எங்கள் பண்பாடும், திருவிழாவும் , வழிபாடும் - ( நவராத்திரி , திருக்கார்த்திகை, கிழவி நோன்பு.

                பருவகாலங்கள் இளவேனில் காலம் , முதுவேனில் காலம் ,கார் காலம் , கூதிர் காலம் , முன் பனி காலம் , பின் பனி காலம் என ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன .  அந்தந்த கால நிலைக்கு ஏற்றவாறு அந்த நிலப்பரப்பில் உள்ள தெய்வங்களுக்கு மக்கள் விழா எடுப்பது வழக்கம் .  தூத்துக்குடி , நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்கள் புவியியல் அமைப்பில் தென்மேற்கு , வடமேற்கு  பருவமழையினை பெறுகின்ற நிலப்பகுதியாகும். எனவே மழை குறைவாக பொழியும் பங்குனி மாதத்தில் வரும் பங்குனி  உத்திர நாளே நாட்டார் ( குலதெய்வம் )  வழிபாட்டுக்குரிய நாட்களாக இருக்கின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மாசி மாத மாசிகளரி  நாளை  நாட்டார் தெய்வ வழிபாட்டுக்குரிய நாளாக வைத்துள்ளனர். தமிழர்களின் திருவிழாக்கள் முழுநிலவு நாட்களிலேயே! கொண்டாடப்பட்டு வந்தன . தை பூசம் , மாசி மாதத்து சிவராத்திரி , சித்திரை மாதத்து  சித்திரை திருவிழா , வைகாசி மாதத்து விசாகம் போன்ற இந்த முழு நிலவு நாட்களே தமிழர்களின் திருவிழாநாளாகும் . இன்றும் தமிழகத்தின் கிராமங்களில் தமிழர்களின் தொல் பண்பாட்டை கொண்ட விழாக்கள் நடைபெற்று வருகின்றன. 
      முன்பெல்லாம் எங்கள் ஊரில்  ஆவணி மாதத்தில் இருந்து பங்குனி மாதம் வரைக்கும் மாதம் தோறும் பண்டிகையும் , திருவிழாக்களாக ஊரே அமர்க்களப்படும் . இவை அனைத்தும் நாங்கள் சார்ந்து இருக்கும் எங்கள் ஊர் முத்தாரம்மனை சார்ந்தே நடைபெறும்.  ஆவணி மாதம் வருடம்தோரும் வருஷாபிஷேகமும், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை  கொடைவிழாவும் சிறப்பாக நடைபெறும் காலமாகும் . (பின் வரும் லிங்கை பின் பற்றி ஊர் கோவில் கொடைவிழாவை பற்றி அறிந்து கொள்ளலாம் - எனது ஊர் கோவில் கொடைவிழா ) 

நவராத்திரி ( தசரா ) திருவிழா  :- 
புரட்டாசி , ஜப்பசி மாதங்களில் நவராத்திரி திருவிழா நடைபெறும் . நவராத்திரியின்  பத்து நாட்கள் கோவிலில் நடக்கும் பூஜை மற்றும் அனைத்து செலவுகளையும் ,  பத்து குடும்பத்தை சேர்ந்தவர்கள்  பொறுப்பு ஏற்று கொள்வார்கள். அது கார்காலம் ஆதலால் மழை பொழிவு  தொடங்கி இருக்கும். தினமும் இரவு முழுவதும் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் அங்கு  மணல் வீடு கட்டுவதும் , ஓடி பிடித்து விளையாடுவதுமாக பூஜை நடக்கும் வரை சுற்றி திரிவோம். பூஜை முடிந்ததும் கோவில் முன்பு உள்ள பந்தலில் வரிசையாக உட்காந்து இருப்போம் . சுண்டல் , சர்க்கரை பொங்கல் , வாழைப்பழம் , தேங்காய் போன்றவை பிரசாதமாக கிடைக்கும் . சுண்டலை  வாங்கிய உடனே யாருக்கு எத்தனை சுண்டல் கிடைச்சிருக்கு என்னுவோம் . இரண்டு சுண்டல் அதிமாக கிடைச்சா அது ஒரு பெருமையான விஷயம்.அதன் பிறகு டி.வி-யில்  அல்லது திரையில் சினிமா படம் காணபிப்பார்கள். சம்பூர்வ ராமாயணம்,  கந்தன் கருனை என சாமி படமும் அதை தொடர்ந்து அப்போது பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் படங்களும் காண்பிக்கப்படும் .  அந்த மாதம் முழுவதும் குலசை முத்தாரம்மனுக்கு விரதம் இருந்து , அனுமான் , முருகன் , நாரதர் , குரங்கு ,கரடி , காளி என மாறு வேடம் அணிந்து நிறைய பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை  வேண்டி ஊருக்குள் வந்து கொண்ட இருப்பார்கள் பார்க்கவே கொண்டாட்டமாக இருக்கும் . 

