கடவுளின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் பங்கு.


மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழி கண்டுபிடிக்கப்பட்ட பின்புதான் அறிவுப்புரட்சி உண்டானது . மொழி இல்லையென்றால்  மனிதனும் ஒரு  விலங்கை போன்ற வாழ்க்கை தான் வாழ்ந்திருப்பான்.  விலங்குகளுக்கும் மொழி இருக்கின்றது . அதன் மூலம் நிகழ்காலத்தில் ஒரு சிங்கம் வருவதை எச்சரிக்கை ஒலி எழுப்பி தன் சக விலங்குகளை பாதுகாக்கமுடியும். ஆனால் மனிதர்களை போல  நிகழ்காலத்தில் மட்டும் அல்ல எதிர்காலத்திலும், இறந்தகாலத்திலும்  நடப்பவற்றை, நடக்கபோவதை, நடந்ததை கற்பனை கலந்து கூறமுடியாது. மனிதனால் அங்கே ஆற்றங்கரையில் உள்ள மரத்தின் அருகில் ஒரு சிங்கத்தை பார்த்தாக கூறமுடியும் . ஆனால் விலங்குகளால் அது முடியாது.
அந்த திறன் தான் மனிதனின் மொழிக்குரிய தனித்துவமான அம்சமாகும்.மனிதன் தனக்கு தெரிந்தவற்றை ,தான் ஒரு போதும் பார்த்திராத, தொட்டிராத, முகாந்திரமில்லாத ஏராளமான விஷயங்களை பற்றி பேசுவதற்கு மனிதர்களால் முடியும் .முன்பு ஒரு சிங்கம் வருகின்றது என்று எச்சரிக்கை மட்டும் தான் கூறமுடிந்தது.  அறிப்புரட்சியின் விளைவாக சிங்கம் தான் நம் இனத்தின் காவல் தெய்வம் என்று கூறுவதற்கான திறனை மனிதர்கள் பெற்றனர் . இவ்வாறு அவன் பேசிய வம்பு பேச்சுக்களில்  வழியாக செவிவழிக்கதைகளும், பாரம்பரியக் கதைகளும் அவற்றின் மூலமாக கடவுள்களும், மதங்களும் தோன்றின .
யதார்த்தத்தில் இல்லாத விஷயங்களை பற்றி பேசுவது மனித இனத்திற்கு மட்டுமே சாத்தியமாகும் . ஒரு குரங்கிடம் சென்று நீ இப்போது கையில் வைத்து இருக்கும் ஒரு வாழைப்பழத்தை கொடுத்தால் நீ இறந்து சொர்க்கும் சென்ற பின் அங்கு உனக்கு கணக்கற்ற வாழைப்பழங்கள் கிடைக்கும் . என்று வாக்கு கொடுப்பதன் மூலம் அதனிடம் இருந்து ஒருபோதும் ஒரு வாழைப்பழத்தை வாங்க முடியாது .
   ஆனால் இது போன்ற கற்பனையான புனைகதைகள் மூலம் மனிதன் நாம் எல்லாரும் கூட்டாக செயல்படுவதை உறுதி செய்கின்றான் . உலகம் படைக்கப்பட்டு இருக்கும் விதம் பற்றி மதங்களில் அதை சார்ந்த நூல்களில் அனைவரும் நம்பும் படியான கதைகளை நம்மால் எளிதாக புனைய முடிகின்றது .
       எனக்குள்ளும் கடவுள் இது போன்ற பல வகையான செவிவழி கதைகள் மூலமாக தங்கள் பாட்டி சொன்னதாகவும்,  தாத்தா பார்த்ததாகவும் என் சிறுவயது பள்ளி தோழர்கள் கண்களை உருட்டி கைகளை ஆட்டி. விதவிதமான ஒலிகள் எழுப்பி  அவை என் கண் முன்னால்  நடப்பது போன்ற ஒர் உணர்வை ஏற்படுத்தி சொன்ன கதைகள் மூலம் தான் நான் அறிந்து கொண்டேன் . அப்போது அந்த கதைகள் என்னை பயமுறுத்துவனாகவே இருந்தன. 
