"கள்ளும் கற்று மற"
சங்கால இலக்கியங்களில் மதுபானம் பற்றி நிறைய குறிப்புகள் காணப்படுகின்றன. "கள்" என்ற வார்த்தை களித்திருத்தல் (இன்பமாக இருத்தல்) என்ற சொல்லிருந்து வந்ததாகும். "கள்" என்ற சொல் சங்க இலக்கியத்தில் வெறிநீர், பதநீர், மட்டு, தேன் ஆகிய நால்வகை பதங்களோடு குறிக்கப்படுகிறது.
மதுவில் தென்னங்கள், பனைக்கள், அரிசிக்கள், தோப்பி, தேக்கள், பிழி ,மணங்கமழ் தேறல், பூக்கமழ் தேறல்,நறவு என பலவகைகள் உண்டு. நெல்லால் சமைத்த கள் நறவு எனவும், தேனால் சமைத்த கள் தேறல் எனவும், பூக்களால் தயாரிக்கப்பட்டு அத்துடன் குங்குமப் பூவையும் இட்டு தருகிற கள் தெளிவுக்கு பூக்கமழ் தேறல் எனவும் பெயர்.கள் தயாரிக்கும் முறைகூட சில பாடல்களில் விளக்கப்படுகின்றன.
ஊர் திருவிழாவிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிப்பதற்காக சொந்தமாக மதுபானங்களை தயாரிக்கும் பழக்கம் தமிழ் சமுதாயங்களில் இருந்தது .தமிழ்நாட்டின் பனங்கள்ளும் , கேரளத்தின் தென்னங்கள்ளும் மிகவும் பிரபலம் . தமிழ்நாட்டில் பனங்கள் இறக்குவது தற்போது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு உள்ளது ..
நான் மதுரை காமராஜர் பல்கலைகழக கல்லூரியில் விடுதி மேலாண்மை அறிவியல் இளங்கலை பயின்ற போது. நான் என்னுடன் படிக்கும் திருநெல்வேலி ,தூத்துக்குடி நண்பர்கள் என எட்டு பேர் மதுரை மகாத்மாகாந்தி நகரில் உள்ள அதியமான் இரண்டாவது தெருவில் தனி வீடு எடுத்து தங்கி இருந்தோம் .எங்கள் பாடத்திட்டத்தில் உணவு & பானங்கள் சம்மந்தமான படிப்பும் உண்டு. அதில் மது கலக்காத பானங்கள் ( mocktail) மற்றும் மது கலந்த பானங்கள்( cocktail ) தயாரிப்பு பற்றிய பாடவகுப்புகள் உண்டு . அந்த வகுப்பில் மதுபானங்கள் பற்றியும் அது பற்றிய செய்முறை விளக்கங்களும் சொல்லித்தருவார்கள் . செய்முறை வகுப்பில் நாங்கள் தயாரிக்கும் பானங்களை ருசித்து அவற்றின் சுவை மற்றும் வாசனைகளையும் மற்றும் வித விதமான ஒயின் ( wine ) பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் . அந்த வகுப்பிற்கு மட்டும் ஒரு பயபுள்ள கூட வகுப்பை புறக்கணிக்காமல் ஆஜர் ஆகிவிடுவார்கள்.
