாதனப்படுத்தி நாடகத்தில்  நடித்தும் விடுவார் . சில வருடங்கள் பல காரணங்களால் நடக்காமல் இருந்த நாடகம் இளைஞர்களின் முயற்சியால்  தர்மராஜ் சார் இயக்க எனது ஊர் இளைஞர்களுடன் அப்பாவும் நடிக்க கோவில் கொடைக்கு நாடகம் அரங்கேற்றுவது என்று முடிவு செய்யப்பட்டது . அப்போது நான் மதுரையில் படித்து கொண்டு இருந்தேன் . வீட்டில் பூகம்பமே வெடித்தது அம்மா முடியவே முடியாது என்று மறுத்தார்கள் ... அப்பா எனக்கு போன் செய்து அம்மாவிடம் பேசி நடிக்க அனுமதி வாங்கி தருமாறு கேட்க நான் அம்மாவிடம் பேசி அம்மாவை சமாதனப்படுத்தி , இது தான் கடைசி முறை என்ற நிபந்தனையுடன் அப்பாவிற்கு அனுமதியும் கிடைத்தது.  நாடகம் நடக்கும் நாள் அன்று நான் நண்பர்களுடன் கீழே உட்காந்து நாடகத்தை பார்க்க மேடையில்  பெண் நடிகை ஒருவர் அப்பாவை துரத்தி துரத்தி.. 

"அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா, ஏன்னா! 
அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா"
 
என பாட்டு பாடி ஆட நண்பர்கள் என்னை பார்த்து . ஏண்டா விக்கி உங்க அப்பாவை பாரு எவ்வளவு அழகாக ரொமன்ஸ் பண்ணிகிட்டு இருக்காரு நீயும் இருக்கியே!  என கிண்டல் செய்ய நானோ அசட்டு சிரிப்புடன் அப்பாவை ரசித்துகொண்டு இருந்தேன் .  
 
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் படித்தபோது கல்விசுற்றுலாவாக நண்பர்களுடனும் வகுப்பு பேராசிரியருடனும்,  ஒரு வேனில் குற்றாலத்திற்கு சென்று பட்டுப்புழு வளர்ப்பது பற்றியும் , பட்டு நூல் தயாரிப்பது பற்றியும் அறிந்துகொண்டு . குற்றால அருவியில் குளித்து விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தோம் . எங்கள் கல்வி ஆலோசகரும் ,வகுப்பு பேராசிரியருமான லட்சுமணன் சார் அவர்கள் வேனில் தான் கொண்டு வந்த பழைய பாடல்களை ஒலிபரப்ப குற்றால அருவியில் குளித்த அலுப்பில் நாங்கள் நன்றாக தூங்கி கொண்டு இருந்தோம். ஒரு முப்பது நிமிடங்கள் ஆகி இருக்கும் 

"நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா – வெறும்
தூபத்தின் உன் இதயம் மயங்காதையா
துதிபாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா – வெறும்
தூபத்தின் உன் இதயம் மயங்காதையா

 என்று வரும் அந்த பாடலில் கடைசில் வரும் 
தக்க ததிங்கினதோம் மாப்ளே...
ஸநிப மக ஸகம மாமா
தும்தக தரிகிட தகதக தரிகிட மாப்ளே..
 நீ..  மாமா ..    
நீ .. மாப்ளே.
என ஒலி பெருக்கி அலர நண்பர்கள் அனைவரும் அரக்க பரக்க எழுந்து பார்த்தால்... 
நீ மாமா...
நீ மாப்ளே...
நீ மாமா...
நீ மாப்ளே...
மாமா...
மாப்ளே...
மாமா...
மாப்ளே...
மாமா...
மாப்ளே...
மாமா...
மாப்ளே...
   என போய் கொண்டே இருந்தது அந்த பாடல் .  நண்பர்கள் அனைவருக்கும் தூக்கம் கலைந்து நாங்களும் மாமா.. மாப்ளே .. ஒருவரை ,ஒருவரை பார்த்து கத்த எங்கள் கல்வி சுற்றுலாவையே சுவாரஸ்யமாக ஆக்கியது அந்த பாடல் ...  
                  
