காலத்தினால் செய்த நன்றி

 கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்த காலம் , அரசின் பொதுமுடக்க உத்தரவின் காரணமாக யாரும்  வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை . வாகனங்கள் ஓடவில்லை, அரசு மருத்துவமனையை தவிர அனைத்து மருத்துவமனைகளும் ,கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்களுக்காக மக்கள் அலைந்த அலைச்சல் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. இந்த இரண்டு வருடங்களில் நம் அன்புக்கும் பாசத்திற்கும் உரிய பலரை இழந்து இருக்கின்றோம். முதல் அலை வரும் போது மக்களிடம் அந்த அளவு விழிப்புணர்வு இல்லை. ஆஸ்பத்திரியில் தனிமை படுத்தப்பட்டவர்கள் அங்கு சென்று பாட்டு, நடனம் என குதூகலமாக பொழுதை கழித்தனர் அது போதாது என்று அவர்கள் அதை வீடியோ படம் எடுத்து சமூக ஊடகங்களிலும் பரப்பி விட்டனர் . நானும் ஒன்றும் இல்லாததை அரசாங்கம் பெரிது படுத்துகின்றது என்றே நினைத்தேன், இரண்டாவது கொரோனா அலையில் உறவினர்களையும் ,நண்பர்களையும் இழக்கும் வரை .  என் வீட்டாரை ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்து கொண்டே இருந்தேன். வேலை காரணமாக தூர தேசத்தில் நான் இருந்ததால் அவர்களுக்கு ஒன்று என்றால் என்ன செய்வது என்ற கவலை என்னை ஆக்கிரமித்து இருந்தது க. 
         அது கோடைகாலம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது , ஆதலால் ஆத்தூர் பஜாருக்கு வீட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க போன என் மனைவியும் , மகளும் கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பியவர்கள் , வீட்டில் இருக்கும் பெரிய தொட்டி நிறைய மின் மோட்டார் மூலம் தண்ணீரை நிரப்பி இரண்டு மணி நேரம் நன்றாக குளித்தனர் மனைவியும் ,மகளும்  . பின்னர் தாகம் எடுக்க குளிர்சாதன பெட்டியில் அவர்கள் ஏற்கனவே தயாரித்து வைத்து இருந்த எலுமிச்சை பழச்சாறையும் காலி செய்தனர். எதை பற்றியும் கவலை இல்லாமல் . ஆனால் அன்று மாலையே என் மனைவிக்கு சிறிதாக காய்ச்சல் ஆரம்பித்தது அதனால் பாரசிட்டமால் எடுத்து கொண்டார் . அதனால் காய்ச்சல் சற்று மட்டு பட்ட மாதிரி இருந்தது . ஆனால் அன்று இரவே மீண்டும் காய்ச்சல் அதிகமாக இருமலுடன் வாந்தியும் வர உடல் பலவீனம் ஆக உணர ஆரம்பித்தார் என் மனைவி . அரசு உத்தரவின் பெயரில் சிறிய கிளினிக்குள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன . திறநது இருந்த சிறிய மருத்துவமனைகளும் காய்ச்சல் இருமல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவில்லை . அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு  நான் வீட்டில் இல்லை  . மனைவிக்கு வந்திருப்பது சாதாரண காய்ச்சலா, வைரஸ் காய்ச்சலா இல்லை கொரோனா காய்ச்சலா என்று எதுவும் தெரியவில்லை  . எங்களுக்கோ பயம் கொரோனாவா இருந்தால் என்ன செய்வது என்று . அரசுக்கு மருத்துவமனைக்கு போன் செய்து தெரிவிக்கலாம் என்றால் . அவர்கள் வந்தால் என் வீட்டை சுற்றி தகரம் அடித்து யாரும் நெருங்க முடியாமல் செய்து விடுவார்கள் . என் மனைவியையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடுவார்கள். என் மனைவியின் உதவிக்கு கூட ஒருவரும் இல்லை . அம்மாவோ வயதானவர்,  அவரை என் மனைவியின் உதவிக்காக அனுப்பி விட்டால் , என்  குழந்தையை பார்த்து கொள்ள ஆள் இல்லை . கொரோனா எங்கள் வீட்டில் இருப்பதாக தெரிந்தால் உறவுகளும்,சுற்றத்தாரும் அருகில் வர யோசனை செய்வார்கள் . என் மனைவியின் உடல்நிலையோ மோசமாகி கொண்டே சென்றது . எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ,  எங்களுக்கு தெரிந்த மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து பேசி நிலமையை கூற அவர் சில மாத்திரைகளை வாங்கி சாப்பிடுமாறு கூறி . சீக்கிரம் மருத்துவமனை சென்று