ஒரு முறை எங்களுடைய செய்முறை வகுப்பில் திராட்சை ஒயின் எவ்வாறு செய்வது என்று எங்கள் ஆசிரியர் செய்முறை விளக்கம் செய்து காண்பித்தார் . அதை பார்த்த எங்களுக்குள் இருக்கும் சங்கத்தழிழன் விழித்துகொள்ள . உடனே அதை செய்து பார்க்க ஆசை வந்தது . உடனடியாக அதற்கான செயலில் இறங்கினோம். திராட்சை ஒயின் தயாரிப்பதற்கு தேவையான கருப்பு திரட்சையுடன் வெள்ளை சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பின்பு குளிர வைத்து அதனுடன் உலர்ந்த ஈஸ்ட் கலந்து மண்பானையில் வைத்து சுத்தமான துணியால் பானையின் வாய்பகுதியை கட்டி வீட்டின் ஒரு மூலையில் வைத்து விட்டோம். முறைப்படி குறைந்தது ஆறு நாட்கள் அவற்றை அசைக்க கூடாது . ஆனால் மூன்றாவது நாளிலேயே நுரைத்த திராட்சையின் வாசம் வீடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஏற்கனவே அந்த தெருவில் எங்களை கண்டால் பலருக்கு பிடிக்காது . நாங்கள் தெருவில் கிரிக்கெட் ஆடுவது . சத்தமாக பாடல் கேட்பது . என்னுடன் படிக்கும் கல்லூரி நண்பர்கள் ஒன்று கூடி அரட்டை அடிப்பது என ஒரு கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் இடம் என்ற இலக்கணத்திற்கு ஏற்ப எங்கள் வீடு எப்போதும் சத்தமாகவும் , கலகலப்பாக இருக்கும் . அது பிடிக்காத அந்த தெருவில் வசிக்கும் சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்து . காவல்துறையினர் வந்து எங்களை ஒழுங்கா அமைதியா இருக்கனும் கூட்டம் சேர்ந்து கும்மாளம் அடிக்க கூடாது ஒழுங்காக படிக்கிற வேலையை மட்டும் பாக்கனும்.. என்று சத்தம் போட்டு சென்று கொஞ்சநாள் தான் இருக்கும் . ஆனா நாங்க இப்போது இங்க ஒயின் தயாரித்து கொண்டு இருக்கின்றோம் . ஏற்கனவே ஊறவைத்த திராட்சையின் வாசனையில் வீடு நிறைந்து போனது . இன்னும் இரண்டு நாள் ஆனால் தெரு எல்லாம் வாசனை வீசிவிடும் . அப்புறம் எங்க மேல காண்டுல இருக்கிற நபர்கள் நாங்க சாராயம் காய்கிறதாக காவல்துறையினருக்கு புகார் அளித்தால் என் செய்வது . அடுத்த நாள் மதுரையில் வீட்டில் சாராயம் காய்த்த கல்லூரி மாணவர்கள் கைது அப்படின்னு கொட்ட எழுத்துல பேப்பர்ல செய்தி தான் வரும் அப்படின்னு நினைச்சி கொஞ்சம் பயமும், அது மட்டும் இல்லாமல் ஒயினை நினைத்து அதன் மேல் ஆர்வமும் அதிகமாக அதை பரிசோதிக்கிறோம் என்று அதை கலக்கி வடிகட்டி ஆளுக்கு ஒரு கிளாஸ் குடித்ததில் ஊறவைத்த திராட்சை ஒயின் ஆகமாற வாய்ப்பு இல்லாமல் திராட்சை ஜீஸ் ஆகவே காலியானது. காலியானது பானை மட்டும் அல்ல ஒயின் தயாரிக்கும் எண்ணமும் தான் .. .
இப்போது எல்லாம் மதுவகைகள் தயாரிப்பில் நொதித்தல் நிகழ்வு இயற்கையாக இல்லாமல் வேதிப்பொருட்கள் உதவியுடன் விரைவாக்கபடுதலால் பெரும்பான்மையானவை உடலுக்கு தீங்கையே விளைவிக்கின்றன.
இந்த கட்டுரையை படித்து விட்டு . யாரும் என்கிட்ட ஒயின் தயாரிக்கும் ரெசிபி கேட்காதிங்க... இப்போது என்கிட்ட அந்த ரெசிபி இல்லை.. மறந்துவிட்டேன்
"கள்ளும் கற்று மற " 😀
விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍
"கள்ளும் கற்று மற " 😀
விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍
🤣🤣
ReplyDelete