               என் நண்பன் அருண் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். நாங்கள் அனைவரும் மூன்று மாதங்கள் பாணடிச்சேரியில் தொழிற்பயிற்சிக்காக ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றிருந்தோம். ஒரு நாள் விடுமுறை அன்று அவன் காதலையும்,  பிரச்சினைகளையும் என்னிடம் புலம்பிக்கொண்டிருந்தவன் . என் தோளில் தலை சாய்ந்து கொண்டு மெதுவாக பாட ஆரம்பித்தான் ..

"பொன் வானில் மீனுறங்க
பூந்தோப்பில் தேனுறங்க
அன்பே உன் ஞாபகத்தில்
எங்கே போய் நானுறங்க
கண்ணோடு தூக்கம் ஏது
நீ இல்லையேல்
கண்ணீரில் நீந்துகின்றேன்
தேன் முல்லையே
புது தேன் முல்லையே.. 

அவனது  குரலும் , அதில் உறைந்து இருந்த சோகமும் .. என்னை சிலிர்க்க வைத்தது. ஏனோ கண்ணீர் துளிர்த்து என் கண்களில் இன்றுவரை  மறக்கமுடியாத பாடலும் , குரலும் அது... 
           என் கல்யாணத்துக்கு பெண் பார்த்து கொண்டு இருந்த போது .ஒரு நாள் என்னவளின் ( மனைவி ) போட்டோவை அம்மா என்னிடம் அனுப்பி விட்டு .அவர்களுக்கு பிடித்திருப்பதாகவும் என்னை பதில் கூறும் படியும் கூறி இருந்தார் .  வீட்டில் அமர்ந்து போட்டோவை பார்த்த கொண்டிருந்த நேரம் ,  எங்கோ ஒரு கல்யாணவீட்டின் ஒலி பெருக்கியில் . 

"எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ.. 
அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது.. 
அதை அறியாமல் விட மாட்டேன்
அது வரை உன்னை தொட மாட்டேன்
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது" 

என்ற பாடல் காற்றில் மிதந்து வந்து என் காதில் பட்டு மனதை தொட்டது . உள்ளம் ரசனையில் மிதக்க மனது போட்டோவை ரசிக்க ஆரம்பித்து காதலிக்க ஆரம்பித்தது , அந்த திரைபாடலையும் போட்டோவில் இருந்த என்னவளையும்... எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ, அது ஏதோ என்னவளிடம் இருக்கின்றது என்று அன்று முதல் இன்று வரை மனதிற்குள் கேட்டு கொண்டே இருக்கின்றது.... 
"மழை வருது மழை வருது குடை கொண்டுவா " மழை பெய்யும் நேரங்களில் நான் கேட்க விரும்பும் பாடல் ... 
 
பெரியம்மாவின் மகள் திருமணத்திற்கு பெங்களூர் சென்ற போது வேனில் மீண்டும் மீண்டும் என பல முறை கேட்ட பாடல் அப்போது ரீலீஸ் ஆகி இருந்த "புதுப்புது அர்த்தங்கள் " படத்தில் உள்ள பாடல்கள் தான் இப்போது வரை எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் .. 

 "குடகுமலை காற்றில் "  பாடல் என் சிறுவயது தோழியையும், 

"காட்டுராணி தோட்டத்திலே கதவுகள் இல்லை " பாடல் நாங்கள் கேலி செய்த என் பள்ளி தோழியையும் .. 

"ஊருசனம் தூங்கிரிச்சி " பாடல் என் சகோதரியையும் . 

" முன்பே வா என் அன்பே வா " பாடல் என் மனைவியையும்.. 

என ஒவ்வொரு பாடலும் ஒரு சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன . 
 
- விக்கி ராஜேந்திரன் ✍✍✍








Comments

  1. Eppadi ippadi Ellam 👌👌👌

    ReplyDelete
  2. நினைவுகளை வெளிக்கொண்டு வருவதற்கு பாடல்களும் இசையும் ஒரு காரணம்.
    சூப்பர் 👏🏻🎹🎺🎸🥁🎤

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்