எனது ஊரும் இயற்கையோடு வாழ்ந்த வாழ்வும் !

         இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வாழ்வியலின் அழகான தருணங்களை நினைத்து பார்க்கின்றேன் . எங்கள் ஊர் புன்னைச்சாத்தான்குறிச்சி 100க்கும் குறைவான வீடுகளைக் கொண்ட இயற்கை சூழ்ந்த அழகிய கிராமம்.  எங்கள்  ஊரைச் சுற்றிலும் நெல்வயல்களும் , வெற்றிலை கொடிக்காலும்,  வாழைத் தோட்டங்களுமாக விவசாய நிலங்களும் ,  ஊரின்  வடக்கு பக்கம் ,  ஸ்ரீவைகுண்டம்  தாமிரபரணி ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ள அணையின் பிரதான தென்கால் கீழ் உள்ள கடையனோடை மதகு மூலமாக ஆத்தூர் குளத்துக்கு தண்ணீர் வரும் ஆத்தூரான் வாய்க்காலும், வாய்க்கால் ஒரத்தில் மிகப்பெரிய அரச மரமும் , ஆலமரமும் உள்ளது . ஊரைச்சுற்றி இருக்கும் விவசாய நிலங்கள் எல்லாம் சமதளமான மணற்பரப்பில் இருந்து குறைந்தது ஒரு பத்து அடி பள்ளத்தில் தான் அமைந்து இருக்கின்றது . வாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் , சுலபமாக விவசாய நிலங்களில் பாய்வதற்கு ஏதுவாக , சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முன்னோர்கள் உழைத்து உருவாக்கிய அமைப்பு இது . 

       எங்கள் ஊரின் நிலவியல் அமைப்பே ஆச்சரியம் நிறைந்தது . எங்கள் ஊரை வடக்கு, தெற்க்கு என்று உச்சந்தலையில் வகிடு எடுத்தது போல நடுவாக பிரிக்கிறது , தெற்கு ஆத்தூரில் இருந்து மேலாத்தூர் செல்லும் பாதை . வகிடு எடுத்த தலையின் முன் நெற்றியில் மங்களகரமாக குங்குமம் வைத்து போல அமைந்துள்ளது , ஊரை காவல் காக்கும் பரிவார தெய்வங்களுடன் தென்னை மரங்களுக்கிடையில்  முத்தாரம்மன் கோவில் . 

பாதையின் தெற்க்கு பக்கம் இருக்கும்  கிணறுகளின் தண்ணீர் சற்று சப்பென்று இருக்கும் .கோவில் அமைந்திருக்கும் வடக்கு பக்கம் உள்ள கிணறுகளில் தண்ணீர் சுவையானதாக இருக்கும் . நெல்லிக்காய் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும் என்பார்கள் . ஆனால் நெல்லிக்காய் கடிக்காமலேயே அந்த தண்ணீர் இனிக்கும் .  ஊரில் சில பகுதிகளில் சுண்ணாம்பு பாறை இருக்கின்றது . அதில் தோண்டப்பட்ட கிணற்று நீரின் சுவை அமிர்தமாய் இருக்கும் .ஊரின் முகப்பில் மிகப்பெரிய திலா கிணறு இருந்தது . வாய்க்காலில் தண்ணீர் வராத நேரங்களில் ஊர் மக்கள் இந்த கிணற்றை தான் குளிக்க பயன்படுத்தினர். 

      1980 களில் ஊரில் இருந்த வீடுகளில் 90 % பனை ஓலையில் வேய்ந்த வீடுகள் தான். தெரு விளக்குகள் மற்றும் வீட்டில் உள்ள விளக்குகள் அனைத்தும்  40 வாட்ஸ் குண்டு பல்புகள் தான் .. பல வீடுகளின் வாசலில் அழகுக்காக தாழ்பூ செடிகள் இருந்தன. வீட்டின் வேலிகளில் வேம்பு , முள்ளு முருங்கை , பூவரசம் மரம் இருந்தது . பூவரசம் மரங்கள் அதில் வளரும் கம்பளி பூச்சியின் தொல்லை காரணமாக , ஊரில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டது . தென்னை ஓலையை வைத்து முடைந்த கிடுவுகளை கொண்டு வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தது . பனை மட்டையினால் செய்யபட்ட தட்டிகள் வேலியின் படல்களாக இருந்தது . வீட்டில் அம்மாக்கள் பசுமாட்டின் சாணம் கொண்டு வீட்டின் தரை , தின்னை ஆகியவற்றை மாதம் ஒருமுறை மெழுகி விட்டனர் . தினமும் அதிகாலையில் வீட்டின் முற்றத்தை சாணி கலந்த தண்ணீரை தெளித்து மாக்கோலம் வரைந்தனர். 

