மனித பிணைப்பு ..
சமுகத்தில் மனிதம் மறைய காரணம் அதன் அடித்தளமான குடும்ப உறவுகள் சிதைந்தது தான். பணம் சேர்க்கும் அவசர உலகத்தில் மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது.
எனக்கு எப்பொழுதும் எதையோ தலையில் சமந்தபடி ஓடுவது போல ஒர் உணர்வு ... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அந்த சுமை எனும் பணம் தேவைப்படுகிறது. அது இன்றி சமுகத்தை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது...அந்த பயம் இந்த சமுகத்திடம் இருந்தே எனக்குள் திணிக்கப்பட்டிருந்தது. அதற்குள் இருந்து வெளிவர இயலவில்லை..
ஆனால் இந்த பாரத்தை தூக்கிச் சுமந்து கொண்டு என் தந்தை நடந்ததாக நினைவில்லை .. அவரும் அவரைச்சார்ந்த மனிதர்களுமாக வெகு எளிதாக இந்த வாழ்கையை வாழ்ந்திருந்தார்கள்.. பணத்தை சேர்க்க வேண்டும் என்று நினைத்து ஒரு நாளும் அவர் ஓடியதில்லை... இந்த சமுகத்தை எதிர் கொள்ள அவருக்கு அது தேவைப்படவில்லை . அதை விட உயர்வான மனித மனங்களை சேர்த்து வைத்திருந்தார்.
புற்று நோயின் பாதிப்பில் தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த அப்பா . வீட்டில் சிறு சேமிப்புகளும் இல்லாத நிலையிலும் .மிகச்சிறப்பாக நடத்தி முடிந்த என் மூத்த சகோதரியின் திருமணத்தை நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது . அப்புறம் பார்க்கலாம் என்ற அப்பாவின் ஒற்றை வார்த்தையில் நம்பிக்கை வைத்து . சிறு பணம் கூட வாங்காமல் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்த மைக்செட்காரர் , சமையல்காரர் , பந்தல்காரர், வீடியோகாரர்களை நினைத்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது ... அவ்வளவு சிறப்பான நிறைவான திருமணம் அதன் பிறகு எங்கள் வீட்டில் கை நிறைந்த இருப்புடன் நடந்த திருமணங்களில் என்னால் காண இயலவில்லை . அது மனிதம் ஜெயித்து நின்ற இடம் .
பசிக்காக மட்டும் உழைத்த போது பாசம் இருந்தது . பணம் சேர்க்க உழைத்தபோது பாசம் பிரிந்தது ..
சேர்ந்து சமைத்தது , சிரித்தது , கதைத்தது என இருந்த உறவுகள் .. பணம் சேர்ந்த பிறகு பார்த்தும் பார்க்காதது போல் இருப்பதும் , பகைமையை வளர்ப்பதும் , பொறாமை கொள்வதும் என பிரிந்தே இருக்கின்றனர் . வாழ்கை வாழ பணம் தேவைப்படாத போது பந்தம் , பாசம் இருந்தது ... பணம் தான் வாழ்க்கை என்று ஆன பிறகு பந்தமும், பாசமும் பறந்து போனது. பேசினால் தீராத பிரச்சினைகள் எதுவும் இல்லை . ஆனால் பிரச்சினையை யாரும் தீர்க்க முயல்வதும் இல்லை .யார் முதலில் இறங்கி வந்து பேசுவது என்பதில் தன்மானம் என்ற பெயரில் ஈகோ தடுக்கிறது . மான அவமானங்கள் என்பது உனக்கு பெரிது, எனக்கு சிறிது என்று அல்ல அனைவருக்குமானது தான் .
மூன்று தலைமுறை முன்பு வரை சொந்தம் ,பந்தம் , உறவு ,பரிவு என பிரிகள் பிணைந்து வடக்கயிறாய் இருந்த உறவுகள் இந்த தலைமுறையில் ஒவ்வொரு பிரியாய் பிரிந்து போய் நூலிழையில் தொற்றிக்கொண்டு இருக்கின்றன.. இனிவரும் தலைமுறையில் இதுவும் இருக்குமா என்பது சந்தேகம் தான் .. பாசம் அற்று பிரிந்து போன பிரிகளை பாசம் காட்டி பிணைக்காவிட்டால்.. தொடர்ச்சி அற்று போகும் . தொடர்ச்சி அற்று தொடரும் சங்கிலிகளுக்கு பலம் ஏது மதிப்பு ஏது ..
- விக்கி இராஜேந்திரன் ..
Comments
Post a Comment