எங்கள் ஊர் மாசி மாத மகா சிவராத்திரி .

தமிழ்நாட்டின் சமூக பண்பாட்டை பேசிய அறிஞர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்த மதுரையே தமிழ்நாட்டின் பண்பாடு என்பதோடு  அமைந்து விடுகின்றனர் . ஆயினும் மதுரைக்கு தெற்கே பல நூறு கி.மீ வரை தமிழ்நாடு பரந்த நிலப்பரப்பினையுடையது என்பதை போதிய அளவில் கணிக்க முயலாமல் விட்டுவிட்டனர் .
         அந்த பரந்த நிலப்பரப்பில் இயற்கையின் அரணாக திகழும்  பொதிகை மலையில் உருவாகி முன்பு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்து . தற்போது தென்காசி ,திருநெல்வேலி , தூத்துக்குடி மாவட்டங்கள் என பிரிக்கப்பட்ட பெரும் நிலப்பகுதி வழியாக பாய்ந்து செல்லும் இடம் எல்லாம் பசுமையை பெருக்கி வளர்க்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியின்  கரையில் தான் பண்டைய தமிழரின் தொல் சமய,பண்பாட்டினை உள்வாங்கி வளர்ந்த சைவ , வைணவத்தின் முக்கிய திருத்தலங்களான நவ கைலாசமும் , நவ திருப்பதியும்  அமைந்துள்ளன. அந்த பழைய மதங்கள் காட்டும் ,  கார்த்திகை , திருவாதிரை , மாசிகளரி மற்றும் மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம் , சித்திரை பிறப்பு , வைகாசி விசாகம் , ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகிய திருவிழாக்கள் அனைத்தும் சைவமும் ,வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலை பெறுவதற்கு முன்னரே இவை  தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும் .
              
