கோடை விடுமுறையும் தாத்தா வீடும் !❤ ( Grandfather House in Summer Holidays ! )
கோடை விடுமுறையை இந்த கால குழந்தைகள் எல்லாம் ஓவியப்பயிற்சி , நடனப்பயிற்சி , நீச்சல் பயிற்சி மற்றும் விளையாட்டுகள் சம்மந்தமான பயிற்சி வகுப்புகள் என பல வகையான கட்டண பயிற்சி வகுப்புகளுக்கு செல்கிறார்கள் .. ஆண்டு முழுவதும் பள்ளிகூடம் , டியூசன் என கற்றல் கற்றல் என மூளைகளில் அழுத்தம் திணிக்கப்பட்ட குழந்தைகள் .. மீண்டும் பாடத்திட்டம் சாராத பயிற்சி வகுப்புகளில் ( extra - curricular activity) திணிக்கப்படுகின்றார்கள் . மீண்டும் காலையில் எழுந்து அந்த வகுப்பு , இந்த வகுப்பு என்று அழைந்து திரிந்து கொண்டு இருக்கிறார்கள் . இந்த காலத்து பெற்றோர்களை பொருத்தவரை அவர்கள் குழந்தைகள் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் , அதுவும் வீட்டின் உள்ளேயே.. வீட்டை விட்டு வெளியே சென்றால் வெயில் பட்டு சருமம் கருத்து விடும் என்ற கவலை வேறு .. ஒன்றை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் . நாம் வசிக்கும் தமிழ்நாடு இந்த பூமியில் கடகரேகைக்கு அருகில் அமைந்துள்ள வெப்ப மண்டல பகுதி . சூரியனிடம் இருந்து வரும் புறஊதாகதிர்களில் இருந்து நம்மை காப்பது நமது சருமத்தில் இருக்கும் மெலனின் என்னும் திசு . இந்த திசு தான் நம் சருமத்திற்கு கருப்பு நிறத்தை அழிக்கின்றது. இது இந்த நிலப்பரப்பில் நாம் ஆரோக்கியமாக வாழ இயற்கை கொடுத்த வரம் . கருப்பு என்றால் அசிங்கம் அல்ல , அதை அசிங்கம் என்று நினைப்பது வெள்ளையனுக்கு அடிமையாக இருந்த மக்களின் அடிமனதில் பதிந்து இருக்கும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடே அன்றி வேறு அல்ல . தற்போது வெளிநாட்டினர் தங்கள் சருமத்தை பழுப்பு நிறத்தில் மாற்றிக் கொள்ளவே விரும்புகிறார்கள் . அதற்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்து இருக்கின்றது பழுப்பு நிறத்தின் மீதான மோகம் ..
எங்கள் கோடைகால விடுமுறைகள் ஒடக்கரை என்னும் தூத்துக்குடி - திருச்செந்தூர் கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமத்தில் எங்கள் தாத்தாவின் வீட்டிலேயே கழிந்தன ... மற்றவர்களுக்கு பாட்டி வீடு எங்களுக்கு எப்போதுமே தாத்தா வீடுதான்.. என் சிறுவயதிலேயே எங்கள் பாட்டி காலமானதால் அது தாத்தா வீடு ஆகி போனது . அது வீடு அல்ல அரண்மணை மாதிரி.. மாதிரி என்ன மாதிரி அரண்மணைதான் .. வீடு அமைந்து இருக்கும் இடம் மொத்தம் எட்டு கிரவுண்ட் இருக்கும் என நினைக்கின்றேன் . வீட்டை சுற்றிலும் உயரமான மதில் சுவர்கள் , அதில் வீட்டிற்கு உள்ளே பெரிய மாட்டு வண்டிகள் வந்து செல்லும் அளவுக்கு இரண்டு மிகப்பெரிய மரக்கதவுகள். வேலையாட்கள் உள்ளே வந்து செல்ல தனிக்கதவு.. வீட்டில் உள்ளவர்கள் பயன்படுத்த இரண்டு கதவுகள் என மொத்தம் நான்கு கதவுகள் .. தனியாக பூஜை அறை மற்றும் சிறிதும் , பெரிதும் ஆக ஏழ அறைகள் மற்றும் பெரிய சமையலறை , மேலே மாடிக்கு செல்வதற்கு வீட்டின் உள்ளேயே படிக்கட்டுகள்.. படிக்கட்டில் ஏறி சென்று மொட்டை மாடியில் நின்று பார்த்தால் வங்கக்கடல் தெரியும் . அது மட்டும் அல்ல ஓட்டினால் வேயப்பட்ட பெரிய மாட்டு கொட்டிகை.. அதன் பின்புறம் சிமென்டினால் கட்டப்பட்ட பெரிய உரக்குழி , மாடுகளுக்கான வைக்கோல் போர் , அது தவிர்த்து ஒடுபோட்ட இரண்டு பெரிய அறைகள் . கிணறு , கழிவறை, குழிப்பதற்கு இரண்டு தண்ணீர் தொட்டி , மிகப்பெரிய அளவிலான நன்னீர் சேகரிப்பு தொட்டி என அனைத்தும் அந்த பெரிய மதில் சுவருக்குள் அடக்கம்..
