கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )



                                                        
 எப்போதும் வருவது அல்ல கவிதை....
எப்போதோ வருவது கவிதை..............
 நினைத்தால் வருவது அல்ல கவிதை..
இதயம் கணத்தால் வருவது கவிதை..
என்று வலம்புரி ஜான் கூறிய கவிதையின்
இலக்கணத்தை போல .. என் இதயம் மகிழ்ச்சியிலும் , காதலிலும் ,கவலையிலும் , கணத்தபோதெல்லாம்,
நான் கிறுக்கியவற்றை கவிதை என்ற பெயரில்  தொகுத்து அதனுடன் சிங்கப்பூர் தாவரவியல் தோட்டத்தில்  நான் எடுத்த வண்ணப்படங்களையும் இணைத்து பார்வையாக்கி இருக்கின்றேன் . என்றும் மாறாத அன்புடன் என்னவர்களுக்காக.


கான்கீரிட் சூழ் உலகில் ,
தார் பூசி விரிக்கப்பட்ட 
சாலையில் சொகுசு ஊர்தியில் 
பயணித்தாலும்....
மகரந்தம் சூழ் உலகில் ,
மரகத பசுமையினிடையே, 
செல்லும் ஒத்தையடி பாதையில் 
பாதகையின்றி நடந்த 
நினைவுகள் தான் 
நிம்மதி தருகின்றது...  

உன்னோடு நடந்த பாதையேல்லாம்.. 
உடையவளுடன் கடக்கிறேன்.
மழலையின் சுவற்று கிறுக்கல்களை.. 
புது வண்ணம் பூசி அழிப்பது போல் .. 
உன் நினைவுகளை அழிப்பற்காக..
ஆனால் மழலை மனமோ கிறுக்கல்களை நிறுத்துவதாக இல்லை.. 

இனிமையாய் இயம்பும் இனியவளே!

என் நினைவு சலனங்களில்,

நிரவிய நின் நினைவுகளை , 

நத்தை கூடும் ஆமை ஓடுமாக சுமக்கிறேன் , 

பாரமாக அல்ல அவை தான் ,  

எனை காக்கும் என தாரமாக! 

அகம் நிறைந்தவளுக்கு

அகவை தின வாழ்த்துகள் ...

நாடி பார்த்து நாள் குறித்து ,

நாடிச் சொந்த பந்தம் சேர்த்து , 

நிறைநாழி நெல் அளந்து ,

பனை பந்தக்கால் நட்டு,

அய்யரும் அடுப்பு புகையுமின்றி,

சாஸ்திரங்கள் ஏதுமின்றி, 

சான்றோர்கள் வாழ்த்த, 

மங்கள நாண் நான் சூட்ட .

ஊர்கிணற்றில் வெற்றிலையிட்டு, 

செப்புக்குவளையில் நீர் சுமந்து , 

மெல்ல வந்த மெல்லினம் , 

பறக்கும் பூவிதழ் பூவினம்,  

இசைக்கும் ஈத்தை புல்லினமாம்...

என் அன்பிற்கினியவளுக்கு

திருமணநாள் வாழ்த்துகள் ..

பொழில் முத்தமிழ் திகழ் !
பொதிகை சோலை கமழ் ! 
மணம் வீசும் மலரின் தாழ் !  
நெய்திரள் நரம்பிசை யாழ் !    
பண்ணிசை வளர்த்த தமிழ் ! 

படர்ந்த பவள இதழ் ! 
விரிந்த முக்கடல் சூழ் !
விளைந்த முத்துச் சிமிழ் ! 
நன்நிலம் உதித்த வெண்போழ் ! 

வண்ண வண்ணக் குமிழ் !
குளிர் பனிக் கூழ் ! 
தமிழ் இனிமை அமிழ் ! 
"ழ" கரமென மகிழ் !! புகழ் !! வாழ் !!

அன்பு மகளுக்கு அகவை தின வாழ்த்துகள்.. 
அன்பாய் கொடுத்ததை அவள் மறந்தாலும் ,
நம்பிக்கையே இல்லை என்றாலும் ,
பத்திரமாய் வைத்திருக்கின்றேன், 
நம்பிவந்தவளின் நம்பிக்கையை..

பூஜை அறையில் ராதே கிருஷ்ணா.. 
அவசரகதியில் அகம் தொலைத்து , 
அலைபேசியில் கண்களை அலையவிட்டு... 
சுற்றும் முற்றும் பார்க்காமல் , 
சிந்தனையில் ஏதும் ஏறாமல்,  
பாதையோரமாய் நான் நடக்க , 
யாராரோ எனை கடக்க..

