அப்பாவின் கண்டிப்பும், அன்பின் வெளிப்பாடே !

                     
          
                 அப்பா மிகவும் அன்பானவர் அதே நேரம் கண்டிப்பானவர்.  காலையில் கடைக்கு செல்பவர் , இரவில் நாங்கள் உறங்கும்  நேரத்தில் தான் வீட்டிற்கு வருவார்.  ஆதலால் அவரிடம் அதிகமாக தப்பு செய்து மாட்டி கொண்டது கிடையாது . வீட்டில் அம்மா தான் எங்களுக்கு படிப்பு சொல்லி தருவதில் இருந்து , எங்களை கண்டிப்பது வரைக்கும் . நான் வீட்டுக்குள் ஒரு நாளும் அடங்கி இருந்தது இல்லை .  நேரம் காலம் தெரியாமல் தெருவில் விளையாடுவதும் ஊரைச் சுற்றி வருவதும் வாடிக்கை . இப்பொழுது போல்  24 மணி நேரமும் தொலைக்காட்சிகள்  பொழுதுபோக்கு  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாத காலம் ,  அது ஊருக்குள் நாங்கள் எங்கு அழைந்து கொண்டு இருந்தாலும் , யாராவது ஒருவர் நம்மை கண்காணிக்கும் வகை ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி இருந்தது. அதனால் ஊருக்குள் நாங்கள் சுதந்திரமாக சுற்றி வந்தோம் . சுதந்திரம் இருந்தாலும் அது கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரம் . எனக்கும் வீட்டில் சில கட்டுபாடுகள் இருந்தன. அது வீட்டிற்கு தெரியாமல் , ஊர் எல்லையை  தாண்டி எங்கும் செல்லக்கூடாது என்பது . முக்கியமாக வாய்க்காலுக்கு செல்லக்கூடாது . அவ்வாறு செல்வதாக இருந்தால் , அம்மா கூட்டிச் செல்வார்கள் . குளித்து விட்டு அவர் கூடவே வீடு திரும்பிவிட வேண்டும். அதை மீறி சென்றால் வீட்டில் விளக்குமாறு பிஞ்சிடும் . அதனால் அம்மாவிடம் மட்டும் அதிக பயம் இருந்தது . 
  
                            அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும் . அன்று அம்மா எங்களை பாட்டியின் கண்காணிப்பில் விட்டு விட்டு அவர்களின் தந்தையை காண ஓடக்கரை சென்று இருந்திருந்தார். எனக்கோ மிகவும் மகிழ்ச்சி .. என் கால்களை கட்டியிருந்த அடிமை விலங்கு உடைந்து விட்டது போல் ஒர் உணர்வு . !! பூட்டிய இரும்பு கதவின் பூட்டு உடைந்தது சிறுத்தையே வெளியே வா !! என்பது போல மனது துள்ளி குதித்தது . ஏன் என்றால் பாட்டிக்கு வயது அதிகம் அதனால் அவர்களால் என்னை கட்டுபடுத்த இயலாது என்ற எண்ணம் . காலையில்  பாட்டியிடம் சொல்லி விட்டு குளிப்பதற்காக வாய்க்காலுக்கு சென்றேன் . அது கோடைகாலம் ஆதலால் வாய்க்காலில் நீர்வரத்து குறைந்து தண்ணீர் வற்றி போய் இருந்தது . ஆனால் நல்ல தண்ணீர் மதகு மற்றும் நீர் சுத்திகரிப்பு  நிலையத்திற்கு நீரேற்றும் பகுதி என சில ஆழமான இடங்களில் மட்டும்  தண்ணீர் மிக அதிகமாக தேங்கி நின்றது . 
    
