திருவிழாவும் கிடா கறி விருந்தும் !



                           திருவிழா என்றாலே கிடா கறி விருந்து இல்லாமல் நிறைவு கிடையாது . ஊர் திருவிழா ஊரே மணக்கும் கிடா கறி விருந்தோடு தான் நிறைவு பெறும் .. அன்று ஊரில் உள்ள அனைவர் வீட்டிலும் கெடாக்கறி வாசம் மூக்கை துளைக்கும். வெள்ளாட்டின் தலை ,நெஞ்சு எலும்பு ,இரத்தம் ,குடல் ,ஈரல் ,கால், மூளை என ஒவ்வொன்றுக்கும் ஒரு சுவை இருக்கின்றது.  அதை அதற்கு ஏற்றவாறு சமைத்து அன்பாக பறிமாறுவதில் தான் அதன் தனித்துவம் இருக்கின்றது.. 

  அப்போது எல்லாம் நிறைய வீடுகளில்  ஆடு வளர்ப்பார்கள் . எங்க வீட்டுல திருவிழாவுக்கு என  இரண்டு கிடா குட்டியை எங்க அப்பா சந்தையில இருந்து வாங்கி வந்து வீட்டில விட்டுருவாங்க. எங்க பகுதி விவசாய பூமி என்பதால், தினமும் அதுக்கு தேவையான வாழைப்பூ மற்றும் வாழை இலை ,தண்டு முதலியன எங்கள் தோட்டத்தில் இருந்துகிடைக்கும் .  இல்லையேன்றால் வெற்றிலை கொடிக்கால் வைத்து இருப்பவர்களிடம் சொன்னால் அகத்திக்கீரையை கொண்டு வந்து கொடுப்பார்கள் .  அவை அவற்றிற்கு போதுமான உணவாக இருக்கும் . 

மாமிசத்துக்காக வளர்க்கப்படும் ஆடு, மாடு இவற்றின் இறைச்சியின் சுவை , அவை உண்ணும் உணவில் தான் இருக்கின்றது .  நான் ஒரு வெஸ்டன் மாடல் இறைச்சி துண்டுகளை நெருப்பில் சுட்டு கொடுக்கும் உணவகத்தில் ( BBQ steakhouse) வேலை பார்க்கும் போது , பல தரப்பட்ட இறைச்சி துண்டுகளை சுவைத்து பார்த்ததுண்டு.  ரஅவற்றில் புற்களை சாப்பிட்டு ( grass feed ) வளர்ந்தவற்றின் இறைச்சிக்கும் , உணவு தானியங்களை ( grain feed) சாப்பிட்டு வளர்ந்தவற்றின் இறைச்சியின் சுவைக்கும், நிறைய வேறுபாடுகள் உண்டு . அது போல தான் நமது ஊர் வெள்ளாட்டின் இறைச்சியின் சுவைக்கும் , செம்மறி ஆட்டின் இறைச்சியின் சுவைக்கும் வேறுபாடு உண்டு .. அதையும் தாண்டி வீட்டில் வளர்க்கும் வெள்ளாட்டின் சுவையோ தனி ரகம் . அதற்கு காரணம் அவற்றை நாம் வளர்க்கும் முறைதான் . நல்ல திடமான உணவு , மாதத்தில் இரண்டு மூன்று முறை வாய்க்காலுக்கு கொண்டு சென்று சுத்தமாக குளிப்பாட்டி , ஆட்டின் மேல் வாடை வராமல் பார்த்து கொள்வதும் தான்   . அப்பா இரண்டு ஆடுகளை வாங்கி வருவதில் இரண்டு லாபம் .  ஒன்று இரண்டு குட்டிகள் இருப்பதால் அவை ஒன்றொடு ஒன்று போட்டி போட்டு நன்றாக உண்டு வளரும் . இரண்டு திருவிழா சமயத்தில் ஒன்றை விற்றுவிட்டால் , திருவிழாவிற்கு தேவையான பணத்தின் தேவையை அது பூர்த்தி செய்யும் . கிடா ஒவ்வொன்றும்  சுமார் பதினைந்து கிலோ வரை இருக்கும் .. 
        
