எனது ஊர் கோவில் கொடை விழா 🙏🙏💐❤
கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் நடப்பதாக இருந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொள்ள வழியே இல்லாததால் மனதில் கவலை படர்ந்து இருக்க என் சிந்தனை மெல்ல அந்த சுகந்தமான பழைய நினைவுகளை நோக்கி நகர்கின்றது ..
முற்றிலும் விவசாய நிலங்களால் சூழப்பட்ட அழகிய கிராமம் தான் எனது ஊர் புன்னைசாத்தான்குறிச்சி . எங்கள் ஊரை காக்கும் அருள்மிகு முத்தாரம்மனுக்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் கோவில் கொடை விழா நடைபெறும் . முப்பது வருடத்திற்கு முன்பு வரை ஆவணி மாதம் முதல் இரண்டு செவ்வாய்கிழமைகளும் கொடை விழா நடக்கும் வசந்த காலங்கள்.. ஆனால் ஊர் மக்கள் பலர் தொழில் சார்ந்து பெருநகரங்களில் குடியேறியதால் , ஆவணி மாதம் நடக்கும் கொடைவிழாவில் தங்கள் குழந்தைகளின் கல்வியின் காரணமாக கலந்து கொள்ள முடியாத நிலை . அதனால் குழந்தைகளில் தேர்வு விடுமுறை மாதமான வைகாசியில் கொடைவிழா நடத்தினால் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று கருதியதன் காரணமாக , முத்தாரம்மனின் உத்தரவு வேண்டி சீட்டு எழுதி போட , அம்மாவின் அனுமதியும் கிடைத்தது . அன்று முதல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் வகையில் வைகாசி மாதம் கொடைவிழா மாற்றி வைக்கப்பட்டு உள்ளது .
முன்பு எல்லாம் கோவில் கொடை விழா என்றாலே... ஒரு மாதத்திற்கு முன்பாகவே அனைத்து குடும்பத்திலும் அதற்கான பணிகளை ஆரம்பித்து விடுவார்கள்..
வீட்டை சுத்தப்படுத்துதல், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு பலகாரங்கள் செய்வதற்கு அரிசி குத்துவது . மாவு திரிப்பது, மாவு இடிப்பது அதை வைத்து , வகை வகையான பலகாரங்களான அரிசி மாவில் தயாரிக்கப்படும் முறுக்கு ,அச்சு முறுக்கு , நாட்டுச் சர்க்கரையை முறுகிவிடாமல் பாகுவாக காய்த்து, அதில் வாசனைக்காக ஏலக்காய் இடித்து போட்டு , அதனுடன் அரிசிமாவை சேர்த்து பக்குவமாய் கிளறி , ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து , மறுநாள் அவற்றை சிறிது சிறிதாக வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து வட்டமாக தட்டி நடுவில் சிறு துளையிட்டு எண்ணையில் போட்டு செந்நிறமாக பொரித்து எடுத்தால் அது அதிரசம் . அதே போன்று சிறு பயிரை வைத்து தயாரிக்கப்படும் முந்திரி கொத்து என அனைத்து வீடுகளிலும் அம்மாக்கள் அவர்களின் சமையல் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருப்பார்கள் ..
புதிய ஆடைகள் தைக்க கொடுத்து இருப்போம் . பெரும்பாலும் அப்பா,அம்மா தேர்ந்து எடுத்த ஆடைகள் தான் .. இப்பொழுது போல ரெடிமேட் ஆடைகள் பிரபலமாகா காலம் அது . .. தொலைபேசிகளும் இல்லாத காலம் .. வீட்டிற்கு உறவினர்களை அழைக்க அப்பாக்கள் சைக்கிளில் அலைந்து கொண்டு இருப்பார்கள் ..
ஊர் நிர்வாகத்தினர் சாத்வீக மேளம் , நையாண்டி மேளம் , கரகாட்டம் , வில்லுப்பாட்டு ஆகியவற்றில் சிறந்த கலைஞர்களை ஏற்பாடு செய்ய , மக்களிடம் வரி வசூல் என்று அலைந்து கொண்டு இருப்பார்கள் ...