                   நான் என் நண்பர்களோடு  நல்ல தண்ணீர் மதகு பகுதியில் குளித்து கொண்டிருந்தேன் . அப்பொழுது அந்த பகுதியில் மீன் பிடிக்க எனது ஊரை சேர்ந்த அண்ணன் ஒருவர் வலையுடன் வந்தார் . அவர் நீரின் கரையோரம் இருக்கும் ஆகாயத்தாமரை மற்றும் காட்டுச்செடிகளைச் சுற்றி வலையை விரித்தார்.  பின்பு எங்களிடம் தம்பிகளா இந்த செடிக்குள்ள குதிச்சி கலைச்சி விடுங்கடா என கூற . நாங்களும் அந்த செடிகளுக்குள் இருக்கும் விஷ பூச்சிக்கள் எதை பற்றியும் கவலை இன்றி அவற்றுக்குள் இறங்கி குதிக்க..( நல்ல வேளை அன்று அவற்றுக்குள் விஷபூச்சிக்கள் எதுவும் இல்லை )  அங்கு பதுங்கி இருந்த பெரிய அளவிலான மீன்கள் அவர் விரித்து வைத்து இருந்த வலையில் வந்து மோதி மாட்டிக்கொள்ள. அதை பார்த்த ஆர்வத்தில் நானும் ,  நண்பர்களும் உற்சாகமாகி இன்னும் நன்றாக கலைக்க ஆரம்பித்தோம் . அப்படியே சிறிது நேரம் போன பிறகு . அதில் நிறைய மீன்கள் மாட்டிக்கொண்டு இருந்தன . அந்த அண்ணன் வலைகளை எடுத்து அதில் மாட்டி இருந்த மீன்களை எடுத்துவிட்டு , அடுத்து தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருந்த நீரேற்றும் பகுதியில் வலையை விரிக்க ஆரம்பித்தார் . நானும்  உற்சாகம் மிகுதியால் அங்கும் என் நண்பர்களுடன் சென்று செடிகளுக்குள் இறங்கி குதித்து மீன்களை கலைக்க ஆரம்பித்தேன்.        
             
                   வீட்டில் அம்மா ஊருக்கு சென்றிருந்ததாலும் , மீன் பிடிப்பதில் இருந்த ஆர்வத்தினாலும் நேரம் போனதே  தெரியவில்லை . அதே நேரம் அப்பா மத்தியானம் உணவிற்காக வீட்டிற்கு வந்தவர், பாட்டியிடம் என்னை பற்றி விசாரிக்க. பாட்டி அப்பாவிடம் காலையிலே சாப்பிடாம கொள்ளாம குளிக்க போறேன் என்று சொல்லிட்டு போனான்யா. இன்னும் வீட்டுக்கு வரல என்று கூற . அப்பா சைக்கிளை எடுத்துக்கொண்டு என்னை தேடி வாய்க்கால் வந்தார் .  அப்போது வாய்க்காங்கரை ரோட்டுக்கும் எங்க ஊருக்கும் இடையில் இணைப்பு பாலம் கட்டப்படவில்லை . வாய்க்கால் உள்ளே இறங்கி தான் கடக்கனும்.  அப்பா அங்கே இருந்த பெரிய அரசமரத்தடியில் சைக்கிளை நிறுத்தி விட்டு ,  வாய்க்காலை கடந்து வாய்க்காங்கரை ரோட்டில் ஏறி , நாங்கள் மீன் பிடிக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தார் . அதை ரோட்டில்  நின்று நாங்கள் மீன் பிடிப்பதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த ஒரு அண்ணன் பார்த்து விட்டு , விக்கி உங்க அப்பா வாராவ என கூற . அப்போது தான் சட்டென்று சுயநினைவு வந்தவனாய் நான் சுற்றும் , முற்றும் பார்க்க , நேரம் அதிகமாகி போனது தெரிந்து பயம்வர தொடங்கியது . 
             