            நாங்க கரகாட்டம் , வாணவேடிக்கை எல்லாம் பார்த்திட்டு , விடியற்காலை ஐந்து மணிக்கு தான் வீட்டிற்கு வருவோம்.. அதற்குள் அப்பா வீட்டில் ஆடு வெட்டுவதற்கு ஆளை கூப்பிட்டு வந்து விடுவார்கள். தெற்கு ஆத்தூரில் இறைச்சி கடை வைத்து இருக்கும் ஷேக் அண்ணன் கிட்ட சொல்லிட்டா ஆள் அனுப்பி விடுவாங்க இல்லன்னா அவங்களே வந்துருவாங்க. வெட்டிய ஆட்டின் தோலை அவர்கள் கூலியா எடுத்து கொள்வார்கள் .. 
      
     நாங்க கோவிலில் கிடா வெட்டியது மிகவும் குறைவு .  தெய்வத்துக்கு வேண்டி கொண்டவர்களை தவிர மற்றவர்கள் , அவர்கள் வீட்டிலேயே வெட்டிக்கொள்வோம்.. அதற்கு தேவையான பொருட்களை , அப்பா ஏற்கனவே வாங்கி வைத்து இருப்பார் .  
பனை ஓலையில் வேய்ந்த பாய் , தேங்காய் நாரில் பின்னிய நல்ல திடமான முறுக்கு கயிறு போன்றவை ரெடியாக இருக்கும் . நாங்க அவங்களுக்கு கிடாயை அறுப்பதுக்கு உதவுவோம் , பின்பு போய் படுத்து தூங்கி விடுவோம்...மற்றவற்றை அப்பா கவனித்து கொள்வார் .
            
        கிடாயை உறித்து அறுக்கும் போது , அதில் இருந்து சுவரொட்டியை ( மண்ணீரல் ) தனியாக எடுத்து வைக்க அப்பாவிடம் கூறி இருப்போம் . அப்பா அவற்றை  சுவற்றில் ஒட்ட வைத்து இருப்பார் , அதை நாங்கள் எடுத்து  அதை கத்தியால் நன்றாக கீறி அதில் சிறிது சீரகம், உப்பு, வத்தல் ஆகியவற்றை இடித்து அதில் சுவரொட்டியை  நன்றாக புரட்டி எடுத்து , அம்மா சமைக்கும் அடுப்பில் தகிக்கும் கனலுக்குல் போட்டு நன்றாக சுட்டு எடுத்து சாப்பிடுவோம்.. எப்படி இருக்கும் தெரியுமா . நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகின்றது.   
         
         அன்று காலை பத்துமணி அளவில் என் தந்தை வந்து எங்களை எழுப்புவார் . நாங்கள் இரவு முழுவதும் விழித்து இருந்ததால் ,  மிகவும் ஆழ்ந்து தூங்கிகொண்டு இருப்போம் . இரண்டு முறை எழுப்பி பார்ப்பார் , நாங்கள் எழும்பவில்லை என்றால் பிட்டில இரண்டு அடி விழும் , பின்ன அறக்க பறக்க எழுந்து ஓடுவோம் போய் பல்லு தேய்த்து விட்டு வந்தால் !!  சிறிய வெங்காயத்தையும் , பச்சைமிளகாயையும்  சிறிதாக நறுக்கி , அடுப்பில் மண்சட்டியில்  சிறிது நல்லெண்ணெய் விட்டு வெட்டிய வெங்காயத்தையும் , பச்சைமிளகாயையும் பச்சை வாசனை போக வதக்கி , பாத்திரத்தில் சேகரித்து வைத்து இருந்த உறைந்து போன ஆட்டின் இரத்தத்தை நன்றாக பிசைந்து மாவு போன்று ஆக்கி . அதை சட்டியில் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். இரத்தில் உள்ள தண்ணீர் வற்றியதும் ,  இரத்தம் திரண்டு சிறு சிறு பீட்ரூட் துண்டுகள் போன்று உருண்டு வரும்  , அதில் சிறு தேங்காயை பூ போன்று துருவி போட்டு கிளறி ஆளுக்கு ஒரு சின்ன வாழையிலையில் வைத்து அம்மா சாப்பிட கொடுப்பார்கள் .. அவ்வளவுதான் நாக்கில் எச்சில் ஊற அவற்றை அள்ளி வாயில் போட்டு மென்றால் ஆகா ..ஆகா .. என்ன ஒரு சுவையது.. . 