              சுடலைமாடசாமி வேட்டைக்கு போகும் போது யாரும் சாமிக்கு எதிரிலேயோ அல்லது எங்கும் ஒளிந்து இருந்தோ பார்க்ககூடாது. அப்படி பார்த்தால் அவர்கள் இரத்தம் கக்கி இறந்து போவார்கள் என்றும் .  நண்பனின் ஊரைச் சேர்ந்த ஒரு அண்ணன் அதை சோதித்து பார்ப்பதற்காக சுடலைமாடசாமி வேட்டைக்கு போகும் பாதையில் உள்ள ஒரு பனை மரத்தின்  உச்சியில் ஏறி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து இருந்து இருக்கின்றார் . தீயசக்திகளை வேட்டையாட சுடலைமாடன் கோவில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டு  திரும்பி கோவிலுக்கு வந்ததும் . தீ பந்தத்தை கையில் வைத்து கொண்டு மிகவும் ஆவேசமாக ஆடிக்கொண்டே . அங்கே இருந்த மக்களிடம் .. டேய்!! என்னை பரிசோதிக்க நினைத்த ஒருவன் அங்க இருக்கிற பனைமரத்தின் கீழ் இறந்துகிடப்பதாக கூற . மக்கள் அனைவரும் ஒடிச் சென்று பார்க்க அங்க அவர் இரத்தம் கக்கி இறந்து கிடந்து இருக்கின்றார் என்று என் நண்பன் கூற முதன் முதலாக சுடலைமாடன் மீது பயம் ஏற்பட்டது . பயம் தான் பக்தியாகியது.   
                 எனக்கு கடவுள் புனைகதைகள் , செவிவழிக்கதைகள் மூலமாக ஒரு சூப்பர் ஹுரோவாகத்தான் என்னுள் உருவகப்படுத்தப்பட்டார்... இப்போது இருக்கும் தலைமுறைக்கு ,சக்திமான், பவர் ரேஞ்சர்ஸ் மாதிரி அப்போது புராணங்கள் ,இதிகாசங்கள் போன்ற கதைகள் மூலமாக கதையின் நாயகனாக யாரும் வெற்றி கொள்ள முடியாத ஒரு சூப்பர் ஹீரோவாகத்தான் கடவுள் என் மனதுக்குள் பதிவானார். கடவுள் நம்மை காப்பாற்றுவார் என்ற கதைகளை நாம் நம்பவேண்டும் என்றால் . நமக்கு சாத்தான்களின் மீது பயம் வரவேண்டும் என்பதற்காகத் தான் மோகினி பிசாசு, கொள்ளி வாய் பிசாசு , இரத்த காட்டேரி,குட்டிச் சாத்தான் என்று  அதற்கும்  பல புனைக்கதைகள்  கூறப்பட்டன. 
என் நண்பனின் தாத்தா மாட்டு வண்டியில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் திடீரென இரு மாடுகளும் முரண்டு பிடித்து நின்றன. எவ்வளவு விரட்டியும் நகரவில்லை. யாரோ கொம்பை பிடித்து வளைப்பதுபோல கழுத்தை பலமாக ஆட்டின. மணிச்சத்தமும் பீதியை அதிகரித்தது. துணிச்சல்காரரான என் நண்பனின் தாத்தா இடுப்பை தொட்டுப்பார்த்துக்கொண்டார். சூர்க்கத்தி பத்திரமாக இருந்தது.
‘அண்ணாச்சி.. நில்லுங்க நில்லுங்க’ என்று திடீரென பெண் குரல். மாட்டு வண்டியை மறித்தாற்போல நடுத்தர வயது பெண் நின்றிருந்தாள். “என்னம்மா வேணும்? நடு ராத்திரியில உனக்கு இங்கு என்ன வேல?” என்றார். பெண்ணிடம் இருந்து பதில் இல்லை. “கேக்கிறேன்ல” என்றார் அதட்டலாய். “வெத்தல போடணும். கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தா குடுத்துட்டு போங்களேன்” என்றாள் பெண்.
