விவசாயிகளின் நண்பனை நம்பமுடிவதில்லை. . .

  நீர் நிறைந்த நிலத்தில் வாழை தோட்டங்களும் , வெற்றிலை கொடிக்கால்களுமாக செழுமை செறிந்த நிலப்பரப்புகளுக்கு நடுவே அமைந்த எங்கள் கிராமத்தை சுற்றி இருக்கும் குளிச்சியான தோட்டங்களில் தவளைகள் , வயல் எலிகள் அவற்றை உணவாக உண்ணும் பாம்புகளும் நிறைந்து இருந்தன . பாம்புகள் பொதுவாக கூச்ச சுபாவம் அதிகம் உள்ளவை . அவை மனிதர்களை தேடிவந்து கடிப்பதில்லை.  அவற்றுக்கு ஆபத்து என்று உணரும் போது அவை தாக்க முயல்கின்றன. பொதுவாக பாம்புகள் மனிதரை நெருங்க விரும்புவதில்லை. மனிதர்கள் இருப்பதை உணர்ந்தால் அவை விலகிச் செல்லவே நினைக்கின்றன .
வயல்வெளிகளில் பாம்புகள் எலிகளைப் பிடித்து தனக்கு உணவாக்கிக்கொள்வதால் விவசாயிகளின் நண்பனாக பார்க்கப்படுகின்றன. ஆனாலும் சில நேரம் அவற்றினால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது மக்களுக்கு அவற்றை கண்டால் பயமும் , கொல்லவும் முயல்கின்றார்கள்.
           சுமார் 30 வருடங்களுக்கு முன்பு ஆத்தூர் மெயின் பஜாரில் இருந்து எங்கள் ஊருக்கு செம்மண்கலந்து சிறு சரல் கற்களை கொட்டி அமைக்கப்பட்டு இருந்த  அந்த இருபது அடி சாலையின் இரண்டு பக்கங்களும் இருந்த தோட்டத்திற்குள் ஆடு,மாடுகள் இறங்கிவிடாமல் சீமை உடை மரங்களாலும்,  முட்களாலும் வேலிகள்  அமைக்கப்பட்டு இருந்தது. . அந்த சீமை உடை மரத்தின் மூடுகள் பெருத்து கிளைகளை பரப்பி அவற்றை சுற்றி பெரும் முட்புதர்களை உருவாக்கி இருந்தது. அந்த முட்புதருக்குள் உலகத்தின் உணவு சங்கிலியின் சக்கரம் சூழன்று கொண்டு இருந்தது .  சாலையின் ஒரங்களில் சில இடங்களில் மக்கிபோன கால்நடை கழிவுகள் சிறு மணல் குன்றுகள் போன்று குவித்து கிடந்தது. சாலை ஓர மரங்களில் இருந்து உதிர்ந்த பழுத்த இலைகளும் , காய்ந்த சருகுகலும்  சாலையில் விழுந்து கிடந்தன . நூறு அடிக்கு ஒன்று என என்றாவது ஒளிரும் தெருவிளக்குகளும் ,  ஊரை  நெருங்கும் தொலைவில் சாலையின் ஓரம் மரங்கள் சூழ்ந்த அழகான கோழிபண்ணையும் அதை அடுத்து  மிகப்பெரிய புளியமரமும் இருந்தது . அதன் கிளைகள் விரிந்து படர்ந்து பெளர்னமி நிலவின் ஒளி மட்டும் இல்லை , எப்போதாவது ஒளிரும் தெரு விளக்கின் ஒளியையும் தரையில் விழாமல் மறைத்து இரவு நேரத்தில் அந்த பகுதி காரிருள் சூழ்ந்து கும்மிருட்டாக இருந்தது . 