அதே நேரம் நமது ஊர் காமராஜர் இளைஞர் இயக்கத்தின் இளைஞர்கள் சார்பில் கொடைவிழாவிற்காக அரங்கேற்றம் செய்ய இருக்கும் நாடகத்திற்கான ஒத்திகை நடைபெற்று கொண்டிருக்கும் ..
கோயில் கொடையானது அம்மனுக்கு உகந்த ஏதாவது ஒரு மாதத்தின் செவ்வாய் கிழமையில் தான் நடக்கும் . ஏன் என்றால் அம்மன் பிறந்த தினம் செவ்வாய் கிழமை என நம்பப்படுகிறது. நமது ஊரில் முன்பு ஆவணி மாதம் முதல் செவ்வாய் கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெறும் .. ஊரின் அனைத்து எல்லைகளிலும் வேப்பிலை தோரணம் கட்டப்படும்.
கால்நட்டிய அன்றே பந்தல் அமைக்கும் பணி நடைபெறும் .. ஊர் முழுவதும் ஒளி,ஒலி அமைக்கப்பட்டு இருக்கும் .. கோவிலில் புதிதாக காவி மற்றும் வெள்ளை வண்ணம் கொண்டு பட்டை , பட்டையாக புதிய வர்ணங்கள் தீட்டப்பட்டு , கோவில் முன்பு புதிதாக ஆற்று மணல் பரப்பப்பட்டு இருக்கும் ..அதற்கு புதுமணல் பரப்புதல் என்று பெயர் . இது தமிழரின் தொன்மையான பழக்கவழக்கமாகும் .
அன்று முதல் சிறுவர்களான எங்களுக்கு கொண்டாட்டம் தான் . கம்பு மாறி , கள்ளன் போலீஸ் , மண்ணு கோரி என மண்ணில் உருண்டு, புரண்டு உடம்பில் ஒட்டிய புழுதியும் , தலை எல்லாம் மண்ணாகவும் தான் வீட்டுக்கு போவோம் .. கால்நட்டிய நாள் முதல் தினமும் இரவு ஆன்மீக சொற்பொழிவு நடக்கும் . பெரும்பாலும் நமது ஊர் பெரியவர்கள் தான் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு இருப்பார்கள் . முக்கியமாக ராமாயண , மகாபாரத கதைகள் அவர்களின் தேர்வாக இருக்கும் . அவற்றை வைத்து அவர்களிடம் கருத்து மோதல்களும், பரிமாற்றங்களும் இருக்கும்.. தாத்தா முத்து நாடார் கம்பராமாயணத்தில் சொற்பொழிவு ஆற்றுவதில் புலமை பெற்றவர்.
ஊரில் உள்ள பெண்கள் அம்மனுக்கு பிடித்த முளைப்பாரி செய்வதற்க்கான பணியில் ஈடுபட்டு இருப்பார்கள்..இதற்காக முளைப்பாரிக்கு என்றே வடிவமைக்கப்பட்ட மண்ணால் செய்த பானை அதன் வாய்ப்பகுதி தரையில் படும்படி தலைகீழாக கவிழ்த்து வைத்து . அதன் அடிப்பகுதியில் குறுக்கு வசத்தில் இரண்டு மூங்கில் அல்லது அகத்திக் கம்புகளை பெருக்கல் குறி போல வைத்து, அதன் மீது சிறிது வைக்கோலை பரப்பி , அதன் மேல் காய்ந்த ஆட்டுப் புழுக்கையும், மாட்டுச் சாணத்தையும் உரலில் இட்டு தூளாக்கி , அவற்றை கரம்பை மண்ணுடன் கலந்து தூவுவார்கள். இதனையே முளைப்பாரி அல்லது முளைக்குடம் என்று கூறுகின்றனர்.