அம்மாவுடன் பிறந்தவர்கள் பெரியம்மா ,சித்திகள் எட்டு பேர் , மாமாக்கள் 5 பேர் மொத்தம் 13 பேர். மற்றும் எங்கள் குடும்பத்தின் மூத்த அக்காவும் எங்கள் தாத்தா வீட்டிலேயே வளர்ந்தார்கள்.. எங்கள் தாத்தா அனுபவம் நிறைந்த மிகப்பெரிய மேஸ்திரி.. அந்த காலத்தில் அந்த பகுதியில் உள்ள காயல்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பான்மையான வீடுகள் எங்கள் தாத்தாவினால் கட்டப்பட்ட வீடுகள் தான் .. இப்போது நாங்கள் வசிக்கும் புன்னைசாத்தான் குறிச்சி வீடு எங்கள் தாத்தாவின் வடிவமைப்பின் படி அவர்கள் மேற்பார்வையில் கட்டப்பட்டது தான் . என் தாத்தா கட்டிய வீட்டை காண நினைப்பவர்களுக்கு கண்முன் காட்சியாக அமைந்து இருக்கின்றது எங்கள் வீடு.
பிறந்த வீட்டின் பெருமை பேசாத பெண்களும் உண்டா.... எங்கள் அம்மாவும் அதற்கு விதி விலக்கு அல்ல .. அவர்கள் வீட்டில் சமைக்கும் சமையலில் இருந்து அவர்கள் அனைவரும் சேர்ந்த வாழ்ந்த வாழ்கை வரைக்கும் கதை கதையாக சொல்லுவார்கள் ..மாமாக்களின் தில்லு முல்லு முதல் பெரியம்மா சித்திகளின் சேட்டை வரை .. தினமும் தாத்தா வீட்டில் விருந்து தயாரிப்பது போல் தான் உணவு தயார் ஆகுமாம் .. ஆம் அது உண்மையாக தான் இருக்கும் .. ஐந்து பேருக்கே சமையல் செய்து களைத்து போகும் குடும்பத்தலைவிகள் இருக்கும் , இந்த காலத்தில் தினமும் தாத்தா ,பாட்டியுடன் சேர்த்து 16 பேருக்கு சமையல் அது மட்டும் இல்லாமல் தாத்தாவிடம் வேலை செய்தவர்களுக்கும் அவர்கள் வீட்டில் தான் சமையலாம்.. கொஞ்சம் நினைத்து பாருங்கள் பாகுபலி படம் பார்பது போன்று பிரம்மாண்டமாக இல்லை .. அது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் உடையும் , துணிமணியும் பண்டிகை தோறும் வாங்கி கொடுத்திருப்பார் இல்லையா .. பதினாரும் பெற்றால் அரசனும் ஆண்டியாவர் என்பார்கள் . ஆனால் எங்கள் தாத்தா அரசனாக இருந்தால் தானே ஆண்டி ஆவதற்கு அவர் தான் பேரசர் ஆயிற்றே .. அனைவரையும் நன்றாக வாழவைத்து தானும் வாழ்ந்தார். பேரரசின் இளவரசர்கள் , இளவரசிகள் அனைவருக்கும் தன் வாழ்நாள் முழுவதும் இரவு பகலாக சேர்த்து வைத்த செல்வங்களை பணமாகவும் , இடமாகவும் அள்ளி கொடுத்து முடிசூடி வைத்தார். இப்போது அவை அனைத்தும் தனித்தனி சிற்றரசுகளாக உருப்பெற்று வளர்ந்து நிற்கின்றன.
