கடைக்குட்டி சிங்கம் .

     சிறுவயதில் இருந்தே விடுமுறை நாட்களில்  அப்பாவுடன்  கடைக்கு சென்று வந்து கொண்டிருந்ததால் நான் தெற்கு ஆத்தூர் பஜாரில் பலருக்கும் பரீட்சியமான முகம் ஆகி போனேன் . அது சிலநேரங்களில் நல்லதாகவும் பலநேரங்களில் அதுவே  கெட்டதாகவும் மாறி போகும்.  திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் விலங்கியல் படித்த போது ஒருநாள்  வகுப்பை கட் அடித்து விட்டு நண்பர்களுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு திருவிழா பார்க்க சென்றேன் . அங்கு அப்பாவிற்கு நன்கு பழக்கமான ஒருவர் என்னை பார்த்திருக்கின்றார் நான் அதை கவனிக்கவில்லை. சில நாட்கள்  கழித்து ஒருநாள் நான் அப்பாவுடன் கடையில் இருக்கும் போது வந்து தம்பி உன்னை அன்னைக்கு  திருச்செந்தூர் கோவில் பக்கம் பார்த்த மாதிரி இருந்ததே என்று கூற. அதை கேட்டு அப்பா என்னை பார்த்து முறைக்க எனக்கு பில்டிங் மட்டும் அல்ல பேஸ்மென்டும் சேர்ந்து ஆட்டம் கண்டுவிட்டது. நான் சற்று சுதாரித்துக் கொண்டு அப்படி இருக்க வாய்பில்லை என முந்தானை முடிச்சு ஊர்வசி மாதிரி துண்டு போட்டு தாண்டாத குறையாக தாண்டி  "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்." என்னும் திருக்குறளுக்கு ஏற்ப என் நன்மை கருதி பொய் சொல்லி அப்பாவிடம் அடிவாங்காமல் தப்பிப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிட்டது . தோளுக்கு மேல் வளர்ந்த பையனை அடிக்க கூடாது என்பார்கள் . நான்  தோளுக்கு மேல் வளரவில்லை ( குள்ளம்)  என்பதால் என்னவோ நான் கல்லூரியில் படிக்கும் போதும் அப்பாவிடம் கொட்டு வாங்கி கொண்டு தான் இருந்தேன். 
                    ஓர் நாள் எங்கள் ஊர்காரர் ஒருவர் அப்பாவிடம் வந்து இன்னைக்கு ஒரு விஷயம் நடந்தது என்று  சிரிந்துக்கொண்டே கூற ஆரம்பித்தார் . அவர் வெற்றிலை கொடிக்காலில் வேலை பார்த்துவிட்டு மதியம் இரண்டு மணிக்கு வாய்கால் ரோட்டில் சைக்கிளில்  வீட்டிற்கு திரும்பி  போய்கொண்டு இருக்க.  எங்கள் ஊர் வாய்க்கால் பாலத்தின் எதிர் பக்கம் சில குட்டை ஜாதி செவ்விளனி மரங்கள் உண்டு . அங்கு ஒர் சிறுவர்கள் பட்டாளம் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டு இருந்திருக்கின்றது. கீழே மரத்தை சுற்றி சிலர் நின்று கொண்டு இருக்க ஒரு சிறுவன் மரத்தில் ஏறி இளநீரின் காம்பை திருகி, திருகி இளநீயை பறித்து கீழே போட  தொப், தொப் என இளநீர் விழும் சத்தம் கேட்டு அந்த பக்கம் நோக்கிய எங்கள் ஊர்காரர் ஏதோ ஓர் சிறுவர்கூட்டம் இளநீர் பறிப்பதை பார்த்து , யார்லல... அது இளநீர் பறிக்கின்றது என்று சத்தம் போடவும் சிறுவர் கூட்டம் இளநீரை தூக்கி கொண்டு சிதறி  ஒடி இருக்கின்றது மரத்தில் ஏறிய சிறுவனோ மரத்தில் இருந்து அருகில் இருந்த வாழை தோட்டத்திற்குள் குதித்து ஓடி இருக்கிறான். அவரிடம் கீழே நின்ற பசங்களில் ஒருவர் மாட்ட அப்புறம் தான் அவருக்கு தெரிந்து இருக்கிறது. அனைவரும் நமது ஊர் சுட்டி பசங்க என .  பிறகு அவர் எல்லாரையும் எச்சரித்து அனுப்பி இருக்கின்றார் .  
     எங்கள் ஊர்காரர் என் அப்பாவிடம் முக்கியமாக கூறியது . மரத்தில் இருந்து வாழை தோட்டத்திற்குள் குதித்து ஓடியவனை பற்றி தான் . அது வேறு யாரும் அல்ல என் தம்பி தான். எனக்கு அப்போது என் தம்பி மீது கொஞ்சம் பொறாமை உண்டு . விடுமுறை நாட்களில் என்னை மட்டும் கடையில் போட்டு அப்பா என்னை  வறுத்து எடுக்க .அவன் மட்டும் ஜாலியா ஊர் சுத்துரானே என்று . ஆனா இன்னைக்கு மாட்டிக்கிட்டான்டா மைனரு அவனுக்கு வீட்டில சாமி கொடை இருக்கு என நினைத்து அப்பாவை பார்க்க . அவரும் அவர் நண்பரும் அவன் குதித்து ஓடியதை பற்றி சிலாகித்து பேசி சிரித்து கொண்டு இருந்தனர் . எனக்கோ ஆச்சர்யம் !!! சின்ன, சின்ன தப்பிற்கு எல்லாம் என்னை கண்டிக்கும் அப்பா .  என் தம்பி செய்ததை பெரிதாக எடுத்து கொள்ளாமல் இருவரும் சிரிப்பதை பார்த்து . கடைக்குட்டி என்றால் எல்லார் வீட்டிலும் செல்லம் தான் போலும்.. 
( எங்க வீட்டு மைனருடன் நான் ) 

விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍

Comments

  1. இளையதம்பி எங்க மரத்துல இளநீ பறித்தது இன்னைக்கு தாண்டா உண்மையை சொல்லி இருக்கா பரவாயில்லை அந்த வயசுல இதெல்லாம் நடக்கிறது தாண்டா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்