அதில் தட்டைப் பயறு, சிறு பயறு, பாசிப்பயறு, மொச்சைப் பயறு, சோளம், கம்பு, பருத்தி போன்ற விதைகளை நெருக்கமாகத் தூவி, வெயில் அதிகம் படாத இருட்டு அறையில் வைத்து, தினசரி நீர் ஊற்றி வருவார்கள். தண்ணீர் ஊற்றும் பெண்களை தவிர மற்றவர்கள் அவற்றைக் பார்ப்பதற்கோ , அந்த அறைக்குள் நுழைவதற்கோ அனுமதி இல்லை ...
தண்ணீர் ஊற்றுபவர்கள் கடுமையான விரதத்தை கடைப்பிடிப்பார்கள். இரவு பகல் பார்க்காமல் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும் . பத்திய உணவு தான் எடுத்து கொள்வார்கள் . வாழை இலையில் உணவு உண்ண மாட்டார்கள் ..இப்படி அவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் உண்டு ..
பயிறு இட்ட மறுநாளில் இருந்து . ஊரில் உள்ள கன்னி பெண்கள் அனைவரும் முளைப்பாரி வைத்திருக்கும் வீட்டின் முன்பாக கூடி பாட்டு பாடிக்கொண்டே கும்மி அடிப்பார்கள். கும்மி அடிக்கும் சத்தம் கேட்டு பயிர் நன்றாக வளரும் என்பது நம்பிக்கை .
முளைப்பாரி அம்மனின் அம்சமாக கருதப்படுவதால் ஒவ்வொரு முறை தண்ணீர் ஊற்ற அந்த அறைக்குள் நுழைவதற்கு முன்பு சூடம் ஏற்றி கும்பிட்ட பிறகு தான் உள்ளே நுழைவார்கள் . ஏழாம் நாள் பயிறு அடர்த்தியாக ஒரு அடி உயரம் வரை வளர்ந்து இருக்கும்.
திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை கோவில் எதிரே உள்ள பாட்டாளி மேடையில் வில்லுப்பாட்டு கச்சேரி ஆரம்பிக்கும் .. எனக்கு நினைவில் உள்ளவரை பெரும்பாலும் திரௌபதி சபதம் தான் இடம் பெறும் ..
தினமலர் பத்திரிகை அவர்களின் விளம்பரத்திற்காக அச்சு அடித்து கொடுத்த பெரிதாக முத்தாரம்மன் படத்துடன் ..
புன்னைசாத்தான்குறிச்சி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவிற்கு வருகை தரும் பக்தர்களை வருக வருக என வரவேற்கின்றோம். என்ற சுவரொட்டிகள் . சுற்றுவட்டார ஊர்கள் முழுவதும் இளைஞர்களால் ஒட்டப்பட்டு இருக்கும்.. ( நான் இளம் வயதில் நண்பர்களுடன் சேர்ந்து சென்று சுவரொட்டிகள் ஒட்டியது எல்லாம் மகிழ்ச்சியான தருணங்கள்)
திருவிழாவிற்கு இரண்டு நாட்கள் நமது மரந்தலை பள்ளியில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கும் ..
பிரம்மாண்ட பந்தலில் வாழை மரங்கள் கட்டப்படும் . ஒவ்வொரு மரமும் நல்ல அடி பெருத்து ஓங்கி வளர்ந்தவையாக இருக்கும் .. இப்போதெல்லாம் அது போன்ற வாழை மரங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது .. மாவிலை தோரணங்கள், அல்லி ,அரளி ,சாமந்தி ,செண்டு போன்ற மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் கொண்டு தோரணங்கள் கட்டி தொங்கவிடப்படும்.