சூழ்நிலைக்கு ஒவ்வாத ஒரு வாசம் , 
காற்றில் சுழன்று நாசி தொட , 
சுயநினைவு வந்து .. 
சுயம் அறியாமல் திரும்பினேன்..
தூரத்தே தெரியும் கோபுரம் நோக்கி , 
அடி மீது அடி வைத்த 
அடியவளின் ஈரம் கசியும் 
நீண்ட கூந்தல் விழுதுகளில்,
வடம் கட்டி ஆடியது மல்லிகைப்பூ.. 

மாரன் அம்பாய் உள்ளம் ஊடுருவி, 
நெஞ்சுக்குள் நேசம் வளர்த்து , 
மனதை ஆசுவாசப்படுத்தும், 
கலங்கமற்ற வெள்ளைப் பூவது !!! 
கண்களை சிமிட்டியபடி .. 
மெளனமாக சிரித்தபடி ..
நிகழ்கால நிகழ்வுகளை நிறுத்தி , 
 கடந்த காலத்திற்கு கடத்தியது. 

அன்று கண்ணிறைந்த அழகுடன் 
ஆரஞ்சு பட்டுடுத்தி அப்ரஸாய் வந்து
அகத்துக்குள் நிறைந்தவளை .  
சரம் சரமாய் உனை தொடுத்தே, 
சம்சாரமாக்கி கொண்டேன்.. 
தேவதையவள் உனை சூடுகையில்,
தேவதேவதையாகின்றாள்.

இருமைகள் இறைந்திருக்கும் உலகில்,
இதயத்தை இதமாக்கும்
இணைந்த கண்ணி உன்னாலே , 
ஊடல் வந்தாலும் உழுவலன்புடன் ,
ஒன்றாய் வாழ்கின்றோம்.... 

மல்லிகை மலரகம் கடக்கும் போதெல்லாம் , 
அவள் நினைவு வருகிறது...
அவள் நினைவு வருவதாலே,
தினமும் அவ்வழியே கடக்கின்றேன்

- விக்கி இராஜேந்திரன்
தென்பொழில் பொழிவுற ,
வான்பொழிந்து பெருகி , 
அன்பாய் உயிர்க்கு அமுதமாகும், 
தேன்புனல் பொருநை போல்... 
எண்ணம் பொழிவுற ,
வண்ணமாய் வளம் பெற ,
தாரையாய் வந்த தலைமகளே ... 
உன் குறு இதழ் குவித்து ,
ஊதிய மென் காற்றில், 
உருவான வழலை குமிழ்களில் , 
பளபளக்கும் பிம்பமென, 
மனதுக்குள் அழகியலாய், 
குவிந்திருக்கும் அருமகளாய் - நீ
நல்லியலில் பிறழா நல்லாளாய் ! 
நன்னிலம் போற்றும் நன்மகளாய் ! 
நலமுடன் வளர்க ! 💕💕 

அப்பா, அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்துகள் .. ❤️💐
நூறடி சோலைச் சாலையில் , 
நூற்சேலையில் நீ ... 
துடிக்கும் உன் இமைகள் , 
சற்றே என்மீது இளைப்பாற ,  
அசைவற்ற சுமைதாங்கியாய் நான் ... 

என் மின்னல் தேசத்து வான் குழலி , 
உன் பின்னால் சுற்றிய எண்ணமெல்லாம் . 
உன் பின்னல் தேசத்து பூங்குழலின்,
மது அருந்தி மயங்கி கிடக்கிறது.

என் காதல் காரிகையே ! 
உன் காதோரம் அலைந்த காரிருள் தூரிகைகள் ! 
அவை காற்றில் வரைந்த ஓவியங்கள் , 
என் அகத்தில் இறைந்து கிடக்கின்றது.
அவையே என் அன்பின் இறையாய் இருக்கிறது.. 

பாவை உன் பார்வை நடத்தும் 
பாவை கூத்தில் எனனை தோல்பாவையாக்கினாய்.. 
மனதை குட்டிச் சுவறில் ஏற்றினாய்..

ஆசை , ஆத்திரம் , கோபம் , துக்கமென 
வாழ்க்கை அலைகளிலும் 
அள்ளுரும் மனது .. 
உன் நினைவலைகளில் 
நீந்தும் போது மட்டுமே 
நிதானிக்கிறது.. 

