பாபநாசம் பரிச்சயமற்ற காட்டுப் பகுதியில்

 நமது ஊரின் நீர் நிறைந்த குளத்தின் கரையோரம் , இரண்டு பக்கங்களும் மரங்கள் அடர்ந்த அந்த சாலையில், குளிர்ந்த காற்றை சுவாசித்துக்கொண்டே , மேனி சிலிர்க்க மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதே தனி சுகம் தான் .. வெளிநாட்டில் ஒற்றை அறைக்குள் அடைந்து கிடந்த எனக்கும் நான் வரும் வரை எனக்கா காத்திருக்கும் என்னவர்களுக்கும் அது தான் விருப்பம். ஊருக்கு வரும் போதெல்லாம் ஊர் சுற்றும் வகையில் அருகில் இருக்கும் சுற்றுலா தலங்களுக்கு சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி விட்டு வருவது வழக்கம் . இந்த முறை எங்கு செல்லலாம் என கூகுளில் தேடியதில் அருகில் இருந்த மாஞ்சோலைக்கு செல்லலாம் என்று முடிவு செய்து கிளம்பினேன் . வீட்டில் இருந்த தம்பியும் , அவர் மனைவியும் எங்களுடன் இணைந்து கொண்டனர் . 

     அடுத்த நாள் காலையில்  ஊர் கோவிலில் கணபதி ஹோமம் வளர்த்து கிட்டு இருந்தாங்க. கோவில் கொடைக்கு கால் கோள் நடுதல் நிகழ்வுக்காக . கால்நட்டிய பிறகு வெளியூர் பயணங்களையும் , அங்கு சென்று தங்குவதையும் தவிர்க்க வேண்டும் என்ற சாஸ்த்திர ,சம்பிரதாயங்களில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டுல் இருந்தே கோவில் கோபுரத்தை நோக்கி கையை உயர்த்தி ஒரு கும்பிடு போட்டு விட்டு. கால் கோள் நடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே ஊர் எல்லையை தாண்டி ஆத்தூரான் கால்வாயை ஒட்டி நீண்டு செல்லும் அந்த தார் சாலையில்  தென்மேற்கு பருவக்காற்று வீசும் தென் பொதிகையை நோக்கி கூகுள் வரைபடத்தை துணையாக கொண்டு யமஹா என்ற பெயர் கொண்ட அந்த இரண்டு மோட்டார் சைக்கிளும் மெதுவாக ஓடத்துடங்கியது . சேதுவாய்க்கால் பாலத்தை அடைந்து அங்கிருந்து ஏரல் வழியாக வடகால்வாய் ரோட்டின் கரையில் அமைந்த சாலையில் சென்று கொண்டு இருந்தேன் . வடகால்வாயை இவ்வளவு அழகாக இதற்கு முன் நான் பார்த்தது இல்லை .வாய்காலில் வந்த தண்ணீர் சிறிதளவே என்றாலும் ஓடிக்கொண்டே இருக்கும் அந்த நீரில் உணவு தேடி கொண்டு இருக்கும் நீண்ட செங்காலுடைய நாரைகளும், வெளிர்,பழுப்புநிற இறகையுடைய கொக்குகளும், கரை ஒரமாக ஓங்கி வளரந்த மரங்களின் கிளைகளில் நீண்ட தலைவாழை இலை போன்ற இறகுகளை  பனை ஓலை போன்று விரித்து இருந்த  மயில்களும், இரட்டை வால் குருவியும் , சிட்டுக்குருவிகளும். வானம் பாடிகளும், மாங்குயில்களும் , மீனை பிடிக்கும் மீன்கொத்திகளும் , விடிந்துகொண்டு இருக்கும் அந்த பொழுதை வரவேற்கும் விதமாக அழைக்கும் ( கரையும்) காகங்களுமாக ஏதோ பறவைகள் சரணாலயம் போல இருந்தது . இவ்வாறு நீண்ட அந்த சாலை முடிந்த இடம் திருவைகுண்டம் அணைக்கட்டு .  அங்கு இருந்து திருசெந்தூர் - திருநெல்வேலி சாலையை அடைந்து அங்கு இருந்து  மாஞ்சோலையின் நுழைவாயில்லான மணிமுத்தாறு அணையை நோக்கி பயணித்து அணையை அடைந்தோம்.   