நமது ஊரில் அப்போது காமராஜர் ஆரம்பப்பள்ளி இருந்தது . அந்த இடத்தில் புதிதாக திருவிழா கடை போடுவார்கள். அங்கு ,லட்டு ,பூந்தி ,அல்வா ,வடை ,டீ , காபி முக்கியமாக காளி மார்க் , காளை மார்க் சோடா, கலர் விற்பனை செய்வார்கள் . சிறுவர்களுக்கு பிடித்தமானது ஆரஞ்சு கலர் தான்.. ஒரு பாட்டில் கலர் வாங்கி ஒரு மணி நேரமாக குடிப்போம்..
அப்புறம் நம்ம ஊர் அண்ணன்மார்கள் ஆத்தூர் ஐஸ் பேக்டரில் இருந்து ஐஸ் வாங்கி வந்து விற்பனை செய்வார்கள். சேமியா ஐஸ் ,பால் ஐஸ் , பெப்ஸி ஐஸ் என்பன அப்போது அனைவருக்கும் பிடித்தமானது..
திருவிழாவிற்கு முதல் நாள் முதலில் சாத்விக மேளகச்சேரியும் பின்பு நையாண்டி மேளகச்சேரியும் நடக்கும் .. ( இப்போது சில வருடமாக செண்டை மேளம் வாசித்து வருகின்றார்கள் அது ஏனோ என் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை அந்நியமாகவே தெரிகிறது )
அனைத்து கலைஞர்களுக்கும் உணவு நமது கோவிலில் தயாரித்து வழங்கப்படும் .
( இப்பொழுது நடைபெறுவது போல் முன்பு எல்லாம் மூன்று நாட்கள் மூன்று வேளை அன்னதானம் கிடையாது )
திருவிழா அன்றைய நாள் வீட்டிற்கு உறவினர்கள் வந்திருப்பார்கள் . புத்தாடையும், பூக்களுமாக வீடு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் .
அன்று அதிகாலை பிள்ளையார் சன்னதி முன்பு கணபதி ஹோமம் நடைபெறும் . அதன் பின்பு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட வெள்ளை பூசணிக்காயில் குங்குமத்தை தடவி தென்னை ஓலையில் பந்தம் ஏற்றி கோவில் பூசாரி ஊர் முழுவதும் தெருக்கள் தோறும் சென்று வீசி எறிவார் . பின்பு ஊரில் மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஒரு முழு பூசணிக்காயை வெட்டி அதன் மீது குங்கும் தடவி பூஜை செய்யப்படுகிறது . இது ஊரில் இருக்கும் அனைத்து சிறு தேவதைகளை அமைதி படுத்தும் நோக்கில் செய்யப்படுவதாக கருதுகின்றேன் . இதற்கு கலிப்பு கழித்தல் என்று பெயர் .
அதன் பின்பு தாமிரபரணி ஆற்றில் சென்று புனித நீர் கொண்டு வர செல்வார்கள் ( இந்த நிகழ்வு நமக்கும் தாமிரபரணி ஆற்றுக்கும் இருக்கும் உள்ள உறவை உணர்த்துவதாக கருதுகின்றேன் . அதே போன்று இந்த நிகழ்வில் ஊர் பெண்கள் யாரும் ஆற்றுக்கு வருவது கிடையாது. புனித நீர் கொண்டு வரும் அம்மன் அருள் பெற்றவர்களை வரவேற்பதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருப்பதால் அவர்களால் ஆற்றுக்கு வர இயலவில்லை என்றே எண்ணுகின்றேன் . மற்றபடி அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருப்பதாக தெரியவில்லை )
நமது ஊர் கோவில் அர்ச்சகருக்கு ஒரு புனித நீர் குடம், ஊர் தலைவர் அவர்கள் ஒரு புனித நீர் குடம், கோவிலில் அருளாட்டம் ஆடுபவருக்கு ஒரு புனித நீர் குடம் எடுக்க வேண்டும் அது தவிர நமது ஊர் அம்மனை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துபவர்களும் புனித நீர் குடங்கள் எடுப்பார்கள் . அனைவரும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வெள்ளை வேஷ்டி ,வெள்ளை துண்டை இடுப்பில் கட்டி, உடலில் விபூதி,சந்தனம்,குங்குமம் பூசி , புதிதாக பூத்த மலர் மாலைகள் சூடி ஆற்றின் கரையில் இருக்கும் அரசமரத்தடி பிள்ளையாரை வணங்கி நாதஸ்வர,மேள தாளங்கள் முழங்க, வாண வெடி வானத்தில் வெடிக்க தலையில் புனித நீரையும் உள்ளத்தில் ஊரை காக்கும் நம் தாய்க்கு எல்லாம் தாயான முத்தாரம்மனையும் சுமந்து வடக்கு ஆத்தூர் ,தெற்கு ஆத்தூர் ஆகிய ஊர்களை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வெறும் காலால் கடந்து நம் ஊரை அடைந்து ஊரை வலம் வருவார்கள் ..