                  ஊர்கார்கள் பஜாருக்கு சென்றுவிட்டு இரவு நேரங்களில் டார்ச்லைட்  வெளிச்சத்தின் உதவியுடன் வீட்டுக்கு திரும்புவார்கள் . அன்றைக்கு அப்படித்தான் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர் இரண்டு தாத்தாமார்கள் . அதில் ஒருவர் கையில் மட்டும் டாச்லைட் இருந்தது . அந்த டார்ச்லைட் வெளிச்சத்தில் அவர்கள் மெதுவாக நடந்து கொண்டே  அந்த புளிமரத்தை கடந்த போது ரோட்டில் ஏதோ சருகு போன்று கிடந்ததை கவனிக்காமல் காலால் மிதித்த தாத்தா ஒருவர் .  ஏதோ கடிச்சிட்டு என்று அருகில் வந்து கொண்டு இருந்த நண்பரிடம் சொல்ல, நண்பர் என்னவாக இருக்கும் என்று டார்ச்லைட்டின் வெளிச்சத்தில் சாலையில் தேட அங்கு அசைந்து நெளிந்து ஊர்ந்து சென்று கொண்டு இருந்தது சுருட்டைவிரியன் என்னும் கடுமையான நச்சுப்பாம்பு . நடு ரோட்டில் சுருண்டு வாழை சருகு போன்று இருந்ததை பாம்பு என்று அவர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை . அந்த தாத்தா வீட்டிற்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் தாத்தா இறந்து போனார் . ஊரே சோகமானது எனக்கு பாம்பின் மேல் பயம் வந்தது .

      அடுத்து ஒரு வாரத்திற்குள் பாம்பாட்டியை அழைத்து வந்து ரோட்டின் கரையோரம் உள்ள வேலிகளின் புதர்களில் இருந்து பல வகையான பாம்புகள் பிடிக்கப்பட்டன.   அதிமான விஷம் கொண்ட நல்லபாம்பு , கட்டுவிரியன் மற்றும் விஷம் இல்லாத சாரை பாம்புகள் என ஒவ்வொன்றும் ஆறு அடி ,  எட்டு அடி நீளம் கொண்டவை . பாம்பாட்டி மகுடி ஊதி பிடித்து  வைத்திருந்த பாம்புகளை கொண்டு வந்து ஊர் அம்மன் கோவில் திடலில் ஊர்மக்கள் கூடி நிற்க ஒவ்வொன்றாக எடுத்து வேடிக்கை காட்டிக்கொண்டு இருந்தார் . அப்போது ஒரு விஷப்பாம்பு அவர் கைவிரலை கடித்து விட்டது . அவர் பயந்து போனார் . அய்யா பாம்பு என்னை  கடிச்சிட்டு என்று கூட்டத்தை பார்த்து  கூற  . பாம்பு கடிக்கு பயந்தவன் எதுக்குல பாம்பு பிடிக்க வந்த என கூட்டத்தில் இருந்த என் அப்பா  பாம்பாட்டியை பார்த்து கேட்க . எனக்கு அப்பா மீது கோபமும்.  இவ்வளவு நேரம் பாம்புகளை வைத்து விளையாட்டு காட்டிய அந்த பாம்பாட்டியை நினைத்து பரிதாபமும் உண்டானது அந்த சின்ன வயதில் . ( எந்த ஒரு பாம்பாட்டியும்  பாம்பு கடித்து இறந்ததாக இதுவரை நான் கேள்விபட்டது இல்லை )