                         மெதுவாக தண்ணீரை விட்டு வெளியே வந்து , ரோட்டின் மீது ஏறினேன். எதிரே அப்பா ஒரு ஆதாலங்காய் மரத்தின் ஒரு கிளையை ஒடித்து கையில் வைத்து இருந்தார் . கடுங்கோபத்தில் இருந்தது அவருடைய முகம் , அது அவரின் நடையில் வெளிப்படையாக தெரிந்தது . அவரிடம் மாட்டினால் தரும அடி நிச்சம் என்று தெரிந்ததால் . நான் சற்றும் யோசிக்காமல் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன் . அவ்வாறு ஓடும் போது  நான் அப்பாவை கடந்துதான் செல்ல வேண்டும் . அப்பாவை நெருங்கும் வேளையில் அவர் கையில் வைத்து இருந்த ஆதாலங்குச்சியால்  கையை வீசி என்னை அடிக்க முயல , நான் அந்த அடியில் தப்பிக்க ரோட்டின் கரையில் படர்ந்த இருந்த ஒட்டுமுள் செடிகளில்  இறங்கி ஓடினேன் . அந்த சிறு,சிறு முட்கள் என் காலில் குத்தியது . அவை கொடுத்த வலியைவிட அப்பாவிடம் அதிகமான பயம் இருந்ததால் , முட்கள் காலில் குத்தியதை பற்றி கவலையின்றி தொடர்ந்து ஓடினேன் . அப்போது அப்பா கையில் வைத்து இருந்த குச்சியை என் கால்களை நோக்கி சுழற்றி எறிந்தார் , அது நேராக  சுழன்று வந்து என் கால்களில் பட்டது . அதையும் கண்டு கொள்ளாமல் என் ஓட்டத்தை தொடர்ந்தேன். அப்போது அப்பா ஏல..நேரா வீட்டுக்கு போயி சாமி படம் முன்பு முட்டிக்கால் போட்டு நிக்கனும் இல்ல உன்னை தொலச்சிருவேன்..  என்று சத்தமாக கூறி என்னை பின் தொடர்ந்தார் . நான் நிக்காமல் ஓடிக்கொண்டே வீட்டுல போயி அப்பா சொன்ன மாதிரி முட்டிக்கால் போட்டால் அப்பாவின் அடியில் இருந்து தப்பித்து கொள்ளலாம் என்று நினைத்தேன். நேராக வீட்டிற்கு வந்து சாமி படம் முன்பு,  நல்ல பையனாக முட்டிக்கால் போட்டு நின்றேன். இன்று அப்பா என்னும் சாமியின், கோபம் என்னும் அருள் முழுவதும் , என் மீது இறங்க போவது தெரியாமல் .  அப்பா வரும் வழியிலேயே,  மற்றுமொரு தடித்த  கம்பை ஒடித்து எடுத்து வந்தார் . சைக்கிளை அதே கோபத்துடன் வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்து , வைச்சாங்க பாருங்க அடி உங்க வீட்டு அடி ,எங்க வீட்டு அடி இல்ல ..சும்மா கம்புலாம் நார் நாரா பறக்க , இனிமே இப்படி  மீன் பிடிக்க போவியா,  போவியா என்று கேட்டுக்கொண்டே விழுந்தது அடி .  உடம்புல அடிபட்ட இடம் எல்லாம் தடித்து  சிவக்கும் அளவுக்கு செம அடி . 
       
          அப்பாவின்  இந்த கோபத்திற்கு காரணம் அவர் என்மேல் கொண்ட அளவு கடந்த அன்பு தான் காரணம் . காலையில் வீட்டை விட்டு குளிக்க போனவன் . ஐந்து மணி நேரமாய் வீட்டிற்கு வரவில்லை என்றால் , என்ன ஆனதோ என்ற பதட்டம் தான் என் மீது கோபம் வர காரணம் . பின்பு அப்பா என்னை சமாதானப்படுத்தியது வேறு கதை. அன்றிலிருந்து என் சிறுவ பருவத்தில் நான் ஊரை தாண்டி வெளியே சென்று  சுற்றுவது குறைந்தது. 



- விக்கி இராஜேந்திரன் ✍✍

Comments

  1. நான் இந்த கதையை படிக்கும்போது எங்க அப்பாவிடம் அடி வாங்கியது ஞாபகத்துக்கு வருகிறது நன்றி அண்ணா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவிதை என நம்புங்கள் ! ( Believe it to be poetry ! )

குழந்தை இலக்கியம்

பேரண்டத்தின் பேராற்றல்