அவர்களை நம் ஊரில் உள்ள மக்கள் யாவரும் தங்கள் வீட்டின் முற்றத்தில் கலர் வண்ணப்பொடிகளால் கோலம் வரைந்து , மஞ்சள் கரைத்த தண்ணீரில் வேப்பிலை போட்டு அவர்களின் பாதங்களில் ஊற்றி வணங்குவார்கள்.( இதில் மஞ்சளும் , வேப்பிலையும் கிருமிநாசினி ஆகும் . இதன் மூலம் ஊர் முழுவதும் கிருமி நாசினிகளால் பாதுகாக்கப்படுகின்றது) இவ்வாறு கொண்டு வரப்பட்ட புனித நீரை கோவிலில் வைத்து யாகங்கள் வளர்க்கப்படும் இதை யாகசாலை ஹோமம் என்று கூறுகின்றனர் . பின்பு கோவில் கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜை நடைபெறும் ..
சாம( இரவு )கொடை:-
அந்தி சாயும் சில மணித்துளிகளுக்கு முன்பாக தொடங்குகிறது இந்த விழா ..
இது நமது ஊர் காவல் தெய்வங்களுக்கு காண விழாவாகவே இதை நான் பார்க்கின்றேன் ...
மாலை ஆறு மணி அளவில் ஆற்றை நோக்கி நையாண்டி மேளம் , மற்றும் சாத்திய மேளங்கள் முழங்க ஊர்மக்கள் அனைவரும் நடந்து சென்று தாமிரபரணி ஆற்றின் கிழக்கு கரையை அடைவர் .. அங்கு புனித நீர் எடுக்கப்பட்ட குடங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் . அவற்றில் ஒன்றை கோவில் பூசாரியும் மற்றவற்றை அருளாட்டம் ஆடுபவர்களும் சுமந்து வருவார்கள் .. அருளாட்டம் ஆடுபவர்கள் கடுமையான விரதத்தை கடைபிடித்து வருவார்கள் . மேளதாளங்கள் இசைக்க அவர்களுக்குள் கடவுள் வந்து இறங்குவதை பார்க்கும் ஒவ்வொருவரும் தனக்குள்ளும் கடவுளை உணர்வார்கள் .. அங்கிருந்து மேளங்கள் முழங்க , கரகாட்ட கலைஞர்கள் ஆடியபடி முன் செல்ல அருளாட்டம் ஆடிய படி தலையில் புனித நீரை சுமந்து வருவதை பார்க்கும் போது உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது .. ( தற்பொழுது சில காலங்களாக நமது இளைஞர்கள் ஆட்டம் அதிகமாக இருக்கிறது . பெருங்கூட்டமாக செல்லும் நாம் சிறிது சிறிதாக பிரிந்து கடைசியில் அருளாட்டம் ஆடுபவர்கள் மட்டும் தனியாக ஊர் வந்து சேர்வது போல் இருந்து வருகிறது ..திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான் இல்லையென்று சொல்லவில்லை. நீங்கள் ஆடுவதும் தவறு என்று சொல்லவில்லை .. ஆனால் அனைவரும் சேர்ந்து ஊர் வந்து சேர வேண்டும் என்பதே என் விருப்பம் . அது நம் கொண்டாட்டத்தை இன்னும் அதிகப்படுத்தும் என்பதே என் விருப்பம் ) வரும் வழி எல்லாம் மேளம் வாசித்தபடி அதற்கு ஏற்றவாறு கரகாட்ட கலைஞர்கள் ஆடியபடியே வருவார்கள் .. அதனால் சாமி ஊர்வலம் மிகவும் மெதுவாக செல்லும் இரண்டு கிலோமீட்டர் தூரத்தை கடந்து ஊர் வந்து சேர சில மணிநேரங்கள் ஆகிவிடும். அவ்வாறு தலையில் புனித நீர் சுமந்தபடி கோவிலை மூன்று முறை வலம் வந்து புனித நீர் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படும் .