 எங்களுக்கு சின்னதாக ஒரு உணவகம் இருந்தது. ஒரு நாள் உணவகத்தில் வாழை இலை தட்டுப்பாடு ஆகி போச்சு . அப்பா என்னிடம் " நம்ம தோட்டத்துக்கு போய் கொஞ்சம் இலை பறித்து விட்டு வா. என்று கூற நான் ஒரு சிறு கத்தியை  இருக்கி கட்டிய  லுங்கிக்குள் மறைத்து வைத்து சைக்கிளை  எடுத்துக்கி்ட்டு எங்கள் ஊருக்கு போகும் வழியில் கல்வாய்க்கால் கரையில் இருந்த எங்கள் வாழை தோட்டத்திற்கு சென்றேன்.. அந்த தோட்டத்தில் பெரிய வாழை அருகில் இருந்த சின்ன வாழை கன்னுகளை மிதித்து மடக்கி விட்டு இருந்தால் அந்த தோட்டத்தில் இலை கிடைக்கவில்லை . அங்கு இருந்து மூன்று தோட்டங்கள் தாண்டி எங்களுக்கு இருந்த மற்றொரு வாழை  தோட்டத்தில் இலை இருக்குமா.. என்று பார்க்க அங்கு சென்றேன் . 
இயந்திர உலகின்  எந்த சத்தமும் இல்லாமல் ஓங்கி வளர்ந்து இருந்த வாழைமரம் தன் பச்சை இலைகளை குடைபோல் விரித்து இருந்தன . அந்த பச்சை இலைகளில் சூரிய ஒளிபட்டு இளம் பசுமையான வெளிச்சம் தோட்டம் முழுவதும் பரவி இருந்தது . ஒரு மயான அமைதி . அமைதியான சூழல் மனதிற்கு சாந்தம் அளிக்கும் என்றுதானே கூறுவார்கள்.  மாறாக இந்த தோட்டத்தின் அமைதி என் மனதிற்கு சற்று பயத்தை உண்டாக்கியது . எனக்கு எதோ சரியில்லை என்று என் உள்ளுணர்வு சொல்ல சற்று கவனமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். அப்போது அந்த பயங்கர அமைதியை கிழித்து கொண்டு "ப்பொளக்" என்று ஒரு சத்தம் கேட்டது . நான் சற்றேன்று நின்று . சத்தம் வந்த திசையை நோக்கினேன். வாழை தோட்டத்தின் தண்ணிர் நிறைந்து இருந்த கானுக்குள் ஒரு இடத்தில் மட்டும் தண்ணிர் அலை அலையாய் அசைந்தது .ஏதோ ஒன்று தண்ணீருக்குள் விழுந்து  இருக்கிறது என்னவாக இருக்கும் சற்று கூர்ந்து நோக்க அது ஒரு தவளை.  நான் வருவதை பாத்து தண்ணிருக்குள் குதித்து இருக்குமோ என பலவாராக மனதிற்குள் குழப்பம் ,  மீண்டும் அந்த இடத்தை சுற்றி என் கண்களை மேயவிட்டேன் . என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்து விட்டது , தவளை தண்ணீருக்குள் தாவிய இடத்தின் கரையில் இரண்டு அடி உயரத்திற்கு தலை உயர்த்தியபடி கருத்த வளவளக்கும் உடலின் பாதி எங்கள் வாழை தோட்டதின் பட்டத்திலும் மீதி உடல் பக்கத்தில் உள்ள வெற்றிலை தோட்டதிலும் இருந்தவாறு இரையாக வேண்டிய தவளை தப்பித்து தண்ணீருக்குள் தாவிய இடத்தை தன் பளபளக்கும் கண்களால் பார்த்துகொண்டு இருந்தது அந்த பயங்கரமான பாம்பு . எனக்கும் பாம்புக்கும் இடைபட்ட தூரம் வெறும் பத்து அடிகள் தான் அந்த பாம்பின் நீளமோ சுமார் பனிரெண்டு அடி இருக்கும். நான் கொஞ்சம் சுதாரித்து நின்று இருக்காவிட்டால் என்ன ஆகி இருக்கும் . நினைத்ததும் என் சப்த நாடியும் உறைந்து உடல் நடுக்கம் கண்டது . அந்த நடுக்கத்தை உணர்ந்ததாலோ என்னவோ நான் இருந்த திசைநோக்கி  தலையை திருப்பி என்னை பார்த்து அந்த பாம்பு  . எடுத்தேன் பாருங்கள் ஓட்டம் ... உசைன் போல்ட் மட்டும் அல்ல யார் நினைத்தாலும் அப்போது என்னை ஓட்டத்தில் ஜெயித்து இருக்க முடியாது . வாழை பட்டம்,பட்டமாக, கான், கானாக தாண்டி ஒடி வந்து  சாலையை அடைந்து ஐந்து நிமிடங்கள் வரை நடுக்கம் குறையவில்லை...



அம்மாடி என்னா... லுக்கு
பாம்பை கண்டால் படையே நடுங்குமாம்.  நான் எம்மாத்திரம் .

விக்கி இராஜேந்திரன் . ✍✍✍✍..















Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்