அது கோடைகாலம் ஆதலால் அந்த பரந்து விரிந்த அணைக்கட்டின் நீர்மட்டம் தரை தொட்டு சிறிய குளம் போல காட்சி அளித்தது . மாஞ்சோலை வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி, மாஞ்சோலைக்குள் நுழைய வேண்டும் என்றால் வனத்துறையின் அனுமதி வேண்டும் . அது மட்டும் அல்லாமல் அங்கு மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதி இல்லை  இது எதையும் தெரிந்து கொள்ளாமல். நாங்கள் அங்கு இருந்த வனத்துறையின் செக்போஸ்ட்டில் அனுமதி கேட்க . அங்கு பாதை செப்பனிடும் பாதை நடைபெறுவதால் மோட்டார் சைக்கிளில் செல்ல அனுமதிக்க முடியாது என்றும் இது கோடை காலம் ஆதலால் அங்கு சென்று தங்குவது நீங்கள் விரும்புவது போல் வசந்தமாக இருக்காது என்றும் கூறி நாசுக்காக அனுமதிக்க மறுத்து விட்டனர். என்ன செய்வது என்று அறியாமல்  மீண்டும் கூகுளை நாடி அங்கு இருந்து மிக அருகில், வருடம் 365 நாட்களும் தண்ணீர் விழும் பாபநாசம் அகஸ்தியர் அருவியையும் அதன் அருகில் காட்டுக்குள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கட்டுபாட்டில் இருக்கும் விடுதியில் தங்குவதற்கு முடிவு செய்தேன்.  அந்த விடுதியில் தங்கவேண்டும் என்றால்  அம்பாசமுத்திரம் வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும் என்றும் இருந்தது . எனவே மாஞ்சோலை திட்டத்தை பாபநாசம் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய காட்டு பகுதி என்று மாற்றிவிட்டு . மணிமுத்தாறு அணையை விடு இறங்கி வந்தோம்.  அணையின்  அடிவாரத்தில் சற்று தொலைவில் பனை ஓலையில் வேய்ந்த சிறிய ஹோட்டல் இருந்தது அங்கு  சூடாக இட்லியும் சுவையான வடையும் காலை உணவாக சாப்பிட்டு முடித்து விட்டு . அங்கு இருந்து புறப்பட்டு அம்பை வனச்சரகத்துறை அலுவலகத்தை அடைந்து வந்த காரணத்தை கூறினோம். அவர்களோ  இப்போது எல்லாம் நேரடியாக ஆன்லைன் புக்கிங் தான் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள் . இணையத்தில் நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த இணையம் சரியாக இயங்காத காரணத்தால் எங்களால் அவற்றில் முன்பதிவு செய்ய முடியவில்லை .  எனவே  நேரடியாக அங்கு சென்று பார்க்கலாம் என்று முடிவு செய்து பாபநாசம் வந்து சேர்ந்தோம் . இதற்கு முன்பும் நான் பலமுறை அங்கு வந்து இருக்கின்றேன் அருவியில் குளித்து விட்டு திரும்பி சென்று விடுவோம் . அதை தாண்டி அதற்கு மேல் உள்ள காட்டு பகுதிக்குள் சென்றது கிடையாது . இதுதான் முதல் முறை . நேராக விடுதிக்கு செல்லலாம் அங்கு இடம் இல்லை என்றால் பாபநாசம் நகரபகுதியில் இருக்கும் எதாவது ஒரு ஹோட்டலில் தங்கி கொள்ளலாம் என்று முடிவு செய்து முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் விடுதியை நோக்கி சென்றோம். சற்று கரடுமுரடான மோசமான ரோடுதான் . சிறிது தூரம் சென்ற பிறகு வனத்துறையின் செக்போஸ்ட். அங்கு இருந்தவரிடம் காரணத்தை கூறி அனுமதி வாங்கிவிட்டு அந்த அடர்ந்த காட்டு பகுதிக்குள் பயணம் ஆனோம் . போகும் வழியில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்த வனவிலங்குகளை பற்றிய எச்சரிக்கை பலகைகள் எங்களுக்கு அச்சமூட்டின . கொஞ்சம் தூரம் சென்றதும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே  கடினமான இரும்பினால் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை கடக்க வேண்டியது இருந்தது . இதற்கு முன்பு இருந்த பழையபாலம்.  சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது . அதனால் தான் இந்த தற்காலிக இரும்பு பாலம் என பின்பு அறிந்து கொண்டேன் .அதை கடந்து  மீண்டும் காட்டுக்குள்  பயணம் செய்து விடுதியை அடைந்து அங்கு இருந்த வனத்துறை அலுவலர்களை சந்தித்து அறை பற்றி விசாரித்தோம். நல்ல வேலை எங்களுக்கு இரண்டு  தனித்தனி அறைகளையுடைய தனி காட்டேஜ் கிடைத்தது . அவ்வாறே அவர்கள் சில எச்சரிக்கைகளையும் கூறினார்கள் . இரவு ஆறுமணிக்கு மேல் காட்டு பாதையில் செல்ல வேண்டாம் என்றும் காட்டு மிருகங்களால் ஆபத்து ஏற்பட கூடும் என்றும் கூறினார்கள் அவர்கள் கூற ,கூற உள்ளுக்குள் திகில் ஏற்பட்டது அதை வெளிக்காட்டி கொள்ளாமல் தலையை ஆட்டிவிட்டு . எங்கள் அறைக்கு வந்து சேர்த்தோம். அரசாங்க விடுதி எப்படி இருக்குமோ என்று நினைத்து சென்ற எனக்கு மிகுந்த ஆச்சர்யம். சுத்தமான படுக்கைகளுடன் கூடிய விசாலமான படுக்கையறையும் , ஒட்டினார் போல குளியலறையும் இருந்தன. இரண்டு அறைக்கும் பொதுவான வெளிதாழ்வாரம் இரும்பு கம்பிகளால் அடைக்கப்பட்டு காட்டு மிருகங்கள் உள்ளே நுழைய முடியாதவாறு அடைக்கப்பட்டு இருந்தது . எங்களை அழைத்து வந்தவர் எங்களிடம் அங்கு இருக்கும் வனத்துறை அலுவலகம் அருகில் கேண்டின் இருப்பதாகவும் இரவு உணவு வேண்டும் என்றால்  எங்களுக்கும் சேர்த்து உணவு தயாரித்து விடுவதாகவும். நாங்கள் அங்கு சென்று உணவு சாப்பிட்டு கொள்ளலாம்  என்றும் கூறினார் . நாங்களும் இரவில் நகர்புறம் செல்ல முடியாது என்பதால் அங்கேயே சாப்பிட்டு கொள்ளாம் என்று நினைத்து இரவு சாப்பாடு எங்களுக்கும் சேர்த்து தயார் செய்ய கூறிவிட்டோம் .அவர் போன பிறகு  செல்போனை எடுத்து பார்த்த பிறகுதான் தெரிந்தது . செல்போன் அலைவரிசை அந்த பகுதியில் கிடைக்காது  அதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது என்று .  பின்பு வெளியே சென்று சுற்றிவிட்டு மீண்டும் ஐந்து மணிக்கு எல்லாம் அறைக்கு வந்து ஒரு குட்டி தூக்கம் போட்டோம் . விழித்து பார்த்தால் இரவு ஏழு மணி. எழுந்து சாப்பிட செல்வதற்கு தயார் ஆனோம் .


அறையை விட்டு வெளியே வந்து கம்பிகளால் அடைக்கப்பட்ட தாழ்வாரத்திற்கு வந்தால் தம்பி  இருட்டுக்குள் அருகில் இருந்த மரக்காட்டிற்குள் எதையோ உத்து பார்த்துகிட்டு இருந்தான் . நான் அருகில் சென்று என்னடா பார்க்கிற என்று கேட்க.  அறைக்கு வெளியே உள்ள மரக்கூட்டத்திற்குள் ஏதோ சத்தம் கேட்கிறது என்று கூறிவிட்டு மீண்டும் இருட்டாக இருந்தன மரக்கூட்டத்தை நோட்டம் விட ஆரம்பித்தான் . அதற்குள் அங்கு தம்பியின் மனைவியும், என் மனைவி , மகளும் அங்கு வந்து காரணத்தை அறிந்தவுடன் அனைவருக்குள்ளும் திகில்படர ஆரம்பித்து விட்டது .. தம்பி சிறிதாக விசில் சத்தமிட அங்கு காட்டின் இருட்டுக்குள் மரங்கள் இருந்த பகுதியில் காய்ந்த சருகுகளுக்குள் ஏதோ அங்கும் இங்கும் ஓடும் சத்தம் நன்றாகவே கேட்டது . அது மட்டும் இல்லாமல் நாங்கள் தங்கி இருக்கும் இடம் புலிகள் காப்பக