அதே நேரம் வில்லுப்பாட்டு கச்சேரி நடைபெற்றுக்கொண்டே இருக்கும் . அவர்கள் முன்பு கோவிலில் அம்மன் அருள் வந்து ஆடுபவர்கள் உடல் முழுவதும் பூசப்பட்ட சந்தனமும் , ரோஜா மாலையுமாக ஆக்ரோஷமாக வில்லிசையும் , மேளத்தையும் மாறி மாறி ரசித்து கேட்டபடி ஆடுவார்கள் அதை பார்க்கும் மக்களின் உள்ளம் எல்லாம் அம்மன் நிறைந்து இருக்க தெய்வத்தை நேரில் பார்த்தது போன்று உடல் எல்லாம் சிலிர்த்து இருக்கும் . அருள் வந்து ஆடுபவர்களை சாந்தப்படுத்த குளிர்ந்த நீர் அவர்கள் மேல் ஊற்றுவார்கள்.. .பின்பு பூஜை நடக்கும்
ஊரில் அம்மனிடம் வேண்டி நேர்ந்து கொண்டவர்கள் . தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த அவர்கள் வீட்டுக்கு மேளங்கள் சென்று அழைத்து வரும் . வந்தவர்கள் அனைவரும் பிள்ளையார் கோவில் முன்பு கூடி இருப்பார்கள் . அதே நேரம் ஊரில் உள்ள கன்னி பெண்கள் ஒன்று கூடி முளைப்பாரியை அலங்கரித்து . ஒன்றாக வைத்து அவற்றை சுற்றி கும்மி பாட்டு பாடி கும்மி அடிப்பார்கள் . பின்பு அவர்கள் முளைப்பாரியை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த கூடி நின்றவர்களுடன் இணைந்து அனைவரும் ஒன்றாக கோவிலை மூன்று முறை சுற்றி வந்து நேர்த்திக்கடனாக வேண்டி கொண்ட பொருட்களும் , முளைப்பாரியும் அம்மன் சன்னதியில் வைக்கப்படும் ....
கோவில் திடலில் கிராமிய கலைஞர்களின் கரகாட்டம் , காவடியாட்டம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.. கரகத்தை தலையில் வைத்துக் கொண்டு கண் இமையால் பணத்தை எடுப்பது , குளிர்பானம் குடிப்பது ,கண்ணை கட்டிக்கொண்டு கூர்மையான கத்தியை கையில் வைத்துக் கொண்டு தரையில் படுத்து கிடக்கும் நபரின் உடலில் வைக்கப்பட்டு இருக்கும் வாழை பழங்களை வெட்டி எறிவது என அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி கொண்டு இருப்பார்கள் .சிறிது நேரம் காவடியாட்டம் நடைபெறும் .
இரவு பனிரெண்டு மணிக்கு அம்மன் அலங்காரம் நிறைவடைந்து உச்சிகால பூஜை நடைபெறும் .. அது முடிந்த பிறகு பெண்கள் வீட்டிற்கு சென்று விடுவர் .