      எங்கள் பகுதியில் ஊருக்கு ஊர் அம்மன் கோவில்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் பழந்தமிழரின் தாய் தெய்வ வழிபாட்டின்  வழியாக வந்த தெய்வங்கள் . இந்த கோவில்களில் 99 சதவீதம் அனைத்தும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன .சில பெருந்தெய்வ கோவில்கள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.  கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே தமிழகம் இருந்துள்ளது . எனவே பகைப்படை வருவதென்றால் வடக்கில் இருந்துதான் வரமுடியும் . எனவே தெய்வம் வடக்குதிசை நோக்கி தன் மக்களை காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது . தாய் தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் மரபுக்குள் பதிந்தே கிடக்கின்றது . ஆத்தூரில் இருக்கும் பிரபலமான சோமநாதர் கோவில் அங்கு  இருக்கும் சோமசுந்தரி அம்மன் பெயராலே அடையாளப்படுத்த படுகின்றது. அந்த கோவில் அனைவருக்கும் அன்னை சோமசுந்தரி அம்மன் கோவில் தான் . அதே போல் தான் கத்தோலிக்க கிறுத்துவமதத்தை பின்பற்றுபவர்கள் இயேசுவின் தாயார் மரியாளை வணங்குவதும் .கத்தோலிக்க கிறித்துவ தேவாலயங்களை  கிறுத்துவர் அல்லாத மக்கள் இயேசு கோவில் என்பதற்கு பதிலாக மாதா கோவில் என்று அழைத்து வருகின்றனர்.  இவ்வாறு பழைய சமுக பண்பாட்டை கொண்ட தென்தமிழகத்தின் பல ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த பொருநை நதி ( தாமிரபரணி) நாகரிகத்தின் பெருமக்கள் நாங்கள் என்பதில் பெருமை தான் . பின்னே இருக்காதா கி.மு 3500 ஆண்டுகள் பழமையான உலகின் முதல் நாகரிகம் என்ற அறியப்பட்ட சுமேரிய நாகரிகத்திற்கு இணையான பழமைவாய்ந்த வரலாற்று சான்றுகள் சிவகளை,  ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் நடந்த அகழ்வாய்வில் கிடைத்து இருக்கின்றன.
                     அந்த நதியின் அருகில் அமைந்துள்ள எங்கள் ஊர் புன்னை சாத்தான் குறிச்சியின் பூகோளத்தில் பூவையர்கள் ஒன்று கூடி . "வான்மதி அவன் பனி நிலவாய் வெண்கதிரை ஊரெங்கும் பாய்ச்சிட". களங்கன் அவன் களங்களின்றி வீசிட்ட வெண்ணொளியில் மாசற்ற மங்கையர்கள் மகிழ்ச்சியுடன் ஆடலும் , பாடலுமாய் கொண்டாடி மகிழும் மாசி மாத மகாசிவராத்திரி தினம் அன்று எங்கள் ஊர் முத்தாரம்மனுக்கு பூஜைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பெண்களால் செய்யப்படுகின்றது . அதற்கு தேவையானவற்றை  வாங்குவதற்கு ஊரில் உள்ள கன்னி பெண்கள் அனைவருக்கும் வரி விதிக்கப்பட்டு அதன் மூலம் வசூல் செய்யப்படும்.  இவை அனைத்தும் வயதில் மூத்த இளைஞிகளின் குழு மூலமாக ஒன்றினைக்கப்படும். எப்பொழுதுமே பெண்களுக்கு வீட்டில் அதிக சலுகைகள் உண்டு . அதிலும் மகாசிவராத்திரி அன்று கேட்கவே வேண்டாம் . எல்லாரும் அன்று வீட்டின் இளவரசிகளாகவே மாறி இருப்பார்கள். அனைத்து பெண்களும் அன்றைய தினம் காலை 4 மணிக்கு கண்விழித்து ஒன்றாக சென்று வாய்க்காலில் நீராடி விட்டு வந்து முத்தாரம்மனை வணங்கி விரதத்தை ஆரம்பிப்பார்கள் . பகல் பொழுது முழுவதும் விரதம் இருப்பார்கள் . விரதத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வது கௌரவமானதாக பார்க்கப்பட்டது . விரதத்தை சரியாக கடைபிடிக்காத பெண்களை " அவ கள்ள நோன்பு இருக்கா " என்று கேலியும் ,கிண்டலும் செய்வார்கள் இதற்கு பயந்தே பெரும்பான்மையான பெண்கள் விரதத்தை முழுமையாக கடைபிடித்தார்கள். சிறிய பெண் குழந்தைகளுக்கு விரதம் சம்பந்தமான எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது . ஆனால் அவர்களில் ஒருவர் தான் அம்மனுக்கு தேவையான அபிஷேக நீரை எடுத்துவருவார் . அவர் பெரியவள் ஆனதும் . அதற்கு வேறு ஒரு கன்னி பெண் தேர்ந்தெடுக்கபடுவார் . 