கார்த்திகை மாத தீப திருவிழா ;-  

        அன்று வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு . வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி தொங்கவிடப்படும் . வீட்டின் கதவு மற்றும் திண்ணைகளில் மஞ்சளும், அரிசிமாவும் கலந்து  கோலம் இடுவார்கள் . சிலர் கைகளில் உள்ள ஐந்து விரல்களும் பதியுமாறு அச்சு பதிப்பர்.  சிலர் முன்று விரல்கள் கொண்டு பட்டை போடுவார்கள். சிலர் பப்பாளி ,ஆமணக்கு இலையின் காம்பினை கொண்டு சிறிது சிறிதாக நட்சத்திர வடிவில் அச்சு பதித்து நடுவில் குங்குமம் இட்டு வீடு அலங்காரம் செய்யப்படும் . 
              ஊரில் இருக்கும் எந்த ஒரு பனையிலும் குருத்து ஓலைகள் இருக்காது. அன்று அனைவரது வீடுகளிலும் கார்த்திகை தீபவிழாவின் சிறப்பு வாய்ந்த பனை ஓலை கொழுக்கட்டை தயார் செய்வதற்காக அவை வெட்டப்படும். அரிசிமாவை  இடித்து அதனுடன் கருப்பட்டி மற்றும் வருத்த சிறுபருப்பு , தேங்காய் ,ஏலக்காய் சேர்த்து கொழுக்கட்டை பிடிக்கும் அளவுக்கு பக்குவமாக பிசைந்து . அவற்றை பத்து அங்குலம் அளவுவாக வெட்டி வைத்து இருக்கும் பனை ஓலையின் நடுவில் வைத்து மற்றொரு ஓலையால் அவற்றை மூடி சிறிய பனை ஓலை துண்டுகள் கொண்டு இறுககட்டி . அவற்றை நீராவியில் வேகவைக்க வேண்டும். பசுமையான பனை ஓலையின் மணம் அந்த கொழுக்கட்டையுடன் இணைந்து சுவையும் , மணமும் நிறைந்த அற்புதமான பனை ஓலை கொழக்கட்டை தயார்.  இதன் சுவையின் தனித்துவம்  வேறு  எதிலும் கிடைக்காது . இது தென்மாவட்டங்களின் மட்டுமே காணப்படுகின்றது.
      இரவில் கோவிலில் சொக்கப்பனை கொளுத்துவார்கள் . ஒரு பெரிய மரகிளையை சுற்றி பனை ஓலைகளை கூம்பு வடிவில் கட்டி . அதற்கு பூஜை நடைபெற்று  எரிக்கப்படும் . அதை தொடர்ந்து ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் அகல் விளக்கு அல்லது வண்ண வண்ண மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு ஊரே ஜோதிமயமாக காணப்படும் . நாங்கள் தேங்காய் சிரட்டையின் உள்பக்கம் மெழுகுவர்த்தியை ஒட்டி வைத்து கொண்டு இருட்டாக இருக்கும் பகுதியில் அதன் வெளிச்சத்தில் சுற்றி திரிவோம் . அது கிட்டதட்ட ஒரு  டார்ச்லைட்  மாதிரியான வடிவத்தை கொடுக்கும்  . சைக்கிள் கடையில் இருக்கும் பழைய டயர்களை வாங்கி வந்து அதன் இரு பக்கங்களிலும் இருக்கும் கம்பியை வெட்டி எடுத்து விட்டு அதில் நெருப்பை பற்றவைத்து ஊர் முழுவதும் சுற்றி வருவோம் . அடுத்த நாள் கொழுக்கட்டை செய்த ஓலையில் காத்தாடி செய்து . ஊருக்குள் சுற்றி வருவோம் .. ஊரில் சிலர் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள் . 

ஆடி , தை , மாசி மாதங்கள் 
கிழவி நோன்பு :- 
    கிழவி நோன்பு இது  பெண்களால்  மட்டுமே நடத்தப்பெறும் வழிபாடாகும் . ஆண்கள் இந்த வழிபாட்டை காணவும் , அதன் நோக்கம் மற்றும் வழிபாட்டு முறை பற்றி அறிந்து கொள்ள தடையுள்ளது.  இந்த வழிபாடு பெரும்பாலும் ஆடி , தை , மாசி மாதங்களில் நடைபெறுகின்றது . ஏதாவது மூன்று செவ்வாய் கிழமைகளில் , வயதான சுமங்கலி பெண்ணின் தலைமையில் இரவில் தேர்வு செய்யப்பட்ட ஒரு வீட்டிற்குள் இந்த வழிபாடு நடக்கும் . சிகப்பு சம்பா அரிசிமாவை உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து வழிபாடு செய்வார்கள் . வயதான சுமங்கலி பெண் கிழவி நோன்பு கதையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வார் . இவ்வழிபாடு மேற்கொள்ளும் பெண்களுக்கு அவர்கள் மனம் விரும்பிய கணவன் அமைவான் என்பது நம்பிக்கை . இந்த கொழுக்கட்டையை பெண்கள் தவிர ஆண்கள் உண்ணவோ அல்லது பார்க்கவோ கூடாது . பார்த்தால் கண்கள் கெட்டுவிடும் என்று எச்சரிக்கை செய்யப்படுகின்றது . சில வீடுகளில் சிறுவர்களின் தொல்லை காரணமாக ஆண் குழந்தைகளுக்கு இந்த கொழுக்கட்டை உண்ணத்தருவது  உண்டு . ஆனால் இன்று வரை அந்த வழிபாட்டு முறையும் , கிழவி நோன்பில் சொல்லப்படும் கதையும் .  ஆண்களுக்கு தெரியாத மர்மமாகவே உள்ளது .  
ஆனால் இந்த வழிபாடுகள் இப்பொழுது இருக்கின்றனவா என்று தெரியவில்லை . 

மார்கழி , தை , மாசி , பங்குனி மாதங்கள் தொடரும் .. 

-விக்கி இராஜேந்திரன் ✍✍✍✍

Comments

  1. திருவிழாக்களின் பெருமையை கூறிய விக்கி அண்ணனுக்கு நன்றி அதன் பெருமையை உலகறியச் செய்வோம்

    ReplyDelete
  2. அருமையான நினைவுகளின், ரம்மியமான பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்