 பெரும்பாலான வீடுகளில் ஆடுகள் , கோழிகள், மாடுகள் வளர்க்கப்பட்டன. வீட்டின் பின்புற வளவுகளில் உரக்குழி இருந்தன . அங்கு கால்நடைகளின் கழிவுகளை  சேமித்து வைத்து , இயற்கை உரமாக்கி அவற்றையும் ,வீட்டின் வேலிகளில் வளரும் மரங்களின் தழைகளையும் வெட்டி ஒவ்வொரு முறை வயலில் நாற்று நடுவைக்கு முன்பாக வயலில் கொட்டி அதன் பிறகு தான் கலப்பை போட்டு ஏர் உழுவார்கள். இவை பயிருக்கு மிகச்சிறந்த அடி உரமாகும்.  மாடுகளை மேய்ப்பதற்கு பகடை என்பவர் தினமும் காலையில் வந்து , அனைத்து வீடுகளில் உள்ள மாடுகளையும் மேய்ச்சலுக்காக ஆத்தூர் குளத்துக்கு ஓட்டிச்சென்று ,  மாலை ஐந்து மணி அளவில் திரும்ப அழைத்து வருவார் , அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதால் மாடுகளின் உணவு தேவையும் , அவற்றின் இனப்பெருக்கமும் இயற்கையாகவே நடை பெற்றன. 

வீட்டில் எப்பொழுதும் நெய் , முட்டை ஆகியவற்றின் பற்றாக்குறை இருந்ததில்லை . அடிக்கடி சீம்பால் கிடைக்கும் . பாக்கெட் பால் மட்டுமே பார்த்து பழகிய இன்றைய தலைமுறை சீம்பால் பற்றி அறிந்திருக்க வாய்பே இல்லை . வாரத்தில் திங்கள் , புதன் , வியாழன் , சனி ஆகிய நான்கு நாட்கள் மீன் கிடைக்கும் . எங்கள் ஊர் கடலுக்கு  அருகாமையில் அமைந்து உள்ளதால் , அன்றாடம் பிடித்த புதிய மீன்கள் எங்களுக்கு கிடைக்கும் . அதிலும் அளவில் சிறிதாக இருக்கும் சாலை மீன்கள் குழம்புக்கும், பொறிப்பதற்க்கும் சுவையாகவும் , விலையும் மிக மலிவாக இருக்கும் . மற்ற நாட்களில் வாழைப்பூ , முருங்கை கீரை , அகத்திக்கீரை, முருங்கைக்காய் என எங்களை சுற்றி இருக்கும் தோட்டங்களில் இருந்து கிடைக்கும் காய்கறிகள் வீட்டுச் சமையலில் இடம்பெறும். சில நாட்கள் பொன்னாங்கன்னி, அரைக்கீரை யை சிலர் விற்பனைக்கு கொண்டு வருவர் . அரை படி நெல்லுக்கு இரண்டு கட்டு கீரை கிடைக்கும் . 

வயலில் இருந்து நெற்கதிர்களை அறுத்து அவற்றை கட்டி நெற்களத்திற்கு சுமந்து வந்து நெற்கதிர்களை அடித்து நெல்மணிகளை பிரித்து எடுத்து வைக்கும் விவசாய கூலிகளுக்கான சம்பளம் . சில படி நெல் மணிகள் தான் . வயலில் உளுந்து செடிகளில் இருந்து உளுந்து நெத்தை பறித்து வருபவர்களுக்கான கூலி அவர்கள் பறித்து வந்த உளுந்து நெத்தில் பத்தில் ஒரு பங்கு அவர்களுக்கு கூலியாக வழங்கப்படும் . பெரும்பாலும் பண வர்த்தகம் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றது. 

ஊர்குடிமகன் ஒருவர் இருந்தார் .  ஊரில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் சடங்கு , சம்பிரதாயங்களை செய்வது இவர்தான் . ஊரில் நிகழ்ச்சிகள் இல்லாத நேரங்களில் , எங்கள் முடியை திருத்துபவர் இவர் தான் . ஐந்து வயது பையனில்  இருந்து 80  வயது முதியவர் வரைக்கும்  ஒரே மாதிரியான வடிவத்தில் தான் முடி வெட்டிவிடுவார். 

