கொடைக்கானலில் திகில் நிறைந்த நிமிடங்கள் !!!🐺
நான் என் மனைவி மகளுடன் 2020 புத்தாண்டு கொண்டாடுவதற்க்காக , கொடைக்கானல் சென்றிருந்தேன் .. கொடைக்கானல் ஏரி அருகில் உள்ள ஒரு விடுதியில் மூன்று நாட்கள் தங்கி இருந்தேன் .. நான் 8ம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலா சென்ற போது ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் சேர்ந்து முதல்தடவையாக சென்றேன் . அதன் பிறகு இப்போது தான் . நான் தங்கி இருந்த விடுதி கொடைக்கானல் ஏரி அருகில் என்பதால் நிறைய சாலை ஓர உணவகங்கள் மற்றும் கடைகள் அதிகமாக இருந்தன . நான் இரண்டாவது நாள் அதிகாலை 5 மணிக்கே விழித்து விட்டேன் . நல்ல குளிர் எனக்கு தேநீர் அருந்த வேண்டும் என்று தோன்றியது . நான் இருந்த இடம் நகரின் மைய பகுதி என்பதாலும் . அது ஒரு சுற்றுலா மையம் என்ற எண்ணத்திலும் கடைகள் திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் தூங்கி கொண்டு இருந்த மனைவியையும் ,குழந்தையையும் அறையில் விட்டு விட்டு .. நான் மட்டும் தனியாக இறங்கி வெளியே வந்தேன் . ஒரு 100 மீட்டர் நடந்திருப்பேன் என்னைச் சுற்றிலும் ஒரு திகில் நிறைந்த இருட்டு சூழ்ந்து இருந்தது .அது தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாதலம் என்ற எந்த ஒரு தோற்றமும் இல்லாமல். சரியாக பராமரிக்காத ஒரு சாதாரண கிராம பஞ்சாயத்தை விட மோசமாக இருந்தது . தெரு விளக்குகள் அனைத்தும் பழுதாகி அனைந்தும், சாலைகள் சிதைந்தும் இருந்தன . சாலை ஓரத்தில் தண்ணீர் செல்லும் ஓரு குழாய் உடைந்து அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையின் சிதைந்து போன பாகங்களை நிறைத்து ஓடிக்கொண்டு இருந்தது அதில் என் கால்கள் நனைந்து விடாமல் அதில் கிடந்த கற்களில் கவனமாக காலை வைத்து அவற்றை தாண்டி சென்றேன் .
மாலையில் அவ்வளவு பரப்பரப்பாக மக்கள் நெருக்கத்துடன் காணப்பட்ட இடம் . ஒரு சிறிய அசைவு கூட இல்லாமல்.. பயங்கரமான அமைதியுடன் இருந்தது . ஏன்டா வந்தோம் என்று ஆகிவிட்டது . சரி வந்தாகி விட்டது சற்று தொலைவு சென்று பார்க்கலாம் எதாவது டீ கடை கண்டிப்பாக இருக்கும் என்று நடக்க நினைத்த நேரத்தில் நான் நின்ற சாலையின் எதிர்புறம் இருட்டில் வெள்ளையும் ,சாம்பலும் கலந்த நிறத்தில் அடர்த்தியான ரோமங்களுடன் இரண்டு ஓநாய்கள் .. அந்த இருட்டில் அதன் இரண்டு கண்களும் பளபளக்க என்னை நோக்கி பார்க்கின்றன.. எனக்கு அப்பொழுது தான் நண்பர்கள் கூறியது நினைவுக்கு வந்தது . இரவு நேரத்தில் காட்டுமிருகங்கள் கொடைக்கானல் நகரத்துக்குள் வரும் என்று.. மனதிற்குள் பயம் வந்தது. மீண்டும் அவற்றை கூர்ந்து பார்த்தேன் அவை என்னை பார்த்து விட்டு குனிந்து எதையோ சாப்பிட்டு கொண்டு இருந்தன..எனக்கு அதற்கு மேல் அங்கே நிற்கக் முடியவில்லை சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்தேன் . உள்ளுக்குள் பயம் அவை என்னை துரத்தினால் என்ன செய்வது என்று இருந்தாலும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.. நல்ல வேளை எதையோ தின்று கொண்டு இருந்த காரணத்தால் அந்த இரண்டு ஓநாய்களும் என்னை பின் தொடரவில்லை... ஒரு வழியாக அறையை வந்து அடைந்தேன்.. பிறகு அன்று சூரியன் உதிக்கும் வரை அறையை விட்டு வெளியே வரவில்லை . பிறகு காலை 8 மணி அளவில் குளித்து விட்டு மனைவி , குழந்தையுடன் காலை உணவு உண்பதற்கு மீண்டும் அந்த கடைவீதியில் நடக்க ஆரம்பித்தேன் . இப்போது மக்கள் புழக்கம் சற்று அதிக இருந்தது . நேற்று பார்த்த இடத்தில் அந்த ஓநாய்கள் இல்லை அதற்கு சற்று அருகாமையில் இரண்டு நாய்கள் நின்று கொண்டு இருந்தன . அவை நான் இன்று அதிகாலையில் பார்த்த அந்த ஓநாயின் சாயலை ஒத்து இருந்தன.அப்போது தான் எனக்கு தெரிந்தது நான் இன்று அதிகாலையில் பார்த்தது ஓநாய் இல்லை . அவை அந்த பகுதியில் இருந்த உணவகத்தில் எச்சில் இலைகளை தின்று கொண்டு இருந்த தெருநாய்கள் என்று ... நினைத்தாலே சிரிப்பு தான் வருகின்றது .
😅
ReplyDelete