காட்டுக்குள் என்பதால் நாங்கள் இருந்த இடம் பாதுகாப்பானதாக   இருந்தாலும் வெளியில் செல்ல பயம் . இப்போது அனைவரும் சாப்பிட வேண்டும் என்றால் எங்கள் காட்டேஜ்-ல் இருந்து சுமார் நூறு அடி தூரத்தில் இருக்கும் அந்த கேண்டீனுக்கு , எதிரில் இருக்கும் மரக்கூட்டத்திற்குள் செல்லும் ஒத்தையடி பாதையை கடக்க வேண்டும். எங்களுக்கோ  காட்டின் இருட்டுக்குள் இருக்கும் மிருகம் புலியாக இருக்குமோ என்ற எண்ணத்தில் வெளிய செல்ல பயம் . நேரம் வேறு கடந்து கொண்டே செல்கின்றது . எட்டு மணிக்கு கேண்டீனை மூடிவிடுவார்கள்.  என் செய்வது என்று தெரியாமல் பார்த்து கொண்டு இருந்த போது அங்கே கேண்டீன் அருகில் வனத்துறையினர் மிகவும் சகஜமாக அழைந்து கொண்டு இருந்தனர் . அதை பார்த்த பிறகு எனக்கு சற்று தைரியம் வந்தது . ஏன் என்றால் அங்கே புலி வந்து இருந்தால் இவர்கள் இவ்வளவு சகஜமாக இருக்க வாய்ப்பு இல்லை . நான் என் குடும்பத்தினரிடம் வாசலில் இருக்கும் என் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கை ஒளிர வைத்து அந்த காட்டிற்குள் இருக்கும் விலங்கு என் என்பதை அறியலாம் என்று கூறி நான் வெளியே செல்ல முயற்ச்சி செய்ய . அவர்கள் யாரும் என்னை அனுமதிக்க வில்லை . எங்களுக்கு இரவு உணவே வேண்டாம் அறையில் இருப்பதை உண்ணலாம் என்று கூறினார்கள் . நான் அவர்களிடம் சூழ்நிலையை எடுத்து கூறி நான் வெளியே சென்று முகப்பு விளக்கை ஒளிரவைக்க முயற்ச்சி செய்கின்றேன்.  எதாவது தாக்க வந்தால் உடனடியாக  அறைக்குள் வந்து விடுகின்றேன் என்று  வாசல் கதவை திறந்து வைக்க சொல்லிவிட்டு . மெதுவாக இரும்பு கதவை திறந்து வெளியே சென்று என் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கை ஒளிரவிட அதன் வெளிச்சம் அந்த மரக்கூட்டத்தின் அடர்ந்த இருட்டுக்குள் ஊடுருவிச் செல்ல. அங்கு ஒரு பெரிய காட்டு பன்றியும் அதன் குட்டிகளும் அங்கு தரையில் விழுந்து கிடந்த உலர்ந்த இலைகளை தன் கூர்மையான கொம்புகளால் கிளறிவிட்டு வண்டுகளையும் பூச்சிகளையும் உண்டு கொண்டு இருந்தன . மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்கின் வெளிச்சம் பட்டவுடன் பயந்து ஓடி மறைந்தன.  எங்களுக்கோ பயம் நீங்கி சிரிப்பு வந்தது . பின்பு நாங்கள் எங்கள் மோட்டார் சைக்கிளிலேயே கேண்டீனை நோக்கி சென்றோம் பாதையில் நிறைய மான்கள் எங்கள் வண்டிகளை கடந்து சென்றன. . பிறகு இரவு உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் அறைக்கு வந்து நன்றாக தூங்கி போனோம். மறுநாள் காலையில் அறையை சுற்றி குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தது . அவற்றை எல்லாம் கடந்து அகஸ்தியர் அருவிக்கு சென்று நன்றாக உடலும் ,மனமும் குளிர குளித்து விட்டு.  பாபநாசம் சிவனை வணங்கிவிட்டு .பிரம்மாண்டமான பாபநாசம் அணைக்கட்டையும் மற்ற பகுதிகளையும் சுற்றி பார்த்து விட்டு வீட்டுக்கு திரும்பினோம். பயணம் புதிய அனுபவங்களுடன் நினைத்ததை விட மகிழ்ச்சிகரமாகவும் மனதிற்கு நிறைவாகவும் அமைந்தது . 
- விக்கி இராஜேந்திரன் . ✍✍

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்