            விஷப்பூச்சி கடிக்கு மருத்துவரை தேடியது கிடையாது . ஒரு கொத்து வேப்பிலையை கொண்டு சென்று கோவில் பூசாரி தாத்தாவிடம் கொடுத்தால் ,  அவர் வேப்பிலையை நமது மேல் தடவிக்கொண்டே சில மந்திரங்களை சொல்லி திருநீறு போட்டால் சரியாகி விடும்.  இதற்கு பார்வை பார்பது என்று பெயர் . காய்ச்சல் வந்தா பூசாரி தாத்தா நாடி பார்த்து மை வைச்சா போதும் குணமாகி விடும் .அது எதனால் குணமாகிறது என்று காரணம் தெரியாது . அது மட்டும் அல்ல என்னை ஒரு குட்டி நாய் கடித்து விட்டது  அதற்கு மருத்துவம் பார்க்க தெற்கு மரந்தலையில் உள்ள ஒரு பாட்டியிடம் கூட்டிச்சென்றார்கள் அவர் வீட்டின் சுவற்றில் இருந்து சிறிது மண்ணை எடுத்து தண்ணீரில் குலைத்து பூசினார்கள் அது தான் மருந்து இவ்வாறு இரண்டு நாட்கள்  அவ்வளவு தான் அதற்கு மேல் வைத்தியம் இல்லை சரியாகி விட்டது.  ஒரு முறை தோல் அலர்ஜிக்காக எனது ஊரில் உள்ள ஒரு பாட்டி ஒரு செடியை ( குப்பை மேனி ) கொண்டுவந்து கொடுத்தார் அதனுடன் சிறிது மஞ்சளும் ,உப்பு சேர்த்து அம்மியில் வைத்து மையாக அரைத்து பூசிவிட சொன்னார் . இரண்டு நாட்களில் தோல் அலர்ஜி சரியாகி விட்டது . இவ்வளவு தான் அப்போது  நான் பார்த்த மருத்துவம் இவை  எதற்க்கும் காசு கிடையாது . வீடுகளில் எப்பொழுதும் கைமருந்து கிடைக்கும் காட்டில் படர்ந்து கிடக்கும் தூதுவளையும் , கண்டங்கத்திரியும் சேர்த்து அவித்து மாதம் இருமுறை கசாயம் , இஞ்சியும் , பூண்டு , லவங்கம் சேர்ந்து அரைத்து எடுத்து இஞ்சி சாறு மாதம் இருமுறை அவ்வளவு தான் சுவாசமும், உடலும் சுத்தமாகும்.. வெந்தயக்களியும் , உளுந்தங்கஞ்சியும் , பழையசோறும் உடலை குளிச்சியாக வைத்து இருக்கும் . அதிலும் பழையசோற்றுக்கு நிகரான உணவு இந்த உலகத்திலேயே கிடையாது.. அமிர்தம் எனப்படுவது யாதெனில் பழைய சோறும் ,  தொட்டுக்கொள்ள தேங்காய் துவையலும்,  சுண்டவைத்த பழைய கருவாட்டு குழம்புமே ஆகும் .  
        வீட்டை சுற்றி இருக்கும் மரங்களில் , கொக்கு,  நாரை போன்ற பறவைகள் கூடுகட்டி வாழ்ந்தன.  சில நேரங்களில் அவை எங்களுக்கு உணவாகவும் ஆகின .. வேலிகளிலும்  மரங்களிலும் தேன் கூடுகள் அதிக அளவில் இருந்தன. தேனீக்கள் கொட்டினாலும்  தேனடையை  எடுத்து தேனை சுவைக்காமல் விட்டதில்லை.. 

  வேப்பம் பழம் , கோவப்பழம், புட்டுமுருங்கை பழம் , கொடிக்காய்புளி, ஒட்டு ராசா பழம் , நவ்வா (நாவல் )பழம் , கொல்லாம் பழம் , கொய்யா பழம் , நெல்லிக்காய் , பேரிக்காய் , வெள்ளரிக்காய் , வெள்ளரிப்பழம் , பூனைபுடுக்கு பழம் , கத்தாலை பழம் , விளாம் பழம் , சுடக்கு தக்காளி , மணத்தக்காளி பழம் , பப்பாளி , மாம்பழம், நுங்கு , பனம்பழம், பலாப்பழம் , எலந்தப்பழம், அரசம்பழம் இவை அனைத்தும்  நாங்கள் சாப்பிட்ட இயற்கையாய் கிடைத்த சீசன்  பழ வகைகள் . 
     வேப்பமர பிசின் எங்கள் புத்தகங்களின் கிழிந்த தாள்களை ஒட்ட பசையாக பயன்பட்டன..பற்பொடிகள் , சீயக்காய் என அனைத்தும் எங்கள் தயாரிப்புகளே.. 

கருப்பட்டி , கல் உப்பு , நல்லெண்ணெய் நல்ல உணவு என்று இருந்த நாங்கள் நாகரீகம் என்ற பெயரில் கருப்பை வெறுத்து .. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்தோம்.   வெள்ளையாய் இருப்பது விஷம் என்று அறியாமல் .. 