 இரத்த பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறி விட்டார் .பல தனியார் மருத்துவமனைகளை தொடர்பு கொண்டும் பயன் இல்லை காய்ச்சல் இருந்தால்  மருத்துவம் செய்ய முடியாது என கூறிவிட்டனர் , என் மகளோ , மனைவியை  விட்டு பிரியாமல் அவருடனே ஒட்டி கொண்டு அழைந்தது கொண்டு இருந்தாள்  . எனக்கோ அவர்களை பார்த்து மனசெல்லாம் வேதனை . அதற்குள் இரண்டு நாட்கள் ஓடி போனது .  
    மறுநாள் தனியார் மருத்துவமனைகள் இயங்கலாம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது . இருந்தாலும் பல மருத்துவமனைகள் வெளிப்புற நோயாளிகளை அனுமதிப்பதில் தயக்கம் காட்டின . என் நண்பர் ஒருவர் திருச்செந்தூரில் உள்ள BG மருத்துவமனை திறந்து இருப்பதாக தகவல் கூறினார் . அந்த மருத்துவமனை ஏற்கனவே எனக்கு பரிச்சயமானது தான் .நான் பயின்ற ஆதித்தனார் கல்லூரிக்கு எதிரில் இருந்தது . ஒருமுறை வயதான ஒருவரின் அறுவைசிச்சைக்கு இரத்த தானம் அளிக்க அங்கு சென்றுள்ளேன். அது மட்டும் இல்லாமல் என் வாழ்வின் முக்கியமான திருப்புமுனை நிகழ்வுகளுக்கும் இந்த மருத்துவமனையில் தான் தொடக்க சுழி போடபட்டது. 
    அந்த மருத்துவமனையின் தொடர்பு எண்ணை இணையத்தில் தேடி எடுத்து . அந்த எண்ணை தொடர்பு கொண்டு என்னை அறிமுகம் செய்து கொண்டு என் மனைவியை பற்றி கூறி. அவருக்கு உடற், மற்றும் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி அவரிடம் முன் அனுமதி கேட்க . எதிர்முனையில் பேசியவர் தாங்கள் இன்று தான் மருத்துவமனையை திறந்ததாகவும். என் மனைவிக்கு பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாகவும் கூறி என் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு கூறினார்.நான் அவசரத்தில் அவரின் பெயரை கேட்க மறந்து விட்டேன் . உடனடியாக என் மனைவிக்கு போன் செய்து . திருச்செந்தூர் BG மருத்துவமனை போகுமாறு கூறினேன்  . 
     என் மனைவியும் மகளும் , அம்மாவும் நண்பர் ஒருவரின் ஆட்டோவை வரச்செய்து, அதில் திருச்செந்தூர் BG மருத்துவமனையை அடைந்தால் அங்கு வரவேற்பறையில் இருந்த செவிலியர்கள் எந்த ஒரு முன்பதிவும் இல்லாமல் ஏன் இங்கு வந்தீர்கள் என சத்தம் போட்டு இருக்கின்றார்கள் . என் மனைவி எனக்கு போன் செய்து என் பெயரில் எந்த முன்பதிவு இல்லை என செவிலியர்கள் கூறுகின்றார்கள் நீங்கள் யாரிடம் போன் செய்து முன்பதிவு செய்தீர்கள் என கேட்க . நான் மீண்டும்  நான் போன் செய்த அந்த நம்பருக்கு போன் செய்து என் மனைவியின் பெயரை கூறி அவர் அங்கு வந்து இருக்கின்றார் . செவிலியர்கள் முன்பதிவு எதுவும் இல்லை என அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூற . அவர் நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் பார்க்கின்றேன் என்று கூறினார் . அதன் பிறகு அங்கு என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கின்றது. சிறிது நேரம் கழித்து என் மனைவி எனக்கு போன் செய்த பிறகு தான் தெரிந்தது நான் போன் செய்தவர் அங்கு இருந்த செவிலியர்களை அழைத்து கண்டித்து இருக்கின்றார் என்றும் நான் போன் செய்து பேசியது BG மருத்துவமனையின் உரிமையாளரும், தலைமை மருத்துவருமான டாக்டர். ராமமூர்த்தியிடம் என்று . டெஸ்ட் அனைத்தும் எடுத்து பார்த்ததில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் என்று தெரியவந்தது . நிமோனியா காய்ச்சலின் அறிகுறிகள் அனைத்தும் கோரோனா காய்சசல்  அறிகுறிகளை போன்றே இருக்கும் என்றும் டாக்டரே எனக்கு போன் செய்து என் மனைவியின் உடல்நிலைபற்றி எடுத்து கூறி ஒன்று பயப்பட தேவையில்லை என்று கூறி அது சம்மந்தமான அறிக்கையை எனக்கு அனுப்பி வைத்தார். எவ்வளவு பெரிய மருத்துவர் அவர் எனக்கு போன் செய்து எளிமையாக என்னிடம் பேசியதும் , என் மனைவியின் காய்ச்சல் பற்றி என்னிடம் விளக்கி கூறியதையும் , 
அவர் நடந்து கொண்ட விதத்தையும்   பார்த்து எனக்கு என் சொல்வது என்றே தெரியவில்லை நன்றியை தவிர . ... 

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது" 



விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍✍

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்