என் பாட்டி அப்போது வாத நோயினால் நடக்க இயலாமல் இருந்தார்கள் . தாத்தா தான் பாட்டியை தூக்கி வந்து வீட்டின் அருகே திறந்த வெளியில் , நிரந்தரமாக போட பட்டு இருக்கும் மேஜையில் உட்கார வைப்பார்கள் . பாட்டிக்கும் , தாத்தாவுக்கும் சித்திகளில் யாராவது ஒருவர் வெற்றிலை இடித்து கொடுப்பார்கள் . வெற்றிலை போடுவது இருவருக்கும் பிடித்தமானது . பாட்டி வெற்றிலையை மென்று கொண்டே சுற்றி இருக்கும் மகள்களுடன் பேசிக் கொண்டு, நாங்கள் விளையாடுவதை பார்த்து கொண்டு இருப்பார் .. எங்களோடு சேர்ந்து பெரிய , சின்ன மாமாவின் பிள்ளைகள் நான் என் அக்கா , தங்கை என மிகப்பெரிய குழந்தைகள் பட்டாளமே விளையாக்கொண்டு இருப்போம் .
பாட்டியை பற்றி எதுவும் பெரிதாக எதுவும் நினைவில் இல்லை அவர்கள் இறந்த அந்த நாளை தவிர ..அப்போது எனக்கு ஐந்து வயது இருக்கும் . பாட்டியை மாலை போட்டு படுக்க வைத்து இருக்கிறார்கள் . அறை முழுவதும் அனைவரும் அமர்ந்து அழுது கொண்டு இருக்கிறார்கள் . அம்மா என்னை அழைத்து விக்கி பாட்டியை வந்து எழுப்பு என்று அழைக்கிறார்கள் .. நான் அந்த கூட்டத்தை பார்த்து மிரண்டு போய் பயந்து அம்மாவை போய் கட்டிபிடித்து கொள்கிறேன் . பின்பு என் மாமா பையன் ஆனந்தை அழைத்து பாட்டியை எழுப்ப சொல்கிறார்கள் ஆனந்த் பாட்டி , பாட்டி என்று அழைக்க அனைவரும் மீ்ண்டும் அழுகின்றார்கள். அந்த நிகழ்வு இன்னும் என் நெஞ்சில் உறைந்து போய் இருக்கின்றது . பதிமூன்று பிள்ளைகள் பெத்து நன்கு வாழ்ந்து மறைந்த பாட்டியை கரகாட்டம் ஆடுபவர்கள் ஆடியபடி முன் செல்ல பாட்டியின் உயிரற்ற உடலை ஒரு பெருங்கூட்டம் கடற்கரையை நோக்கி பல்லக்கில் தூக்கி செல்கின்றது ..
தாத்தாவுக்கு அனைவரின் மீது கொள்ள ஆசைதான் அதிலும் ஆனந்த் , பாலாஜி அவர் அடிக்கடி கூப்பிடும் வார்த்தைகள் ..அப்போது முதல் இரண்டு மாமாக்களும் , தாத்தாவின் வீட்டில் தான் தங்கி இருந்தனர் . அப்போது இருந்து இப்போது வரை, ஆனந்த் தான் அங்கு இருக்கும் என் ஒரே விளையாட்டு தோழன்.. நான் ,ஆனந்த் , அருண் மூன்று பேரும் மீன் பிடிக்க அடிக்கடி ஆத்துக்கு போவோம் . வீட்டில் யாரும் அங்கு போகக் கூடாது என்று எச்சரிக்கை செய்வார்கள் . ஆனாலும் நாங்க அங்கு தான் போவோம். ஒரு நாள் கேசவன் மாமா, நாங்க ஆத்துக்குள்ள சுத்திகிட்டு இருக்கிறதை பார்த்து விட்டார்கள் . வீட்டுக்கு வந்ததும் சுப்பிரமணி சித்தப்பா , கேசவன் மாமா இரண்டு பேரும் சேர்ந்து ஓரே திட்டு ஆயிரக்கணக்குள செலவு செய்து உங்களை படிக்க வைத்தால் மீன் பிடிச்சிட்டா அழைகிறிங்கடா என்று . பின்பு எங்களுக்கு தண்டணை மூன்று பேரும் ஒருவர் காதை ஒருவர் பிடித்துக்கொண்டு தோப்புகரணம் போட்டோம். இனிமே ஆத்துக்கு போகமாட்டோம் என்று சொல்லிக்கொண்டே..