‘உஷாரா இரு’ என்றது தாத்தாவின் உள்மனசு. ‘பேய்க்கு இரும்பு ஆகாதுவே’ என்று ஊர் பெரியவர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை எடுத்தார். அதில் சுண்ணாம்பை தடவி பெண்ணிடம் நீட்டினார். அடுத்த கணம்.. மின்னலாய் மறைந்தது பெண் உருவம்... இப்படி பல கதைகள் .. 
        எங்கள் ஊருக்கு போகும் வழியில் ஒரு இடுகாடு இருக்கின்றது . சிறுவதில் அதை கடந்து செல்லும் போது எல்லாம் பயமாக இருந்தது . இரவில் பயம் இன்னும் அதிகமாகும் . சில நேரம் தெருவிளக்கு எரியாது அந்த நேரங்களில் பயம் இன்னும் அதிகமாகும்.  அந்த பயம் என்  தாத்தா, பாட்டி  இறந்தபிறகு அவர்களை  அங்கு அடக்கம் செய்த பின் காணமல் போனது . அங்கு இருக்கும் என் தாத்தா பாட்டியை தாண்டி எந்த தீய சக்தியும் என்னை நெருங்காது என்று என் மனதில் நம்பிக்கை தோன்றிய பிறகு பேய்களின் மீதான மூடநம்பிக்கையும் பயம் பறந்து போனது . 
இன்னமும் கிராமங்களில் இது போன்ற எண்ணில் அடங்காத புனைக்கதைகள் இருக்கின்றன அவற்றில் சில நம்பிக்கை சார்ந்ததாகவும் , நிறைய மூடநம்பிக்கை சார்ந்ததாகவும் இருக்கின்றன. எங்கள் பகுதியில் உள்ள கிராமங்களில் சில பகுதிகளில் முனி பாய்ச்சல் இருப்பதாக கூறுவர் . இரவு நேரங்களில் தினமும் அந்த குறிப்பிட்ட இடத்தின் வழியாக முனி கடந்து செல்வதாகவும், அதன் குறுக்கே யாராவது தப்பி தவறி சென்றாலும் முனி அடிச்சிரும் என்றும் . அதன் பாதையை தடுத்து சுவர் எழுப்ப கூடாது எனவும் பல வகையான கதைகள் இருக்கின்றன.         மதங்கள் , கடவுள்கள் மனிதனை ஒன்றிணைக்க புனைகதைகளால் உருவாக்கப்பட்டது .  அதுவே பிறகு சிலர் பெரும்பான்யோரை அடிமையாக்கும் கருவியானது. அறிவுப்புரட்சி ஏற்பட்டதிலிருந்து மனிதன் ஒர் இரட்டை எதார்தத்தில் வாழ்ந்து வருகின்றான். ஒரு புறம் ஆறுகள்,மரங்கள்,விலங்குகள் என பௌதிகரீதியான எதார்த்தங்கள் இருக்கின்றன.  மறுபுறம் கடவுள்கள் , நாடுகள் , நிறுவனங்கள் போன்ற கற்பனையான எதார்த்தங்கள் இருக்கின்றன . காலப்போக்கில் கற்பனையானவை அதிக சக்தி உடையதாக ஆகியது . எனவே இன்று ஆறுகள் ,மரங்கள் ,விலங்குகள் ஆகியவை தொடர்ந்து இருப்பது கடவுள், லிமிடெட் நிறுவனங்கள் , ஆதிக்க மனப்பான்மை கொண்ட வல்லரசு நாடுகள் போன்ற கற்பனையான விஷயங்களின் தயவை சார்ந்து உள்ளது
( ஆதார நூல் - யுவால் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ்")

விக்கி இராஜேந்திரன் ✍✍✍

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்