           அதன் பிறகு தூக்கம் எல்லாம் காணாமல் போகும் ..பிறகு நாங்கள்  துண்டை எடுத்து தலையில் கட்டிக்கொண்டு வாய்க்காலுக்கோ... இல்லை ஆத்தூக்கோ  குளிக்க செல்லுவோம்.. அங்கு போய் நன்றாக குளித்து விட்டு பசியோடு வீட்டிற்கு வந்தால் ... அம்மாவின் கைவண்ணத்தில் தயாரான சூடான மென்மையா இட்லியுடன் , கிடாவின் தலைகறி  குழம்பும் ரெடியாக இருக்கும் . .. 
        அம்மா தனக்கென்று எப்பொழுதும் ஒரு மசாலா பொடியை ( basic masala ) தயார் செய்து வைத்து இருப்பார் . அனைத்து வகையான குழம்பு வகைகளுக்கும் அது தான் மூல ஆதாரம். அதை பயன்படுத்தி அவற்றில் சேர்க்கப்படும்  தேங்காய் ,வத்தல் ,மிளகு ,சீரகம் இவற்றின் அளவை சிறிது கூட்டியும் , குறைத்தும் வித விதமான சுவைகளில் உணவை தயாரித்து விடுவார் . அது பல வருடங்கள் அவர் சமையல் செய்ததினால் ஏற்பட்ட அனுபவத்தினால் வந்தது .. 
           மத்தியானம் ஒரு மணிக்கு முழுமையான அசைவ விருந்து ரெடியாக இருக்கும் . அவற்றில் கிடாகறி மசாலா , எலும்பு ரசம் , அவித்த முட்டை , மூளை பிரட்டல் , சிறுபயிறு பாயாசம் இவை அனைத்தும் இருக்கும் .  
           கிடா கறி மசாலா செய்ய  கறி துண்டுகளை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவில்  எலும்புகளுடன் சேர்த்து வெட்டி வைத்து இருப்பார் . அம்மா எப்பொழுதுமே எலும்புடன் சேர்ந்த கறி தான் சுவை அதிகம் என்பார் .. அதுதான் உண்மையும் கூட .  வெறும் இறைச்சியில் சுவை மட்டும் இன்றி சத்தும் குறைவுதான் .  வெட்டி வைத்து இருக்கும் கிடாகறியுடன் , உறித்து வைத்த சின்ன வெங்காயம் மற்றும் அம்மாவின் தனி தன்மை மசாலா சேர்க்கப்பட்டு வேக வைக்கப்படும் . கறியுடன் சின்ன வெங்காயமும் நன்றாக வெந்து இருக்கும் .  சின்ன வெங்காயம் நன்றாக மசிந்து போய் இருக்கும் . அது கறிக்கு தேவையான பதத்தை கொடுக்கும் . கறி கெட்டியாக இருந்தால் மசாலா என்றும் , சற்று இழக்கமாக இருந்தால் குழம்பு என்றும் அழைக்கப்படும். அம்மா எப்பொழும் மசாலா தான் வைப்பார் . வேக வைக்கப்பட்ட கறியுடன் . சூடான நல்லெண்ணெயில்  பட்டை ,கிராம்பு ,ஏலக்காய் , பிரியாணி இலை ( bay leaf ) போன்றவற்றை போட்டு அதனுடன் சிறிதாக அரிஞ்சி வைத்து இருக்கும்  சின்ன வெங்காயத்தை ( உள்ளி) இட்டு நன்றாக பொன்நிறமாக வதக்கி , இஞ்சி ,பூண்டு விழுதையும் சேர்த்து , பின்னர் சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளித்து , சேர்த்தால் மணக்கும் கிடாகறி மசாலா தயார் .  

எலும்பு ரசம் :- 
          கிடாகறியில் இருந்து கொஞ்சம் எலும்பை தனியாக எடுத்து , அதனுடன் இரண்டு முருங்கைகாயை விரல் அளவில்  துண்டுகளாகவும் , ஒரு தக்காளி பழத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும் . அதனுடன் வத்தல் , கொத்தமல்லி , பெருஞ்சீரகம் , சிறுசீரகம் ஆகியவற்றை வறுத்து உரலில் இட்டு கழுந்து உலக்கை கொண்டு நன்றாக இடித்து , அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும் .நல்ல இளம் கெடாயாக இருப்பதால் , எலும்பை ராஜ்கிரண் மட்டும்  இல்லை நாமே எளிதாக கடித்து சுவைக்கும் அளவு எளிதாக வெந்துவிடும்  . அதில் சிறிது கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து விட்டால் அருமையான எலும்பு ரசம் ரெடி .. 

