மாப்பிள்ளை தோழர்கள் ( Groom Friends )

           ஊரில் நண்பர்கள் வீட்டு திருமண விசேஷங்களில் சடங்குகள், சம்பிரதாயங்கள் நடக்கும் இடங்களில் நிற்காமல் அந்த இடங்களை விட்டு  500 அடி தள்ளி ஒரு கும்பல் நிற்கும் அவனுவ தான் மாப்பிள்ளையின் நண்பர்கள் . மாப்பிள்ளை முறுக்கு என்று சொல்லுவாங்கல்ல  அது மாப்பிள்ளையை விட இவனுவகிட்ட தான் ரொம்ப ஓவரா இருக்கும் . திருமணவாழ்த்து வால்போஸ்டர் ஒட்டுறது , ஊர் இளைஞர்கள் சங்கம் சார்பாக மணமக்களுக்கு வாழ்த்துமடல் கொடுப்பது , வேர்க்க விறுவிறுக்க ஓடியாடி பந்தி பரிமாறுவது என இவனுவ செய்ற அலப்பறைகள் கொஞ்சம் வேறுரகம். 
      கல்யாணத்திற்கு முந்திய நாள் இரவு ஊர் தூங்கும் நேரத்தில இந்த கும்பல் கையில் பசை வாளியும்,  தங்கள் பெயர் போட்டு அடித்த வால்போஸ்டரையும் தூக்கி கொண்டு கிளம்பும்.. ஊருக்குள்ள கல்யாணமாப்பிள்ளை வீட்டில இருந்து மணபெண்ணின் வீடு வரை ஜனம் அதிகமா கூடுற இடங்களிளையும், புதிதாக வெள்ளையடித்து விளம்பரங்கள் செய்யாதீர்கள் என்று எழுதி இருக்கும் சுவத்துலயும், ஊர்களின் பெயரை சுமந்து நிற்கும் பெயர் பலகைகளிலும் . தன்னுடன் படிக்கும் தோழிகளின் வீட்டின் கதவுகளிலும் வால்போஸ்டர் ஒட்டுவது  என இவர்களின் அராஜகம் வேறு ரகம்.. செய்வது தப்பு என தெரிந்தும் அதை வேடிக்கையாக நினைத்து செய்பவர்கள்.. இவனுங்கல யார் பார்த்தாலும் இந்த பூனையா பால் குடிக்கும் என்று எண்ண வைக்கும் ரகத்தை சேர்ந்தவனுங்க . ஊர் அடங்கிய அந்த நேரத்தில் யாரும் அவர்களை கவனிக்க மாட்டார்கள் என்பது தான் அவனுங்க தைரியமே.. ஏன்னா வீட்டிலயும், ஊருக்குள்ளயும் அவனுங்கல பத்தின எண்ணம் நல்லமாதிரி இருக்கும் . ஆனால் யாருக்கும் தெரியாமல் இவனுவ பண்ணுற சேட்ட அப்படி இருக்காது அது வேறமாறி.. வேறமாறி.. . ரோட்டில மேயுற கழுதைகளை பிடிச்சி அது மேல் ஏறி உட்காந்து கழுதை பந்தயம் வைக்கிறது , ரோட்டில் திரியும் மாடுகள் மேல போஸ்டர் ஒட்டுறது, நடுரோட்டில டான்ஸ் ஆடுறது என இவனுங்க பண்ணற குரங்கு சேட்டலாம் எக்கச்சக்கம் . ஒரு முறை போஸ்டர் ஒட்ட நேரம் ஆகிவிட அவசரத்தில இருட்டான பகுதியில நண்பர் ஒருவர் தலைகீழாக ஒரு போஸ்டரை  ஒட்ட அடுத்த நாள் அதை பார்த்து விட்டு போனவங்க எல்லாம் நல்லா தண்ணி அடிச்சிட்டு மப்புல போஸ்டர் ஒட்டி இருக்கானுவோ.. என கூறிசென்றனர்.  இப்படி இரவு எல்லாம் சுத்தும் இந்த கும்பல்,

         மறுநாள் திருமணத்திற்கு ஒளவையார் பேரன்கள் மாதிரி நெற்றியில் விபூதி, சந்தனம் பூசிக்கொண்டு பழுத்த பழம் மாதிரி படம் காட்டுவானுங்க. அன்று  பெண் வீட்டிற்கு வேனில் போகும் போது . இவர்களுக்கு என்று தனி வண்டி இவர்களுக்கு என தனி உரிமைகள் பல உண்டு . பெண் வீட்டார் இவர்களை கண்டு சில நேரம் கலங்கி தான் போவார்கள் ..
                   