எண்ணெழுத்து மறந்தாலும் , 
உன் கண்ணெழுத்து மறவாது , 
உன் மீது நான் கொண்ட 
காதலும் குறையாது , 
காணொளியில் கால் செய்து 
காதல் செய்வாள். 
அவளை விட்டு சற்று  
கண் அகன்றாலும் , 
கண் சிவக்க ஊடல் செய்வாள்,  புன்னகையை விதைத்து
பூப்பறித்து தொடுத்து 
பூமாலையாக கட்டிவைத்த 
பூவையவள் . 
கண்ணில் நீர்தேக்கி 
கடமையை கடப்பவன் - எனக்கு 
காலத்தின் கருணையினால் 
கிடைத்த காதலி அவள்.. 

காதலுக்கு காதலுடன் அகவை தின வாழ்த்துகள்.. ❤️💞💞
உன் அல்லிப்பூ இதயம் தொட்டு , 
அலங்கார மேடையிலே 
அரசங்கால் நட்டு ,
விலையில்லா சித்திரம் உன்னை ! 
எனக்கென பத்திரம் பதிந்தநாள்.. 

அன்பிற்கினியவளுக்கு,
திருமணநாள் வாழ்த்துகள் .. 
நெய்தல் அழகு கண்டு - நீ 
மகிழ்ச்சியில் திளைப்பதுண்டு .
ஆர்ப்பரிக்கும் அலைகள் போல 
மனமெல்லாம் துள்ளி ஆட , 
கதிரவனை கையில் பிடிப்பாய் , 
காற்றிலே நீ பறப்பாய்.. 
மண்ணரிக்கும் கடும்புனல் முன், 
மண்கோட்டை நீ அமைப்பாய்..
கல்லரிக்கும் கடல் நீரில் . 
கால் நனைத்து நீ நகைப்பாய்.. 
அலை தவழும் அளம் கண்டு 
அகம் நெகிழும் அரும்புக்கு 
அகவை தின வாழ்த்துகள் ..💐

- அன்புடன் அப்பா , விக்கி இராஜேந்திரன் . ❤️
என்னவளே !
அன்பான சொற்கள் பல தேடி !
சொன்ன கவிதைகள் ஏதும்,
உன் மனம் தொடவில்லையடி !
என் காதல் பொய்யென்றும் ,
கண்கள் பொய்யேன்றும் ,
பொய் கோபம் காட்டி
முகம் வாடி முன் நின்றாய் !
வாடிய பூக்களில் ஆக்சிஜன் இல்லையடி...
ஆக்சிஜன் இன்றி  இதயம் 
இயங்குவதும் இல்லையடி...
சிறுவயதில் சித்தம் சிதறி
சிந்திய வார்த்தைகள் எல்லாம் 
என் சிந்தனையின் எச்சமடி. 
நீ எனக்கு கிடைத்தது 
கற்பனையின் உச்சமடி...
பிரம்மன் எழுதிய அழகிய
கவிதை நீ இருக்க.
அதை தாண்டி கவிதை என்ன
நான் படைக்க..
கண்கள் கூட பொய் பேசலாம் !
கண்ணீர் பொய் பேசாது !
மருவிதழ் மலர்ந்த மலரே .. 
மனமெல்லாம் நிறைந்த உறவே ! 
சித்திரத்துப் பூப்போல சிதையாத 
உழுவலன்பு உடையவளே !! 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .. 

》》》》》》》》》》》》》》》
மணம் மயங்கா சுரும்பு - நான் 
உன் மனம் மயங்கி போனேன். 
நீ என் கை பற்றி என் பின் நடப்பதை விட ! 
நாம் கை கோர்த்து நடப்பது ,
தான் இனிமை என அறிந்து , 
வருடங்கள் பத்து பறந்து போயின! 
என்னவளே!! கை கோர்த்தே,
கால் பதிப்போம் ஒன்றாக ! ..  

》》》》》》》》》》》》》》》
உன் கண் மலரும் கனவெல்லாம் ! 
நனவாக்க ஈன்றவர் யாம் இருக்க ..
கயந்தலை போல் களமாடு ! 
முளரி போல் பூத்தாடு... 
தமிழர் அறம் போற்றும் பெதும்பையாய் !
என் மகளே ! வாழ்க நீ பல்லாண்டு .. 
எங்கள் அன்பில் பிறந்தவளுக்கு !!
பிறந்தநாள் வாழ்த்துகள் !! 