கடைசியாக சிறுபயிறு பாயசம்..
      வருத்த சிறுபயிறு,ஜவ்வரிசிவுடன் நாட்டு வெல்லம் சேர்த்து சிறிது ஏலக்காய் தட்டி போட்டு .  கொஞ்சம் முந்திரி பருப்பு , உலர்திராட்சையை நெய்விட்டு பொன்நிறமாக வறுத்து சேர்த்தால் , மனதை மயங்க வைக்கும் மணமான பாயாசம் ரெடி.  .  
                நல்ல இளம் தலை வாழை இலையை போட்டு அதில் சூடான சோறு போட்டு . கிடாகறி மசாலாவை சேர்த்து சாப்பிட வேண்டும் . பிறகு சிறிது எலும்பு ரசம் சேர்த்து சாப்பிட வேண்டும் . கடைசியாக அந்த இலையில் சூடான பாயாசத்தை விட்டு சிறிது ஆறவிட்டு கையில் எடுத்து சாப்பிட்டால் .. ஆகா சொர்க்கமடா அது .. சாப்பிட்டு முடித்த பிறகு அனைவரும் ஒன்றாக கூடி தாம்பூலத்தில் உள்ள இளம் ஆத்தூர் வெற்றிலையுடன் சிறிது சுண்ணாம்பும், கழிப்பாக்கையும் சேர்த்து மென்றால் செரிக்காத உணவுகூட எளிதாக செரித்து விடும் .  
    
      இரவு தான் மிக முக்கியமான உணவு ரெடியாகும்.  அது குடல் கறி .. அய்ய்யா..  !  நினைத்தாலே உடம்பு எல்லாம் சிலிர்க்கின்றது .  இரவில் கல்தோசையுடன்  தொட்டுக்கொள்ள குடல்கறியும் சேர்த்து சாப்பிட்டால் ..  இதற்கு  இணையான உணவு இந்த உலகத்தில் எங்கும் கிடையாது . .. 
      மீதி இருக்கும் கறி துண்டுகளை அம்மா உப்பும் ,மஞ்சள் தூளும் சேர்த்து  கொடியில் காய வைத்து விடுவார் இதற்கு உப்பு கண்டம் என்றும் கொடிகறி என்றும் பெயர் .  இப்பொழுது எல்லாம் இது கிடைப்பது மிகவும் அரிதாகி விட்டது.  
          ஆட்டின் கால்களை நெருப்பில் நன்றாக சுட்டு மேல் ரொமங்களை கத்தி கொண்டு சுரண்டி எடுத்து அவற்றை ஒரு சிறு கயிற்றில் கட்டி தொங்க விட்டு விடுவார் அம்மா  . மழைகாலங்களில் அவற்றை வைத்து சூப் செய்து தருவார்கள் .. 
       இதை போல தான் வெள்ளக்கோவிலில்  எங்கள் அத்தை ,மாமா வீட்டில் ஆடி அறுதி அன்று , அவர்கள் குல தெய்வத்துக்கு அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுக்கும் பூஜையும் . அதை தொடர்ந்து நடக்கும் கிடாகறி  விருந்தும் சிறப்பாக இருக்கும் . அத்தைக்கு கிடாகறி சாப்பிடபிடிக்காது.  அதை சாப்பிட்டால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும்.  ஆனாலும் எங்களுக்காக அவர் அவற்றை சமைத்து தருவார் . கோவிலில் பொங்கிய வெண் பொங்களுடன் , அவர்களின் கை பக்குவத்தில் சமைத்த கிடாகறியையும் சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா…இரவில் கோவிலில் பொங்கும் போது பனை ஒலை  சாம்பல் சில நேரம் பறந்து அதில் விழுந்து விடும் அவற்றை அப்போது காண முடியாது . அடுத்த நாள் காலையில் சாப்பிடும் போது தான் அது தெரியும் . அப்போ அத்தை சொல்லுவாங்க கார்பன் சத்து உடம்புக்கு நல்லது அதை பற்றி எல்லாம் கவலை படாம சாப்பிடுங்கன்னு.. ஆடி அறுதி திருவிழா அத்தை , மாமாவிற்கு பிறகு இறுதியாகி போனது.....
     என் நினைவில் அசைவ விருந்து என்றாலே..என்  அப்பாவும் ,அம்மாவும்  ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து செய்த
எஙகள் ஊர் திருவிழா கிடாகறி விருந்தும் .வெள்ளக்கோவிலில் என் அத்தை ,மாமா வீட்டில் அன்பாய் பரிமாறிய ஆடி இறுதி விஷேசம் அன்று சாப்பிட்ட கிடாகறி விருந்துமே என் நெஞ்சில் நிறைந்து கிடக்கின்றது.. . 



- விக்கி இராஜேந்திரன் . 










     


Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்