            அன்றைய தினம் வானத்தில் ஞாயிறு மறைந்து திங்கள் தோன்றி  வெள்ளி பூத்ததும். விரத காலமும் நிறைவடையும் .பெண்கள் புத்தாடைகள் அணிந்து . இதழ் திறவாத மல்லிகை அரும்புகளையும் , செந்நிற கனகாம்பர பூக்களையும் கூந்தலில் சூடி தங்களை அலங்காரம் செய்து கொள்வார்கள் .
அவர்கள் அலங்காரம் செய்து கொண்ட பூக்களின் வாசம் காற்றில் பரவி காற்றை சுத்தம் செய்து இருக்கும் .  அப்பூவையர் அனைவரும் ஒன்றாக
வாய்க்கால் வந்து படித்துறையில் பெருங் கருங்கற்களால் அடுக்கப்பட்ட படிக்கட்டுகளில் இறங்கி நின்று கையில் வைத்து இருந்த பெரிய நெல்லிக்காயை கடித்து விட்டு தாமிரபரணியில் இருந்து கிளை பிரிந்து வந்த வாய்க்காலின் தண்ணிரை கையில் அள்ளி பருகி விரதம் முடிப்பார்கள் . அவ்வாறே எங்கள் ஊரின் அருகில் இருக்கும் வடக்கு மரந்தலை , தெற்கு மரந்தலை ஊரை சேர்ந்த பெண்களும் வாய்காலுக்கு வந்து நீர் அருந்தி விரதம் முடித்து திரும்பி செல்வார்கள்.   விரதம் முடித்தவுடன் சாப்பிடுவதற்கான பலகாரங்களை எல்லாம் தெற்கு ஆத்தூரில் பஜாரில் உள்ள கடைகளில் விற்பனைக்கு தயாராக இருக்கும் ரமணி மிட்டாய் கடையில் சிறப்பு கடை திறந்து இருப்பார்கள் அங்கு லட்டு , பூந்தி , காராசேவ்,  இனிப்பு சேவ் , ஏணி படி மிட்டாய் ( தேன் குழல் ) ஜாங்கிரி முறுக்கு , அல்வா போன்றவையும்  . டாக்டர் விஸ்வநாதன் டீ ஸ்டால் ,விக்னேஸ்வரா டீ ஸ்டால் , நாராயணன் டீ கடை , விடிய கடை  போன்ற அப்போது பிரபலமாக இருந்த அனைத்து கடைகளிலும் உளுந்து வடை , பருப்புவடை, காரவடை , சுழியம், அதிரசம் , கார முறுக்கு , முட்டை கோஸ் , வெங்காய போண்டா, வாழைக்காய் , அப்பளம் பஜ்ஜி, சமோசா , பால்பன் போன்ற உணவு பலகாரங்கள் மகா சிவராத்திக்கு என ஸ்பெஷல் ஆக தயாராகி விற்பனை செய்யப்பட்டு இருக்கும் . இப்பொழுது போல் வடநாட்டு இனிப்பு வகைகள் மற்றும் பேக்கரிகள் பிரபலமாகத காலம் அது. இங்கு இருந்து தான்  பெற்றோர்கள் அவர்களின் மகள்களுக்கு பிடித்தமான பலகாரங்களை வாங்கி கொடுத்து இருப்பார்கள் .விரதம் முடித்த பெண்கள் அனைவரும் ஒன்றாக கூடி அமர்ந்து பலகாரங்களை உண்டு மகிழ்வர் . முன்பெல்லாம் விரதம் இருப்பவர்கள் அனறு இரவில் சுட்ட கிழங்கு வகைகளையும் , வறுத்த கடலை வகைகளையும்,  வறுத்து திரித்த தானிய மாவுகளையும்தான் ,  உணவாக கொள்ள வேண்டும். பின்னாட்களில் அது மிகவும் மாறி விட்டது வருந்தத்தக்கது.  சிவராத்திரி அன்று இரவு முழுவதும் , இரவில் கோவிலில் தங்கி இருந்து  கோகோ,கபடி என விளையாடுவார்கள் . இரவு  கோவிலில் நான்கு கால பூஜை நடைபெறும் . இரவு முழுவதும் விழித்து இருந்து அம்மனை வழிபடுவாரகள் . அன்றைய நாள் முழுவதும் பெண்கள் தங்கி இருக்கும் பகுதியில் ஆண்கள் செல்ல தடை உண்டு . அடுத்தநாள் மதியம் வரியாக வாங்கிய அரிசியை சமைத்து ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் .அதனுடன் கோவில் பிரசாதமாக வழங்கப்பட்ட சர்க்கரை பொங்கலும் அனைவருக்கும் பரிமாறப்பட்டு இருக்கும் .
           இந்த மகா சிவராத்திரி பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாவாக எங்கள் பகுதியில் இருந்து வருகிறது . அவர்கள் நீர் நிலைகளுக்கு செல்வதும் , உணவு பண்டங்களை அனைவரும் அமர்ந்து பகிர்ந்து உண்ணுவதும் , நிலவின் வெளிச்சத்தில் இரவு முழுவதும் ஒன்றாக பாடி , ஆடி மகிழ்வதும்  தொல் தமிழரின் துணங்கை கூத்தையும் வள்ளி கூத்தையும் , பூ பறித்தல் , நிலாச்சோறு போன்று பெண்கள் மட்டுமே கொண்டாடும் பண்டையகால  விழாக்களை நினைவுபடுத்துவதாக அமைந்து இருக்கின்றது . ...

ஆண்களுக்கு எத்தனையோ பண்டிகைகள்,  விழாக்கள் , கொண்டாட்டங்கள் இருந்தாலும் . 
" பெண்களின்  விழாதான் 
இயற்கையின் திருவிழா "

-விக்கி இராஜேந்திரன் . ✍✍✍
  

         
  
          
                       

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்