என் அண்ணன் ஒருவரின் திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முனபு மாப்பிளையை அமரவைக்க அவருக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது . அந்த அறையில் பெண் வீட்டார் . அவர்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக கூல்டிரிங்ஸ் பாட்டிலையும் , மறுவீட்டுக்கு போகும் போது மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்க லட்டுகளையும் அந்த அறையில் வைத்து இருந்தனர் .  வருவோர் போவோரை எல்லாம் நக்கலும், நையாண்டியும் செய்து கொண்டு மாப்பிள்ளையுடன் தோழர்களாக அந்த அறையில் இருந்த சேட்டை கும்பலில் ஒருவர் தாகமாக இருக்கிறது என ஒரு கூல்டிரிங்ஸ் பாட்டிலை திறந்து குடிக்க . அவ்வளவு தான் சற்று நேரத்தில் அந்த அறையில் இருந்த ஐந்து கிரேடு கூல்டிரிங்ஸ் பாட்டிலும் , லட்டுகளில் பாதியும் காலியானது. அதை பார்த்த பெண் வீட்டார் மறுவீட்டுக்கு போகும் போது மாப்பிள்ளை வீட்டுக்கு  கொடுப்பதற்கு வைத்து இருந்ததை இப்படி பண்ணீடிங்களே நாங்க இப்போ எங்க போய் லட்டு வாங்குவோம் என சவுண்ட் விட , மாப்பிள்ளையின் அண்ணன் எங்களுக்கு கொடுக்க வைத்து இருந்தது தானே ! இருப்பதை கொடுங்கள் போதும் என பதிலுக்கு சவுண்ட் விட பெண் வீட்டார் அமைதி ஆனார்கள் .  கல்யாண வீட்டில் மணபெண்ணுக்கு தங்கையிருந்தால் சொல்லவே வேண்டாம் .. மாப்பிள்ளைக்கு வேர்க்குது விசிறி கொடுங்க, காப்பி கொடுங்க , பவுடர் கொடுங்க என வருத்தபடாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் மாதிரி அந்த பெண்ணிடம் ரவுசு விட்டுகிட்டே திரியும் இந்த கும்பல்  ..மாப்பிள்ளை தாலி கட்டும் போது பூக்களை மாப்பிள்ளை, பொண்ணை தவிர மத்த பொண்ணுங்க மேல எல்லாம் வீசும் . பிறகு மாப்பிள்ளைக்கு இளைஞர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துமடல்  கொடுத்து வாழ்த்து மடலை  ஊர் அறிய மைக்கில் வாசிக்கும் இந்த கும்பல் . பிறகு நண்பர்களோடு பந்தியில் உட்காந்து நண்பர்களின் இலையில் இருந்து பஜ்ஜி , கேசரி திருடி தின்று அழிச்சாட்டியம் செய்து அவர்களுக்கு என்று அமர்த்தப்பட்ட தனி வேனில் பாட்டை சத்தமாக வைத்து கத்தி கூச்சல்  போட்டு கொண்டே ஊர்வந்து சேரும் .

       இந்த கும்பலின் ரவுசு, சவுண்ட் , அட்டகாசம் எல்லாமே மாப்பிள்ளை தாலி கட்டும் வரைதான் .. தாலி கட்டிய உடன் அந்த இடத்தில் இருந்து கமுக்கமாக வெளியேறி விடுவானுங்க .. ஏன்னா தாலி கட்டியதும் மாப்பிள்ளை பொண்ணு வீட்டு பக்கம் சாய்ந்து விடுவார் அப்புறம் இவனுவல எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்பது மாதிரி தான் லுக்கு விடுவார்.. அப்புறம் இவர்கள் பண்ண அடாவடித்தனம் எல்லாம் இவங்களுக்கே திரும்புவதற்காண  வாய்ப்புகள் அதிகம் அதான். ..

   அவர்களின் சேட்டைகள் எல்லாம் இரவில் தீடீர் என இறக்கை முளைத்து பறக்கும் ஈசல் போன்று தான் அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது . இரவு முழுவதும் முடிந்த வரை உச்சம் பறந்து விடியும் முன்பு இறக்கைகளை உதிர்த்துவிட்டு மறைந்து  கொள்வர்கள் அடுத்த நண்பரின் திருமணம் வரும் வரை ...


விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍


Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்