அதனை தொடர்ந்து குறவன் ,குறத்தி ஆட்டம் நடைபெறும் .. இது குறவஞ்சி ஆட்டம் என்று தமிழ்நாட்டில் தோன்றிய கலை வடிவம் ஆகும் . இதில் குறவன், குறத்தி என்ற இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நடக்கும் காதலும் ,ஊடலும் நகைச்சுவை கலந்து இருக்கும் .. ( கடந்த சில திருவிழாக்களில் நடைபெற்ற கரகாட்டங்களில் இது போன்ற திறமையான நிகழ்வுகள் எதுவும் காணப்படவில்லை வெறும் சினிமா பாட்டுக்கு ஆபாச நடன அசைவுகள் மட்டும் தான் இருக்கிறது கரகாட்டம் அதன் தனித்தன்மையை இழந்து விட்டதாக கருதுகிறேன். )
அதிகாலை மூன்று மணி அளவில் அந்தி கால பூஜை நடைபெறும். இது பரிகார தெய்வங்களை சாந்தப்படுத்தும் விதமாக நடைபெறும் பலி பூஜையாகும். இதில் சிறிய செம்மறி ஆட்டின் தலை
துண்டிக்கப்பட்டு பலிபீடத்தின் மேல் வைக்கப்படும் இதைப் துள்ளுமறி கொடுத்தல் என்று கூறக் கேட்டு இருக்கிறேன் . இது துவளும் மறி என்பது மருவி துள்ளுமறி ஆகி இருக்கும் என்று கருதுகின்றேன் . ( இது தென் மாவட்டங்களில் பரவலாக நடைபெறும் துவளக்குட்டி கொடுத்தால் ( துவளும் குட்டி ).. என்று பெரும்பாலான கோவில் திருவிழாக்களில் நடக்கும் நிகழ்வு போன்றதாகும் . ) இந்த பலி கொடுக்கும் போது அம்மன் மற்றும் நாராயணர் சன்னதிக்கும் பலிபீடத்திற்கு நடுவில் திரையிட்டு மறைப்பு உருவாக்கி இருப்பார்கள் . ஏன் என்றால் அவை பலி பெறா சுத்த தெய்வங்கள் என்பதால்.. பலி பூஜை முடிந்ததும் .தொடர்ந்து கிராமிய கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து அதிகாலை ஐந்து மணி வரை நடைபெறும் .
அதை தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெறும் . கலர் கலராய் வானத்தில் வெடித்து சிதறும் வெடிகளை பார்த்தாலே மகிழ்ச்சிதான் ..அது மட்டும் அல்லாது கோவிலில் பூஜை நடக்கும் போது பச்சை மற்றும் சிவப்பு நிற வண்ணங்களில் மத்தாப்பு கொளுத்தப்படும் . அந்த வண்ண ஒளியில் அம்மனை காண்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் .
காலை 10 மணியளவில் அம்மனுக்கு நேர்ந்து கொண்டவர்கள் அனைவரும் சேர்ந்து பொங்கல் வைப்பார்கள் . பொங்கல் வைத்து பிறகு சாமிக்கு கிடாக்களை நேர்ந்து விட்டவர்கள் அவைகளை சாமிக்கு பலி கொடுப்பார்கள் . பலி கொடுக்கும் கிடாக்களின் தலையில் தண்ணீர் தெளித்து சாமியிடம் பலியை ஏற்றுக்கொள்ள வேண்டி உத்தரவு கேட்கப்படும் .அவைகள் தலையை வேகமாக ஆட்டி சிலிர்த்துக்கொண்டால் உத்தரவு கிடைத்து விட்டது என்று பொருள் அதன் பிறகு அவை பலி கொடுக்கப்படும். பலி கொடுப்பது குத்து கிடா , வெட்டு கிடா என இருவகையாக கொடுக்கப்படும் .