》》》》》》》》》》》》》》》
மணமிகுந்த மலர்வனமாய், 
மணக்கும் இந்த வாழ்வு ,
உன்னை மணந்ததால் வந்ததடி... 
என்னில் நீயும் .... 
உன்னில் நானுமாய்.. 
ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்து.. 
பத்தாம் ஆண்டு தொடக்கம்..

》》》》》》》》》》》》》》》
என்னவளே நீ !
என் காதலை அறியாதள் அல்ல.
என் காதலை புரியாதவள் ! 
என் கிறுக்கள்களை கவிதை 
என்று நினைப்பதுபோல்.! 
என் உளறள்கள் தான் காதல் 
என்று நினைத்து விடாதே.! 
என் தனிமைகளில் விழிகளில் வழிந்தோடும்! 
கண்ணிரில் கலந்து இருக்கின்றது.,
உண்மைக் காதல்..!!

》》》》》》》》》》》》》》》
துன்பம் தான் உன்னை விட்டு தூரமாய் இருப்பது .. 
துயரம் தான் துயிலில் மட்டும் நீ ! நிழலாய் வருவது 
தூரம் தொலைத்து.. 
துணையுடன் இருக்க ஆசைதான் .. 
கட(ன்)மை என்னும் சாரல் நின்றாலும் .  
பொறுப்பு என்னும் தூவானம்
தூரிக்கொண்டு தான்இருக்கிறது.. 

》》》》》》》》》》》》》》》
இதழ்கள் விரிய !
அழகாகும் மலர் போல், 
அகவை விரிய, 
அழகாகும் என் பூவையே...
உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.. 

》》》》》》》》》》》》》》》
கண்களால் காதல் செய், 
 காயப்படுத்தாதே..,
உதடுகளால் புன்னகை செய்.. 
என் உயிரை வதைக்காதே...,

》》》》》》》》》》》》》》》
தென் பொதிகை எனில் தவழும் .. 
தென் சென்னை பருவக்காற்றே - நீ
உள்ளம் உணர்ந்து பொழிகின்ற -அன்பு 
தூரலாய் தொடங்கி சாராலாய் தொடர்கிறது.....

》》》》》》》》》》》》》》》 
வருடங்கள் தோறும்
வண்ணங்கள் மிகும் - என் 
வண்ணத்துபூச்சிக்கு ... 
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. 

》》》》》》》》》》》》》》》
புன்னகை பூத்தாய் பெண்ணே! 
என் மணப்பெண்ணாய்,  
மந்திரப்புன்னகை பூத்தாய் ..
என் மண்ணின் மொழி பேசி.. 
என்னிடம் கிண்டலாய் .. 
புன்னகை பூத்தாய் .... 
என் காதலை சொல்ல.. 
முதன்முதலாய், 
வெட்கப்புன்னகை பூத்தாய்.

》》》》》》》》》》》》》》》
நெஞ்சில் காதல் இருந்தாலும்,
வார்த்தைகளால் காயப்படுத்துகின்றாய்.. உள்ளத்தில் நான் இருந்தாலும்.
உதட்டில் காட்ட மறுக்கின்றாய்... 
இதயங்கள் பல எனக்காக துடித்தாலும்.... 
என் இதயம் துடிப்பது உனக்காக என புரிய மறுக்கின்றாய். 
உயிரையே நிழலாக கொடுத்தாலும் .. 
அதில் இளைப்பாற மறுக்கின்றாய் ! 
என்னவளே ! 
காயப்படுத்தாதே ..
என்னை மட்டும் அல்ல
என் காதலையும் தான் .. 

》》》》》》》》》》》》》》》
மீண்டும் பார்ப்பேனா என்று ஏங்கினேன் அன்று..
மீண்டும் பார்த்தேன் அன்றை விட அழகாய் இன்று.
துள்ளி திரியும் கலைமானை மறைந்து இருந்து,
வேடன் வில்லால் அடிப்பது போல்,
உன் அடர்ந்த கார் கூந்தல் மறைத்த,
காண்டீப விழிகொண்டு தாக்கிவிட்டாய் என்னை.
துடிக்குதடி இதயம் மரணவலியில் அல்ல...
உன் மீது கொண்ட காதல் வலியால்...
துடிக்கின்ற இதயத்திற்கு மருந்திட்டு விடு..
என்னை மறந்து விட்டுவிடாதே......