எங்கள் விளையாட்டு உலகமே தனிதான் . கல்லா மண்ணா, கண்ணாம்பூச்சி , கபடி , கவண் வில் , கம்பு கோரி , கம்பு மாறி ,கள்ளன் போலிஸ், கிளி தட்டு , சங்கு சக்கரம் , குலை குலையாய் முந்திரிக்காய், ஒரு குடம் தண்ணீர் எடுத்து ஒரு பூ பூத்தது , பச்சை குதிர , பல்லாங்குழி ,பாண்டி , பூ பறிக்கவருகிறோம்,  பெயர் சொல்லி , பம்பரம் , பட்டம் , தாயம் , சோறு பொங்கி ,  வீடு கட்டி  , நம்பர் நொண்டி , தட்டாங்கல் , காற்றாடி , நாடு பிடிச்சி , திரி திரி பம்பக்காய்,  உப்பு குத்தி ஊஞ்சல் , டயர் வண்டி , நுங்கு வண்டி ,உப்பு மூட்டை , ஒளிச்சி பிடிச்சி ,   கோ கோ ..மீன் பிடித்தல் , நீச்சல் அடித்தல் , வாய்கால் ஒரத்தில் உள்ள அரச மரத்தில் ஏறி தண்ணீருக்குள் பாய்தல் ,ஆறு , கிணறு களில் வளரும் பால் சிப்பியை எடுத்து வந்து கண்ணாடி போல் பட்டைதீட்டி அவற்றில் மெழுகை வைத்து அடைத்து வாய்க்கால் அரச மரத்தின் அருகில் ஆற்று மணலில் வழுக்கும் தடம் அமைத்து பந்தையம் விட்டவும் , குளத்தில் இருந்து கரம்பல் மண் எடுத்து வந்து பைதா ( சக்கரம் )  செய்து உருட்டி விளையாடவும் என விளையாடிய விளையாட்டுக்கள் எத்தனை எத்தனை.. அப்போது எல்லாம் வீட்டிற்கு நான்கு குழந்தைகள் இருக்கும் .. நான்கு வீட்டில் உள்ள குழந்தைகள் சேர்ந்தாலே. தெருவே முழுவதும் குழந்தைகள் நிறைந்து இருப்பது போல் இருக்கும் .. 

           எங்கள் ஊர் பொதுவாக முத்தாரம்மன் கோவிலும் அதுதவிர அய்யாவழி நிழல்தாங்கல்  , பண்டாரங் கோவில் ( சிவன் கோவில் ) , பார்வதி அம்மன் கோவில் , முத்து பேச்சி அம்மன் கோவில் , மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட சக்தி ( கன்னி அம்மன் )  கோவில்களும் உள்ளன .. சக்தி கோவில்கள் தனிபட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் வணங்கும் கோவிலாக உள்ளன . 
       மார்கழி மாதம் முழுவதும் காலை ஐந்து மணிக்கு முழித்து குளித்து விட்டு கோவிலில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து ஊர் பெரியவர் ஒருவரின் தலைமையில் ஊரைச்சுற்றி பஜனை பாடி வருவோம் . 

"அரகர நம பார்வதி பதயே ! 

  அரகர  மகாதேவா! 

கோவிந்த நாம சங்கீர்த்தனம்! 

கோவிந்தா ! கோவிந்தா ! 

"தென்னாடுடைய சிவனே போற்றி! 

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! 

என நாங்கள் போடும் சத்தத்தில் ,  ஊரே  விழித்து வாசலில் கோலம் போட ஆரம்பித்து விடுவார்கள் .  
நவராத்திரி பத்து நாட்களும் கோவிலில் ஆட்டமும் பாட்டமுமாக கொண்டாட்டமாக இருக்கும் .. 

இப்போது இருக்கும் இயந்திர வாழ்க்கையினால் இயற்கையின் இயல்பு மாறி இருக்கிறது ..உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் மனிதன் . தன் சுயநலத்துக்காக உணவுச்சங்கிலியின் ஒவ்வொரு அடுக்காக அழித்து வருகின்றான் .. எதற்காக அழிக்கின்றான் என்று அவனுக்கே தெரியாது ..எதை அடைய முயற்ச்சிக்கின்றான் என்பது அவனுக்கு தெரியாது .  அவன் இப்போது  செய்து கொண்டு இருப்பது உயரமான மணல் குன்றில் நின்றபடி அடி மணலை அள்ளுவது போன்றது . அவன் தோண்டும் குழிக்குள் அவன் தான் விழப்போகின்றான் என்பதை அறியாமல் ..இயற்கையை காப்போம்.. 

- விக்கி இராஜேந்திரன்.  ✍✍✍














Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்