ஒடக்கரை கடல் கரையோர பகுதி என்பதால், தரையில் மணல் நிறைந்து காணப்படும் , ஊரை சுற்றி காடும் , காட்டை தாண்டி ஆறும் , ஆற்றை தாண்டி, சவுக்கு தோட்டமும், சவுக்கு தோட்டத்தை தாண்டினால் பிரமாண்டமாக பரந்து ,விரிந்து கடலும் உள்ள பகுதி . அங்குள்ள காடுகளில் சுற்றி திரிந்து ஊறல் பூண்டு என்று தெரியாமல் வெங்காயம் நினைந்து அவற்றை எடுத்து மேல் எல்லாம் சொறிந்து கொண்டே அழைந்தது, ஆத்துக்குள்ள் இறங்கி மீன் பிடித்தது, கடலில் குளிக்க போனது , குளிக்கும் முன்பாக பாட்டி நினைவு இடத்தில் அமர்ந்து ,பாட்டி என் கண்ணுல கடல் தண்ணீர் பட்டு கண்ணு கரிக்க கூடாது என வேண்டி கொண்டது . குளித்து விட்டு வீடு திரும்பும் வழியில் பந்து போன்ற முட்களை கொண்ட செடியை பறித்து வந்து . அதில் தீ வைத்து அது சத்தத்துடன் வெடிப்பதை பார்த்து ரசித்தது, பூவரசம் பூ பறித்து வந்து ரஞ்சன் அண்ணனுடன் சேர்ந்து சாமியாடி விளையாடியது , ஊருக்கு தெற்கே உள்ள ஆறுமுகம் தோட்டத்தில் தாத்தா அதிகாலையில் சென்று தொட்டியில் தண்ணீர் நிறைத்து வைக்க, நாங்கள் சென்று குளித்தது. அங்கேயே சப்போட்டா பறித்து தின்றது . ஒரு நாள் நானும் என் சித்தி பையன் அருணும் சேர்ந்து தாத்தா வீட்டில் உள்ள வேப்ப மர தழைகளை பறித்து போட்டு வீட்டையே குப்பையாக்க எங்க சித்தி கோபத்தில் எங்களை வீட்டை விட்டு போங்கடா என கத்த , நானும் ,அருணும் கோபத்தில் பையை தூக்கி கொண்டு கிளம்ப , எங்களை மாமா பையன் ஆனந்த் அவங்க வீட்டுக்கு கூட்டி கொண்டு செல்ல , மாமா நீங்க எங்கயும் போக வேண்டாம் இங்க நம்ம வீட்டிலேயே இருங்க என சொல்ல, சிறிது நேரத்தில் தாத்தா எங்களை தேடி மாமா வீட்டிற்கு வந்து எங்களை கூட்டி கொண்டு சென்று , சித்தியை நல்லா திட்டியது ( சித்தி பாவம் ) . நான் சிறுவனாக இருக்கும் போது அம்மா என்னை தாத்தா வீட்டில் விட்டு விட்டு போக இரவில் நான் அம்மாவை நினைத்து அழ தாத்தா என்னை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் முடியாமல் , அடுத்த நாள் என்னை பஸ்சில் வீட்டுக்கு கூட்டி கொண்டு வந்தது , அனைத்து மாமாக்கள் , சித்தப்பாக்கள் ,அப்பா என அனைவரும் சேர்ந்து சீட்டு விளையாடும் போது ஜெயித்தவர்களிடம் மிட்டாய் வாங்க காசு வாங்கியது , கோவில் கொடைக்கு சென்ற போது தாத்தா நமக்கு செலவுக்கு ஆளுக்கு ஐந்து ரூபாய் தந்தது. இரவு முழுவதும் விழித்து கரகாட்டம் பார்த்து விட்டு . சின்ன மாமா வீட்டு மொட்டை மாடியில் படுத்து தூங்கியது என எண்ண எண்ண இனிக்கும் நினைவுகள் தாத்தா வீட்டை நினைத்தாலே எண்ணம் எல்லாம் வந்து நிறைகின்றது..
இப்போதும் கூட டேய் விக்னேசு ... என்ற தாத்தாவின் குரல் என் காதில் ஒளிப்பது கேட்கிறது... . விரைவில் உங்களை உங்களின் சந்ததியினரோடு வந்து சந்திக்க வருகின்றோம் அந்த ஒடக்கரை கடற்கரையின் காற்றோடு கலந்திருக்கும் உங்கள் மூச்சுகாற்றை சுவாசிக்க. 🙏
- விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍
Super
ReplyDeletethanks
DeleteArumai
Deleteகோடை விடுமுறையும் தாத்தா வீடும் மிகவும் அருமை கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருகிறது வேறு வார்த்தை ஒன்றும் சொல்ல முடியவில்ல
ReplyDelete