》》》》》》》》》》》》》》》
கனவு மெய்படவேண்டும்.....
நான் அவளை பார்த்தேன்,காதலித்தேன்..
இது கனவு அல்ல நிஜம்...
அவள் என்னை பார்த்தால்,காதலித்தால்..
இது நிஜம் அல்ல கனவு....
என் கனவு மெய்படவேண்டும்....

》》》》》》》》》》》》》》》
வண்ணங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சி நீ-என்
எண்ணங்கள் முழுவதும் நீதான் பறக்கின்றாய்.
இரவினில் மிளிரும் மின்மினி நீ- என்
இதயம் முழுவதும் நீதான் மிளிருகின்றாய்.
சிட்டாய் பறக்கும் சிட்டுக்குருவி நீ-என்
சிந்தனை முழுவதும் உன் சிறகை விரிக்கின்றாய்.
அந்தரத்தில் பறக்கும் அழகிய மரங்கொத்தி நீ-என்
இதயத்தை காதல் என்னும் அலகால் அழகாய் செதுக்குகின்றாய்...

》》》》》》》》》》》》》》》
மார்கழி மாதம் அதிகாலை நேரம் கோவிலுக்கு சென்றேன்... 
அன்று பார்த்தேன் அவளை,
மஞ்சள் பூசிய வெண்ணிலவு முகம்-
அதில் கோடிட்ட சந்தனத்தின் மேல் சிறு துளி குங்குமம்.
குளிரில் விறைத்த மடிப்புகளோடு செவ்விதழ் புன்னகை.
காதில் தொங்கும் தங்கத்தேர் தோடு,
தேரை இழுப்பது போல் காதோரம் சுருண்ட கூந்தல் .
அந்த நெடுங்கூந்தல் செடியில் அன்று மலர்ந்த ஒற்றை ரோஜா.
அழகு உடல் மறைத்த இளமஞ்சள் பட்டுத்தாவனி.
தாவனியை சரி செய்யும் மருதானியில் சிவந்த கைகள். 
அவளை பார்த்தேன் அன்று. இன்னும் அவளை என்னால் மறக்கமுடியவில்லை இன்று.......

》》》》》》》》》》》》》》》
பருவகாலத்தில் பூக்கும் பூக்கள் மட்டும் அல்ல
பருவத்தில் உன் முகத்தில்
மலரும் பருக்களும் 
அழகு தான் அன்பே.......

》》》》》》》》》》》》》》》
மீண்டும் வேண்டும் அந்த குழந்தை பருவம்.....
பாட்டியின் சேலையில் தொட்டில்......
தாத்தாவின் துண்டில் வேட்டி...
அம்மாவின் கையால் அரைத்த மாவில் சுவையான இட்லி....
அப்பா அன்பாக தந்த அம்பது பைசா. ... நண்பர்களுடன் காலையில் கபடி....
இரவில் கண்ணாமூச்சி.....
மீண்டும் வேண்டும் அந்த குழந்தை பருவம்.....

》》》》》》》》》》》》》》》
மலரே நீ வெறுவாதே,
மனதுக்குள் குழம்பாதே!
மலை தேனீ நான் அல்ல,
மலர் வண்டும் நான் அல்ல!
மலரே உனை தாங்கும்,
மலர் தண்டாய் நான் இருப்பேன்,
எனை விட்டு நீ பிரிந்தால்!!
மறுநிமிடம் நான் இறப்பேன்!!!!!!

》》》》》》》》》》》》》
அவள் என்னிடம் ஆடிய..
 காதல் நாடகத்தில்!!!
நான் காவியத்தலைவன்,
அல்ல
 காவியின் தலைவன்!!
ஆணுக்குள் இருக்கும் பெண்மைபோல்... 
பகல் நிலவாய் பகலவனும்..
பருவம் அடைந்த மேகங்களும் ..
முதல் சாமம் முடிந்தும் ,
முடிவில்லா காமத்துடன் ,
சீண்டல்களும்,  சில்மிஷமுமாய்.
அன்பு மொழி பேசுகின்றார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
காதல் மொழி பேசினாலும் ..
தீரவில்லை காதல் !
காதலிக்கட்டும், காதலிக்கட்டும்.. ..
அவர்களின் காதலில் பிறந்தது தானே,
இந்த பூமியும் பூமியில் உள்ள உயிர்களும் ...

- விக்கி இராஜேந்திரன் .✍✍✍✍✍

Comments

Post a Comment

Popular posts from this blog

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்