மழைக்காட்டுக்குள் நடைப்பயிற்சி !🏃‍♂️

         சிங்கப்பூரின் 56 வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது . கொரோனா காரணமாக அணிவகுப்பு நிகழ்ச்சிகளை யாருக்கும் நேரடியாக கண்டுகளிக்க அனுமதி இல்லை . ஆதலால் என் அண்ணன் என்னை அவர்களுடன் நடைபயிற்சியில் கலந்து கொள்ள அழைத்தார்கள் . எனக்கும் விடுமுறை ஆதலால் அவர்களுடன் நானும் இணைந்து கொண்டேன். நாங்கள் நடைபயிற்சி கொள்ள அண்ணன் தேர்ந்து எடுத்த இடம் மெக்ரிட்சி நீர்தேக்கம் ஆகும் .
       
     உயரமான கட்டிடங்கள் , அவற்றுக்கு இடையில் சாலைகளில் வேகமாக செல்லும் புதுப்புது உயர்ரக கார்கள் , அவற்றின் கீழ் பல அடுக்கு  சுரங்கங்களில் விரைவாக பயணிக்கும் தானியங்கி இரயில்கள் என மேம்பட்ட இயந்திரத்தனமாக காட்சி அளிக்கும் சிங்கப்பூரில் .. இவை எதுவும் இல்லாமல் வாகனங்களின் ஓசை சிறிதும் இன்றி சிள்வண்டுகளின் ரிங்காரத்தின் ஓசைகள் மட்டும் கேட்டு கொண்டு இருக்கும் , மிகப்பெரிய மழைக்காடுகளில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு அமைந்துள்ள சிங்கபூரின் மிகப்பெரிய நீர்தேக்கம் தான் முன்பு தாம்சன் நீர்தேக்கம்,  என்று அழைக்கப்பட்ட  
மெக்ரிட்சி நீர்தேக்கம் .
         
       இன்று அதை சுற்றி அமைந்துள்ள மழைக் காடுகளுக்குள் இயற்கையை இடராமல் அதனுடன் இயைந்து உருவாக்கப்பட்டுள்ள அந்த சிறிய காட்டு பாதையின் ஒரு வழியாக அந்த 
காட்டுக்குள் நுழைந்து காட்டின் மற்றொரு 
வழி வழியாக வெளியே வரவேண்டும் . இது தான் நாங்கள்  நடை பயிற்சி செல்ல போகும் இடம் .  இது சுமார் பத்து கிலோமீட்டர் நீண்ட  நடைபயணம்.. 
       
       இன்று வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது . காலை எட்டு மணிக்கு எல்லாம் நாங்கள் அங்கு இருந்து நடைபயிற்சியை  தொடங்க வேண்டும்  என திட்டமிட்டு இருந்தோம் . ஆனால் நான் அங்கு செல்ல தாமதம் ஆனதால் காலை  பத்து மணிக்கு தான் நாங்கள் எங்கள் பயணத்தை தொடர வேண்டியதாகி போனது . சூரியன் வேறு ஏற்கனவே உச்சியை எட்டுப்பிடிக்கும் தூரத்தில் இருந்ததால்  வெப்பம் சற்று அதிகமாக இருந்தது...ஆனால் காட்டுப்பாதையில் நடக்க தொடங்கிய போது வெயிலின் தாக்கம் சிறிதும் தெரியவில்லை .

       சிறிது நேரத்தில் வானத்தில்  பெரும் இரைச்சலுடன் நான்கு ஹெலிகாப்டர்கள் சிங்கப்பூரின் தேசிய கொடியை பிடித்தபடி அணிவகுத்து சென்றன.. தேசியத் தினத்தின் சிறப்பு அணி வகுப்பாக அவை அமைந்து இருந்தன.  அவை கண்ணில் இருந்து மறைந்ததும் மீண்டும் எங்கள் நடைபயிற்சி தொடங்கியது .

            நேற்று இரவு அங்கு மழை பெய்து இருக்க வேண்டும் . பாதை சற்று ஈரப்பதம் நிறைந்து காணப்பட்டது . பாதையின் இரு பக்கமும் பெரிதாக வளர்ந்த காட்டு பூவரசு மரமும் ,  நீண்டு ஓங்கி வளர்ந்து இருந்த மூங்கில் புதர்களும் , பாக்கு ,தென்னை , ரப்பர் போன்ற மரங்களும் , மரத்தின் கிளைகளில் பற்றி படரும் வாண்டா எனும் பற்று தாவரமும்,  கஸ்குட்டா,  விஸ்கம் எனும் மரங்களில் இருந்து சத்துக்களை உறிஞ்சி வாழும் ஒட்டுண்ணி தாவரங்களும் , பரணி செடிகளும் , பலவகையான படர் கொடிகளுமாக இணைந்து அதை ஒரு அடர்ந்த காடாக மாற்றி இருந்தன . அந்த மரங்களில்  இருந்து மண்ணில் விழுந்த காய்ந்த கிளைகளும் , உதிர்ந்த இலைகளும் மழை நீரும் எல்லாம் சேர்ந்து அந்த மண்ணில் நைட்ரஜன் சுழர்ச்சியை ஏற்படுத்தி அந்த மண்ணில் உள்ள உயிர்களுக்கு உயிர் சத்தாக  உருமாறிக் கொண்டு இருந்தன. மரங்கள் காற்றில் நம் உயிர் வாயுவை பெருக்கி கொண்டு இருந்தன ..
                 பாதையில் சில இடங்களில் மரத்தின் வேர்கள் படர்ந்து இருந்தன.  சில இடங்களில் கிளைகள் தாழ்ந்து இருந்தன.  ஆங்காங்கே சில நீரோடைகளும் அவற்றை கடந்து செல்வதற்கு பழமையான பாசி படர்ந்த சிறிய பாலமும் இருந்தன .சில பட்டாம்பூச்சிகளும் , தட்டான்களும் , மரப்பல்லிகளும் , அணில்களும்  , நீண்ட வால் குரங்குகளும் தென்பட்டன. 

           அந்த அடர்ந்த காட்டுக்குள் செல்லும் போது ,  அந்த காட்டின் சூழல் பாரியின் பறம்புபையும் , அந்த அடர்ந்த காட்டுக்குள் பாரியை  காணச்சென்ற கபிலரையும் , அவரை அழைத்துச் சென்ற நீலனையும் ஏனோ ஞாபகப்படுத்தின. இது  வீரயுக நாயகன் வேள்பாரியின் கதை என் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக இருக்கலாம் .. அடர்ந்த காட்டினை  காணும் போதெல்லாம் பாரியும் அவனது மக்களும் என் எண்ணங்களில் தோன்றுவது இயல்பாய் ஆகிபோனது. அது மட்டும் இல்லாமல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவை மீதும் பற்று இன்றி உணவை  மட்டும் தேடி அலைந்து திரிந்த ஆதி மனிதர்களும் நினைவில் தோன்றி உதிர்ந்தனர்.. இவ்வாறான நினைவுகளுடனும் , நிகழ்காலத்தையும் பற்றி அண்ணனுடன் பேசி சிரித்து கொண்டே சென்றதில் .. அந்த நீண்ட காட்டுவழி  பயணம்  எளிதாக நிறைவடைந்தது .. இந்த நடை பயிற்சி உடலுக்கு மட்டும் இன்றி உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அழிப்பதாக அமைந்தது ...

- விக்கி இராஜேந்திரன் ✍✍✍  

Comments

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்