தொடர்ந்து மஞ்சள் பானை குளித்தல் நடைபெறும் .. வில்லிசையும் நடைபெறும்
.மண்பானையில் மஞ்சள் கரைத்த நீர் விட்டு தீ மூட்டி கொதிக்க வைப்பார்கள் .. பெரும்பாலும் எரிபொருளாக பனை ஓலை மட்டும் தான் பயன்படுத்தப்படும் .. மஞ்சள் பானை பொங்கி வரும் போது கோவிலில் சாமி ஆட்டம் ஆடுபவர். அருள் வந்து ஆடிக்கொண்டே கொதிக்கும் மஞ்சள் நீர் பானைக்குள் வேப்பிலை கொத்தை விட்டு உடல் எல்லாம் பூசிக் கொள்வார்.. பிறகு அருள்வாக்கு வேண்டும் மக்களுக்கு நல்வாக்கு கூறுவார் . அதன் பிறகு கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை நடைபெறும் . பிரசாதமாக அம்மனுக்கு படைக்கப்பட்ட பானகரம் என்னும் புளி ,எலுமிச்சை , கருப்பட்டி,ஏலக்காய் கலந்த நீராகாரமும் , தேங்காய் , வாழைப்பழம் ,பலாப்பழம்,ஆப்பிள், திராட்சை என அனைத்து வகையான பழங்களும் அச்சு வெல்லமும் கலந்த பஞ்சாமிர்தமும் பிரசாதமாக வழங்கப்படும் . பானகரம் நோன்பு இருந்து வழிபட்ட மக்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். பெண்கள் தாங்கள் முந்திய இரவு அம்மனுக்கு படைத்த முளைப்பாரியை பெற்றுக் கொண்டு அவற்றை கோவில் முன்பு வைத்து வட்டமாக வைத்து கும்மி அடிப்பார்கள் .தொடர்ந்து நடந்த வில்லிசை மங்களம் பாடியதோடு கொடை விழா நிறைவு பெறும் .
அதை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரியை வாய்க்காலுக்கு கொண்டு சென்று பாட்டுப்பாடி கரைத்து விடுவார்கள். இதனால் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படாமல், தகுந்த காலத்தில் மழை பெய்து விவசாயம் நன்கு பெருகி கிராமம் சுபிட்சமாக இருக்கும். இதைச் செய்யும் பெண்கள் குடும்பத்திலும் அம்மன் அருளால் தக்க காலத்தில் குழந்தைகள் பிறந்து, வம்சம் வளர்ச்சியடையும்.
மக்கள் தாங்கள் பழி கொடுத்த கிடாக்களையும் ,பொங்கல் வைத்த பானைகளையும் வீட்டிற்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிடுவார்கள்.
அன்று ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் அசைவ உணவு விருந்து சிறப்பாக இருக்கும்.
மாலை ஐந்து மணி அளவில் ஊர் நிர்வாகிகள் வரி செலுத்தியவர்களுக்கு வரி பழம் கொடுப்பார்கள் . அதில் அம்மனுக்கு படைக்கப்பட்ட தேங்காயும் , வாழைப்பழமும் இருக்கும் .
கலை நிகழ்ச்சிகள் :-
கோவில் கொடை நிறைவுற்ற அன்று( புதன்கிழமை ) இரவு காமராஜர் இளைஞர் இயக்கத்தினரின் மேடை நாடகம் நடைபெறும் .
மறுநாள் பெரும்பாலும் பட்டிமன்றம் இருக்கும் அல்லது திரைப்படம் காண்பிக்கப்படும் ..
நான் சிறுவயதில் பொம்மலாட்டம் பார்த்திருக்கின்றேன்...
இது போன்ற எந்த நிகழ்ச்சிகளும் தற்பொழுது நடைபெறுவது இல்லை ..
மீண்டும் தமிழரின் பழங்கால கலைகளை மீட்டெடுத்து கொண்டு வந்து நடத்தினால் மிகவும் அருமையாக இருக்கும் .
- விக்கி இராஜேந்திரன்
🙏 நன்றி 🙏
Super ��
ReplyDeleteThanks
Deleteஅருமை அருமை
ReplyDelete